ஜெ,
சூரியநெல்லி வழக்கைப்பற்றி வாசித்தேன்.
பிடிவாதமாக இத்தனை காலம் கழித்தும் அந்தப்பெண்மணி வழக்குத் தொடுப்பதே அதிலுள்ள உண்மையைக் காட்டும் ஆதாரம். தன் அரசியல் வாழ்க்கையையே அழிக்கக்கூடிய இவ்வழக்கைத் தவிர்க்க அந்தப்பெண்ணுக்கு எவ்வளவு பணம் தர குரியனைப் போன்றவர்கள் தயாராக இருப்பார்கள். எதற்குமே அவர் மசியவில்லை என்பதைத்தான் நாம் கவனிக்கவேண்டும்
பாலியல் வழக்குகளில் நம் நீதிமன்றங்கள் கொண்டிருக்கும் அணுகுமுறையைக் கண்டிப்பாக நாம் மாற்றியாகவேண்டும். பாலியல் பலாத்கார வழக்கில் தோன்றியபடி வாய்தா கொடுக்கும் நீதிபதிகளைக் கண்டறிந்து மக்கள் முன் நிறுத்தவேண்டும்
பாஸ்கரன்
அன்புள்ள பாஸ்கரன்
ஆம், டெல்லி வழக்குக்குப்பின் இவ்விஷயத்தில் அரசுகள் இன்னும் கொஞ்சம் கவனமாக இருப்பதாகவே தெரிகிறது.
ஜெ
அன்புள்ள எழுத்தாளருக்கு!
சூர்ய நெல்லிக்காயின் துவர்ப்பை இன்று படித்தேன். இந்தக் கேடு கேட்ட பொய்மை சமூகத்தின் செயல்பாடுகள் எப்போதும் கசப்பை ஏற்படுத்துகின்றன. பெண்மையை வெறும் போகப் பொருளாக நினைக்கும் போக்கு அற உணர்ச்சி இல்லாத தன்மை ஆணாதிக்கம் எல்லாமும்தான் காரணங்கள். தீர்ப்புகள் அற உணர்ச்சியில் வழங்குவது இல்லை. புத்தகங்களில் இருக்கும் சாட்சி அடிப்படையிலான வாதத்தைப் பொறுத்தே . குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக வழக்கை ஏற்று நடத்தும் வழக்கறிஞர்களின் மனம் பண வரவையே பார்க்கிறது. இந்தக் கட்டுரை என் மனசாட்சியைக் கேள்வி கேட்டு உலுக்குகிறது.
தண்டபாணி
அன்புள்ள தண்டபாணி
நம் சினிமா கதாநாயகன் கதாநாயகியை எப்படி அணுகுகிறான்? ஆட்டோ ஓட்டும் நாயகன் மருத்துவம் படிக்கும் மாணவியை ஒருதலையாகக் காதலிக்கிறான். அவள் நமக்கிடையே ஏணி வைத்தாலும் எட்டாது என்கிறாள். இவன் அவளைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறான். அவள் வேறுவழியில்லாமல் காதலிக்கிறாள். ஏனென்றால் தெய்வீகமானது காதல்
இதுதான் நம் பொதுமனம் நம்பும் அறமாக உள்ளது
ஜெ
ஜெமோ,
நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறேன் .
எங்கள் குழுவில் (டீம் ) வேலை செய்கிற ஒரு பெண்ணை 39 வயது நிரம்பிய (இரண்டு பெண் குழந்தைகளைக்கு தகப்பன்) சக பெண் ஊழியரைப் பல மாதங்களாகத் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
அந்தப் பெண் சில மாதங்கள் பொறுத்து அதன் பிறகு டீம் லீட் ,மேனேஜர் புகார் கூறி
அந்த நபர் கடுமையாக எச்சரிக்கப்பட்டார் .
அதன் பிறகும் அவர் தொடர்ந்து தொந்தரவு செய்ததால் Harassment complainant teamஇல் அந்தப் பெண்ணால் புகார் கூறினார்.ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை .
இது தான் நிதர்சனம் . காந்தி சொன்ன இரவில் சுதந்திரமாக நடப்பதை விடுங்கள் .
பகலில் வேலைக்கு போய்ட்டு வறதுக்கே பலகாலமாகும்
ஜெகன்னாதன் மனோகரன்
அன்புள்ள மனோகரன்,
என் அறிதலில் பெரும்பாலான நிறுவனங்களில் பாலியல் அத்துமீறல் வழக்குகள் எளிய எச்சரிக்கையுடன் மன்னிக்கப்படுகின்றன. அதிகபட்சம் இடமாற்றம் மட்டுமே தண்டனையாக வழங்கப்படுகிறது. மிகப்பெரிய அளவில் மாட்டிக்கொண்டு வழக்குக்குள் சிக்கும் நபர்களைப்பற்றிய செய்திகளை வாசித்தால் ஒன்றைக்கவனிக்கலாம். அவர்கள் பலமுறை மாட்டிக்கொண்டவர்களாகவும் சாதாரணமாக மன்னிக்கப்பட்டு விடப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். ஒரு ஆண் பெண்ணை அவமதிப்பது ஒன்றும் பெரிய தவறு அல்ல என்றுதான் நம்முடைய பொதுமனசாட்சி நினைக்கிறது
ஜெ