அன்புள்ள ஜெ,
அயன் ராண்டின் சிந்தனைகள் அவ்வளவு எளிமையானவை அல்ல.
சுயநலத்தை பற்றிய அவரது கருத்துக்கள் மிக தவறாகவே
புரிந்து கொள்ளப்பட்டுள்ளன். மனிதநேயத்தையும், தர்ம
சிந்தனையையும் அவர் மறுக்கவில்லை / வெறுக்கவில்லை.
ஆனால் மனிதனேயம் ‘மட்டுமே’ அறம் என்பதை அவ்ர்
ஏற்பதில்லை. உற்பத்தியை பெருக்கும், தொழில்முனைவோரின்
அடிப்படை அறங்களே உலகில் மிக மிக முக்கியமான அறம்
என்பதே அவர் கோட்பாடு. தொழில் முனைவோர்களின்
ஊக்கம், உழைப்பு மற்றும் லாபநோக்கங்களே நம்
உலகை மாற்றி, வறுமையை பல மடங்கு குறைத்து,
வாழ்க்கை தரத்தை மிக மிக உயர்த்தி உள்ளது.
ஆனால் மதமும், கம்யூனிசமும், இடதுசாரி சிந்தனைகளும்
இதை மறுத்து, தொழில் முனைவோர்களை வில்லன்களாகவும்,
மனித நேயம் அற்ற கொடுங்கோலர்களாகவும், சுயநல பிசாசுகளாகவும்
சித்தரிக்கின்றன. பொது புத்தியில் ஏற்றி பல காலங்கள் ஆகிவிட்டது.
நேர்மையான, சட்ட ரீதியான வழிமுறைகளில், எந்த ஒரு
தனிமனிதனின் அடிப்படை உரிமைகள் மற்றும் உடைமைகளை
மீறாமல், நசுக்காமல், பொருளீட்ட முனைவதையே அவர்
உலகின் மிக சிறந்த விசயமாக கொண்டாடுகிறார்.
நாடு, இனம், மொழி, மதம, சாதி போன்ற அடையாளங்களை
அவர் மறுக்கிறார். அதாவது, அதன் பெயரால் (chauvinisim) வெறி
கொண்டு, அவை ஃபாசிசமாக மாறுவதைதான் எதிர்க்கிறார். நாம்,
நம்மை முதலில் மனிதர் என்று அடையாளப்படுத்திக்கொள்ள
வேண்டும் என்பதே அவரின் கருத்து. பண்பாடு பற்றி அவரின்
சிந்தனைகள் சிக்கலானது. அதை பற்றி பிறகு பேசலாம்.
நீங்கள் கூறியபடி அவர் கடைசி காலத்தில் மனச்சிதைவு அடைந்து,
மன்நோய் விடுதியில் இறக்கவில்லை. தன் வீட்டில்தான்,
நல்ல மனத்தெளிவோடு, 1982இல் காலமானார்.
மேலும் பார்க்க :
அவரின் முக்கிய ஆக்கம் (ஆனால் அவரின் நாவல்கள் அளவு அதிகம் அறியப்படாதது)
Capitalism: The Unknown Ideal:
http://www.aynrand.org/site/PageServer?pagename=objectivism_nonfiction_capitalism_the_unknown_ideal
http://capitalism.org/
—
Regards / அன்புடன்
K.R.Athiyaman / K.R.அதியமான்
Chennai – 96
http://nellikkani.blogspot.com
http://athiyamaan.blogspot.com
அன்புள்ள அதியமான்
உங்கள் கடிதம். அயன் ரான்ட் மனநல விடுதியில் இறந்தார் என நானும் எழுதவில்லை. மனந்லவிடுதியில் இருந்தார், இறந்தார் என்ற அவசரச்சொல்லாட்சி தவறாக அமைந்துவிட்டாது.
உங்க்ஜள் பெரும்பாலான கருத்துக்களுடன் நானும் ஒத்துப்போகிறேன். மார்க்ஸியம் ஒரு திரள்வாதம் அலையை உருவாக்கியது. அயன் ரான்ட் அதற்கு எதிரான குரல். ஆனால் அதுவும் சமநிலை அற்றதே என்று நான் எண்ணுகிறேன்
ஜெ
அன்புள்ள் திரு ஜயமோஹநுக்கு,
அயன் ராண்ட் பற்றிய உங்கள் பதிவு மிகவும் சுவாரசியமானது. பொருள் செறிந்தது.
என்னுடய்ய மகள் தன வலைப்பதிவில் அயன் ராண்டின் Atlass shrugged என்ற நூலைப்பற்றிய பதிவை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்
அன்புடன்
சங்கரநாராயணன்
http://atomhouse.wordpress.com/category/books/page/2/
Atlas shrugged
எனக்குப் பிடித்த அய்ன் ராண்ட் பற்றி எழுதியதற்கு நன்றி. என் நல்ல வேளையாக, அய்ன் ராண்ட் படிக்கும் நட்பு வட்டத்தில் சிக்கினேன். அவருடைய ஃபவுன்டன் ஹெட் படித்து, தலைக்கனம் பிடித்து:) திரிந்த நாட்களும் உண்டு.
அறிவுஜீவிமய வாதம் (அல்லது, பைபிள் வாசகத்தை மாற்றி “The Geek shall inherit the earth?:-) அறியச் சுவையானது. எதிர்காலத்துக்கு அவர்கள் முக்கியம் என்று சொன்னால், ஏழைகளும் மூடர்களும் முக்கியமில்லை என்றாகி விடுகிறது. இயற்கை/கடவுளின் வைபவத்தை மறு கேள்வி கேட்க நான் யார்?
—
கெ. பி.
http://kekkepikkuni.blogspot.com
ஜெ..
உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது போல் கல்லூரிக் காலத்தில் அறிமுகமானவர்தான் அயன் ராண்ட்.
நான் ‘அட்லஸ் ஷரக்ட்’ படித்தேன் முதலில். அதன் பின் மற்றவற்றைப் படிக்கத் தோன்றவில்லை. சொன்னது போல் முதிரா மனத்தைக் கவரும் எழுத்து. புத்திசாலித்தனமான விவாதங்கள். சுவையான நடை.இந்தப் புத்தகத்தில் ரோர்க்குப் பதிலாக ஜான் கால்ட். கட்டிடக் கலைக்குப் பதிலாக ரயில்/தாதுச் சுரங்கத் தொழில்கள். உலகின் மிக வல்லவனான, புத்திசாலியான ஜான் கால்ட், ரயில் கம்பெனியில் ஒரு கூலியாளாக வேலை செய்கிறான். ரயில் கம்பெனியின் முதலாளி டகார்ட். அவன் சகோதரி டாக்னி. அவளும் மிக வல்லமை கொண்ட பெண். அவளால்தான் கம்பெனி பல inefficiencies இருந்த போதிலும் ஓடிக் கொண்டிருக்கின்றது. Inefficiency ஐ எதிர்த்துப் போராடும் அவள் வாழ்க்கையில் குறுக்கிடும் நான்கு வல்லவர்கள் – அவள் இளம் பருவத் தோழன் ஃப்ரான்சிஸ்கோ, இரும்புத் தொழில் வல்லுநன் ஹாங்க் , கடல் கொள்ளையன் (பெயர் மறந்துவிட்டது) மற்றும் ஜான் கால்ட்.
டாக்னி ஒவ்வொருவருடனும் தன் தொழில் நிமித்தமாக உறவாடி இறுதியில் ஜான் கால்ட்டிடம் சேருகிறார். அவர் தோழர்கள் அனைவரும் திடீரெனெத் தம் வாழ் நாள்க் கனவான தொழில்களை அழித்து விட்டுத் தலைமறைவாகின்றனர். இறுதியில் டாக்னியின் முறை.
அவரது தோழர்கள் அனைவரும். தங்களது உழைப்பை, ஒட்டுண்ணிகளாக வாழும் பிற மனிதர்களுக்குச் செலவு செய்வதை விட, அவர்களைத் தத்தம் inefficient ஆன உலகத்தில் அழிய விட்டு விட்டு, efficiency மட்டுமே அளவுகோலாக ஒரு உலகம் சமைக்கச் செல்ல அழைக்கின்றனர். வழக்கம் போலவே, அந்த inefficient சமூகம் ஜான்கால்ட்டை அரெஸ்ட் செய்து மக்கள் முன் நிறுத்த, அவர் ஒரு பிரசங்கம் செய்கிறார் – 30 பக்கத்துக்கு. (கஷ்டம்)என்னால் உங்கள் போல் பல்வேறு தளங்களில் யோசித்து எழுத முடியவில்லை.
ஆனால் இது, கம்யூனிஸத்தினால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணின் reaction என்பது என்னுடைய ஒரு கோணம். அது மட்டுமின்றி, அது அவரின் தனிப்பட்ட, துணை தேடும் fantasyயின் எழுத்து வடிவம் போலவும்fantasyயின் எழுத்து வடிவம் போலவும் தோன்றுகிறது.
புத்திசாலிகளும், மேதைகளுமே நிறுவனங்களை நடத்த வேண்டும் என்பதான வாதம்
அவருடையது. அப்படிப் பட்ட காம்பினேஷன் உள்ள தலைவர்கள் மிகச் சிலரே. ஆனால்
தலைமைப் பண்பு பல மேதைகளுக்கு இல்லையென்பதே உண்மை – they can be really painful
as leaders – எல்லாச் சமூகத்திலும் free riders உண்டு. உழைப்பாளிகளுக்கு
அவர்கள் மேல் ஏற்படும் கோபம் நியாயப்படுத்த முடியும் corporate rat race
அதிகமான சமூகத்தில். ஆனால் மேதைகள் ஊதியத்தை எண்ணி உழைப்பதில்லை.
நான் மேதையல்ல. ஒட்டுண்ணியும் அல்ல. ஊதியத்தின் மேலேயே கண் வைத்திருக்கும் rat
race ல் இருக்கும் ஒரு மேலாளண். எனவே என்னைப் பொறுத்த வரையில் rate race ன்
தொந்தரவுகள் அதிகமாகும் போது ஆசுவாசப் படுத்திக் கொள்ள உதவும் புத்தகங்கள்தாம்
இவைகள். ரொம்ப மன வருத்தத்தில் இருக்கும் போது பழைய பைண்ட் செய்யப் பட்ட
பொன்னியின் செல்வன் படிப்பதில்லையா.. அது போல..
அன்புடன்
பாலா
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
அயன் ராண்ட் பற்றிய தங்கள் பதிவு படித்தேன்.
அயன் ராண்ட் கடந்து செல்லப்பட வேண்டியவர் என்பதையும், அவரது எழுத்துக்களை முற்றும் முதிர்ந்த உண்மையெனக் கொண்டால் அவை நமது அடிப்படை மனிதாபிமான உணர்வையே கூட சிதைக்க அச்சுறுத்தக் கூடும் என்பதையும் அவரது மொழியின் நடையை ரசிக்கும்போதே உணர்ந்திருக்கிறேன்.
ஆனால், நம்மிடையே பலர் இன்னமும் க்ரைம் நாவல்களே இலக்கியம் என்றும், மில்ஸ்-அண்டு-பூன் வகையறாக்களே காவியங்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்களே!
அதற்கடுத்த நிலையில், மனிதன் சூழ்நிலைகளின் கைதியாகி, காற்றில் ஒரு சிறகெனத் தத்தளிப்பதே வாழ்க்கை என்றும், அப்படி மனிதனை விதியின் கைப்பாவையெனக் காட்டும் படைப்புக்கள் “மட்டுமே” இலக்கியமென்றும் இன்னொரு சாரார் நினைத்துக் கொண்டிருக்கிறார்களே! (அதாவது, தனது “Romantic Manifesto”-வில் அயன் ராண்ட் சொல்கிற “Naturalism”.)
அந்தத் தளத்திலிருக்கும் ஒருவனை, “உன்னால் சுயமாக சிந்திக்க முடியும்; அவ்வாறு சிந்திப்பது (மற்றும் அதற்கேற்ப செயல்படுவது) தான் மனிதனாய் வாழ்வது; சமுதாய நெளிவுசுழிவுகளுக்கேற்ப உன்னை வளைத்துக் குறுக்கிக் கொள்ளாமல், நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், உள்ளத்தில் உறுதியும், சீரான, சரியான, முக்கியமாக உயர்வான சிந்தனையுமாக நிமிர்ந்து நில்” என்று சொல்லி, அவன் வாழ்க்கைக்கு விதியின் மேல் பழியைப் போடாமல், சமுதாயத்தினைச் சுட்டித் தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், அவனைப் பொறுப்பேற்க வைக்கும் எழுத்து, அவனுக்குக் கொஞ்சம் “திமிர்ந்த ஞானச் செருக்கைக்” கொடுத்தால் தான் என்ன? (இது அவர் சொல்லும் “Romanticism”.)
இப்படிப் புதிதாக உணரப்படும் சுயத்தின் எழுச்சியினால், மறுமுனைக்குத் தாவி, மனிதாபிமானம் மறந்து, சுயநலம் மிகுந்த ஒரு மிருகமாக மாறும் அபாயம் மறுக்க முடியாத நிஜம். ஆனால், அப்படி மிருகமாக மாறுபவர்களை, இருக்கவே இருக்கிறது, சமுதாயம் என்னும் இயந்திரம், அது கட்டி இழுத்து அடக்கி விடாதா என்ன?
மேலும், தன்னையும் உணராமல் பிறரையும் உணராமல் ஆட்டு மந்தை போல் வாழும் வாழ்க்கையிலிருந்து மேலெழும்பி தன்னை உணர்வது வரையிலாவது செல்வது (லௌகீகமான விஷயங்களில் மட்டுமே என்றாலும் கூட) ஒரு படி முன்னகர்வு தானே!
மேலும், அயன் ராண்டின் பார்வையில் சொல்லப் போனால், எல்லாவற்றுக்குமான ஊற்றுக்கண்ணாக (fountainhead) விளங்கும் இந்த “சுயம்” என்கிற விஷயத்தை முதலில் உணராமல் ஒருவனால் “மனிதாபிமானம்” என்பதை மட்டும் எப்படிப் புரிந்து கொள்ள இயலும்? சுய மறுத்தல் (self abnegation, or self denial) வழியில் மனிதாபிமானத்தை அடைய நினைப்பவர்கள், தம் சக்திகளை உன்னதத் தன்மைக்குத் திருப்புவதைப் (sublimation) பயிலவில்லை என்றால், உள்ளே கடும் கசப்பைத் தேக்கி ஒரு மாதிரி இறுகிப் போன வேடதாரிகளாகச் சென்று முடிவது தான் இயல்பென்று எனக்குப் படுகிறது.
இந்தச் சுட்டியில், Fountainhead நாவலில் வரும் இது போன்ற ஒரு போலி மனிதாபிமானியின் (Ellsworth Toohey) சுயரூபம் வெளிப்படும் பத்திகளைக் காணலாம்:(http://greenspun.com/bboard/q-and-a-fetch-msg.tcl?msg_id=004FMp) இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களைச் செய்யும் மக்களை நாம் அவ்வப்போது காணத்தானே செய்கிறோம்.
அதீத தன்னம்பிக்கையால் சிலர் தன்னையறியாமலே கூட மற்றவருக்கும் சமுதாயத்திற்கும் தீங்கிழைக்கும் பிரச்சினை பற்றி நீங்கள் கூறியிருக்கிறீர்கள்; மறுக்கவே முடியாத உண்மை தான்; ஆனால், இங்கு அயன் ராண்ட் சொல்லுகிறபடி, “மனிதாபிமானம்” என்கிற பெயரில், அறியாமல் (அல்லது சில நேரம் நன்கு அறிந்தே கூட) மற்றவர்களின் உள்ளத்தை உடைக்கும், ஆன்மாவை அழிக்கும், ஒட்டுமொத்த சமுதாயத்தையும், அறிவியல், கலைகள், அரசியல், என்று எல்லாவற்றையும் உளவியல் நோக்கில் சிறை வைக்க அல்லது சிதைக்க நினைக்கும் சிலரை என்ன சொல்வது? இந்த இரண்டில் எது தீயதில் குறைந்தது? ஏன்? மேலும் உங்கள் எண்ணங்களைக் கேட்க ஆவல்! நன்றி!
அன்புடன்,
விஜய்.
பி.கு.: நீங்கள் சிபாரிசு செய்திருக்கும் இரண்டு நூல்களில் இரண்டாவது, “Sophie’s World” (Jostein Gaarder எழுதியது) என்று எழுத நினைத்து தவறுதலாக “Sophie’s Choice” என்று வந்துவிட்டதா, அல்லது “Sophie’s Choice” தானா?
மற்றபடி, உங்கள் அமெரிக்கப் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்! :)
அன்புள்ள விஜய்
நியூ யார்க்கில் இருக்கிறே ந்.
அது சோஃபீஸ் வேர்ல்ட் நாவல்தான். நான் கைத்தவறுதலாக சோஃபீஸ்சாய்ஸ் என்று அடித்துவிட்டேன். லண்டன் விமானத்தில். சோப்ஃஈஸ் சாய்ஸ் எனக்கு மிகவும் பிடித்த நாவல். எனக்கு அதை அசோகமித்திரன் பரிந்துரைசெய்தார். வில்லியம் ஸ்டைரன் ஒருநாள் ஒரு ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உட்பட்டு தற்கொலை மனநிலைக்குச் சென்றதாகவும் அதைப்பற்றி அவர் ஒரு நீள்கட்டுரை எழுதி பின் இந்நாவலையும் எழுதியதாகவும் அசோகமித்திரன் சொன்னார்– அந்த மனநிலையில் அவர் இருப்பதாக.
சோஃபீஸ் சாய்ஸ் ஒரு மகோன்னத நாவல் என்று அவர் எனக்கு எழுதிய கடிதத்திலும் சொல்கிறார். நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் அது ஒரு மிகச்சிறந்த நாவல்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
நலமா?
நீங்கள் சொன்னது போன்று இந்திய நகர்ப்புற இளைஞர்களில், குறிப்பாக தொழில்முறைக் கல்வி (professional) மாணவர்களில் ராண்ட் கடவுள் ரேஞ்சுக்கு இன்றும் இருக்கிறார் (ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை). அந்தக் கட்டத்தை நான் கடந்து வந்தபோது, ராண்ட், ஃபெய்ன்மென் இருவர் மீதும் முதலில் பிரமிப்பும், சந்தேகமும், குழப்பமும் பிறகு ஒருவித கலவைப் பார்வையும் கொண்டவனாக மாறிவிட்டிருந்தேன்.. கீதையும், திருவாசகமும், விவாகானந்தரையும் அப்போது கற்கத் தொடங்கி இருந்தேன்.
ராண்ட் பற்றிய தங்கள் விமர்சனம் தவிர்க்க முடியாததாக, compelling ஆக இருக்கிறது. ஒரு சமன்வயமற்ற கொள்கை “தத்துவமாக” ஆகி, வாழ்வியலாக மாறி பின்னர் சமூகத்தை ஆட்டிவைக்கும் சக்தியாக மாறுவது என்பதற்கு நல்ல உதாரணம் ராண்ட்-இஸம். மார்க்சியம் அளவுக்கு இது தெளிவாகத் தெரியாததற்கு தனிமனிதரின் சுயத்தை அசைத்துப் பார்க்கும் அதன் கவர்ச்சியே காரணம் என்று தோன்றுகிறது.
பல தளங்களில் ஊடுருவிச் செல்லுகிறது உங்கள் விமர்சனம். இந்து ஞான மரபை ஆழமாக உள்வாங்கிக் கொண்ட உங்களைப் போன்ற ஒருவர் இத்தகைய விமர்சனத்தை முன்வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இனிவரும் பகுதிகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
ஜடாயு
பி.கு: இந்தத் தொடர் முடிந்தவுடன், இதனை consolidate செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விருப்பம். அனுமதி உண்டுதானே?
—
My blog: http://jataayu.blogspot.com/
அன்புள்ள ஜெ:
அயன் ராண்ட் குறித்த தங்கள் கட்டுரையை வாசித்தேன். நானும் சில காலம் அந்தப் போதையில் சிக்கித் தடுமாறினேன். பின்னர் நிகாஸ் கசந்த்சாகிஸ், ஷுமேக்கர், விக்டர் ஃபிராங்கல், எரிக்ஸன் போன்றவ்ர்களைப் படித்தே அயன் ராண்டை விட்டு விலகி வந்தேன். தங்கள் எழுத்தும் ஒரு முக்கிய காரணம்
வடிவமைப்பு, மேலாண்மை, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் பலருக்கு அட்லஸ் ஷ்ரக்ட்டும், ஃபௌண்டன் ஹெட்டும் புனித நூல்கள் போல். நண்பனொருவன் ஜான் கால்ட்டின் (மெட்ராஸ் பாஷையில்- சான் கால்ட்?) புகழ்பெற்ற உரையை தினமும் ஒருமுறை தவறாமல் படிப்பான். ஃபௌண்டன் ஹெட் படித்து முடித்தபின் ஒரு மிகப் பெரிய அறிவாளியின், செயல்வீரனின், ஒரு perfectionistன் தோரணை நம்முள் வந்து கூடும். அப்படி பலரை நான் பார்த்திருக்கிறேன். சமரசம் அற்றவனாக, இருப்பதனைதையும் புரட்டிப் போட்டுப், புதிதான, புத்தம் புதிதான ஒன்றை செய்யத் துடிக்கும் பேரார்வம் உடையவனாக சில காலம் சுற்றிக் கொண்டு இருப்பார்கள். நானே கூட சிலகாலம் அப்படி சுற்றி, பலரை இம்சைப்படுத்தியிருக்கிறேன்.
சொல்லிப் புரிய வைக்க முடியாத இம்சைகள், அவர்கள். பைக் ஓட்டுவதில் இருந்து வெங்காயம் நறுக்குவது வரை ஒரு perfectionistன் தீவிரத்துடனே எதிலும் ஈடுபட்டுக் கொண்டு இருப்பார்கள். மற்றவர்களின் மேல் இவர்களுக்கு இருக்கும் உதாசீனமும், இளக்காரமும் சாதாரணமானது அல்ல. உலகையே உண்டு, புசித்து, மாற்ற படைக்கப்பட்டவ்ர்கள் போல். இதில் ’கடைசி’ தீர்ப்பு சொல்லும் நீதிபதி தோரணையும் சேர்த்தி. ஆனால் சிறு சிறு சருக்கல்கள், ஏமாற்றங்கள் கூட பேரிடிகளாக அவர்களைத் தாக்குவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். சிதறி, சின்னாபின்னமாகி விடுவார்கள். அதன் பின், அங்கிருந்து, நேராக ஜாக் கெருவாக் தான் கதி. குடி, கூத்து, கஞ்சா. தண்டர்பேர்ட் மோட்டார்பைக். நிஹிலிசம், நீட்சே. ”ஃபைட் கிளப்” போன்ற நாலைந்து கல்ட் படங்களின் பெயர் உதிர்புகள். பிறகு, அதுவும் ஓய்ந்து, ஏதாவது ஒரு கார்பரேட் பாபாவிடம் ஒரு சாதாரண வேளையில் சரணடைந்து, அதில் மூழ்கித் திளைப்பார்கள். அவ்வளவுதான். முற்றும்.
இன்றும் கூட மேல் பட்டப்படிப்புக்கு அமெரிக்கா வரும் இந்திய மாணவர்களுள் பெரும்பான்மையானவர்கள் அய்ன் ராண்டைத் தாண்டி எதையும் படிக்காதவர்கள். ஆனால் மெத்தப் படித்த மேதாவிகளின் தோரணையுடனே கருத்துதித்துக் கொண்டு இருப்பார்கள். தலித் குழந்தைகள் ஏன் ஸ்கூலுக்குப் போக அடம் பிடிக்கிறார்கள், அவர்களை எப்படி ”நாம்” முன்னேற்றுவது என்றெல்லாம் கூட்டம் கூட்டி மும்முரமாக் பேசிக் கொண்டிருப்பார்கள். ( ஒருமுறை ரவா கேசரி, குலாப் ஜாமுனுக்கு ஆசைப்பட்டு தெரியாத்தனமாக இம்மாதிரி கூட்டம் ஒன்றுக்குச் சென்று, பின்னர் தலை தெறிக்க ஓடி வந்தது தனிக் கதை).
இவ்வளவு என், இப்பொழுதுள்ள என் ஃபிளாட் மேட் கூட அயன் ராண்ட் பக்தன் தான். பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து நான் அவ்வப்போது சில புத்தகங்களை எடுத்து வருவேன். அய்யப்ப பணிக்கர் தொகுத்த இந்தியக் கதைகள், பஷீரின் சிறுகதைத் தொகுப்பு, தாராசங்கர், காரந்த், கசந்தஸாகிசின் டைரிக் குறிப்புகள், ஹருகி முராகமியின் சிறுகதைகள் அடங்கிய முழுத் தொகுப்பு போன்ற புத்தக்ங்கள். நான் எடுத்து வந்திருக்கும் நூல்களை அவன் புரட்டிப் பார்த்து திரும்பப் கொடுத்து விடுவான். ”வேண்டுமென்றால் படித்து விட்டுத் தா..அவசரமில்லை எனக்கு”, என்பேன். ”இல்லை வேண்டாம்.. சும்மா தான் புரட்டிப் பார்த்தேன்.. இதில் படிக்க ஒன்றுமில்லை”, என்றான். எனக்கு ஆச்சரியம்… ”ஏன் அப்படி சொல்கிறாய்”, என்று கேட்டேன். ”இல்லை.. அய்ன் ராண்டுக்குப் பிறகு படிக்க ஒன்றுமில்லை…what is there to read after Ayn Rand?” ” என்று மிகத் தீர்மானமாகச் சொன்னான்.
சில சமயம் எனக்கு இது வியப்பளிப்பது உண்டு. இவர்களின் நோக்கங்களும், விழுமியங்களும் உயர்வானது தான். செயல்வீரனாக, perfectionistஆக, சமரசம் அற்றவனாக, புதியதை உருவாக்கும் ஆர்வம் உடையவனாக இருப்பது என்பதெல்லாம் மேலான விழுமியங்கள் தான். ஆனால் இதில் ஏதோ ஒன்று குறைவது போலவே எனக்குத் அடிக்கடி தோன்றுவதுண்டு.
நித்யா தேநீர் தயாரிப்பதைப் பற்றி ஒரு இடத்தில் கூறியிருப்பீர்கள். அவர் தேநீர் தயாரிக்கும் போது இல்லாத perfectionismஆ? அதில் இல்லாத செயல்நேர்த்தியா? ஆனால் அதற்கும், அய்ன் ராண்ட் வகை செயல்நேர்த்திக்கும் உள்ள பெரும் வித்தியாசம், பின்னதில் ‘அழகனுபவம்’ என்பது துளி கூட உள்ளூர இல்லை என்பதே என்று தோன்றுகிறது. அழகனுபவமும், கனிவும் உள்ளூர இல்லாமல் செய்யப்படும் ’செயல்’, அது எவ்வளவு நேர்த்தியாக இருப்பினும், மூர்க்கத்திலேயே முடியும். சிறு சரிவுகளும் கூட பெரும் பாறாங்கற்கலைப் போல அவர்கள் மீது ஏறி நின்று கனக்கும். நித்யா தேநீரை தவறிப் போய் கீழே சிந்தியிருந்தால் என்ன செய்திருப்பார்? சிரித்திருப்பார். கண்டிப்பாக கத்திக் கூப்பாடு போட்டிருக்கமாட்டார். அழகும், கவித்துவமும், கனிவும் கூடாத செயல்நேர்த்தி மூர்கத்திலும், அதிகாரத்திலுமே முடிவதுண்டு. இவர்க்ள் பெரும் கர்விகளாகவும், ஆளப் பிறந்த, உலகையே சீர்திருத்தப் பிறந்த அளுமைகளாக தங்களை தாங்களே கற்பித்துக் கொள்கிறார்கள். இதில் சிறு பிழை ஏற்பட்டாலும் நொடிந்து போகிறார்கள். ஒரு சாரர், தங்களைத் தாங்களே நொந்து கொண்டு சுயவெறுப்புக்கு ஆளாகிறார்கள். வேறு சிலர், தமது சறுக்கல்களை மற்றவர்கள் மீதோ அல்லது சமுதாயத்தில் உள்ள mediocrityஇன் மீதோ ஏற்றி தேவையற்ற, பாசாங்கான எரிச்சல் சொள்கிறார்கள். பின்னவர்களே எண்ணிக்கையில் அதிகம் என்று நினைக்கிறேன்.
அய்ன் ராண்ட் கூறும் தனிமனிதவாதமும், புறவயவாதமும் முதலில் தருவது பெரும் போதையை. ஒரு முதிரா கனவை. கனவில் இருந்து இறங்கி செயலில் ஈடுபடும் போது முதலில் உள்ள வேகம் தளர்ந்து, பின்னர் அது வெற்று மூர்கமாக உருமாறுகிறது. அதில் படைப்பூக்கம் இல்லை. வெறும் சுயதம்பட்ட விளையாட்டு தான் மிச்சம். அதன் பின், அது உருவாக்குவது ஒரு பெரும் சோர்வை. அப்படி ஒரு பெரும் சோர்வில், சோர்ந்து போய் பதுங்கும் சிலரை மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். சோர்வை போக்க அகங்காரம். சீரிப் பாயும் கோபம். பின்னர், கோபம் தரும் சோர்வு. சுயபச்சாதாபம்.
அன்புடன்,
அரவிந்த்