கதைகள்-கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,

உங்கள் ‘நிலம்’ சிறுகதையைப் படித்தேன். சேவுகப்பெருமாளைப் படிக்கும்போது தல்ஸ்தாய் எழுதிய How Much Land Does A Man Need? என்ற சிறுகதை ஞாபகத்திற்க்கு வந்தது.

முடிவில் சருகுகளுடன் படுத்துக்கொண்டிருக்கும் பண்டாரம் தல்ஸ்தாயின் பிம்பம் போலவே பட்டது.

ஒரு நீதிக்கதையின் எளிமை இருந்தும், கதை யதார்த்தத்தில் புதைந்திருப்பது கலையின் உச்ச லட்சியங்களில் ஒன்று. அதைத் தொட்டதற்காக என் பாராட்டுகள்.

– விஜய் கௌசிக்

நீங்கள் ஒரு ஆசாரி. சொற்களை எழுத்துக்களைப் பல விதமாக செதுக்கும் ஒரு சிற்பி.

நான் எதையும் குறித்து அதிகம் எழுதாமல் இருக்கிறேன். படிக்க நிறைய இருக்கு. கருத்து சொல்ல அவசியம் இல்லை. எல்லாம் எனக்குள் ஒரு பெரிய அனுபவமாகவே இருக்கட்டும். அதை வெளியே சொல்லித் தர்க்க உலகில் இறக்கும் போது அந்த அனுபவம் குறைய வேண்டாம் என்று இருக்கிறேன்.

ஆனால் இதனை சொல்லியே தீர வேண்டும். நீங்கள் வடிக்கும் சிற்பங்களை முழுதாகப் புரிகிறதோ இல்லையோ பிடிக்கிறது….பார்த்து பார்த்துக் கண்கள் பூத்தாலும்
மீண்டும் மீண்டும் பார்க்க அனுபவிக்கத் தூண்டுகிறது. காம அனுபவம் போன்றதொன்று.

எத்துணை  பெரிய விஷயத்தை ஒரு சாதாரண நிகழ்வில் இருந்து சொல்வது எளிதல்ல. அதுவும் தங்கு தடை இன்றி வார்த்தைகள் செயற்கையான சாயம் இன்றி செதுக்கப்பட்டதாக உள்ளது.

ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே உறைந்த சிறு சிற்பமாகப் பார்க்க முடிகிறது. அதே நேரம் ஒரு வாக்கியம் வேறொரு அனுபவத்தைக் கொடுக்கிறது. ஒரே நேரம் சிரிப்பு பெருமை பேரானந்தம் பெரும் பித்து எல்லாம் ஏற்படுத்தும் வாக்கிய அமைப்பு.

சடாரென்று நம்மைப் பித்தாக்கி விடுகிறது.

எல்லோருக்கும் திடீரென்று எங்கோ புறப்பட்டு மன எழுச்சி ஏற்படுவதுண்டு. அது திட்டமிட முடியாத தருணங்கள்.

ஆனால் அதைத் தர்க்க உலகின் வழியாக இன்னொருவருக்குச் சென்று சேர்ப்பது எவ்வளவு கடினம் என்று அப்படி முயன்று தோற்றவருக்குத் தெரியும். வென்றவர்களுக்கும் புரியும். அதை மீண்டும் மீண்டும் செய்வது சாத்தியமே இல்லை.

அம்மையப்பம் அப்படி ஒரு படைப்பு. என்னால் அந்தச் சிறுவனாக உடனே மாற முடிகிறது. அந்த ஆசாரியாகவும் இருக்க முடிகிறது. அந்தக் காட்சியை பார்க்கும் சாட்சியாக பார்வையாளனாகவும் இருக்க முடிகிறது. எல்லாவற்றிலும் முழுமையாக இருக்க முடிகிறது. இது காமத்தில் பெரும் த்யானத்தில் மட்டுமே சாத்தியம்.

அதை ஒரு கதையின் மூலம் அடையச் செய்வதென்பது முடியாத காரியம். அதனை மீண்டும் மீண்டும் செய்வதென்பது ஒரு வரம்.

இதனை சொல்ல முடியவில்லை. எனக்குள் ஏற்படும் மன எழுச்சியைப் பல உணர்சிகளால் நுணுக்கமாகப் பிணைக்கப்பட்ட அந்த அனுபவத்தை உங்களுக்கு மீண்டும் சொல்லி முடிக்க நான் ஜெயமோகன் இல்லை .

ஸ்ரீதர்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

கடந்த சில நாட்களாக நீங்கள் எழுதிய பழைய கதைகளும் ,புதிய கதைகளுமாகத் தங்கள் வலைத்தளம் ஜொலித்துக் கொண்டு இருக்கிறது.தங்கள் கதைகளில் வரும் உபமானங்கள் ஒவ்வொன்றும் படித்து படித்து ரசிக்கச் செய்கிறது. நிலம் கதையில் வரும் “நெற்றியில் குங்குமம் வைத்த இடம் வட்டமாகக் கருகி அய்யனார் கோயில் கல்படியில் சூடவிளக்கு ஏற்றிய தடம்போலிருந்தது”
இது போன்ற உபமானங்கள் சர்வ சாதரணமாக உங்களால் எப்படி எழுத முடிகிறது.ஆனால் இந்தக் கதையின் முடிவு வரை மனதுக்குள் எளிய வாசகனான எனக்கு ஒரு பதைப்பு இருந்து கொண்டே இருந்தது.ராமலட்சுமியின் பிரியமான கணவன் சேவுகப்பெருமாள் எந்நேரமும் யாராலோ கொல்லப்படலாம் என்பதுதான் அதற்கு ஏற்றாற்போல் நீங்களும் பூடகமாக எழுதி இருந்தீர்கள்.ஆனால் கதையின் முடிவு மனதுக்குப் பெரிய திறப்பாக இருந்தது.

மேலும் நிலம் மற்றும் அம்மையப்பம் கதைகளுக்கு வந்த கடிதங்களும் தங்கள் வாசகர்கள் எவ்வளவு தூரத்துக்கு அதை அனுபவித்து உள்ளார்கள் என்பதையும் காட்டுகிறது.

நன்றி.

அன்புள்ள,

அ.சேஷகிரி.

முந்தைய கட்டுரைசுஜாதாவை அடையாளம் காண்பது…
அடுத்த கட்டுரைபஷீர்- கடிதம்