ஈழம் -கொலைகள்- கடிதம்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

காந்தி-ஈழம் தொடர்பான கடிதத்திற்கு உங்களின் பதில் பார்த்தேன்.அதில் நெருடலான விடயம் ஒன்றினை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.இரண்டாம் கட்ட ஈழப்போரின் போதே மிக மோசமான அளவில் தமிழ்-முஸ்லிம் கலவரங்கள் கிழக்கில் நிகழ்ந்தன.பல தமிழ் கிராமங்கள் கிழக்கில் குறிப்பாக இலங்கையிலேயே முஸ்லிம்கள் அதிக விகிதத்தில் வாழும் அம்பாறை மாவட்டத்தில்(ஏறத்தாழ முஸ்லிம்-40%,சிங்களவர்-40%,தமிழர்-20%) இருந்த சுவடே தெரியாமல் சிங்கள இராணுவ ஆதரவுடனான முஸ்லிம் ஊர்காவல் படைகளினாலும்,ஜிகாதி ஆயுதக்கும்பல்களினாலும் அழிக்கப்பட்டன.உதாரணமாக,வீரமுனைப்படுகொலைகள்.தமிழ்க் குழந்தைகள் ஜிகாதி காடையர்களால் கோயில் பலிபீடத்தில் தலை சிதறடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதைக் குறிப்பிடலாம்.கிழக்கைச் சேர்ந்த தமிழர்களிடம் நீங்கள் நேரில் கதைத்தால் அவர்கள் இரத்தத்தை உறையவைக்கும் பல நூறு சம்பவங்களைக் கூறுவார்கள்.இதற்கு பதிலடியாக விடுதலைப் புலிகளாலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள்.இரண்டாம் கட்ட ஈழப்போருக்குப் பின்னர் இருதரப்புமே பெருமளவில் சமாதானத்தையே கடைப்பிடித்தன.நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள வலைப்பதிவு அடிப்படைவாத வெறியைக் கக்குவதை நீங்கள் கவனிக்காதது துரதிருஷ்டவசமானது.இவ்வாறானவர்களுக்கு உங்கள் தளத்தினூடாக விளம்பரம் தருவது முதுகு கடிக்கின்றது என்பதற்காகக் கொள்ளிக்கட்டையால் சொறிவதாக அமைந்துவிடும்.அந்த வலைப்பதிவின் தொடர்பை அளிக்காமல்,’விடுதலைப் புலிகளின் தாக்குதல்களின் போது சிறுவர்கள் கொல்லப்படவில்லையா என்ற கேள்வியினூடாக மறுதரப்பு இதனை நியாயப்படுத்தும்.’ என்பதே தங்களின் கட்டுரைக்குப் போதுமானதாகும்.இவ்வாறான பொருத்தமான வசனங்கள் மூலம் அவ்விடத்தை நிரப்பிவிட்டு அந்த வலைப்பதிவின் தொடர்பை நீக்கிவிடுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

எஸ்

அன்புள்ள எஸ்

நீங்கள் சொன்னது சரிதான். அந்த இணைப்பை நான் முழுமையாக வாசிக்கவில்லை. வாசிக்கும் தரத்தில் அது இல்லை. நீக்கிவிடுகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தி–ஈழம்
அடுத்த கட்டுரைஒழிமுறி- டானியேல்- மலையாற்றூர்-கடிதங்கள்