நிலம் கடிதம்

அன்பின் ஜெ,

நலந்தானே? மீண்டும் படைப்புகள் வரத்தொடங்கியுள்ளது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி.குறிப்பாக நிலம் சிறுகதை.ராமலட்சுமியின் மன அவசமும் பண்டாரத்தின் விடுதலை உணர்வும் பெருமாளின் இறுகிய பிடிவாதமும் மனதை அறைந்தன. கன்னியாகுமரி வட்டம் தாண்டி கரிசல் நிலத்தில் கதை அமைந்திருப்பது மேலும் ஒரு சிறப்பு.

எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழகத்தின் தற்போதய ஒரு முக்கியமான போக்கினைக் கருவாகக் கொண்டிருப்பது நிறைய சிந்திக்கவைத்தது. ஆம் தமிழக நடுத்தர வர்க்கத்தைப் பிடித்து ஆட்டும் இந்த நில வெறிக்கொள்கை .சமீப காலமாகவே என் உறவினர் வட்டார மங்கல/அமங்கல நிகழ்சிகளில் கலந்து கொள்ளும்போதெல்லாம் ஒன்றைக் கவனித்து வருகிறேன், அநேகமாக எல்லாருடைய வாயிலும் புகுந்து புறப்படும் உரையாடல் ரியல் எஸ்டேட் ,குறித்ததாகவே உள்ளது .குறிப்பாக கற்றறிந்த கலை இலக்கிய ஈடுபாடு கொண்டிருந்த,,மிக உயர் பதவிகளில் இருந்து ஒய்வு பெற்றவர்கள் கூட (சொல்லப்போனால் இவர்கள்தான்)ரியல் எஸ்டேட் அன்றி வேறு எதுவும் பேசுவதில்லை. சேவுகப் பெருமாளுக்கும் இவர்களுக்கும் ஒரு ஒற்றுமையைக் கண்டேன்.

பெருமாளுக்குப் பிள்ளையில்லை.இவர்களின் அநேகரின் பிள்ளைகள் அயல் நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் அனுப்பும் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் எங்கு நிலம் கிடைத்தாலும் என்ன விலை என்றாலும் வாங்கிப்போடத் துடித்துகொண்டிருக்கிரார்கள்.இவர்களுக்காக எங்காவது ஒரு சேவுகப்பெருமாள் அரிவாளுடன் அலைகிறார்கள் போல. மேலும் இவர்கள் வாங்கிப்போடும் அவ்வளவு நிலமும் வீடும் அநேகமாக இனி இந்தியாவுக்கே திரும்பி வரப்போவதில்லை என்னும் முடிவில் இருக்கும் பிள்ளைகளுக்காக என்பதையும் இவர்கள் அனைவருமே முதிர்ந்த வயதில் இருப்பவர்கள் என்பதையும் எண்ணும் போது இந்த அர்த்தமற்ற செயல்பாடுகளின் சமூக விளைவுகள் எப்படி இருக்குமோ என்பது பெரும் கவலையாகவும் அச்சுறுத்தலாகவும் உள்ளது.

இந்த நிலவெறி நம் ஊடகங்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லா மாவட்டங்களிலும் இயங்கும் உள்ளூர் தனியார் தொலைக்காட்சிகள் இதற்கெனவே இயங்குகின்றன என்பதும் தி ஹிந்து நாளிதழ் கூட வாரம் ஒரு முறையேனும் தன முதல் பக்கத்தில் முழுப் பக்க அளவு ரியல் எஸ்டேட் விளம்பரத்தைத் தாங்கி வருகின்றது என்பதும் யதேச்சையான ஒன்றல்ல என்று படுகிறது.நிலவெறி என்பதும் நில அபகரிப்பு என்பதும் தமிழ்நாட்டின் ஒரு சில குடும்பங்களின் மனப்பிறழ்வு என்ற நிலை மாறி ஒவ்வொரு வசதி படைத்த தமிழ்க் குடும்பத்தின் சராசரி குணங்களில் ஒன்று என்ற காலத்தில் வாழ்கிறோம் என்று தோன்றுகிறது.

சுரேஷ் வெங்கடேசன்

முந்தைய கட்டுரைதமிழகத்தில் தமிழ்
அடுத்த கட்டுரைதீபமும் கிடாவும்- கடிதங்கள்