அன்புள்ள ஜெ,
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்., அஜிதன் சுகம் தானே ?!
இப்போது தான் உங்களது ‘காந்தியும் ஈழமும்’ வாசித்து முடித்து, தற்செயலாக முகப் புத்தகம் சென்றேன்., திரு.பிரபாகரன் அவர்களின் மகன் திரு. பாலச்சந்திரன் அவர்களை சிங்கள ராணுவம் சித்ரவதை செய்து கொலை செய்த புகைப்படம் பலரால் பகிரப்பட்டு இருந்தது. அதை நீங்களும் பார்த்து இருப்பீர்கள் என எண்ணுகிறேன். இனியும் அங்கு காந்திய வழிக்கான தேவை அவசியம் தானா ?!
மணிப்பூர் இரோம் ஷர்மிளாவும் காந்திய வழியின் அருகில் தானே இருக்கிறார். ஆனால், யாருமே கண்டுகொள்ளவில்லையே..
-ஹாரூன்,
சிங்கப்பூர்
அன்புள்ள ஹாரூன்,
பாலச்சந்திரன் படத்தை ஒரு கணத்துக்குமேல் பார்க்க முடியவில்லை. உடனே ஒரு தந்தையாக என் மனம் ஓர் அடையாளப்படுத்திக்கொள்ளலைச் செய்கிறது. அதன்பின் அந்த எண்ணத்தையே திரும்பிக் கொண்டுவரத்தயங்குகிறேன்.
உலகமெங்கும் போர்களில் தீவிரவாதச்செயல்களில் தீவிரவாத எதிர்ப்புகளில் இம்மாதிரியான ஈவிரக்கமற்ற கொலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பலசமயம் பாலஸ்தீனத்திலும் ஈராக்கிலும் நிகழும் குண்டுவெடிப்புகள், குண்டுவீச்சுகளின் சித்திரங்கள் வாழ்க்கைமேல், மனிதமதிப்பீடுகள் மேல் ஆழமான அவநம்பிக்கையை உருவாக்கிவிடுகின்றன. குறிப்பாக இரவுகளில்.
ஆனால் இந்த நேரடியான அப்பட்டமான அறமீறல் கூட அதன் மறுபக்கத்திற்கு எப்படிப் பொருள்படுகிறது என்று பாருங்கள். இந்த இணைப்பை கவனியுங்கள். இதை ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார்
உண்மையா பொய்யா என்று தெரியாது. ஆனால் இந்த வகையான நூற்றுக்கணக்கான வாதங்கள் மூலம் நம் மனசாட்சியை உலுக்கும் இந்தக் கொடுமையை எதிர்த்தரப்பு நியாயப்படுத்திக் கடந்துசெல்லும். சிங்கள அறிஞர்கள் சிலரிடம் பேசியிருக்கிறேன். அவர்கள் தமிழ்த்தரப்பு நியாயங்கள் எதையுமே கேட்கத்தயாராக இல்லை, புலிகள் தங்களுக்கு செய்த வன்முறைகளைப்பற்றி மட்டுமே மீண்டும் மீண்டும் பேசினார்கள்.
வன்முறைசார்ந்த எந்தப் போராட்டமும் இருபக்கமும் உக்கிரமான வெறுப்பையே உருவாக்குகின்றன. அனைத்து வாதங்களும் அந்த வெறுப்பின் அடிப்படையில்தான் உருவாக்கப்படுகின்றன. அங்கே நியாயங்களுக்கும் அறத்துக்கும் இடமில்லை. வெற்றி ஒன்றே சரியானது, அவ்வளவுதான். ஆயுதப்போராட்டத்தின் முக்கியமான எதிர்விளைவே அது உருவாக்கும் வெறுப்புதான். முரண்பட்டுப்போரிடும் இரு தரப்புகள் நடுவே எந்த சமரசமும் இல்லாத நிலையை நோக்கி அது வளர்ந்துசெல்கிறது. ஒட்டுமொத்த அழிவு மட்டுமே கடைசியில் எஞ்சும்
இப்போது வன்முறை மூலம் சிங்களர்கள் ஒரு தற்காலிக முழுவெற்றியை அடைந்திருப்பதாகத் தோன்றுவதும் பிரமையே. அநீதி இழைக்கப்பட்டதாகத் தமிழ்மக்கள் எண்ணுவது வரை, அவர்களின் ஆன்மாக்களில் காயம் இருப்பது வரை சிங்களர்களின் வெற்றியும் நிரந்தரமானதல்ல.
காந்தியப்போராட்டம் இதற்கு நேர் எதிரானது. இந்தியச் சுதந்திரப்போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த நாட்களில் காந்தி வட்டமேஜை மாநாட்டுக்காக லண்டன் சென்றார். அவரது போராட்டமே பிரிட்டனுக்கு எதிரானது, வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிரானது. ஆனால் அவரை வரவேற்க லண்டனில் பல்லாயிரம் ஏழைத் தொழிலாளர்கள் வந்திருந்தனர். அவர் அவர்களுடைய சேரிக்குச் சென்று அங்கே தங்கினார். அவர்கள் அவரைத் தங்களவராகவே கண்டார்கள்.
தன்னுடைய போராட்டம் ஆங்கில மக்களுக்கு எதிரானதல்ல, ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிரானது என்று அந்த மக்களைப் புரியவைக்க காந்தியால் முடிந்தது. தான் போராடுவது தன் மக்களுடைய நலன்களுக்காக அல்ல, நீதிக்காக மட்டுமே என அவர்களிடம் சொல்ல அவரால் முடிந்தது. தன் நியாயத்தைச் சொல்லும்போதே அவர்களின் நியாயத்தைப்பார்க்கவும் அவர் தயாராக இருந்தார். ஆகவே அவரது நியாயத்தை அந்த மக்கள் பார்த்தனர். காந்திக்கு உலகிலேயே அதிக ஆதரவாளர்கள் லண்டனில்தான் இருந்தார்கள் என்று ஒரு கூற்று உண்டு
அக்காரணத்தால்தான் காந்தி வெள்ளையர்கள் கொல்லப்பட்டபோது அதை எதிர்த்தார். ஓர் இந்திய உயிர் அளவுக்கே எனக்கு வெள்ளையன் உயிரும் முக்கியமானதே என்றார். ஆகவேதான் பகத்சிங்கை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. போராட்டம் மனிதர்களிடையே அல்ல மாறுபட்ட பார்வைகள் நடுவேதான் என அவர் நிறுவிக்கொண்டே இருந்தார். ஆகவே அவரை எதிர்த்த வைஸ்ராய்கள் கூட அவரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தனர்
அதுதான் அகிம்சைப்போராட்டத்தின் வெற்றி. அது நம்மை வலிமையானவர்களாகத் தொகுக்கிறது. நம்முடைய நியாயங்களை எவரும் எப்போதும் மறுத்துவிட முடியாத நிலையை உருவாக்குகிறது. நம் எதிரிகள் கூட அந்தரங்கமாக நம் நியாயங்களைப் புரிந்துகொண்டாகவேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்குகிறது. காந்தியவழி அதுதான்.
ஜெ