அம்மா இங்கே வா வா-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,
அம்மா இங்கே வா வா, கடிதத்திற்கு உங்கள் பதிலை நானும் ஆமோதிக்கிறேன்.

மேலும், ஆத்திசூடியைப் பாட வைத்து, மனப்பாடம்செய்ய வைத்து, அறத்தை போதிக்க முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. அநேகமாக முடியாது என்றுதான் நினைக்கிறேன். அதிலும், கணினி வழியாக எதையுமே குழந்தைகளுக்குக் கற்பிக்க முடியும் எனத் தோன்றவில்லை (வளர்ந்த சிறுவர்கள் கதை சற்று [சற்றே] வேறு). ஆராய்ச்சிகளும் அதைத்தான் நிறுவி வருகின்றன.

ஒரு ஆராய்ச்சியில், இரண்டு அமெரிக்கக் குழந்தைகள் (6 மாதம்). ஒன்றிற்கு, தினம் ஒரு மணி நேரம், ஒரு சீனத்தாதி வந்து சீனத்தில் கதைகள் சொல்கிறாள். இன்னொரு குழந்தை (அதே வயது) அதே பாடத்தைக் கணினி/தொலைக்காட்சி வழியாகப் பார்க்கிறது. சில வருடங்கள் கழித்துப் பரிசோதித்ததில், நேரடியாகப் பாடம் கேட்ட குழந்தை, சீன மொழியை நன்கு பேசத் தொடங்கி இருந்தது. ஆனால், கணினி வழி கற்ற குழந்தைக்கு சீன மொழி பிடிபடவே இல்லை. இது எளிமைப்படுத்தப்பட்ட விளக்கம். இந்த ஆய்வை, நிறைய குழந்தைகள் வைத்து, புள்ளிவிவர கணக்குப்படி மெய்ப்பித்து இருக்கிறார்கள்.

இதற்கு, உளவியலாளர்கள் சொல்லுவது இதுதான். மூளையின் ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு திறனுக்குப் பொறுப்பாக இருக்கிறது. மொழி கற்றுகொள்ள ஒன்று, பாட்டுப்பாட ஒன்று, ஈட்டி எறிய ஒன்று, பகுத்தாய ஒன்று, சமுதாய உணர்வு கொள்ள ஒன்று என பல. ஓர் மொழி கற்றுக்கொள்ள மொழி சார்ந்த மூளைப்பகுதி மட்டுமல்லாது, சமுதாய உணர்வுக்கான பகுதியும் வேலை செய்யவேண்டுமாம். அதிலும் முக்கியமாக, இரண்டும் சேர்ந்து செயல்படும் போது மட்டுமே ஒரு குழந்தை புது மொழியைக் கற்றுக்கொள்கிறது. சீனத் தாதியை நேரில் பார்த்த குழந்தைக்கு, அது வாய்த்தது. இதைப் படித்த பின், தாய்மொழியின் சிறப்பை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு தாயை விட குழந்தையின், சமூக மூளையை பாதிப்பவர்கள் இருக்கமுடியுமா?. அதனால், அவள் இயல்பாய், சரளமாய் பேசும் மொழியை குழந்தை நன்கு கற்றுகொள்கிறது போலும். இந்த இயல்பும், சரளமும், குழந்தையின் மொழி மற்றுமல்லாது, மற்ற பிற ஆளுமைகளையும் ஆழமாக பாதிக்கும் என்று தோன்றுகிறது.

கார்ட்டூன் பார்த்து மொழியே கற்றுக்கொள்ளாத குழந்தை, அறத்தைக் கற்றுக்கொள்ளப் போகிறதா என்ன?

மேலும் அறம் பற்றி நிஜமாகவே எதேனும் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டுமென்றால், பெற்றோர்கள் அதன்படி இருக்க வேண்டும். ஆறுவது சினம் பாடச்சொல்லிவிட்டு, வள்ளென்று எரிந்து விழுந்தால், குழந்தை அறம் கற்காது. அறம் இல்லாத செயல்களின் போது, பெரிய தர்ம உபதேசம் செய்யாமல், மெலிதாக சொல்லி நாமும், அதன் படி நடக்க வேண்டும். சக குழந்தைகளுடன் பாசமாய் இருக்கச் சொல்லித்தர வேண்டும்.

ஜாகிர் ஹுசைனின் இசைத் தட்டுக்களைத் தேய வைத்து என்னால் புகட்ட முடியாத ஆர்வத்தை, ஒரு நாள், ஒரே நாள், இரண்டு மணி நேரம், ஒரு மரத்தடி drum-மரைப்பார்த்து, அவர்களின் பட்டறை ஒன்றில் உட்கார்ந்திருந்து மித்ரன் drum மீது தணியாத ஆர்வம் கொண்டான்.

இரண்டு மணி நேரம் முன்பு, மித்ரன் என்னைத் தவறுதலாக அம்மா என்று அழைத்துவிட்டான். அதற்கு வருத்தம் தெரிவித்த அடுத்த நொடி, என்னைக் கேட்டான்…”உன்னை அம்மான்னு நான் கூப்பிடலாமா? உனக்கு ஓகேவா?” என்று. நீ தாராளமாய்க் கூப்பிடலாம் என்று சொன்னதும், சொன்னான், “எனக்கு அம்மா கூப்பிட ரொம்ப பிடிக்கும்”. உங்கள் பதிலில் நீங்கள் சொல்லியிருக்கும்”ஏன்? குழந்தையின் உள்ளம், அம்மாவுக்கான ஏக்கம் இதில் இருப்பதனாலா?” கூற்றுக்கு இது ஒரு நல்ல உதாரணம். மித்ரனின் சித்திகளை எல்லாம், “அம்மா” என்றே அழைக்க மாலதி கற்றுக்கொடுத்துள்ளாள்.

தமிழ் கற்றுத்தரவென இந்தியாவிலிருந்து வாங்கி வந்த குறுந்தகடுகள் பிரிக்கப்படாமல் பரணில் கிடக்கின்றன. யாருக்கும் பரிசளிக்கக் கூட மனசாட்சி இடம் தர மறுக்கிறது. குழந்தை வளர்ப்பில் மட்டுமாவது எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ள விருப்பம் இல்லை.

அன்புடன்,
கெளதம்

முந்தைய கட்டுரைதீபமும் கிடாவும்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைரிச்சர்ட் டாக்கின்ஸின் நிறம்