காதலர்தினம்-கடிதங்கள்

வணக்கம். காதலர் தினம் பற்றிய தங்கள் பேட்டி மிக அழகாக இருந்தது. பாலியல் கவர்ச்சியின் வழி காதல் நோக்கி நகருதல் போன்றவை ஒரு முக்கிய நிகழ்வு. அது நிகழ்வதை வாழ்வின் அன்றாட பேரிரைச்சல் ஊடே கேட்பது பெரும் விஷயமே. கொஞ்சம் இதை தொலைத்து பொருளியல் , நுகர்வு வாழ்வில் மூழ்கினால் அப்புறம் கால யந்திரம் குறித்து கனவு கானும் இடமே வந்து சேருகின்றது. உங்கள் எழுத்துகள் இந்த இரைச்சல் ஊடே தொலைந்து போகாமல் இது போன்ற வாழ்வின் இதயதுடிப்பினை கேட்க சொல்கின்றது, ரசிக்க சொல்கின்றது. நுண்ணிய இடங்களின் வழிகாட்டி பலகை போல இருக்கின்றது, நன்றி.

தங்கள் பேட்டி பார்த்தேன். இரண்டு பாகங்கள் முடித்துள்ளோம். நிறைவாக வந்துள்ளது, இங்கு நாஞ்சில் வரும் பொழுது வேல்முருகன் ஒரு சிறப்பான பேட்டி எடுத்தார். அதையும் இது போல வீடியோ காட்சி செய்து இருக்கலாமோ என ஆசை வந்தது. இந்த முறை வரும் ஜுன் மாதம் நாஞ்சில் அவர்களையும் , முத்து லிங்கம் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கை கூடும் என நம்புகின்றேன். அந்த நேரத்தில் இது போன்ற ஒரு நல்ல பேட்டி ஒன்றினை ஒளி காட்சியாக ஆவண படுத்த முயலவேண்டும்.

அன்புடன்

நிர்மல்.

***

ஜெ,

வழக்கம் போல் தெளிவான, ஆரம்பத்திலிருந்து அலசும் கட்டுரை.

ஆனால் கீழ்கண்ட வாக்கியத்தை ஒப்புக்கொள்ள தயக்கமாய் இருக்கிறது.

// ஆனால் காதல்மணத்தில் இருக்கும் மன ஒருமை முன்பின் அறியாத இருவர் சேர்ந்துவாழ்வதில் நிகழ்வதில்லை//

//இப்படி மொத்தமாக சொல்லமுடியாது என்றே கருதுகிறேன்.

அமைந்த கணவன்/மனைவி காலப்போக்கில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ரசனை ஒன்றாக இல்லாவிட்டாலும் துணையின் ரசனை, மனநிலையை புரிதலும் அதற்கேற்றபடி நடந்துகொள்தலும் மன ஒருமையும் நிகழ்வதற்கு கண்டிப்பாய் சாத்தியகூறுகள் இருக்கின்றன

எத்தனை சதவீதம் என்று தெரியாது.அதேசமயம், ஒத்த ரசனை, மனநிலை, அறிவுத்திறனில் இணைந்த நண்பர்களின்திருமணங்கள் மன அளவில் கசந்ததையும் பார்த்திருக்கிறேன். ஏற்பாடு செய்த திருமணங்கள் முறிந்துவிடாமல் இருக்க அழுத்தம் கொடுக்கும் சமூகமும் குடும்பமும் காரணம் இங்கேயும் – சற்று வித்தியாசமாக – எல்லார் எதிர்ப்பையும் மீறி செய்துகொண்டாயிற்று, யாரிடமும் போய் நிற்க முடியாது. பல்லைக்கடித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டத்தான் வேண்டும். மேலும் வெளிப்படையான காரணம் – மோக நாட்களில் வந்த குழந்தை.

சிவா கிருஷ்ணமூர்த்தி

ஜெ,

“The Psychology of Romantic Love” by Nathaniel Branden இந்த விஷயங்களை உளவியல் அடிப்படையில் அலசும் புத்தகம். First, the self; then, the other என்பதைத் தெளிவாக விளக்கி நிறுவுகிறது. சுயம் இன்றி காதல் இல்லை; ஆனால், திடமான சுயம் என்று ஒன்று இருந்தால், அதன் தேர்வுகளும் அந்த சுயத்தின் மதிப்பீடுகள், விழுமியங்கள் சார்ந்தே இருக்க முடியும். ஆக, unconditional, nonjudgmental love என்பதற்கு சுய மதிப்பை அடிப்படையாகக் கொண்ட காதல்களில் இடமே கிடையாது.

“அன்பு” என்கிற பொது தளம் தவிர்த்து, “காதல்” என்கிற குறிப்பிட்ட தளத்தில், இந்த unconditional love, nonjudgmental love போன்ற தர்க்க அடிப்படையற்ற விஷயங்கள் சமுதாயத்தில் பரப்பப்பட்டு நிறைய பேரை திசைதிருப்பி விட்டிருக்கின்றன. பல்லாயிரம் பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் போதே அது conditional ஆகி விடுகிறது. (“அந்த நபர் அந்த நபராக இருக்கும் பட்சத்தில்” என்கிற ஷரத்து சொல்லப்படாமல் implied ஆக இருக்கிறது.)

ஆனால், என்னால் இந்தப் புத்தகத்தில் வரும் “sense of life” போன்ற விஷயங்களை முழுவதுமாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. இன்னொரு ஜீவனின் உள்ளார்ந்த மதிப்பீடுகள், விழுமியங்கள் அதன் sense of life வாயிலாக, அதாவது அதன் வெளிப்புறத் தோற்றம் மற்றும் பழக்க வழக்கங்கள் வாயிலாக வெளிப்பட்டுவிடும் என்கிற கருத்தாக்கம். (ஜெ. கூட சமீபத்தில் எழுதிய “வலியெழுத்து” பதிவில் இப்படி சொல்கிறார்: “அழகு என்பது நமக்குப்பிடித்தமான ஒன்றின் வெளிப்பாடு. நாம் உள்ளூர விரும்புகின்றவை விழுமியங்கள்தான்.”) இதில் நிறையவே உண்மை இருந்தாலும், இது திரும்பவும் தேர்வின் அடிப்படையை விழுமியங்களை நிதானமாக அவதானித்து அலசுவதிலிருந்து வெளித் தோற்றத்திற்கு, உடனடி வெளிப்பாடுகளுக்குக் கொண்டு சென்று விடுகிறது. (இன்னொரு பக்கம், “விழுமியங்களையெல்லாம் நிதானமாக அவதானித்து அலச ஆரம்பித்தால் யாரையுமே காதலிக்க முடியாது; அதனாலேயே, வெளிப்பாடுகள் சார்ந்த உடனடித் தேர்வுகள் மட்டுமே வழி” என்பதில் உண்மை உள்ளதா என்பதையும் விவாதிக்கலாம் தான்.)

“Appearances can be deceptive” என்பதையும் மனித மனம் தனது தர்க்க ஒழுங்கற்ற பாய்ச்சல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொள்வதில் சாமர்த்தியசாலி என்பதையும் கணக்கில் கொண்டு இதைப் பார்த்தால், என்னால் இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. உதாரணமாக, சிந்தனைச் செறிவின் வெளிப்பாடு மொழி; ஆனால், குறுகிய கால அளவுக்கு, மொழித் தேர்ச்சியை மட்டுமே வைத்துக் கொண்டு, உள்ளே சிந்தனைச் செறிவு கொண்டதைப் போன்ற ஒரு பிம்பத்தைக் கட்டமைத்துவிட முடியும். அந்தக் குறுகிய காலத்தில், சிலர் வெளிப்பாட்டை மட்டும் பார்த்துப் பரவசப்பட்டுக் காதல் கொண்டுவிட்டால், பின்பு சிந்தனைச் செறிவின்மை வெளிப்படும்போதும், மனம் அதற்கேற்ற சாக்குபோக்குகளைத் தனக்குத் தானே சொல்லிக்கொள்ளவும் செய்யும். (ஏனென்றால், தனது தேர்வில் சறுக்கிவிட்டதை ஒப்புக்கொள்வதற்கு அகங்காரம் இடம் கொடாது.)

ஒரு பட்டிமன்றத்தில் பேச்சாளர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது: அழகான மனைவியை அன்பாகப் பார்ப்பதில் என்ன காதல்; அன்பான மனைவியை அழகாகப் பார்ப்பதில் அடங்கியுள்ளது தான் காதல்.

(பி.கு.: உளவியலாளரான இந்த நதேனியல் பிரான்டன் அய்ன் ரான்டின் வாழ்க்கையில் முக்கியமானவர்.)

முந்தைய கட்டுரைசூரியநெல்லி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநமது பேச்சாளர்கள்