அன்புள்ள ஜெ,
பெண்மையை-தாய்மையை இவ்வளவு நெருக்கமாக உணரச் செய்தது வேறொன்றில்லை ஜெ.
காலையில் எழுந்து கோயிலுக்குச் சென்று திரும்பும் வரை நடக்கும் கதை. அதற்குள்தான் எத்தனை ஓவியங்கள்! எத்தனை உணர்ச்சிப் பெருக்குகள்! எத்தனை புரிதல்கள்!
பால் குடிக்கும் கன்றை மறைந்திருந்து பார்க்கும் ராமலட்சுமிக்கு வடக்கூரான் கூட பிள்ளைதான். அய்யானாரைக் கூட அவள் தன் மகனாகத்தான் பார்த்தாளோ? பூச்செண்டின் ஈரம் கூட அவளுள் இருக்கும் தாய்மையை உணர்த்துகிறது என்றால் இருபத்திரண்டு வருடங்களாக அல்ல – பிறந்ததிலிருந்தே அந்தப் பெண் மட்டும் தாயாகத்தான் இருந்திருக்க வேண்டும் – பிள்ளை ஒன்றைப் பெறாமலே!
படிக்கும் தகப்பனையும் தாயுமானவனாக்கும் கதை இது.
நன்றி.
ஸ்ரீனிவாசன்
அன்புள்ள ஜெயமோகன்
நிலம் வாசித்தேன். சமீபத்தில் நீங்கள் எழுதிய எல்லாக் கதைகளும் என்னை மிகவும் கவர்ந்தன என்றாலும் இந்தக்கதையை ஏனோ பித்துப்பிடித்ததுபோல வாசித்துக்கொண்டே இருக்கிறேன். இந்தக்கதையின் சிறப்பே நிலம் பற்றிய வருணனைகள்தான். அந்த வருணனைகள் வெளியே உள்ள நிலத்தைக் காட்டுகின்றன. கூடவே அவை அகத்தில் உள்ள நிலத்தையும் காட்டுகின்றன. தேர்ந்த சங்கப்பாடல் ஒன்றை வாசிப்பதுபோன்ற அனுபவத்தை அளிக்கின்றது அது
பால்குடிக்கும் கன்றை ராமலட்சுமி பார்க்கும் இடம் ஓரு நேரடியான உதாரணம். வறண்ட நிலத்தில் கிடக்கும் பாலிதீன் தாள்களை அவள் சின்னச்சின்ன நீர்க்குட்டைகளாகப் பார்க்கும் இடம் இன்னொரு உதாரணம். அது அவளுடைய மனதின் கனிவையே எனக்கு காட்டியது
அருண்