கதை ஆரம்பித்த சில வரிகளிலேயே ஓட்ட போட்ட இட்லிக்கு சண்டைபோட்ட நினைவுகளோடு கதைக்குள் நுழைந்தேன். அப்பாவுக்கும் , ஆசாரிக்கும் இடையே வரும் உரையாடல் அனைத்தும் அருமை, இப்போதேல்லாம் குமரித் தமிழ் மிகவும் பிடிக்கிறது, அப்போதே ஆசாரி சிறப்பாக ஏதோ செய்யப்போகிறார் என்று தெரிந்து விடுகிறது,
சென்ற முறை மதுரை வந்திருந்தபோது, புதிதாகக் கட்டிய ஒரு கோவிலில் காளி சிவன் நெஞ்சில் கால் வைத்திருக்கும் ஒரு பிரம்மாண்ட சிலையை முதல் முறையாகப் பார்த்து உடல் சிலிர்த்தேன், எனக்கு உடனே கொற்றவையின் நினைவு வந்தது,
ஆசாரி ஆசாரிச்சியோடு தன் உறவின் நினைவில் செதுக்கும் அம்மையப்பத்தில் பேருருவம் கொண்ட காளியாகவும், நெஞ்சுக்குழியில் அக்னியுடன் இருக்கும் சிவனாகவும் உருவெடுக்கிறார்கள்.
ஆசாரிச்சியின் நினைவுகளால் மனதும், அம்மையின் உணவில் வயிறும் நிறைந்து செதுக்கத் தொடங்கும் ஆசாரி கலையின் உச்சத்தை அடைகிறார்.
அந்தக் கலையுச்சம் நிகழும் கணம்தான் அந்தக் கலையைக் காட்டிலும் பெரிய புதையல். அதை வார்த்தைகளில் செதுக்கியதற்கு நன்றி ஜே சார்.
கடைசியாக தங்கம்மை சொல்வதுபோல், உங்கள் படைப்புகள் அனைத்தும், இப்படி உங்களுக்குக் கிடைத்த புதையலைக் குழந்தைகள் தீப்பெட்டியில் அடைத்த பொன்வண்டைத் திறந்து காட்டுவது போல், கொஞ்சமே திறந்து காட்டும் தருணம் தான் இல்லையா சார்..
-கார்த்திக்
கதை மூன்று தளங்களில் நகர்கிறது
அம்மாவின் விரல் அழுத்திய பள்ளம் கொண்ட இட்லி- “‘பின்னே? அம்மைக்க விரலுள்ள இட்டிலியில்லா? அம்மிணி, இட்டிலிகளிலே அதுக்கு மட்டுமில்லா அதைப் படைச்ச மகாசக்திக்க அனுக்கிரகம் கிட்டியிருக்கு’ என்றார் ஆசாரி ‘”
ஆசாரியின் படைப்பில் உருவாகும் அம்மையப்பன். ஈசனின் நெஞ்சுக்குழியில் கால் விரல் பதிந்து நிற்கும் காளி.
“‘காளி எதுக்கு சவிட்டுதாங்க?’
‘அது அனுக்ரமாக்கும்….சிவனுக்க நெஞ்சில குளியக்கண்டுதா? அங்கிணயாக்கும் அக்கினி இருக்கப்பட்டது.’”
அந்த அக்கினி ஆடலாகிறது. அதுவே ஆசாரிக்குக் கலையாகிறது மூன்றாவது தளத்தில் ஆசாரியும் ஆசாரிச்சியும். “ஏமான், கலையிருக்கப்பட்ட எடத்திலே கவலையும் உண்டுல்லா? “. ஆசாரியின் கலை அவருக்குள் நிரம்பி இருக்கும் காதலால் நிரம்பி வழிவது. ஆனால் வெறும் காதல் அல்ல அனுக்ரகிக்கப்பட்ட காதல். கவலையும் காதலும் கலந்து கலையாக வருகிறது. அன்பின் பூரணத்துவம் கொண்ட அந்த இட்லியைப் போல. ஏணி பூட்டுவது கலையல்ல. யார் வேண்டுமானாலும் அதை செய்திட முடியும்.
ஏமானுக்கு என்ன பிடிக்கும்?’
‘அம்மையப்பம்’
‘ஆசாரிக்குப் பிடிச்சது அம்மையப்பனாக்கும்’
‘அதென்னது?’
‘ரெண்டும் ஒண்ணுதான்’
‘திங்க முடியுமா?’
‘திங்கமுடியாது…ஆனா இனிப்பா இருக்கும்….
எல்லாம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை தான்.”‘கொச்சேமான், தனித்தனியா இருக்கப்பட்டது மனுஷனுக்க அகங்காரம் மட்டுமாக்கும். மத்த எல்லாமே பின்னிப்பிணைஞ்சுல்லா கெடக்கு…’”. இட்லியும், அம்மை அப்பனும், ஆசாரியும்.
சுனில் கிருஷ்ணன்
ஆசாரி ஒரு இடத்தில் சொல்கிறார் ” ஏணி செய்ய ஆசாரி எதுக்கு? ” யார் ஆசாரி என அவர் சுட்டுவதும் , ஊரார் சுட்டுவதும் நேர் எதிர் . எதிர்நிலையில் தன்னைப் பார்க்கும் ஊராரை அவரால் முடிந்தது தண்ணி போட்டு ஏசுவது . மனைவி அவருக்குத் தருவது அனுதினமும் ”தேவி தரிசனம் ” . தேவியோடு பக்தன் குடித்தனம் நடத்த முடியுமா என்ன .? நல்ல ஒரப்புள்ள தடியாக்கும் என்று ஆசாரி மரத்தைப் பார்த்து சொல்லும்போது அதில் என்ன கலை வடிவைக் கண்டிருப்பார் ?இறுதியில் ஊரார் பார்வையில் தன் கலையைப் பிழை என மயங்கி மறைத்து வைத்துவிட்டுத் தப்பிப்பது தரும் ஊமை வலி . உணவு தேடி அலையும் நாயை நோக்கி எறியப்படும் ரொட்டித் துண்டைத் தாக்கவரும் கல் என மயங்கி நாய் ஓடுவதுபோன்ற வலி
கடலூர் சீனு
அன்புள்ள ஜெ
அம்மையப்பம் வாசித்தேன்
சமீபத்தில் நீங்கள் எழுதிவரும் கதைகள் எல்லாமே அழுத்தமானவை. ஆனால் இருகதைகளை மிக முக்கியமானவை என்று சொல்வேன். ஒன்று பிழை, இன்னொன்று அம்மையப்பம். இருகதைகளுமே creativity பற்றிப் பேசுகின்றன
creativity என்பது மனிதனின் ஞானமும் அஞ்ஞானமும் சேர்ந்து உருவாக்கும் ஒரு பெரும் தற்செயல் என்று சொன்ன கதை பிழை. நூறுமுறையாவது அந்தக்கதையை வாசித்திருப்பேன்
அம்மையப்பம் creator வாழும் சொர்க்கத்தையும் நரகத்தையும் பற்றிச் சொல்கிறது. ஏணிசெய்ய ஆசாரி எதுக்கு என்பதுதான் கதையின் மையம். ஆனால் ஏணி செய்யாவிட்டால் ஆசாரிக்கு சோறு கிடையாது. ஏணியை மனமுவந்து செய்யவும் முடியவில்லை. அது நரகம்
ஆனால் உலகை இயற்றிய மாகாளியின் கட்டைவிரல் நெஞ்சிலே அழுத்திய தடம் அவனுக்கு இருக்கிறது. அந்தக்குழியில் தீ இருக்கிறது. the creative fire . அது சொர்க்கம். அவனால் உலகை உருவாக்கிய அம்மையப்பனின் நடனத்தை உருவாக்கிவிடமுடியும். உலகையே படைக்க முடியும்
வெற்றி பெற்றுத் தோல்வியும் பெற்று ஒளிந்தோடும் ஆசாரி ஓர் அற்புதமான சித்திரம் ஜெ. நீங்கள் இன்னொரு மகத்தான கதாபாத்திரத்தை உருவாக்குவதற்காகக் காத்திருக்கிறேன். அம்மையம்மனை செதுக்கும்போது இருக்கும் அந்த நிமிர்வு ஏணியை சல்லடையாக்கிவிட்டுத் தப்பி ஓடும் கேவலம். இரண்டுமே ஆசாரிதான்.
வாழ்த்துக்கள்
சிவராஜ்
அன்புள்ள ஜெயமோகன்
அம்மையப்பம் வாசித்தேன். லங்காதகனத்தின் நீட்சி போன்ற கதை. கலைஞனின் வெற்றியும் அவனுக்கு சமூகம் அளிக்கும் சிறுமையும் ஒரே சமயம் பதிவான கதை.
கலைஞன் கலையில் முழுமையை அடைகிறான். தன் கலையை உருவாக்குகிறான். தன்னை இறைவன் என்று உணர்கிறான். மறுபக்கம் சோற்றுக்குக் கூசி சுருங்கி நிற்கிறான். கோமாளியாக ஆக்கப்படுகிறன்– ஆசானைப்போல. அல்லது கிறுக்கனாக ஆக்கப்படுகிறான் — ஆசாரியைப்போல
கலை உருவாக்கத்தின் நுணுக்கங்களை இந்த ஒரேகதையில் இருந்து வாசித்து எடுத்துக்கொண்டே செல்லலாம். அம்மையையும் அப்பனையும் உருவாக்கும் அம்மையப்பனாகிய ஆசாரி. அம்மையின் அருள்பெற்ற அம்மையப்பம் அவன்.
சண்முகம்
மதுரை
சார் ,
உங்களுக்கு ஆயிரம் கண்ணும் காதும் காளி தந்து அருள் புரிந்திருப்பாள்
போல. ஆசாரி வந்ததை அம்மாகிட்ட சொல்லும் போது கூட கோழி என்ன பண்ணுதுன்னு
கவனிக்கிறீங்க.
சார் எனக்கு சின்ன வயதில் கால்சட்டை விழாமல் இருக்கச் செய்யும் நாடா வைத்த
மாதிரி ஒரு கால் சட்டை போடணும்னு ரொம்ப ஆசைப்படுவேன்.பையன் அந்த நாடாவை சரி
செய்து எழும்போது என் பால்ய கால ஞாபகமும் ஞாபகம் வருது.