வறண்ட வயிறு -ஆனாலும் மனைவிமீது தீராத காதல், வறண்ட நிலம் -இருந்தும் அதன்மேல் குறையாத மோகம் சேவுகப் பெருமாளுக்கு. பொத்தை முடியின் பாறை உச்சியில் ஒன்றுமில்லாத ஆண்டியாய்த் தனித்து இருக்கும் பண்டாரத்திற்குக் கீழ் இருக்கும் விரிந்த நிலம் அனைத்தும் சொந்தம். அவரது அந்த மனநிலையே ராமலட்சுமிக்குக் கூறும் அறிவுரையாக வெளிவருகிறது, ‘பெத்தவளுக்கு ஒண்ணுரெண்டுபிள்ளை. பெறாதவளுக்கு ஊரெல்லாம் பிள்ளை’.
பண்டாரம், ’எல்லாச் செடியும் மரமும் நெலத்தைத்தானே புடிச்சிட்டிருக்கு…விட்டாக் காத்து அடிச்சுட்டுப் போய்டும்ல?’ என்று சொல்லும்போதே கதையின் ஒரு நாடி விரல்களில் உணரப்பட்டு விடுகிறது.
// ‘பிள்ளையில்லாம எதுக்கு சாமி இந்த மண்ணாச?’
‘பிள்ளை இல்லாததனாலதான்…’ பண்டாரம் சிரித்தார்.//
என்னும் அடுத்த ரெண்டு வரிகளும் அதை வெளிப்படையாக்குகிறது. இல்லாமலிருந்திருக்கலாம்.
சேவுகப் பெருமாளை விட நிலத்தின் மீது பத்து மடங்கு அதிகம் வெறி கொண்டவன் கடைசியில் பண்டாரமானது ஏன் என்று சொல்லாமல் விடப்பட்டது சுவாரசியம். நிலத்தை உதறி, அவர் பற்றி நிற்பதற்குக் கிடைத்த இன்னொன்று எது?… நிறைய ஊகிக்க வைக்கிறது. சேவுகப்பெருமாள் அரிவாளும் மீசையுமாக உருவத்தில் தான் ஐயனார். உண்மையான ஐயனார் பண்டாரம்தான். உச்சிப்பாறையில் ‘தேமே’வென்று இருக்கிறார். ராமலட்சுமி மாதிரி யாராவது மலை ஏறி, தேடி வந்து பழமும், பொரியும், வெல்லமும் படைத்துவிட்டுப் போகிறார்கள். அவளுக்கு கல்யாணம் ஆன நாளாவது நாள் வெட்டுப்பல் தெரிய சிரித்த வெட்டுவேல் ஐயனாரின் சிரிப்பின் பொருள் மீண்டும் பண்டாரத்தின் வெண் பற்கள் பளிச்சிடும் சிரிப்பில் புரிகிறது. ஒரு நிமிடம் ‘நச்சரவம்’ கதையின் மூப்பர் மனதில் மின்னி மறைந்தார்.
வரப்போகும் பெருமழையின் கனத்த முதல் தூறல் துளிகள்.
நன்றி ஜெ,
பிரகாஷ்.
ஜெ
மிஞ்சி வழிந்த நீர் வலதுபக்கமாக நீண்ட கரியபட்டைக்கறையாகக் கீழிறங்கி அங்கே நின்றிருந்த இலஞ்சி மரத்தடியில் மண்ணில் மறைந்தது. எருமைமாட்டின் கண்ணீர்த்தடம் போல.
அருமையான உவமை சார்….எவ்ளோ ஆழமா யோசிச்சு இருக்கீங்க… நல்லா இருக்கு…..
பிரசன்னா
அன்புள்ள ஜெ
அருமையான கதை. தொடர்ந்து வருகிற எல்லாக் கதைகளையும் அற்புதம் என்றுதான் சொல்லவேண்டும். அறம் வரிசை கதைகள் வெளிவந்த அந்த நாட்கள் மீண்டும் நினைவில் எழுகின்றன. ஒவ்வொரு கதையும் ஒவ்வ்வொரு ரகம். கைதிகள் உலுக்கி எடுக்கும் ஒரு கதை. அம்மையப்பம் இனிமையான ஒரு கவிதை. இந்தக்கதை ஒரு மெலிதான வலி.
நிலம் மீது சேவுகப்பெருமாளுக்கு இருக்கும் பிரியம் என்பது அவன் மனைவி மீது இருக்கும் பிரியம்தான் என்று ஒரு சமயம் தோன்றுகிறது. குழந்தை இல்லாத வெறுமையைத் தீர்க்க அவன் சென்று சேரும் இடம் என்று இன்னொருமுறை தோன்றுகிறது. ஒருவனுக்குக் குழந்தை இல்லை என்றால் அதை நிறைக்க எவ்வளவு நிலம் வேண்டும்! சேவுகப்பெருமாள் அதனால்தான் மலைமீது நின்று ‘எவ்ளவு நிலம்’ என்று உலகத்தில் மிச்சமிருக்கிற நிலத்தை நோக்கி ஏங்குகிறான்.
அருமையான கதை. ஒரு நகக்கீறல் மாதிரி வலியைத் தந்தபடியே இருக்கிறது
சண்முகம், மதுரை
அன்புள்ள ஜெ
நிலம் அற்புதமான கதை. இதன் சுருக்கமான வடிவத்தைக் குமுதத்திலே வாசித்தேன். அப்போது இல்லாத ஒரு மன எழுச்சி இப்போது வந்தது. இந்தக்கதைக்கு ஒரு சிறப்பு உண்டு. ஆரல்வாய்மொழிக்கு இந்தண்டை வந்து நீங்கள் எழுதும் கதை இது. குமரி மாவட்டத்தின் நிலத்தை எப்படி சித்தரிப்பீர்களோ அதே நுணுக்கத்துடன் கரிசலையும் காட்டியிருந்தீர்கள். கரிசலில் பிறந்து வளர்ந்தவர் எழுதுவதுபோல நிலம் பற்றிய விவரிப்புகள். குன்றுக்குமேல் ஏறும் அனுபவம். குன்றில் இருந்து தெரியும் விரிந்த கரிசல் நிலம்…அந்த வர்ணனைகள் இல்லாமல் இருந்தது குமுதத்தில் வந்த கதை. அதனால்தான் அதைவிட இந்தக்கதை பெரிய அனுபவத்தை அளிக்கிறது என்று தோன்றுகிறது
வாழ்த்துக்கள் ஜெ
கோ.எழிலரசு