«

»


Print this Post

சினிமா- கேள்விகளுக்கு விளக்கம்


சினிமா சம்பந்தமான வினாக்கள் விவாதங்களை இந்தத் தளத்தில் நிகழ்த்த விரும்பவில்லை என்று சொல்லி வந்திருக்கிறேன். என்றாலும் என்னுடன் தொடர்புகொள்ளும் பலர் சினிமா சார்ந்தே நிறைய எழுதிக்கேட்கிறார்கள். என்னுடைய ஒரே ஊடகமாக இருப்பது இவ்விணையதளம். ஆகவே சுருக்கமாக சில விளக்கங்களை அளிக்கிறேன். எழுதிக்கேட்ட அனைவருக்குமான பொதுப்பதில் இது.


1. கடல்

கடல் திரைப்படம் ஒரு அபூர்வமான, ஆனால் பலசமயம் வெற்றிபெற்ற, ஒரு கலவையை அடைவதற்கான முயற்சி. மேல்தளத்தில் கதைநாயகன், வில்லன், கதைநாயகி , காதல், சண்டையில் முடியும் உச்சகட்டம் என்று வழக்கமான ஒரு வணிகக்கேளிக்கைப்படம். கூடவே கொஞ்சம் கவனித்துப்படம் பார்க்கும் ரசிகர்களுக்காக நுட்பமான, கவித்துவமான ஒரு கலைப்படம். காட்சிப்படிமங்கள் வழியாகவே ஆன்மீகமான சிக்கல்களையும் மீட்பையும் சொல்லும் ஒரு செவ்வியல் ஆக்கம்.

அந்தக் கலவை கடல் படத்தில் தோல்வியடைந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இம்மாதிரி முயற்சிகளை ஆத்மார்த்தமாக மேற்கொள்ளவே முடியும், அவை அமைந்துவருவது நூற்றுக்கணக்கான காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. கடைசியாக எஞ்சுவது என்பது பெரும்பாலும் ஒரு தற்செயலின் விளைவுதான்.

அதில் முதற்சவால் திரைக்கதை சரியான விகிதத்தில் அமைவது. எல்லாவற்றுக்கும் அதற்கான பங்கை அளித்து அதேசமயம் வேகத்தை நிலைநிறுத்துவது. திரைக்கதையை அமைக்கும்போது அதை அமைத்தாலும்கூடப் படத்தை எடுக்கும்போதும், கடைசியில் தொகுக்கும்போதும் அந்த விகிதாச்சாரம் குலைய எல்லா வாய்ப்பும் திரைப்படம் என்ற ஊடகத்தில் உள்ளது. திரைப்படம் பற்றித் தெரிந்தவர்களுக்கு அதைப்புரிந்துகொள்வதில் சிக்கலிருக்காது.

கடல் அந்த விகிதாச்சாரத்தை இடைவேளை வரை கச்சிதமாக கொண்டுவந்து நிறுத்தியது. இடைவேளையில் அரங்கில் எழுந்த கைதட்டல் அதற்குச் சான்று. இடைவேளைக்கு மேல் படம் வணிகக்கேளிக்கைப்படத்துக்கான தேவைகளை விட்டு விலகிச்சென்றது. அந்த விகிதாச்சாரம் குலைந்தது. இடைவேளை வரை படம் விறுவிறுப்பாக அமைந்ததனாலேயே இடைவேளைக்குப்பின் படம் பொதுவான திரை ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது.

அப்படி நிகழ்ந்ததன் காரணம் இயக்குநர் படத்தின் தீவிரமான, நுட்பமான பகுதிகளில் அதிகமாக ஈடுபட்டு அதன் வணிகக்கேளிக்கை அம்சத்தை விட்டு விலகியதுதான். இடைவேளைக்குப்பின்னர் வரும் காட்சிகள் முழுக்கமுழுக்க நுட்பமான காட்சிப்படிமங்களின் ஓட்டமாக அமைந்துள்ளன. தாமஸின் பாவமீட்பு நிகழும் தருணங்கள் எந்த சர்வதேசக்கலைப்படத்துக்கும் நிகரானவை என்பதை சினிமா தெரிந்தவர்கள் உணரமுடியும்.

அவை முழுக்கமுழுக்க சினிமா மொழியில் அமைந்துள்ளன. அவை நாடகப்படுத்தப்படவில்லை. வசனத்தால் விளக்கப்படவில்லை. மிகையுணர்ச்சி நோக்கிச் செல்லவுமில்லை. முழுக்கமுழுக்கக் காட்சிகளால் ஆனவை அவை. பியா தொப்புள்கொடியை வெட்டிக் குழந்தையை எடுக்கும் காட்சி. அது அவள் அவனைப் பிறவியிலேயே வரும் பாவம் என்ற தொப்புள்கொடியில் இருந்து விடுவிப்பதுதான். அது நிகழும் கணத்தில் அவன் விடுதலை பெறுவது அவன் அசைவுகள் வழியாக, உணர்ச்சிகள் வழியாக, இசை வழியாக அழுத்தமாக சொல்லப்பட்டுவிடுகிறது.

அதேபோல சாம் செய்யும் அந்தக் கிறிஸ்து சிலை. அவிசுவாசிகளின் கிராமத்தில் அவர்களைக்கொண்டே ஒரு ஏசுவை உருவாக்கி அச்சிலையுடன் ஊர்வலமாகச் செல்கிறார் சாம். அச்சிலையை மட்டும்தான் தாமஸ் வணங்குகிறான்- சர்ச்சில் உள்ள ஏசுவை அல்ல. அச்சிலைதான் கடைசியில் கிராமத்தை ஆசீர்வதிக்கிறது. இத்தகைய நூற்றுக்கணக்கான படிமங்களாலானது கடல்.

ஆனால் வெகுஜன ரசிகன் சினிமாவில் கதையின் ஓட்டத்தைத்தான் பார்ப்பான். கதைமாந்தர்கள் விளக்கப்பட்டு அவர்களின் உணர்ச்சிமோதல் வழியாகக் கதை முன்னகர்வதை மட்டுமே அவனால் ரசிக்கமுடியும். இரண்டாம்பகுதியில் காட்சிப்படிமங்களின் வழியாக ஆன்மீக மீட்பைச் சித்தரிக்கமுனைந்தபோது அந்தக் கதையோட்டம் துண்டுபட்டுப்போய்விட்டதே கடலின் குறை.

அதை முதல் காட்சி முடிந்ததுமே படத்துடன் தொடர்புள்ள அனைவரும் உணர்ந்துகொள்வார்கள். சினிமாவின் பிரச்சினையே அதன் ஆக்கத்தில் தொடர்புடைய எவருமே அது நிகழும்போது அதைப் புறவயமாகப் பார்க்கமுடியாது என்பதுதான்.படம் ஆரம்பித்த கொஞ்சநாளில் அது அப்படியே கண்ணில் இருந்து மறைந்துவிடும். படம்வெளியாகி ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்கையில் மட்டுமே அதன் குறைகளும் பிரச்சினைகளும் தெரியும்.

நான் படத்தின் உருவாக்கத்தில் சம்பந்தப்படாதவன் என்பதனால் கடைசியில் படத்தைப்பார்க்கையில் படத்தின் கதையோட்டம் உடைபட்டிருப்பதை கவனித்திருந்தேன். அதைச்சுட்டிக்காட்டினேன், ஆனால் அப்போது படம் முடிந்திருந்தது. ஆனால் உணர்ச்சிகரமான காட்சிகள் படத்தைத் தொடர்புறுத்திவிடும் என படத்துடன் தொடர்புடையவர்கள் நம்பினர். அத்துடன் பேசிப்பேசிப் படத்தைத் தெளிவாக்கிக்கொள்வார்கள் ரசிகர்கள் என நினைத்தனர்.

ஆனால் நான் அஞ்சியதே நிகழ்ந்தது. கொஞ்சம் சவாலான படத்தை மேலோட்டமான வசைகள் மற்றும் கிண்டல்கள் மூலம் அப்படியே மூடி இல்லாமலாக்கவே பெரும்பாலான மதிப்புரையாளர்கள் முயன்றனர். கொஞ்சமேனும் படத்தைப்புரிந்துகொள்ள முயன்ற மதிப்புரைகள் ஒன்றிரண்டு மட்டுமே. எந்தப் படைப்புக்கும் ஓர் அடிப்படை நல்லெண்ணம் ஆரம்பத்தில் அளிக்கப்படவேண்டும். அது இல்லாமல் வசைபாடும் மனநிலையுடன் சென்று அமர்ந்தவர்கள்தான் அதிகம். படத்துக்கு இணையத்தில் வந்த மதிப்புரைகள் ஒருசாதாரண விசிலடிச்சான் ரசிகனின் போகிறபோக்கிலான கருத்தைவிடத் தரம் தாழ்ந்தவை.

காட்சிரீதியான சினிமா என்பது ஒரு தனிக்கலை. அதில் நமக்குப்பயிற்சியே இல்லை. நாம் உலகப்படம் பார்த்து எழுதும் லட்சணத்தைப்பார்த்தாலே அது தெரியும். நாம் அவற்றிலுள்ள கதையை சுருக்கி எழுதி அதை விமர்சனம் என்கிறோம். அவற்றிலுள்ள காட்சிப்படிமங்களை நாம் உணர்வதே இல்லை. அதற்கு அப்படிமங்கள் உருவாகும் பண்பாடு பற்றிய அறிவு நமக்கிருக்கவேண்டும். அது அடிப்படை வாசிப்பு இல்லாமல் வராது. அவ்வகையில் எனக்கு ஏமாற்றமே இல்லை. யார் என்ன சொல்வார்கள் என நான் நினைத்தேனோ அதுவே நிகழ்ந்தது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை உருவாக்கிய எதிர்பார்ப்புக்கள், மணிரத்தினத்தின் முந்தையபடங்கள் உருவாக்கிய எதிர்பார்ப்புகள், கடைசிக்கட்ட விளம்பரங்கள் உருவாக்கிய பரபரப்பு ஆகியவை படத்தை எதிர்மறையாக பாதித்தன. அவ்வகையான திரையரங்க கருத்துக்கள் இப்போது நம்மைத் தாண்டிச்சென்றுவிட்டன. இனிமேல் படத்தை நிதானமாகப்பார்க்கும் கொஞ்ச ரசிகர்கள் கடல் படத்தை அந்த வகைமைக்குள் ஒரு கிளாஸிக் என்றே உணர்வார்கள். அந்த மதிப்பீடு உருவாகி வர கொஞ்சம் தாமதமாகக்கூடும், அவ்வளவுதான்.

கடல் பற்றிய மிக நல்ல கருத்துக்கள் சில வெளிவந்துள்ளன. பல முதன்மையான மலையாள இயக்குநர்களும் விமர்சகர்களும் மிகமிக உணர்ச்சிகரமான பாராட்டுக்களைச் சொன்னார்கள். உண்மையில் நானே கடலின் காட்சிப்படிம உலகைப்பற்றி அவர்கள் சொல்லிக்கேட்கும்வரை அவ்வளவு தெளிவான மதிப்பீடு கொண்டிருக்கவில்லை. திரைக்கதையில் விளக்கமாக இருந்த பல இடங்கள் நுணுக்கமான காட்சிகள் வழி கடந்துசெல்லப்பட்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

‘கதை, கதைமாந்தர் இருவரையும் கூடப் பொருட்படுத்தாமல் நேரடியாகவே காட்சிப்படிமங்கள் ஓர் உணர்ச்சிகரமான ஆன்மீகமான அனுபவமாக மாறுவதை மிகச்சில இந்திய சினிமாக்களில்தான் காணமுடியும். கடல் அதில் ஒன்று’ என்று நேற்று மலையாளசினிமாவின் முதன்மையான இயக்குநர் ஒருவர் சொன்னார்.

அந்த மதிப்பீடு தமிழில் இன்னும் கொஞ்ச காலம் கழித்து உருவாகலாம்.


சோர்வுறுதல்

என்னுடைய வாசகர்கள் சிலர் நான் கடலுக்கு வந்த எதிர்வினைகளால் சோர்ந்திருப்பேன் என்று நினைத்து ஆறுதலும் உற்சாகமும் சொல்லி எழுதியிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி.

கடல் படம் பற்றிய நக்கல்கள் கொண்டாட்டங்கள் எக்களிப்புகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். அவற்றிலிருந்த அறியாமையையும் பொறாமையையும் புன்னகையுடன் மன்னிக்கத்தெரியாவிட்டால் நான் எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதில் என்ன அர்த்தம்?

நான் சோர்வுறவில்லை. அப்படியெல்லாம் சோர்வுறக்கூடியவனும் அல்ல. இந்நாட்களில் அனேகமாக தினம் ஒன்றுவீதம் 12 சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். முக்கியமான ஒரு மலையாளத்திரைக்கதையை எழுதிமுடித்திருக்கிறேன்.

சோர்வு என்பது இங்குள்ள கடும் மின்வெட்டால்தான். ஒருநாளுக்கு 3 மணிநேரம்கூட மின்சாரம் இல்லை. இன்வெர்ட்டர்ருக்குள் மின்சாரம் சேமிக்கக்கூட மின்சாரம் வருவதில்லை. கணிப்பொறி ஒருநாளில் மூன்றுமணிநேரம்கூட இயங்கமுடியவில்லை. எனக்கு அது ஊட்டும் எரிச்சலும் சோர்வும் சாதாரணமல்ல.

இப்போதே இப்படி என்றால் மார்ச் ஏப்ரலில் மின்சாரமே இருக்காதுபோல. இன்னொரு எரிச்சல், குமரிமாவட்டம்தான் தமிழகத்தில் அதிகபட்சமாக மின்சாரம் உற்பத்தியாகும் மாவட்டம். மூன்று நீர்மின்சார நிலையங்கள். காற்றாலை மின்சாரம். ஆனால் தமிழகத்திலேயே இங்குதான் மின்வெட்டு அதிகம். கேட்டால் இங்கே தொழில்கள் இல்லை, குடியிருப்புகளுக்குத்தான் மின்சாரம் தேவைப்படுகிறது என்பதனால்தான் மின்சாரம் கொடுக்கப்படுவதில்லை என்கிறார்கள்.

ஆகவே பெரும்பாலும் கேரளத்தில், என் தயாரிப்பாளர்களின் விருந்தினர் விடுதிகளில் இருந்தேன். பேசாமல் திருவனந்தபுரத்துக்கே குடிபெயர்ந்துவிட்டாலென்ன என்று உண்மையாகவே யோசிக்கிறேன்.


ஹரிதாஸ்

வரவிருக்கும் ஹரிதாஸ் படத்துக்காக நான் எழுதியிருக்கிறேனா என்று பல கேள்விகள். அவை பெரும்பாலும் இதழாளர்கள், திரையுலகுடன் தொடர்புடையவர்களின் வினாக்கள்.

ஆம். அந்தப்படத்தின் கரு இயக்குநருடையது. நான் முதல் கதை- திரைக்கதை வடிவை எழுதினேன். என் வரையில் மிக நுணுக்கமான, உணர்ச்சிகரமான படம். பிறகு இயக்குநருடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. ஆகவே நான் விலகிவிட்டேன்.

கேள்விப்பட்டவரையில் என் திரைக்கதையின் பெரும்பகுதி பயன்படுத்தப்பட்டிருப்பதாக அறிந்தேன். பணம் தரப்பட்டுவிட்டமையால் அது அந்நிறுவனத்துக்குத்தான் சொந்தம். அப்படியென்றால் ஒரு நல்லபடமாக அமையக்கூடும்


மகாபாரதம் தொடர்

சன் டிவியில் வெளிவரும் மகாபாரதம் தொடருக்காக நான் எழுதினேனா என்று நண்பர்கள் கேட்டார்கள். நான் அதற்காக திரைக்கதை எழுதுவதாக நானே சில அரங்குகளில் சொல்லியிருக்கிறேன். எனக்கு தொடரில் நன்றி சொல்லப்பட்டது என்றார்கள்

அந்தத்தொடர் நாகா இயக்கத்தில் வெளிவருவதாக இருந்தது. நாகாதான் என்னைத் தொடர்புகொண்டார். நான் நாகாவுடன் இணைந்து அதற்கு திரைக்கதை எழுதினேன். சில தொடக்கப் பகுதிகளுக்கு எழுதி முடித்தேன். பதினைந்து நாள் படப்பிடிப்பு முடிந்தது.

அந்நிலையில் தொடர்மின்வெட்டு காரணமாக பொதுவாகவே தொலைக்காட்சித்தொடர்களுக்கு பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. ஆகவே மகாபாரதத்துக்கான செலவினம் பெரும்பகுதி குறைக்கப்பட்டது. நாகா அதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் மனக்கசப்புடன் விலக நேர்ந்தது.

நான் நாகாவால் அதற்குள் கொண்டுவரப்பட்டவன். நாகா விலகியபின் நான் நீடிப்பது அறமல்ல. நான் எனக்குரிய ஊதியத்தை சற்று அதிகமாகவே பேசியிருந்தேன். சினிமாவில் இருந்து ஒருவர் தொலைக்காட்சித் தொடர் எழுதும்போது அந்த ஊதியம் அளிக்கப்பட்டாகவேண்டும். அதை பாதியாக பேசினார்கள், என்னால் ஏற்கமுடியவில்லை.

அத்துடன் தொலைக்காட்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் எழுதுவதும் எனக்கு சரியாக வராது என நினைத்தேன். ஆகவே விலகிவிட்டேன்

இப்போது பிரபஞ்சன் எழுதுகிறார். என்னுடைய திரைக்கதைக்கு முறையாக பணம் தரப்பட்டுவிட்டமையால் தொலைத்தொடர் நிறுவனத்துக்குத்தான் அது சொந்தம். அவர்கள் அதை எப்படிப் பயன்படுத்துவார்கள் எனத் தெரியவில்லை

நான் எழுதியது வரையிலான திரைக்கதையை ஒட்டி மகாபாரதத்தை நாவல் வடிவில் மறுபடியும் எழுதலாமென நினைக்கிறேன். இவ்வருடம் வெளிவரக்கூடும்

*


புதிய படங்கள்

என்னென்ன புதிய படங்கள் என நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்

மலையாளத்தில் இவ்வருடம் மூன்று படங்கள் வெளிவரும். அவை மே- ஜூன்- ஜூலை மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகலாம். இன்னும் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. அருண்குமார் அர்விந்த் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில், முரளிகோபி நடிக்கும் ஒருபடம். கிருஷ்ணகுமார் இயக்கத்தில் இந்திரஜித், முரளிகோபி நடிக்கும் ஒரு படம். உண்ணி இயக்கத்தில் ஒருபடம்.

மேலு இருமலையாளப்படங்கள் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படலாம் . ரஜபுத்ரா ரஞ்சித் இயக்கும் ஒருபடம். வயலார் மாதவன்குட்டி இயக்கும் ஒருபடம். மலையாளப்படங்கள் எல்லாமே நான் கதை-திரைக்கதை-வசனம் எழுதுபவை.

தமிழில் இருபடங்கள் இவ்வருடம் ஆரம்பிக்கப்படும். இரண்டுமே நான் கதை திரைக்கதை வசனம் எழுதுபவை. பேச்சுவார்த்தைகள் முடிந்து ஆரம்பகட்ட வேலைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

வசந்தபாலன் இயக்கத்தில் நான் எழுதும்படம் ஆரம்பமாகவிருக்கிறது. திரைக்கதையை முடித்துவிட்டோம். மிக அபூர்வமாகவே வாள்வீச்சு போலக் கச்சிதமாக அமையும் திரைக்கதைகள் வாய்க்கின்றன. அதில் ஒன்று இது

*

சினிமாக்கள் பற்றி மேலதிக விளக்கம், விவாதம் தேவையில்லை என நினைக்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/34538

Comments have been disabled.