நான் அமெரிக்கா வந்திறங்கும்போது தேர்ந்த ஒரு படைத்தலைவனை நம்பி கண்மூடித்தனமாக போர்முனைக்குச்செல்லும் படைவீரனைப்போல எதைப்பற்றியும் எந்தக்கவலையும் இல்லாமல் வந்திறங்கினேன். என் பயணத்திட்டத்தைப் பற்றி எந்த மனச்சித்திரமும் என்னிடம் இருக்கவில்லை. எங்கேயெல்லாம் செல்கிறேன், யாரைச் சந்திக்கிறேன் எதுவும். எல்லாவற்றையும் நண்பர் ராஜன் தீர்மானித்து துல்லியமாக வகுத்திருந்தார். ஆகவே சென்றிறங்கும் எந்த நகரத்தைப்பற்றியும் எந்த தகவலையும் முன்னரே நினைவில் உருவாக்கிக்கொள்ளவில்லை.
ஏனென்றால் இது கூகிள் எர்த் உலகை ஒற்றை வரைபடமாகச் சுருக்கிவிட்ட காலம். கூகிளில் நான் வாழும் சாரதாநகர் தெருவையே பார்க்க முடிகிறது. எந்த ஊருமே யாருக்குமே புத்தம்புதியது அல்ல. சென்ற காலத்தில் பயணக்கட்டுரைகளை எழுதியவர்கள் சின்னச்சின்ன தகவல்களைக் கொடுப்பார்கள். அவையெல்லாமே நமக்குப் புதியனவாக இருக்கும். அமெரிக்காவில் கார இடதுபக்கம் அமர்ந்து ஓட்டுகிறார்கள் என்ற தகவலைச் சொன்னாலே வாசகர்கள் மகிழ்ந்து அப்படியா என்பார்கள். ஆனால் இன்று வாசகர்களிலேயே பாதிப்பேர் உலகம் சுற்றி வந்தவர்களாக இருப்பார்கள்.
எழுபது வருடங்களுக்குமுன்பு கெ.என்.பணிக்கர் என்ற மலையாள அறிஞர் லண்டனுக்கு கப்பலில் பயணம் செய்தபின் ‘நான் கண்ட லண்டன்’ என்ற நூலை எழுதினார். அக்காலத்தில் அது மிகுந்த வியப்புடன் வாசிக்கப்பட்டது. லண்டனில் நின்றபடியே தெருவைக்கூட்டுகிறார்கள் என்பதுபோன்ற நுண்தகவல்கள் கொண்ட நூல் அது. பணிக்கர் பெரும்பணக்காரர், ஆகவே கொஞ்சம் அகந்தை இருப்பது அவசியம்தானே. அந்நூலை கேலிசெய்து கேரள அங்கத எழுத்தாளர் சஞ்சயன் ‘லண்டன் கண்ட நான்’ என்று எழுதினார். ‘லண்டனில் தெருக்கூட்டுபவர்கள்கூட ஆங்கிலத்தில்தான் பேசிக்கொள்கிறார்கள்’ போன்ற தகவல்கள் அதில் இருந்தன.
ஆனால் உண்மையிலேயே இன்றைய பயணக்கட்டுரைகளின் இயல்பு அப்படித்தான் இருக்க முடியும். இன்று நான் எழுதும்போது அமெரிக்கா முக்கியமில்லை, அது பெரும்பாலும் தெரிந்த விஷயம். அதை நான் எப்படிப் பார்த்தேன் என்பதே முக்கியம். பாஸ்டனில் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிரான முதல் போர்க்குரல் எழுந்ததும் , இங்கே துறைமுகத்துக்கு வந்திறங்கிய தேனீர்தூள்பொட்டலங்கள் சுதந்திரப்போராட்டக்காரர்களால் தூக்கி கடலுக்கு வீசப்பட்டதும் அது பாஸ்டன் தேனீர் விருந்து என்று அழைக்கப்பட்டதும் முக்கியமல்ல. பாஸ்டனில் நகர் நடுவே ஒரு நீரூற்று அமைக்கப்பட்டிருப்பதும் அங்கே பல இனக்குழந்தைகள் கூவிச்சிரித்து ஆர்ப்பாட்டம்செய்து குறுக்கே ஓடி குளிப்பதன் சித்திரமும்தான் முக்கியமானது.
ஆகவே இது வரலாற்று, நிலவியல், சமூகவியல் தகவல்களின் பதிவல்ல. ஒரு புதிய நிலம் வழியாக ஆச்சரியத்தால் பிளந்த வாயுடன் கடந்துசென்ற ஒரு எழுத்தாளனின் மனப்பதிவுகள் மட்டுமே.
888
ஜூலை பன்னிரண்டாம் தேதி காலையில் நான் எந்தவிதமான ஜெட்லாக் பிரச்சினையும் இல்லாமல் தூங்கி எழுந்தேன். முந்தைய நாள் பாஸ்டன் பாலாவுடன் இரவு பன்னிரண்டு மணி வரைக்கும் பேசிக்கொண்டிருந்தேன். வசதியான நல்ல வீடு, ஆனால் நம் ஊர் வீடுகளில் அமைப்புக்கு நம் கால் பழகிவிட்டிருப்பதனால் நிலத்தளம் வழியாக ஒரு வாசலும் அடித்தளம் வழியாக ஒரு வாசலும் கொண்ட இவ்வீடுகளின் அமைப்பு ஒருபோதும் பிடிகிடைப்பதில்லை. வீட்டுக்கு வருபவர்கள் நேரடியாக அடுக்களைக்குள் நுழைவதும் ஆச்சரியம் அளிக்கிறது
ஆஸ்திரேலியா போலவே இங்கும் ரெடிமேட் வீடுகள்தான். தொழிசாலையில் உருவாக்கப்பட்டு கொண்டுவந்து நட்டு இணைத்து கட்டப்பட்டும் வீடுகள். வீடுகளின் புற அமைப்பும் உள்வடிவமும் எங்கும் ஒரேபோல இருக்கின்றன. இந்தியாவில் கன்யாகுமரி மாவட்ட வீடுகள் நெல்லையில் இருப்பதில்லை. புறநகரில் உள்ள வீடுகள் நகருக்குள் தென்படுவதில்லை. ஒருவர் வீடு இன்னொருவர் வீட்டில் இருந்து மாறுபட்டிருக்கும். சாதிக்கொரு வீடு அமைப்பு இருக்கும்.
வீடுகளை பார்த்தபடிச் செல்வதென்பது இந்தியாவில் ஒரு நல்ல அனுபவம். வீடுகள் எவ்வளவோ விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருக்கும். நெசவாளர் வீடுகளில் தறி அமைப்பதற்கான திண்ணைகள் இருக்கும். வேளாளர் வீடுகள் கண்ணுக்குத்தெரியாத இரு பகுதிகள் கொண்டவை. உள் முற்றத்தில் இருந்து உள்ளே செல்லும் அறைகளில் பெண்கள் ‘பட்டக சாலை’ என்று அவர்கள் சொல்லும் முகவாசலுக்கு வருவதே இல்லை. கிராமத்து குடியானவர் வீடுகள் பிரம்மாண்டமான களஞ்சியங்கள் கொண்டவை. விவசாயக்கருவிகள் நடுவே மனிதர்கள் வாழ்வார்கள்.
இந்திய வீடுகளை நினைக்க நினைக்க அவற்றின் முடிவற்ற வகைகள் பிரமிப்பை ஊட்டுகின்றன. மாடுகளை வீட்டுக்குள் நடுமுற்றத்தில் வளர்ப்பவர்கள் உண்டு. ஒரு பொது மதிலுக்குள் தனித்தனிச் சிறு கட்டிடங்களின் தொகுப்பாக அமைந்த வீடுகள் உண்டு. சமையலறையில் இருந்து படுக்கை அறைக்கு மழைக்காலத்தில் குடை பிடித்தபடி செல்லவேண்டும். வட இந்தியாவில் அடுக்களை வீட்டு முற்றத்தில் அமைந்திருக்கும். கருங்கல் பாளங்களால் கூரை அமைத்து மேலே செடிகளை வளரவிட்டிருக்கும் வீடுகள் மகாராஷ்டிரப்பகுதிகளில் உண்டு. மூங்கில் கால்மேல் நிற்கும் வீடுகளை வடகிழக்கு மலைப்பகுதிகளில் காணலாம்.
இதைத்தவிர வீடுகளை இந்தியாவில் கால அடிபப்டையில் பிரிக்கலாம். இருபத்தைந்து வருட பழமைகொண்டவீடுகள் அனேகமாக கான்கிரீட்டால் அமைந்தவை.ஐம்பது வருடங்களுக்குள் என்றால் மண் ஓடு கூரையிட்டவை நூறு வருடங்களுக்குள் என்றால் முகப்பில் திண்ணையும் உள் அங்கணமும் கண்டிப்பாக இருக்கு. நூறு வருடம் முந்தைய வீடுகள் மரச்சாமான்களை நம்பாதவை. அமர்வதும் படுப்பதும் தரையில் என்பதனால் அவை குள்ளமானவையாக இருக்கு. பெரிய உத்தரங்களும் சிறிய வாசல்களும் கனத்த கதவுகளும் கொண்டவை. இருநூறு வருட்ம் பழக்கமுள்ள வீடுகள் மிகச்சிறிய செங்கற்களால் சுதை வைத்து கட்டப்பட்ட கனத்த சுவர்களுடன் ஜன்னல்களே இல்லாமல் இருக்கும். நெல்லை மதுரை நகரங்களில் அத்தகைய பல்லாயிரம் வீடுகள் உள்ளன.
இவ்வாறு நில அடிப்படையில், கால அடிபப்டையில், சாதி அடிபப்டையில் வீடுகள் மாறுகின்றன. இந்த மாற்றம் இந்தியா எங்கும் நிறைந்திருக்கிறது. இந்த முடிவிலாத வகைபாடுகளின் பெருந்தொகையாக இந்தியாவைப் பார்ர்க்கலாம் என்றால் பிரம்மாண்டமான ஒருமைத்தன்மையின் காட்சியாக ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் தென்படுகின்றன. ஒரேவகை வீடுகள் ஒரேவகை கட்டிடங்கள் ஒரேவ்கையான புறநகரங்கள் ஒரே வகையான தெருக்கள். காடுகள் கூட ஒரே வகை மரங்களுடன் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கின்றன.
இந்த ஒரேவகைத்தன்மை இங்கே ஏராளமான வசதிகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. மிகச்சிறந்த உதாரணம் இங்குள்ள சங்லிலித்தொடர் உணவகங்கள்தான். எங்கு சென்றாலும் ஒரே சுவை. நம் நாட்டில் பயணத்தில் செல்லுமிடத்தில் சாப்பாடு கிடைக்குமா என்று நாஞ்சில்நாடன் போன்றவர்களிடம் விசாரித்து அறிந்தபின் பயனத்தை வகுக்க வேண்டியிருக்கிறது– அவருக்கு பெரும்பாலான சாப்பாடுகள் பிடிக்கும் என்பதனால் போன இடத்தில் கஷ்டப்படவேண்டியிருக்கிறது.
அதேபோல இந்தியாவில் வாழ்வதற்கு வசதியான வீடுகள் மிகக் குறைவு. ஒரு சிறிய நவீன அம்சம் வந்ததுமே வீடு பொருத்தமில்லாததாக ஆகிவிடுகிறது. தமிழ்நாட்டில் தொலைக்காட்சி வைப்பதற்கு ஒரு நல்ல அறை உள்ள வீடுகள் குறைவு. அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் நான் வசதிக்குறைவான ஒரு வீட்டைக்கூட பார்க்கவில்லை. இந்தியாவின் பண்பாட்டு பன்மைத்துவம் அதன் செல்வம். ஆனால் அதற்காக நாம் இறந்த காலத்தின் இடிபாடுகளுக்குள் வாழவேண்டியதில்லை. இன்று இந்தியாவில் பெரும் செலவில் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. ஆனால் எவ்வகையான திட்டமும் இல்லாமல் மனம்போனபோக்கில் வாழ உகந்தவையல்லாத கட்டிடங்களாக அவை கட்டப்படுகின்ரன. சீராக திட்டமிட்டு பேரளவில் உற்பத்தி செய்யப்படும் அமெரிக்க பாணி வீடுகளும் அவற்றை உருவாக்கும் நிறுவனங்களும் நம் நாட்டுக்கு தேவை என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. இந்திய நடுத்தர வற்கம் அத்தகைய வீடுகளை வாங்கும் நிலையில்தான் இப்போது இருக்கிரது.
நவீனமாதல் என்பதுடன் சராசரரிப்படுத்துதல் என்பதும் தரப்படுத்துதல் என்பதும் இன்றியமையாமல் கலந்திருக்கின்றன. நவீனத்துவம் அதன் கருத்தியல் வளர்ச்சிநிலை. சராசரிபப்டுத்துவதன் மூலம் நாம் ஓர் அழிவுவேலையைச் செய்கிறோம் என்பது உண்மை. நவீனமயமாதல் மூலம் சென்ற உலகின் பண்பாட்டுச் சாதனைகளை அழித்துவிடுவோம். ஆனால் நவீனமயமாதல் இல்லாமல் அறிவியலின் வெற்றிகளை அனைத்து மக்களுக்கும் கொண்டுசென்று சேர்க்க முடியாது. இது ஒரு சிக்கலான முரண்பாடு.
பல்லவி அய்யர் எழுதிய ‘சீனா’ என்ற நூல் [ ராமன்ராஜா மொழியாக்கம், கிழக்கு பதிப்பகம்] சீனாவில் நவீனமயமாக்கலை எத்தனை மூர்க்கமாகச் செய்து பண்பாட்டுப்பாரம்பரியத்தை அழித்துவிடுகிறார்கள் என்பதன் பீதியூட்டும் சித்திரத்தை அளிக்கிறது. கனடா, ஆச்திரேலியா அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு நெடுங்காலப்பாரம்பரியத்தின் பின்னணி இல்லாத காரணத்தால் இந்தச் சிக்கல் பெருமளவு எழவில்லை. ஆனால் ஐரோப்பா இச்சிக்கலை சிறப்பாகவே சமாளித்திருக்கிறது என்று அந்நாட்டுக்குச் சென்ரவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நான் ஐரோப்பாவுக்குச் சென்றதில்லை. தொன்மையான பண்பாட்டின் முடிவிலாத வகைமைகளை நிலைநிறுத்திக்கொண்டே அவர்கள் நவீனமயமாதலின் சராசரிப்படுத்தலை அடைந்திருக்கிறார்கள்.
*
பா¡ஸ்டன் நகரை நானும் பாலாஜியும் ஜூலை பனிரண்டு பகல் முழுக்கச் சுற்றிப்பார்த்தோம். பாஸ்டன் ஒரு நடுத்தர அமெரிக்க நகரம். முந்நூற்றி ஐம்பது வருட வரலாறு உடையது. தூய்மைவாதிகள் [Puritons] என்னும் கிறித்தவ மதப்பிரிவினர் இங்கிலாந்தில் தாங்கள் ஒதுக்கப்படுவதாக உணர்ந்தபோது 1650களில் இங்கே குடியேறி ஆரம்பகால குடியிருப்புகளை அமைத்தார்கள். நகர் நடுவே சார்லஸ் ஆறு ஓடுகிறது. இந்த ஆறுதான் இந்நகரம் உருவானதற்குக் காரணம். அமெரிக்காவின் நடுத்தரத் துறைமுகங்களில் ஒன்று இது. துறைமுகத்தில் இருந்து நிலப்பகுதிக்குள் செல்லவும் மீளவும் ஆறு ஒரு நல்ல போக்குவரத்து மார்க்கமாக இருந்திருக்கிறது. பாஸ்டன் ஆரம்பத்தில் பிரிட்டிஷார் வந்திறங்கிய நிலப்பகுதிகளில் ஒன்று. ஆகவே இதற்கு அக்காலத்தில் நியூ இங்கிலாந்து என்று பெயர். பின்னர் இப்பகுதி மூன்று தனி மாநிலங்களாக பிரிந்தது. இப்போது இது மசாசுசெட்ஸ் என்ற மாநிலம்.
இப்பகுதியெங்கும் அன்று செழித்து அடர்ந்திருந்த பெருங்காடுகளை பிரிட்டிஷ் வணிகர்கள் பெருமளவில் வெட்டி ஆறுவழியாக கடலுக்குள் கொண்டு வந்து பிரிட்டனுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். நியூ இங்கிலாந்து பகுதியில் நூறுவருடப்பழைமை கொண்ட மரங்களே இல்லை என்ற நிலை விரைவில் உருவானது. ரூஸ்வெல்ட்டின் காலகட்டத்தில்தான் இந்த இழப்பு உணரப்பட்டு மீண்டும் வனங்கள் உருவாக்கப்பட்டன. இன்று வனச் சட்டங்கள் மிகமிகக் கடுமையாக அமல்செய்யப்படுகின்ரன. ஆகவே நகரைச் சுற்றிய நிலங்களில் மட்டுமல்ல நகருக்குள்ளும் அடர்ந்த காடுகள் செறிந்திருக்கின்றன. பாதிக்குமேல் காடுகள் தனியாருக்குச் சொந்தமான நிலங்கள். ஆனால் அவற்றை காடுகளாகவே வைத்திருக்கவேண்டும் என்ற அரசுக் கட்டுப்பாடு உள்ளது.
பாஸ்டனின் காடுகளை பார்த்துக்கொண்டே பயணம்செய்வது இனிய அனுபவமாக இருந்தது. பாலாஜி இருப்பது அயர் என்ற இடத்தில். இது ஒரு புறநகர் கிராமம். ரயிலில் ‘அய்யர்லாம் இறங்குங்க’ என்கிறார்கள். இங்கிருந்து பாஸ்டனுக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் காடுகளை கடந்துதான் செல்லவேண்டும். மரங்கள் செறிந்த காடுகள், நடுவே வானம் பிரதிபலிக்கும் குளங்கள், இருண்ட காட்டுநிழல் மூடிய சிறிய குட்டைகள், புற்களும் புதர்களும் முழங்கால்கள் வரை ஏறிய சதுப்புகள், காடுகள் நடுவே வலைந்து கிடக்கும் சிறிய பாதைகள். புதர்கள் நடுவே சாம்பல்நிறக்கூரையுடன் நிற்கும் தனித்த பெரிய மரவீடுகள். நீரும் நிலமும் அபாரமாக பின்னிப்பிணைந்து உருவான காட்சி வெளி. பசுமையே அதன் நிறம்.
நம் வெப்பமண்டலக்காடுகளைப்போல பல்வேறு மரங்களும் தாவரங்களும் நிறைந்த காடுகள் அல்ல இவை. ஆனால் ஆஸ்திரேலியாபோல யூகலிப்டச் பைன் என்னும் இருவகை மரங்கள் மட்டுமே நிறைந்த காடுகளும் அல்ல. கொஞ்சம் உயரமான இடங்களில் பைன் மரக்காடுகள் உள்ளன, அவை ஒரே மரங்களால் ஆனவை. மற்ற இடங்களில் பிர்ச், மேப்பிள் போன்ற பலவகை மரங்களும் புதர்களும் கலந்த காடுகள்தான். ஓர் இந்தியக்காட்டில் பலவகையான பறவைகளின் பெருங்கூச்சல் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்த ஒலிகளினால் ஆன ஒரு அமைதி அங்கே நிறைந்திருக்கும். இக்காடுகள் அவ்வப்போது ஒலிக்கும் சில குருவியொலிகள் அல்லாமல் பெரும்பாலும் அமைதியாக விரிந்து கிடக்கின்றன.
பாஸ்டன் நகரின் சுத்தமான சாலையோரங்கள் செங்கல் பாவப்பட்டவை. பெரும்பாலான கட்டிடங்கள் சுட்டசெங்கற்களினால் ஆன சுவர்கள் கொண்டவை– அல்லது அதே தோற்றம் வரும்படி சமீபகாலமாகக் கட்டப்பட்டவை. அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் நகரமெங்கும் விடுமுறை மனநிலை. எல்லாருமே டிஷர்ட்டுகள்தான் அணிந்திருந்தார்கள். சம்பிரதாய உடை அணிந்த ஒரே ஒருவன் நான் தானா என்று எண்ணிக்கொண்டேன். கைகளில் ஏதேனும் பானம் அல்லது தின்பண்டத்துடன் தெருக்களில் மக்கள் அலைந்தார்கள். இளவெயில் பரவிய புல்வெளிகளில் படுத்துக்கிடந்து புத்தகங்கள் வாசித்தார்கள். தோழர்தோழியருடன் கைகோர்த்து சிரித்துப்பேசிக்கொண்டு நடந்தார்கள். குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வந்து புல்வெளிகளில் பந்து விளையாடினார்கள். ஓய்வான உற்சாகமான ஒரு நாளில் அவர்கள் பிரகாசமான தொட்டிநீரில் வண்ணமீன்கள் போல திளைப்பது எனக்குத்தெரிந்தது.