காதலர் தினம்

கோவை ஆகா எஃப்எம் வானொலியில் இருந்து என்னை கூப்பிட்டுக் காதலர் தினம் பற்றி சில கேள்விகள் கேட்டார்கள். நான் அளித்தபதில்கள் காதலர்தினத்தன்று வெளியாகியிருக்குமென நினைக்கிறேன். பொதுவாகச் சொல்லப்படும் சந்தேகங்களையே அவர்களின் கேள்விகள் எதிரொலித்தன


காதலர்தினக் கொண்டாட்டம் தேவையா? உங்கள் கருத்து என்ன?

பொதுவாக தமிழ்ச்சமூகம் காதல் அற்றது. சங்க காலத்தில் காதல் இருந்திருக்கிறது. காதலின் உவகையும் வலியும் பதிவான அழியா இலக்கியங்கள் அவை. ஆனால் சிலப்பதிகார காலகட்டம், அதாவது சங்கம் மருவிய காலகட்டம், வந்தபோதே காதல் இல்லாமலாகிவிட்டது. காரணம் குழந்தைத் திருமணமுறை வந்துவிட்டது. கண்ணகி ‘ஈராண்டு அகவையாள்’ என்கிறார் இளங்கோ. அதாவது 12 வயது. பருவம் வந்த ஒரு பெண் தன் காதலனைத் தானே தேடிக்கொள்ளும் நிலை மாறிவிட்டது. காதலுக்கான பருவம் வருவதற்கு முன்னரே அவள் குழந்தைக்குத் தாயாகியிருப்பாள்.

ஒருவேளை காதலைத் தவிர்க்கத்தான் இந்தக் குழந்தைமணம் அறிமுகமானதோ என்ற ஐயம் எனக்கு உண்டு. சங்கம் மருவிய காலகட்டத்தில் தமிழகத்தில் முடிசூடிய மூவேந்தர்கள் ஓங்கிவிட்டார்கள். பேரரசுகள் வந்துவிட்டன. பேரரசுகளின் அடித்தளம் உறுதியான சமூக அடுக்கதிகாரம். அதை அடுத்துப் பிறப்பு சார்ந்தே உலகமெங்கும் நிலப்பிரபுத்துவம் உருவாக்கிக்கொண்டிருந்தது. இந்தியச்சூழலில் அது சாதியதிகாரம். சங்ககாலம் முதலே தமிழகத்தில் சாதிப்பிரிவினை வலுவாக இருந்திருந்தது. சங்கம் மருவிய காலத்தில் சாதி அதிகாரக் கட்டுமானமாக ஆகியிருக்கலாம். சாதியடையாளங்களை மீறுவது உறுதியாகத் தடுக்கப்பட்டிருக்கலாம். அதற்காகவே குழந்தைமணம் அறிமுகமாகியிருக்கலாம்.

குழந்தைமணம் நமக்கு நூறுவருடம் முன்பு வரை நீடித்தது. ஆகவே குறைந்தது ஆயிரத்தைநூறு வருடங்களாக நம் சமூகம் காதல் என்றால் என்ன என்று அறியாது. அது அறிந்ததெல்லாமே பாலுறவு மட்டுமே. திருமணத்தில் காதல் இல்லாத காரணத்தால் நம் மூதாதையர் பரத்தையரை நாடிச்சென்றனர். நம் சமூகம் அதை அங்கீகரித்தது.

காதல் என்றால் என்ன?சாதாரணமாகப் பார்த்தால் ஓர் ஆணும் பெண்ணும் தன் ரசனைக்கும் இயல்புக்கும் ஏற்ற துணையைத் தானே தேடிக்கொள்வதுதான். தன் தோழனையும் தோழியையும் தேடிக்கொள்ள நாம் ஆண்களையும் பெண்களையும் அனுமதிக்கிறோம். ஆனால் வாழ்நாள் முழுக்க நீளும் ஓர் உறவை அப்படித் தேடிக்கொள்ள அனுமதிப்பதில்லை.

நாம் திருமணத்தில் எல்லாப் பொருத்தங்களையும் பார்க்கிறோம். பணம் குடும்பம் சமூக அந்தஸ்து நிறம் படிப்பு வேலை உயரம் எல்லாம். ஆனால் ரசனை, மனநிலை, அறிவுத்திறன் ஆகியவற்றில் பொருத்தம் உண்டா என்று பார்ப்பதில்லை. அதைக் கொஞ்சமேனும் பழகாமல் அறியவும் முடியாது. மரபான மணங்களில் ஆண்-பெண்ணை முடிவுசெய்தபின்னர்தான் நாம் அவர்களைப் பழகவே விடுகிறோம்.

நம் ரசனை,மனநிலை, அறிவுத்திறன் ஆகியவற்றில் இணைவு இல்லாத ஓரு நபரிடம் சிலநிமிடங்களுக்குமேல் நம்மால் பேசவே முடிவதில்லை. அப்படி ஒரு திருமணத் துணை அமைந்தால் அந்த உறவு எப்படி இருக்கும்? நம் திருமணங்களில் ஒருவருடம் தாண்டிவிட்டால் அதன்பின் உரையாடலே நிகழ்வதில்லை. சாப்பிட்டீங்களா, பிள்ளைங்க தூங்கியாச்சா. நாய்க்கு சோறு வச்சியா என சில சொற்றொடர்களுக்குமேல் உரையாடும் தம்பதிகள் நம்மிடம் மிக மிக அபூர்வம்.

இங்கே ஆண்கள் பெரும்பாலும் நண்பர்களிடம்தான் பேசுகிறார்கள். ‘எங்கிட்ட பேசாதீங்க. உங்க ப்ரண்ட்ஸுன்னா மட்டும் ராப்பகலா சிரிச்சுப்பேசுங்க’ எனப் பெண்கள் புலம்புவதைக் கண்டிருக்கிறேன். பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத்தளம் இல்லாத நிலையில் வெற்று உரையாடல்கள் மட்டுமே சாத்தியம். வேறு வழியே இல்லை. இந்த மனவிலகலில் இருந்து திருமண உறவே ஒப்புக்கு நிகழ்வதாக மாறிவிடுகிறது. பெண்கள் குழந்தைகளுடன் ஒரு தனி உலகில் வாழ ஆண் தனித்துவிடப்படுகிறான். நாற்பதை ஒட்டிய வயதுகளில் இளமையின் இலட்சியவேகங்கள் தணிகையில் அவன் இன்னும் தனிமையாக ஆகிறான். குடி போன்றவற்றில் சிக்குகிறான்.

காதல் என்பது தனக்குரிய துணையை, தன்னிடம் அகத்தை பகிர்ந்துகொள்ளக்கூடிய இணையை ஓர் ஆளுமை கண்டடைவதுதான். அந்த பகிர்ந்துகொள்ளுதலைத்தான் காதல் என்கிறோம். அது பகிருந்தோறும் நெருங்கும், பழகுந்தோறும் வளரும் ஓர் உறவு.

தமிழ்ச்சமூகம் போலக் காதல் மீது பேரார்வம் கொண்ட சமூகம் வேறில்லை. இங்கே அனுதினமும் காதலைப்பற்றிப் பேசுகிறோம். சினிமாக்களில் கதைகளில் பாடல்களில் எல்லாம் காதல்தான். காரணம் இங்கே வாழ்க்கையில் நாம் காதலை அனுமதிப்பதில்லை. காதல் அனுபவம் பெரும்பாலானவர்களுக்கு இல்லை. காதலுக்கான தீராத ஏக்கத்துடன் வாழ்ந்து மடிபவர்கள்தான் நம்மில் மிகப்பெரும்பாலானவர்கள். சினிமாவும் எழுத்தும் எல்லாம் அதற்கான வடிகால்கள் மட்டுமே.

நாம் காதலை அறிந்தது சென்ற நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் இங்கே ஆங்கிலக்கல்வி உருவானபோதுதான். ஆங்கில கற்பனாவாதக் கவிதைகளில் உள்ள காதல் நம் இளைஞர்களுக்குப் பெரும் பரவசத்தை அளித்திருக்கிறது. வெறுமே கற்பனையிலேயே அவர்கள் காதலை அனுபவித்தனர். மௌனி கதைகள் அந்த மனவெளிப்பயணத்தின் மிகச்சிறந்த உதாரணங்கள். சென்ற நூற்றாண்டில் நம் எழுத்தாளர்களில் காதலை அறிந்தவர்கள் எத்தனைபேர் எனப் பார்த்தால் நாம் இதை உணரலாம். அனேகமாக அத்தனைபேருமே மிகமிக இளமையில் மணமுடித்தவர்கள்.

ஆகவே நமக்கு இன்னும் காதல் என்றால் என்ன என்று தெரியாது. தெரியாத காரணத்தால் நாம் வெறும் பழக்கத்தையே காதல் என நினைக்கிறோம். எந்தத் தெரிவும் இல்லாமல் அருகாமையையே காதலுக்கான காரணமாகக் கொள்கிறோம். இன்றைய காதல்களில் மிகப்பெரிய சிக்கலே இதுதான். தனக்குரிய துணை என உள்ளுணர்வு சொல்லும் ஒரு ஆணையோ பெண்ணையோ தெரிவுசெய்பவர்கள் குறைவு. ஓர் ஆணும் பெண்ணும் அருகருகே வேலைசெய்ய நேர்ந்தாலே காதல் உருவாகிவிடுகிறது.

காதல் இங்கு ‘தடைசெய்யப்பட்ட’ வேவுபார்க்கப்படும்’ ஒன்றாக இருப்பதனாலேயே அது ரகசிய நடவடிக்கையாக ஆகிவிடுகிறது. இன்று காதலில் உள்ள கவர்ச்சியே இந்தப் பரபரப்புதான் என்று ஆகியிருக்கிறது. இதனாலேயே காதலை நிதானமாக அணுக முடியாமலாகிவிட்டிருக்கிறது நம்மால்.பலகாதல்கள் பிழையான உறவுகளாக மாறுவது இதனால்தான்.

காதலை நிதானமாக அணுகவும் முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளவும் நமக்குப் பயிற்சி தேவை. அதற்குக் காதலை சாதாரணமாக அணுகும் பண்பாட்டு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய எந்த ஒரு நிகழ்ச்சியும் வரவேற்புக்குரியதுதான். அது காதலர்தினமாக இருந்தாலும் சரி வேறு எதுவாக இருந்தாலும் சரி.

காதலர்தினம் ஒன்றும் நம் பண்பாட்டுக்குப் புதியது அல்ல. வட இந்தியாவில் இருந்துவரும் ஹோலி ஆணும் பெண்ணும் பழகுவதற்கு இடமளிக்கக்கூடிய ஒரு பண்டிகைதான். இங்கேகூட மஞ்சள்தண்ணீர் ஊற்றி விளையாடும் விளையாட்டுக்கள் இருந்திருக்கின்றன. [ஆனால் அது சாதிக்குள்தான்]. சங்ககாலத்தில் புதுப்புனலாடுதல் என்ற மாபெரும் காதலர்தினம் கொண்டாடப்பட்டிருக்கிறது. ஆரோக்கியமான சமூகங்கள் அத்தகைய நிகழ்ச்சிகளை அனுமதிக்கும். ஏனென்றால் சிறந்த ஆண்பெண் உறவுகளே நிறைவான சமூகத்தை உருவாக்கும்.

நமக்குத்தேவை உறைந்து இறுகிய சமூகம் அல்ல. தன் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தாண்டிச்செல்லும் சமூகம்தான். பண்பாடு ஒழுக்கம் என்றபேரில் சமூகத்தைப் பாறையாக மாற்றும் பழமைவாதமனநிலைகளை வென்றுதான் முன்செல்லவேண்டும்

நம் பண்பாட்டின் ஆழத்தை முழுதுணர்ந்து சொன்னவன் பாரதி. ஆகவேதான் நம் சமூகத்தின் எல்லாப் பழமைவாதநோக்குகளையும் அவன் நிராகரித்தான். அந்தக்காரணத்தால்தான் ‘ஆதலினால் காதல்செய்வீர்’ என்று அவன் அறைகூவினான்

 

கேள்வி: ஆனால் நிறைய காதல்கள் சீக்கிரம் உடைந்துவிடுகின்றன. காதல்களை அடிக்கடி மாற்றிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள்…

அது இயல்புதானே? காதலில் அப்படி ஒரு கற்பு உண்டா என்ன? நட்பில் எவ்வளவு முறிவுகள் இருக்கின்றன. காதலிப்பவர்கள் தங்களுக்குள் ஒருமை கைகூடவில்லை என்றால் பிரிவதுதானே சரியாக இருக்கமுடியும்?

மேலும் பல காதல்கள் இங்கே முறிவதே சமூகமும் குடும்பமும் அளிக்கும் அழுத்தத்தால்தான். அவர்களே காதலின் கேடாகச் சொல்வது அது முறிவதை என்பது பெரிய அபத்தம்

கேள்வி: காதல்மணங்கள்கூடப் பலசமயம் கசந்துதானே செல்கின்றன?

ஏற்பாடுசெய்யப்பட்ட திருமணங்கள் ஒன்றாக நீடிப்பதற்கு சமூகமும் குடும்பமும் அழுத்தம் கொடுக்கின்றன. அவர்கள் எவ்வளவு கசந்தாலும் ஒருவரை ஒருவர் உச்சகட்டமாக வெறுத்தாலும் பிரிய அனுமதிப்பதில்லை. ஆனால் காதல்மணங்களைப் பிரிக்கவும் காதலர்களை மனம்சோர்வுறச்செய்யவும்தான் குடும்பமும் சமூகமும் முயல்கின்றன. காதலர்களின் சிறிய பிரச்சினைகளைக்கூட சமூகமும் சுற்றமும் பெரிதுபடுத்துகின்றன.

அதையும் மீறிக் காதல்மணங்களில் பெரும்பாலானவை சிறந்த உறவுகளாகத்தான் உள்ளன என்பதுதான் நடைமுறை உண்மை. எந்த உறவிலும் சோர்வும் மனக்கசப்புகளும் கொஞ்சம் இருக்கலாம். ஆனால் காதல்மணத்தில் இருக்கும் மன ஒருமை முன்பின் அறியாத இருவர் சேர்ந்துவாழ்வதில் நிகழ்வதில்லை

வாழ்க்கையின் நான்கு அறங்களைப்பற்றி பாடும்போது அவ்வையார் இப்படிச் சொன்னார்

ஈதல் அறம் ஈட்டல் பொருள்
காதல் இருவர் கருத்தொருமித்து -ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைத்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு

காதல் கொண்ட இருவர் கருத்து ஒருமித்து ஒருவருக்கொருவர் ஆதரவுடன் வாழ்ந்தால் மட்டுமே அது இல்லறம் என்பதுதான் தமிழ் மரபு

கேள்வி: காதலர்தினத்தன்று உங்கள் வாழ்த்து என்ன?

இருபத்தொன்று வருடம் முன்பு காதலித்து மணம்புரிந்துகொண்டு இத்தனை வருடங்களில் ஒரு சிறு மனக்கசப்பு கூட இல்லாமல் அதே காதலுடன் அதைவிடப் பேரன்புடன் வாழக்கூடிய ஒருவன் என்றமுறையில் காதலர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைஉடலின் மொழி நடனம்
அடுத்த கட்டுரைஎன் பேட்டி