நுகர்வெனும் பெரும்பசி-கடலூர் சீனு

கூடங்குளம் பயணம் முடிந்து திரும்பும் வழியில் ,தூரத்தில் அணு மின்நிலையம் புத்தனின் மௌனத்துடன் உறைந்து காட்சி அளித்தது . எத்தனை ஆற்றல் . எத்தனை சக்தி . அத்தனை வழியாகவும் நாம் செய்யப்போவது ஒன்றே ஒன்றுதான் . நமது பூமியை ஒட்ட ஒட்ட சுரண்டி , விஷக் காற்று வீசும் பாலைநிலத்தை , நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்வது . சூழல் மாசுபடாமல் ,பொருளாதாரத் தன்னிறைவு இல்லை . இதற்கு எதிராக எழும் எந்தக் குரலும் தேச விரோதம் . தொழில் யுகம் தீயாகப் பரவியபோது , உண்மையில் எவரும் சூழல் மாசுபாடு பற்றிய கவனத்தில் இல்லை என்பது வெளிப்படை .

இன்றய நிலை அவ்வாறு இல்லை . தன் தேச நலனுக்காக , அடுத்த தேசத்தைக் குப்பைக் கூடையாக மாற்றுவதே எல்லா நாட்டின் வெளி உறவுக் கொள்கையாக இருக்கிறது . இச் சூழல் , ஒவ்வொரு மனிதனையும் , அவனது மொழி , தேசம் , பொருளாதார வளம் , கிரகிக்கும் திறன் , அனைத்தையும் கடந்து , எதிர்கால வாழ்தலுக்காக இயற்கை மீது கவனம் குவிக்கச் சொல்கிறது . இதுவரை நாம் நடந்து வந்த பாதை , அதில் நாம் நமக்கே உருவாக்கிக் கொண்ட சிக்கல்கள் , அதன்பின்னுள்ள அடிப்படை அறப் பிழை ,இவற்றை ஆராயச் சொல்கிறது . அப்படி ஆராயப் புகும் ஒரு தமிழ் வாசகனுக்கு , இந்தியாவின் சூழலியல் சிந்தனைகளின் ,தோற்றம் , வளர்ச்சி , ஆக்கபூர்வமான செயல்பாடுகள் ,இன்றைய சவால்கள் , நாளைய நம்பிக்கைகள் ,என இந்திய சூழலியல் செயல்பாடுகள் மற்றும் அதன் திசைவழி குறித்து ,அடிப்படை வரலாற்று வரைவாக , வந்திருக்கிறது , ராமச் சந்திர குகா எழுதிய ,[நுகர்வெனும் பெரும் பசி ; சுற்றுச் சூழல் கடந்த வரலாறும் , எதிர்காலக் கனவுகளும் .] சூழல் போராட்டத்தில் நமக்கும் ,மேலைநாடுகளுக்கும் உள்ள அடிப்படை நோக்கை , நியு மேலோன் அணைக்கு எதிராகப் போராடிய பொய்ஸ்[1979] நர்மதாவில் போராடிய மேதா பட்கர் , இவர்களை ஒப்பிட்டு விளக்குகிறார் . நம் சூழலியல் எதிர்கொள்ளும் , பொருளியல் ஆன்மீக சிக்கல்கள் , கல்வியில் ,மதத்திலிருந்து சூழியல் பெற்றுக்கொள்ளும் வேர் , சராசரி பொதுஜனமும் , எழுத்தாளர்களும் ,அறிவுஜீவிகளும் ,சூழலியலுக்கு செய்யும் பங்களிப்பு , என அனைத்து தளங்களையும் இணைத்து நம் சூழலிய அசைவை உயிர்ப்புடன் முன்வைக்கிறார் .ஜே சி குமரப்பா முதல் , சிப்கோவின் மனசாட்சியாக விளங்கிய கௌரா தேவி வரை , சிந்தனையாளர் முதல் செயல்பாட்டாளர் வரை நம் சூழலியல் செயல்பாட்டுக்கு வளம் சேர்த்த அனைத்து ஆளுமைகளின் சுருக்கமான வரலாறும் நூலின் வளர்ச்சிப் போக்கில் தந்து செல்கிறார் . சட்டங்கள் , கனிவளங்கள் மீதான அந்நிலைமக்களின் , உரிமைப் போராட்டங்கள் அதன்வழியாக , வளர்ந்துவரும் சூழலியல் அறம் எனும் அனைத்தையும் அலசுகிறார் . இந்தியாவில் சூழலியல் குறித்து இதுவரை சொல்லப்பட்ட வார்த்தைகளையும் . செயல்பாடுகளையும் இந்நூலில் தொகுக்கிறார் .பல்வேறு கோணங்களில் அலசுகிறார் .இறுதியாக அவரிடம் எஞ்சி நிற்கும் கேள்வி , ”ஒரு நாடு எவ்வளவு நுகரலாம் ?” ”ஒரு தனிமனிதன் எவ்வளவு நுகரலாம்”

இது ஒட்டு மொத்த மானுடத்திற்கும் முன் நிற்கும் கேள்வியும் கூடத்தானே ?

எதிர் வெளியீடு [9865005084]

முந்தைய கட்டுரைகீதா ஹிரண்யன்- இருகடிதங்கள்
அடுத்த கட்டுரைகுரல்பணியாளர்கள்