கடிதங்கள்

நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன்

தமிழில் நான் சுஜாதாவின் தீவிர ரசிகன். சில காலம் பாலகுமாரனை வாசித்துள்ளேன்

ஆனால் சுஜாதாவை மிஞ்சிய எழுத்தாளர் தமிழில் இல்லை என சொல்லி வந்தேன்

கடல் படம் ஊத்திக்கிச்சே அதற்குக் கதை வசனம் நீங்கள் தானே அதனால் என்ன சப்பைக் கட்டு கட்டுவீர்கள் என பார்ப்பதற்காக முதல் முறையாக உங்கள் வலைதளத்தில் நேற்று நுழைந்தேன்

முதலில் படித்தது மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக நீங்கள் எழுப்பிய குரல்

பின் கைதிகள் என்ற கதை (மன்னிக்கவும்) காவியம் அதனைப் படித்தேன்

என்ன ஒர் நடை சார் என்ன ஒர் வார்த்தை ப்ரயோகம்

இது வரை நான் தமிழில் படித்த கதைகளிலேயே இது தான் டாப் சார்

இனி துரத்தி துரத்தி உங்கள் படைப்புகளைப் படிப்பேன்

ஆஹா என்ன ஓர் அருமையான கதை சார்

அக்கதையின் பிரமிப்பிலிருந்து இன்னும் விடுபடமுடியவில்லை சார்

ஹேட்ஸ் ஆஃப் ஜெயமோஹன் சார்

அன்புடன்

எல்.கஸ்தூரி ரங்கன்

அன்புள்ள கஸ்தூரிரங்கன்

சரி, இனிமேல் வாசியுங்கள். சில கதைகள் என் கதைகளைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கே பிடிகிடைக்கும்

நட்புடன்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

சுப்ரபாரதிமணியனை செகந்திராபாத்தில் நான் இருக்கையில் ஒரே ஒருமுறை சந்தித்திருக்கிறேன். 1988-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். வேலைதேடி நான் செகந்திராபாத் போயிருந்த நேரம் அது. செகந்திராபாத் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில், சித்தாபல் மண்டி என்ற இடத்தில் அவருடைய நண்பர் ஒருவர் சிறிய துணிக்கடை வைத்திருந்தார். எனக்கும் அறிமுகமானவர். அங்கே சுப்ரபாரதிமணியன் அடிக்கடி வந்து உட்கார்ந்திருப்பார்.

ஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு எழுத்தாளர் என்று எனக்கு அறிமுகம் செய்துவைக்கப் பட்டாலும், நான் அவருடைய கதைகள் எதனையும் அந்த நேரத்தில் படித்திருக்கவில்லை. சுஜாதாவும், அசோகமித்திரனும் எனது ஆதர்சமாக இருந்த நேரம் அது. என்னுடைய வேலைதேடல் குறித்து அவர் கனிவாகப் பேசிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது. அதன் பிறகு அவரைப் பலமுறை அந்தக் கடையில் வைத்துக் கண்டிருந்தாலும் ஒரு புன்னகையைத் தவிர வேறெதுவும் பேசியதாக நினைவில்லை. பின்னர் நான் மும்பை சென்றபிறகு ஒரு தினமணிகதிர் இதழில் அவருடைய கதை ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது நினைத்துப் பார்க்கையில் இன்னும் கொஞ்சம் முனைந்து அவருடன் நட்புக் கொண்டிருக்கலாமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை

நரேந்திரன்

முந்தைய கட்டுரைஅம்மையப்பம் [புதிய சிறுகதை]
அடுத்த கட்டுரைகாந்தியும் ஈழமும்