பின் தொடரும் நிழலின் குரல்

பின் தொடரும் நிழலின் குரல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். வரிக்கு வரி ஏதோதோ புதிய பரிமாணங்களில் கதை நீண்டு கொண்டே செல்கிறது. ஏதாவது ஒரு மனவெழுச்சியில் அமர்ந்துதான் கடிதம் எழுதவேண்டும் என்று தீர்மானித்து, பலமுறை உங்கள் வரிகள் தந்த மனவெழுச்சியின் அலைகளில் இருந்து மீள முடியாமல், மிகவும் சாதாரண நிலையிலே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எதற்காக மனவெழுச்சி கொண்ட நிலையில் கடிதம் எழுத வேண்டும் என நினைக்கலாம். எனக்கு உணர்வுகளின் வெளிப்பாட்டை சரியான வார்த்தைகளால் நிரப்பும் தருணம் அதுதான் என்று படுகிறது. ஆனால் விம்மிய என் மனவெழுச்சிகளெல்லாம் தொடர்ந்து உங்கள் வார்த்தைகளையும், எப்படிப்பட்ட மனிதனால் இப்படி ஒரு படைப்பைத் தர முடிகிறது என்ற ஆராய்ச்சியின் பாதையிலே சென்று வடிந்து விடுகிறது.

( நூலிலிருந்து: மனிதாபிமானத்துக்காக, உலகளாவிய அன்புக்காக, முடிவில்லாத கருணைக்காகக் கூட உலக வரலாற்றில் பெரும் போர்கள் நடந்து மனிதக் கூட்டங்கள் செத்து அழிஞ்சிருக்கு

வானத்தின் முடிவின்மைக்குக் கீழே வடிவமற்ற மலைகளும், ஒழுங்கற்ற நகரங்களுமாகக் கலாச்சாரம் உயிர்கொண்டு இயங்குகிறது.

234 – ஆம் பக்கத்தில் வீரபத்திர பிள்ளையின் பால்ய வயது குறித்து விளக்கிய வரிகள் அனைத்தும் தங்களின் சுய வாழ்வின் பிரதிபலிப்பு என்றே நம்புகிறேன். ஆழமான எழுத்திற்குப் பின்னல் தங்களைத் தொடர்ந்து நகர்த்திச் செல்லும் மூல அனுபவங்கள் நிஜத்தில் ஆச்சரியப் பட வைக்கிறது.

கொடியேற்றம் பற்றி 112 முதல் 115 பக்கங்கள் எழுதியிருக்கும் வார்த்தைகள் நெஞ்சில் உரமேற்றுவதாக இருக்கிறது. எதைப் பிடித்துக் கொண்டு இவர் இப்படியெல்லாம் ஒவ்வொரு கணமும் அதிசயத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்று நினைத்து நினைத்துக் களைப்படைந்து சரிந்து விட்டேன்.

காமம் என்பது பணிவுள்ள வீட்டு மிருகம் அல்ல. நம்மால் கட்டுப் படுத்த முடியாத ஊர்தி அது. அதில் வேகமூட்டி உண்டு. ஆனால் நிறுத்தக்கருவி இல்லை. எரிபொருள் தீர்ந்து அது நிற்க வேண்டும்.

இந்த உடலை, இந்த மார்புகளை, இந்தத் தொடைகளை, இந்த ரகசியமான வழியைப் பிறர் அனுபவத்திருக்கிறார்கள். அந்த எண்ணம் தரும் அருவருப்பு அந்தப் புணர்ச்சிகளின் தீவிரத்தை மர்மமான முறையில் அதிகரித்தது என்றால் வியப்பு ஏற்படலாம். விந்தைதான்)

எனக்கே புரிகிறது நான் மேற்கோள் காட்டியதனைத்தும் அதி மேன்மையான, சுவை மிகுந்த திராட்சை ரசத்தின் சிற்சில துளிகள்தான் என்று. இப்படி எத்தனை எத்தனையோ தத்துவங்களும், எதார்த்தங்களும், உண்மையை அதன் விளிம்பில் சென்று ரசித்துத் திரும்புதலுமாகக் கடந்தவாரம் முழுவதும் பின்தொடரும் நிழலின் குரலுடன் பயணித்து விட்டேன். தனிமனிதன் தன் வாழ்வில் ஒரு புள்ளியிலிருந்து பயணம் மேற்கொண்டு, மீண்டும் அந்தப் புள்ளிக்கே திரும்பி விடுகிறான். ஜெயமோகன் என்ற மனிதன் ஒரு புள்ளியிலிருந்து ஓராயிரம் கீற்றுக்களாக விரிந்து, ஒவ்வொரு மனிதனின் மனங்களாக, கற்பனைகளின் சாரலாக, எண்ணற்ற கேள்விகளின் விடைகளாக மீண்டும் மீண்டும் விரிந்து, வார்த்தைகளுடன் கலந்து விடுகிறான். ஜெயமோகன் விட்டுச் சென்ற வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு பயணம் செய்வதே வாசிப்பாளனாகிய எனக்குப் பிடித்த ஒன்றாகி விடுகிறது. ஒரு பைத்தியக்கார மனம் பெறாமல் அல்லது அத்தகைய நிலையில் உங்களின் எண்ணங்கள் நீட்சியடையாமல், என்னால் இப்படி ஒரு தொடர் நிழலின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது.

250 பக்கம்தான் கடந்திருக்கிறேன். முழுவதும் படித்துவிட்டு மீதிப் பதிவிடுவேன். ஏதாவது எழுதிவிடவேண்டும் என்ற அங்கலாய்ப்பில் மனம் அலைந்ததாலே இதை எழுதிவிட்டேன்.

இது நான் தங்களுக்கு எழுதும் மூன்றாவது கடிதம்,
திருநெல்வேலியிலிருந்து

சாமிநாதன்

முந்தைய கட்டுரைசுமித்ரா
அடுத்த கட்டுரைதாராவியின் வளம்