காந்தியும் ஈழமும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

வணக்கம். நேற்று என் தங்கையுடன் இலங்கை தமிழீழம் பற்றி பேசியது நியாபகம் வந்தது . காரணம் வெறுப்புடன் உரையாடுதல் (http://www.jeyamohan.in/?p=2760) என்ற உங்கள் கட்டுரையைப் படித்ததனால் . தங்கை சொல்கிறாள் ஆயுதத்தின் மூலம் தான் ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரம் என்று .

இலங்கையில் இதற்கு முன் அகிம்சை முறையில் போராட்டம் நடந்திருக்கிறதா ?. ( வலைத்தளத்தில் தேடினேன் என் கண்களுக்கு சிக்கவில்லை ) . இலங்கையில் காந்தியப் போராட்டம் எடுபடாதா ?. அவர்கள் ஏன் காந்தியப் போராட்டத்தைக் கையில் எடுக்கவில்லை . அகிம்சை முறையில் போராடி இருந்தால் நெல்சன் மண்டேலா விற்குக் கிடைத்த அனைத்து உலக ஆதரவு கிடைத்திருக்குமா ?. சுமார் ஒரு லட்ச உயிர்களை அளித்துப் பெறுகிற சுய ஆட்சி தேவையா ?.

ஏன் என்றால் ஒரு particular span of time இல் இத்தனை உயிர்கள் போவது என்பது எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை . தமிழ் நாட்டில் பலர், ஆயுதத்தைக் கையில் எடுக்க என் தம்பிகள் இலங்கையில் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள் . என் இவர்கள் போய் ஆயுதத்தைக் கையில் எடுக்காமல் , அங்கு இருப்பவர்களைத் தூண்டி விடுகிறார்கள் . ?

அன்புடன்

பன்னீர் செல்வம்

அன்புள்ள பன்னீர்செல்வம்

ஈழத்தமிழர் ஒவ்வொருவரும் இதைத்தான் யோசிக்கவேண்டுமென நினைக்கிறேன். இந்தவினாவுக்கான எல்லா முகாந்திரங்களையும் சமகால ஆப்ரிக்கா நமக்களித்துக்கொண்டிருக்கிறது, ஐம்பதாண்டுக்காலமாக. ஆனால் நாம் நமக்கு நிகழும்போது மட்டுமே உண்மைகளை உணர்கிறோம். காலம் கடந்து.

இன்னும்சிலர் உணர்வதே இல்லை. அவர்களுக்குச் சிந்தனையோ அதன் விளைவுகளோ முக்கியமல்ல. அவர்களின் ஆளுமையைப்பற்றிய பிம்பம் மட்டுமே முக்கியம். புரட்சியாளன் என்ற பிம்பம். கோபம்கொண்டவன் என்ற பிம்பம்.

இந்நூற்றாண்டில் நிகழ்ந்த எல்லா ஆயுதப்போராட்டங்களும் சகோதரச்சண்டைகளாகவே முடிந்துள்ளன. எந்தக் காரணத்துக்காக ஆயுதமெடுத்தாலும்.

நேர்மாறானது காந்தியப்போராட்டம். அது ஒருங்கிணைப்பை சமரசத்தை வழியாகக் கொண்டது. காந்தியப்போராட்டம் என்பது அடிப்படையில் நம் தரப்பை நாம் முழுமையாகத் தொகுத்து வலிமையான மக்கள்சக்தியாகத் திரள்வதுதான்

அந்தப் போராட்டம் இலங்கையில் நடந்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாகும். காந்தியம் என்றால் சத்தியாக்கிரகம் என்று மட்டுமே பார்த்தால் சில முயற்சிகள் நிகழ்ந்தன, அவ்வள்வுதான். இலங்கைத்தமிழர்களின் எல்லாத் தரப்புகளையும் ஒருங்கிணைக்கக்கூடிய காந்தியப்போராட்டம் அங்கே நிகழவில்லை. ஆகவே வன்முறை எழுந்தபோது பேதங்கள் வலுத்து சகோதரப்போராக முடிந்தது

ஆனால் இன்னும்கூட காந்தியவழிகளுக்கு அங்கே வாய்ப்பிருக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஅம்மா இங்கே வா வா