அன்புள்ள ஜெ,
பல லட்சக்கணக்கான சீர்திருத்தவாதிகள் சந்திக்காத எதிர்ப்பை காந்தி சந்தித்தார் என்பதிலிருந்து தான் இக்கட்டுரையின் உள்ளர்த்தத்தை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.ஒரு பண்பாடாக நல்லவற்றை ஆய்ந்தறிந்து பின்பற்றுவதும் காலப்போக்கில் தீமையானவையை ஆய்ந்தறிந்து கைவிடுவதும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு முக்கியம் அவ்வாய்வை நமது சொந்தக் கால்களில் நின்று செய்ய வேண்டும் என்பதை நன்றாக விளக்கியுள்ளீர்கள்.
ஆனால் இவை தற்போதைய நிலையில் போதாதவையே எனக் கருதுகின்றேன். காந்தியம் இதுவரையில் அளித்தது ஒரு அடித்தளத்தையே எனவும் அதற்கு மேல் அதை விரித்தெடுக்க வேண்டியது நம்முன் உள்ள சவால் என்றே நினைக்கின்றேன். குறிப்பாக சமூக மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் அறிவியல் – தொழில் நுட்பத் துறைகளில் காந்தியம் செய்யக்கூடுவது என்ன என்பதைத் தெளிவாக அறிவதே நம்முன் உள்ள பணி.
விரிவான சிந்தனைகளைக் கிளறிவிட்டது இக்கட்டுரை. மிக்க நன்றி.
இ.ஆர்.சங்கரன்
அன்புள்ள சங்கரன்
காந்தியைப்போன்ற அசல் சிந்தனையாளர்கள் எப்போதும் ஒரு புதியவகைச் சிந்தனையின் தொடக்கப்புள்ளிகள். அவர்களை நாம் ஏற்கனவே அறிந்துள்ள வகைமைகளுக்குள் அடக்கமுடியாது. அவர்கள் அந்த எல்லைகளைக் கரைக்கிறார்கள். புதிய தடங்களை உருவாக்குகிறார்கள். அந்நிலையில் நாம் எப்போதும் நாமறிந்த அடையாளங்களை அவர்கள் மீது சுமத்துகிறோம்
காந்தியை முற்போக்கு பிற்போக்கு, பழமைவாதம் சீர்திருத்தம், மரபு நவீனம் என்னும் இருமைகளைக்கொண்டு புரிந்துகொள்ளமுடியாது. புரிந்துகொள்ளமுடியாதவற்றையே நாம் அதிகமும் வசைபாடுகிறோம்
ஜெ