மண்மணம்


திருச்செந்தூரில் இருந்து நாகர்கோயில் வரும் வழி பெரும்பாலான குமரி மாவட்டத்துக்காரர்களுக்குப் பிடித்தமானது. அவர்கள் குமரி எல்லையைத் தாண்டிச்சென்ற முதல் அனுபவமே திருச்செந்தூர் பயணமாகத்தான் இருந்திருக்கும். விடியற்காலை நாலரை மணிக்கு நாகர்கோயிலில் இருந்து கிளம்பும் பஸ்ஸில் தான் அனேகமாக சென்றிருப்பார்கள். பஸ் இலைவெளுக்கும் நேரத்தில் நெல்லைக்குள் நுழைந்து மண்வெளுக்கும் நேரத்தில் சாத்தான்குளம் தாண்டிச்செல்லும். நெல்லை நாகர்கோயில் சாலைபோல அகலமானதல்ல செந்தூர்சாலை. சின்ன ஓடை போல வளைந்து வளைந்து பல இடங்களில் தேங்கி நின்று தயங்கிச் செல்லக்கூடியது. வழியில் என்னன்னவோ ஊர்கள்.

ஊர்களை நிதானமாகப் பார்த்துக்கொண்டே செல்லலாம். அந்தக்காலத்தில் எல்லாமே சிவந்த ஓட்டுக்கூரைபோட்ட கட்டிடங்கள். மிச்சம் ஓலைக்கூரைகள். சாலையோரம் செக்கச்சிவந்த மண் விரிந்த நிலம். தொடுவான் வரை மண் சென்று சேர்வதை நானெல்லாம் அங்கேதான் முதன்முதலாகப்பார்த்தேன். வானத்துக்கும் மண்ணுக்கும் நடுவே மலை இருந்தாக வேண்டும் என எண்ணியிருந்தவனுக்கு அது பெரிய அதிர்ச்சி. ’மலை எங்கே?’ என்று வேணு மாமாவிடம் கேட்டு ‘சும்மா இருடா’ என்று அதட்டப்பட்டேன்.

என்ன ஒரு சிவப்பு.எங்களூரில் யட்சிகோயிலில் ஆடு வெட்டிய இடத்தில் மறுநாள் காலையில் மண் அப்படித்தான் இருக்கும். பல்லாயிரம் ஆடுகளை வெட்டியிருக்கிறார்கள். காலையில் அந்தச்சிவப்பு கொஞ்சம் ஈரச்சிவப்பாக இருப்பதுபோலக்கூடத் தோன்றும். கருவேலமரங்களின் குடைகள். ‘கொடைமரம்லே!’ என்று சண்முகண்ணன் வியந்தான். அவனுக்குத்தான் மொட்டை. நான்கு வருட முடி சடையாக சுருட்டிக்கட்டப்பட்டு கனகாம்பரமும் மரிக்கொழுந்தும் சூட்டப்பட்டிருந்தது.

செக்கச்சிவந்த மண்ணில் கன்னங்கரிய பனைமரங்கள். பனைமரத்தடியில் அதிகாலை மென்மண்சருமத்தில் காலையில் யாரோ ஓலைகளை இழுத்துச்சென்ற தடங்கள். உடைமுள் மரங்களின் நீளக்கிளைகள் காற்றில் சுழன்று மண்ணில் போட்ட அரைவட்டங்கள். செந்தூர்ப்பாதையின் அற்புதம் பனைமரங்களை ஏந்திய செம்மண் நேராகச்சென்று கடலில் இறங்குவதைக் காணலாம். கடல் வெண்மணல் மேடுக்கு அப்பால் உயரத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும். உடைந்து தலையில் கொட்டிவிடுமென பயம் வரும்.

செம்மண் காய்கறி விவசாயத்துக்கு ஏற்றது. கமலை வைத்து வெண்டைக்காய் கத்தரிக்காய் பயிரிடுவார்கள். பாண்டிக் கத்தரிக்காய் என்று தெற்கத்திய கல்யாணங்களுக்குத் தேடிவிசாரித்து வந்து வாங்குவார்கள். பாண்டிக் கத்தரிக்காயில் நெய்மணம் இருக்கும். பாண்டி வெள்ளரிக்காயில் விதை சிறியதாக இருக்கும். பாண்டிக்காய்கறி எதுவும் இங்கே மதிப்புள்ளதுதான். காலையில் கூட்டம் கூட்டமாக பெண்கள் செக்கச்சிவந்த கீரைக்கட்டுகளையும் காய்கறிகளையும் கூடைகளில் சுமந்து கொண்டுவந்து மாட்டுவண்டிகளில் ஏற்றிக்கொண்டிருப்பார்கள். வெற்றிலைகள் தகடுதகடாக அடுக்கப்பட்டிருக்கும். ‘வெத்திலபுஸ்தகம்’ என்றான் சண்முகண்ணன். எனக்கே அதிலொன்றை வாசிக்கலாமென ஆர்வமாக இருந்தது.

சட்டென்று ஒரு பொட்டலில் ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிச்சென்று பனைமரத்தடியில் நின்ற பனையேறியிடம் பனையோலை தொன்னையில் அக்கானி வாங்கி சில்லாட்டையை சல்லடையாக்கி அரித்து உறிஞ்சிக்குடித்தார். ’எறங்குலே’ என்றார் வேணுமாமா. இறங்கி நாங்களும் பதநீர் குடித்தோம். எட்டுபேருக்கு பதனிக்கு எண்பது பைசாதான். பதநீர் அப்படி சுவையாக இருப்பதை அறிந்ததே இல்லை. ‘வெயிலாக்கும் பதனியிலே இனிப்பா கேறி இருக்கிறது’ என்றாள் பார்வதிமாமி.

 

seng

செந்தூரில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தேன். டி.எம்.எஸ் பாட்டு போட்டிருந்தான். பூமாலையில் ஓர் மல்லிகை. அந்தப்பாட்டு நினைவுகளை உசுப்பக்கூடியது. என்னைப்போலவே பக்கத்தில் இருந்தவருக்கும் நிகழ்ந்திருக்கும். என்னிடம் திரும்பி ‘எல்லாமே மாறிப்போச்சு, ஏன் சார்?’ என்றார்.

‘ஆமாம்’ என்றேன். பொதுவாக காலம் மாறியதைப் பற்றிப்பேச கிராமத்துப் பெரிசுகள் விரும்பும்.

‘அந்தக்காலத்திலே ரெண்டுபக்கமும் செம்மண்வயலா இருக்கும். காய்கறியா போடுவாங்க…’ என்றார். ‘நான் இங்கதான் பத்தாம்கிளாஸுவரை படிச்சேன். இப்ப மதுரைப்பக்கமா போயிட்டோம்’ என்றார்.

‘சொந்த ஊர் இங்கயா?’ என்றேன்.

‘ஆமா சார்… எல்லுவிளை…என்றார். ’எங்க பூர்வீகமே இங்கதான். அப்பா ஒத்தைக்கொரு மகன். தாத்தாவழியிலே வந்த எட்டேக்கர் நெலம் இருந்தது. அதை வச்சு வெவசாயம் செஞ்சு எங்கள படிக்கவச்சார்’

‘என்ன வெவசாயம்?’ என்றேன்

‘வெத்திலதான். அந்தக்காலத்திலே இந்தப்பக்கம் வெத்தில நல்ல வெவசாயம்… ஒருமாதிரி பாத்திபோட்டு ஏத்திட்டா பத்துவருசம் வரை தினம் வரும்படி இருக்கும். ஆனா சார் வெத்திலப்பாத்தி ஒரு ரத்தக்காட்டேரி. ஆளை அப்டியே உறிஞ்சிக் குடிச்சிரும். அப்பாவுக்கு வேற நெனைப்பே கெடையாது. காலையிலே மூணுமணிக்கு வெத்தில பறிச்சு அஞ்சுமணிக்குள்ள ரோட்டில வச்சாத்தான் வண்டிக்காரங்க எடுப்பாங்க. அதுக்குமேலே கொஞ்சம் நீத்தண்ணியக் குடிச்சிட்டு தண்ணிபாச்ச ஆரம்பிச்சா பத்துமணி ஆயிடும். மேக்கொண்டு உரம் சுமந்து போடுறது களை எடுக்கிறது. மத்தியான்னம் ஒருமணி நேரம் கிடைச்சா மத்த வேலைகள். சாயங்காலம் மறுபடியும் தண்ணி…கொடிக்கு பாத்தியில தண்ணி காயவே கூடாது சார்… இந்த பொட்டக்காட்டில தண்ணி எங்க ? அதலபாதாளத்திலே கெடக்கும். பாதாள கங்கைய கொண்டார மாதிரியாக்கும் அதை மேலே ஏத்துறது….வெத்திலச்செல்லப்பான்னு சொன்னா ஊரிலே எல்லாருக்கும் தெரியும்…’

அவர் பெருமூச்சுவிட்டார்

‘இப்ப அப்பா இருக்காரா?’

‘இல்ல சார். அப்பா எழுவத்தெட்டிலேயே போய்ட்டார். ஒரு சின்ன நெலத்தகராறு…பக்கத்திலே எங்க பங்காளி ஒருத்தன் வெத்திலபோட்டான். அவனுக்கும் எங்களுக்கும் ஒரே வரப்பு. வரப்புல அவன் தாங்குகழிய ஊணிட்டான். அப்பா தட்டிக்கேட்டார். சட்டுன்னு சண்டை மூத்து அவன் பாளையரிவாளால கழுத்த சீவிட்டான். அங்கியே விழுந்து செத்தார். அவனும் எட்டுவருசம் உள்ள கெடந்தான். அதுக்குமேலே நாலஞ்சுவருஷம் எங்கம்மா நெலத்தை பாத்துக்கிட்டாங்க. நான் தலையெடுக்கிறதுவரை கஷ்டம்தான்’ சட்டென்று கோணலாக சிரித்து ‘அரையடி நெலத்துக்காக செத்தாரு சார்….நெனைச்சுப்பாத்தா கேனத்தனமா இருக்கும். ஆனால் அந்தக்காலத்து ஆளுங்களுக்கு அப்டி ஒரு வெறி இருந்தது நெலத்துமேலே’

அதற்குமேல் கொஞ்சநேரம் அவரும் பேசவில்லை. நானும் பேசவில்லை. நான் அவரிடம் இப்போது நிலம் இருக்கிறதா என்று கேட்க விரும்பினேன்

அவரே ஊகித்ததுபோல ‘நான் வேலைக்குப்போனப்ப நெலத்த வித்துட்டேன். மதுரையிலே பிளாட்டு வாங்கி வீடு கட்டினேன்…தம்பிக்கும் ஒரு பிளாட்டு வாங்கி போட்டேன்’ என்றார். ‘இப்ப இந்த ஊரிலே ஒண்ணும் இல்ல. நெலம்போனதோட ஊர்த்தொடர்பும் போச்சு. குலதெய்வக் கோயில்லாம் இங்கதான். வரியெல்லாம் ஒண்ணும் யாரும் கேக்கிறதுமில்ல. மறந்தே போயிருப்பாங்க…நான்லாம் ஊருக்குப்போயி இப்ப இருபத்தேழு வருசமாவுது…’

இருபக்கமும் வெறும் மண். உழப்படாத மண்ணில் உடைமுள் மண்டிக்கிடந்தது. பாலிதீன்தாள்கள் அவற்றில் சிக்கிக் காற்றில் அதிர்ந்து கொண்டிருந்தன. நிலத்தின் ஆயிரம் நாக்குகள் போல. ர்ர்ர்ர் என அவை கூச்சலிட்டன.

‘இப்பல்லாம் இந்தப்பக்கம் வெவசாயமே கெடையாது’ என்றேன். ஒரு இருபது வருஷம் முன்னாடிக்கூட பயறு கீரைன்னு என்னமோ போட்டிருந்தாங்க’

‘போட்டு என்ன செய்ய? ரத்தத்த விட்டுல்லா பயிர வளக்கணும்? வளத்து பறிச்சுக் கொண்டு போயி சந்தையிலே வச்சா குப்பைக்க விலையில்லா ஏவாரி கேப்பான்….வெவசாயம் செஞ்சவன்லாம் இப்ப நடுத்தெருவிலல்லா நிக்கான்?’ என்றார் ஒரு கரிய மனிதர்.

முள்மண்டிய நிலத்தில் ஆங்காங்கே கைவிடப்பட்ட இறவைக்கிணறுகள். உடைந்த பம்புசெட் கட்டிடங்கள். நகரம் நெருங்கும்போது மட்டும் சில இடங்களில் பிளாட் போட்டிருந்தார்கள். விஜிபி நகர். சந்தியா நகர்.

‘கிராமம் எல்லாம் நகரமாயிடுச்சு’ என்றார் முதல் ஆள். நான் சிரித்துக்க்கொண்டேன்.

‘நான்லாம் வெவசாயத்த விட்டு நாகர்கோயிலே மக கூட செட்டிலாயாச்சு..’ என்றார் கரியமனிதர் ‘ஆனா மழைபெஞ்சாமட்டும் நேர இங்க வந்திருறது…இந்த வெந்தமண்ணிலே மழைபெயேறப்ப வாற மணமிருக்கே அது குழந்தைஏசுவுக்க மணமுல்லா?’

அவரது கணிப்பு சரிதான். கொஞ்சநேரத்தில் மனிதகுமாரன் பிறந்தார்.

 

மறுபிரசுரம் – முதற்பிரசுரம் Jul 10, 2013 

முந்தைய கட்டுரைவைரத்தின் ஒளிபட்ட சிறு வளைவு
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–41