வாக்களிக்கும் பூமி – 1, நுழைவு

 

 

லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்துக்கு வந்துசேர்ந்தபோது என்னுடைய நேரம் மதியம் இரண்டுமணி. அவரக்ள் நேரம் பதினொருமணி. விமானத்தில் நான் விழித்திருந்ததே கொஞ்ச நேரம்தான்.  நான் முந்திய நாள் கன்யாகுமரி எக்ஸ்பிரஸில்  தூங்கினேன். காலையில் வந்து கோடம்பாக்கம்  பிரதாப் பிளாசா அறையில் கொஞ்சநேரம் எழுதினேன். எழுதியதை பதற்றத்தில் அழித்துவிட்டேன். டாலர் மாற்றவேண்டும் என்று ஷாஜியை கூப்பிட்டேன். அவர் மதியம் தாண்டி வருவதாகச் சொன்னார். அதற்குள் நானே பிரதாப் பிளாசாவிலேயே மாற்றிக்கொண்டேன்.

கொஞ்சநேரம் தூங்கலாம் என்றால் தூக்கம் வரவில்லை. பதற்றம் என்றும் தோன்றவில்லை, ஸ்பிரிங் பொம்மையை முடுக்கிவிட்டு வைத்தால் அது ஓடுவதற்கு முட்டிக்கொண்டு நிற்பதைப்போல என்று சொல்லலாம். அதற்குள் வசந்தகுமார் வந்தார். அவரிடம் என் சில நூல்களைக் கொண்டுவரும்படிச் சொல்லியிருந்தேன். நானும் வசந்தகுமாரும் அனேகமாக தினமும் ·போனில் பேசுவதுண்டு– பன்னிரண்டுவருடங்களாக. ஆனால் நேரில்பேசும்போது பன்னிரண்டு வருடங்களாக சந்திக்காதவர்களைப்போல பேசிக்கொள்வோம்.

மாலை ஐந்துமணிக்கு வசந்தபாலன் வந்தார். வசந்தகுமார் கிளம்பிப்போனார். அங்காடித்தெரு இசைக்கோர்ப்பு முடிந்துவிட்டது இனி ஒலித்தொகுப்பு மட்டும்தான் மிச்சம் என்றார் பாலன். விஜய் ஆண்டனி இசை. திருப்தியாக வந்திருக்கிறது என்றார். படத்தின் உச்சகட்டம் என்பது முழுக்கமுழுக்க இசையால் ஆனது. நான் இரண்டு சட்டை எடுக்கவேண்டும் என்றேன். சரி வாருங்கள் என்றார் பாலன். இருவரும் கிளம்பிச் சென்று திநகரில் ஒரு கடையில் உடைகள் எடுத்தோம்

‘ஒரே ஆபீசர் டிரெஸ்ஸாக வைத்திருக்கிறீர்கள், காஷ¤வல்வேர் டிரெஸ் எடுங்கள்’ என்றார் பாலன். அவர் எப்போதுமே ஜீன்Sதான். நான் ஜீன்ஸ் டிஷர்ட் போட்டது பன்னிரண்டு வருடம் முன்பு.  அப்போதே எனக்குவேறு ஒரு உடம்புக்குள் புகுந்துவிட்டது போல கூச்சம் ஏற்படும். ‘பேசாம வாங்க சார்’ என்றார் பாலன். ஒரு ஜீன்ஸ் ஒரு டிஷர் ஒரு காஷ¤வல் வேர் டிரெஸ் எடுத்துக்கொண்டேன். வசந்தபாலன் தேர்வு. தப்பான ஏதோசெய்துவிட்டது போல இருந்தது.

அரசுவேலை என்பது ஒரு குறிப்பிட்டவகையில் மனதை தயாரித்துவிடுகிறது. அதில் ஒன்று இந்த உடைக்கோட்பாடு. அதேபோன்றதுதான் மேலதிகாரிகளிடம் பேசுவதில் உள்ள மொழி. ‘எஸ் சார்’ எந்ற பாவனை. வசந்தபாலனை போன்றவர்கள் எப்போதுமே இந்தவகையான அமைப்புகளுக்குள் சென்றவர்கள் அல்ல. அது ஒருபெரிய  மானசீக விடுதலை படைப்பூக்கத்துடன் சிந்தித்தால் மட்டுமே உயிர்வாழமுடியும் என்றவகையான வாழ்க்கையின் ஆபத்து அதிகம் — அதுவே உண்மையான வாழ்க்கை.

அறைக்குத்திரும்பினோம்.பாலனின் உதவியாளர்கள் வந்திருந்தார்கள். பாலனின் குழுவுக்கு ஒரு சிறப்பு உண்டு, அத்தனைபேருமே இலக்கிய வாசகர்கள். முன்பு பாலு மகேந்திரா குழு மட்டுமே அபப்டி இருக்கும் என்பார்கள். இரவெல்லாம் அமர்ந்து இலக்கியம் பேசினோம். இலக்கிய வம்புகள். நக்கலக்ள், வேடிக்கைகள். என் நண்பர் அன்பு வந்திருந்தார். இரு கார்களிலாக வந்து ஏற்றிவிட்டார்கள்.

உள்ளே பதற்றம். நண்பர்கள் கூடவே இருக்கும்போது பதற்றத்தை பேசிக்குறைக்க முடியும். உள்ளே இருக்கும்போது அதுவும் சாத்தியமல்ல. ஆகவே எழுதினேன். மடிக்கணினி ஒரு தோழிபோல கூடவே இருந்தது. அதை இணையத்தில் ஏற்றினேன். அபப்டியும் கடல்போல நேரம் மிச்சமிருந்தது. என்னைச்சுற்றி வளைகுடா நாடுகளுக்குப் போகும் தொழிலாளர்கள் பயங்கரமான பதற்றத்ண்டன் கத்திப்பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒருவர் என்னிடம் நூற்றுக்கணக்கான ஐயங்கள் கேட்டார். எதுவுமே எனக்குப் புரியவில்லை. சற்று அப்பால் அமர்ந்திருந்த ஒருவரை பார்த்தேன். தன்னம்பிக்கை நிறைந்த முகம். ஐயமகற்றுவதையே முக்கியமான பொழுதுபோக்காக வைத்திருப்பவர். அவரை நோக்கி இவரை சாட்டிவிட்டேன்.
சலித்து சோர்ந்து மீண்டும் எழுதி மீண்டும் மூடி காத்திருந்தபோது அறிவிப்பு. ஒரேவழி ப்ளீஸ் ப்ரே கியூ ப்ளீச் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் அம்மணி கெஞ்சினாள் கதறினாள் கண்ணீர் உகுத்தாள். பயனில்லை. கணிப்பொறி நிபுணர்கள் அவளைச் சூழந்துகொண்டு அவளை கிட்டத்தட்ட கூட்டு வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவது போல படுத்தி எடுத்தினர்–  நுழைவுஅனுபதியால். நான் கடைசியில் நின்றுகொண்டேன். நான் கிளம்பும்போது ஹரன்பிரசன்னா வந்து தென்றல் இதழின் ஒரு பிரதியையும் சீனா என்ற நூலையும் அளித்திருந்தார். பல்லவி அய்யர் எழுதிய அந்தநூல்தான் தமிழில் வெளிவரும் சீனாவின் அரசியல்- சமூக அமைப்பு பற்றிய முக்கியமான ஒட்டுமொத்த நூல் என நினைக்கிறேன். சீனப்பெண்களைப்பற்றி ஜெயந்தி சங்கர் எழுதி உயிர்மை வெளியீடாக வந்த பெருஞ்சுவருக்கு அப்பால் என்ற நூல் இன்னொரு முக்கியமான நூல்.  அதை வாசித்துக்கொண்டே வரிசையின் கடைசியில் நின்று கொண்டேன்

ஒருவழியாக ஏறியதுமே தூங்கிவிட்டேன். நடுவே கனவில் அரைகக்ண் விழித்து எதையோ சாப்பிட்டது போல ஒரு நினைவு. சைவ உணவுதான் சொல்லியிருந்தேன். சோறு பீன்ஸ் கூட்டு காய்கறிகள் ஆரஞ்சு ஜூச் ஒரு ரொட்டி. மீண்டும் மீண்டும் அதுவே. பொதுவாக பிரிட்டிஷ் ஏர்வேச் நல்ல கவனிப்பு என்றுதான் எனக்கு பட்டது. உள்ளே நுழையும்போதே பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் உதவி தேவையா என்று கேட்டு தேவையான எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தார்கள். படிவம் நிரப்ப என்னிடம் பேனா இல்லை. எழுத்தாளன் ஆகையால் நான் எப்போதுமே பேனா வைத்துக்கொள்வதில்லை. ஒரு  வெள்ளைக்காரச் சின்னம்ம்ணி ஓடிப்போய் பேனாவுடன் வந்தாள். இருந்தாலும் ரேர் இண்டியா போல வராது. நான் சென்றவாரம் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்றபோது கோடைவிடுமுறைக்கு பாட்டி வீட்டுக்குச் சென்ற அனுபூதி ஏற்பட்டது. எல்லா பணிப்பெண்மணிகளுக்கும் ஐம்பதுக்கும் மேலே.

விமானம் லண்டன் ஹீத்ரோவை நெருங்கும்போதுதான் விழித்துக்கொண்டேன். பிரம்மாண்டமான விமானம். ஒரு குட்டி திரையரங்குபோல. பெரும்பாலும் தமிழர்கள். ஆனால் தமிழோசை சுத்தமாக இல்லை. என்னருகே அமர்ந்திருந்தவர் நசரேத் காரர். அமெரிக்காவில் வாஷிங்டன் அருகே வாழ்கிறார். என்ன செய்கிறீர்கள் என்றார். எழுத்தாளர் என்றேன். தெரியாது என்றார். அவரது பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது. பரவாயில்லை, தமிழ் தெரிந்த வெளிநாட்டுத்தமிழ்க் குழந்தைகளை நான் இதுவரை பார்த்ததில்லை என்றேன். சிரித்தார்.

அவரிடம் தமிழகத்தைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு தமிழகம் பற்றிய மனச்சித்திரம் இரண்டுதான். ஒன்று தமிழகத்தில் ஓட்டல்கள் போன்ரவற்றின் கட்டணம் மும்மடங்கு அதிகரித்திருக்கிறது. இரண்டு நிலத்தின் விலை பத்துமடங்கு எகிறியிருக்கிறது. அவர் சென்ட் மூவாயிரத்துக்கு எட்டு வருஷம் முன்பு வாங்கிய நிலத்தை முப்பத்தைந்தாயிரத்துக்குக் கேட்கிறார்கள். மறந்தும் எவருக்கும் பவர் ஆ·ப் அட்டர்னி கொடுக்காதீர்கள். எவரிடமும் பத்திரத்தைக் கொடுத்து வைக்காதீர்கள் என்றேன்

என்னுடைய பயணங்களில் ஆந்திராவும் தமிழகமும் கர்நாடகமும் வேகமாக முன்னேறி வரும் சித்திரத்தைச் சொன்னேன். ஆச்சரியபப்ட்டார். ”ஆமாம், விசாகப்பட்டினம்போனேன். பிரமாதமான சாலைகள்’ என்றார். அவருக்கு இந்தியா இன்னமும் கிராமமாகவே இருக்கிரது என்ற மனச்சித்திரம்தான்.  அப்படி இல்லாதது பற்றி கொஞ்சம் மனவருத்தமும் இருக்குமோ என்று பட்டது. அவரது தனித்தன்மை இல்லாமலாகிறதே. நசரேத்தில் அவர் அமெரிக்க ரிட்டர்ன் என்பதை ஒரு பொருட்டாகவே எண்ணியிருக்க மாட்டார்கள். உள்ளூர் தொழில்முனைவர்கள் இவரை விட இருமடங்கு காசு கையில் வைத்துக்கொண்டு மஞ்ச்ள்பையுடன் டிவிஎஸ் மொபெட்டில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்திருப்பார்கள்.

லண்டனில் இறங்கினேன்.  ஒரு குட்டி நகரம்போல விரிந்த ஹீத்ரோ விமானநிலைய, டூட்டி ·ப்ரீ கடைகள். வண்ண விளக்குகள்  அறிவிப்புகள் மின்னும் ஒளி. மார்பொனைட் தரையில் கால்வழுக்கும் நடை. ஆட்களை ஒழுக்கிச்செல்லும் ஓடைபோல  எஸ்கலேட்டர்கள். ஆனால் அது ஹாங்காங் விமான நிலையமா மெல்பர்னா டொரெண்டோவா மிலான் விமானநிலையமா என்று சொல்லமுடியாது. உலகமயம் உலகம் முழுக்க ஒரே வடிவங்களை உருவாக்குகிறது. ஒரே பொருட்கள், ஒரே மனிதர்கள், ஒரே உடல் மொழி. நம்முள் உறையும் கிராமத்தான் ஆரம்ப அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் அடைந்தபின் மெல்ல ஆர்வமிழந்து விடுகிறான்.

ஐந்தாவது டெர்மினலை சுத்த தமிழிலேயே விசாரிக்க முடிந்தது.தரையை கூட்டிக்கொண்டிருந்த திருநெல்வேலி பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஷா ”சார் நம்மூரிலே மழை உண்டுமா?” என்றார். அங்கே மழை பெய்யாவிட்டால் இவருக்கு என்ன என்ரேன். ”தாம்ரர்ணியிலே நல்ல தண்ணி ”என்றபோது ”ஆ?” எந்று மகிழ்ந்தார்.  திருநெல்வேலி முகம் எங்குமே திருநெல்வேலி முகம்தான். அவர்கள் ராஜச்தான் அல்லது அரெபிய பாலைவனத்தில் இருந்தாலும் தாமிரவருணியில் தண்ணீர் ஓடுவது அவர்களுக்கு ரொம்ப முக்கியம்

பார்த்தேன், ஒரு சோதனைக்காக இனி லண்டன் ஹீத்ரோவில் எல்லா விசாரிப்பையும் தமிழில் செய்வது என முடிவுசெய்தேன். அதன் பின் தமிழ் முகங்களாகவே தட்டுபட்டன. யாழ்ப்பாணம், திருச்சி, கோவை… வழிகேட்டேன்.  காபிக்கடையில் இருந்த  கொழும்புக்காரி ”காபி வேண்டாம் சார் கசக்கும். சாக்லேட் டிரிங் ஏதாவ்து சாப்பிடுங்க” என்று சொல்லி அன்பாக எடுத்து தந்தாள். நூற்றைம்ப்து ரூபாய்க்கு ஒரு காபி குடித்துவிட்டு இந்தக்குறிப்புகளை எழுத ஆரம்பித்தேன்

இம்மாதிரி சர்வதேச நிலையங்களின் அழகுகளில் முக்கியமானது பெண்கள். விதவிதமான பெண்கள். குட்டையான குண்டான ஐரோப்பியப்பெண்கள். ஓங்கிய ஜெர்மனியப்பெண்கள். மைதீட்டிய நீலக்கண்களுடன் அராபியப்பெண்கள். நீண்ட கால்களுடன் சடைத்தலை கொண்டையாகக் கட்டிய எதியோப்பியக் கறுப்பிகள். கேரலப்பெண்களை நினைவுறுத்தும் மெக்சிக- பிரேசில் பெண்கள். விதவிதமான சிகையலங்காரங்கள், உடைகள். அதைப்போலவே வேறுபாடுகள் கொண்ட சரும நிறங்கள் கூந்தல்கள்.

ஆனால் ஒரு முக்கியமான ஏமாற்றம் உள்ளது. உலகமெங்கும் உள்ள எல்லா பெண்களும் — அல்லது இந்தமாதிரி விமானநிலையத்தில் தென்படும் பெண்கள் அனைவரும்– ஒரே வகையான உடலசைவுகளுக்கும் பாவனைகளுக்கும் மாறிவிட்டிருக்கிறார்கள். அது ஒரு அமெரிக்க செகரடரிப்பெண்ணின் பாவனை என்று சொல்லலாம். ஒரு வகை இயந்திர நளினம் அது. மாநிறமான சென்னைப்பெண்கள் அந்த பாவனையை மிதமிஞ்சி செய்து ரோபோக்கள் போலவே ஆகிவிட்டிருக்கிறார்கள். கொஞ்சமாவது தனித்தன்மை மிஞ்சியிருப்பது அராபிய பெண்களிடம்தான். குறிப்பாக அவர்களின் கண்களில் இன்னமும் அழகிய நாணம் இருக்கிறது

என்னருகே ஒரு தடித்த நடுவயதான அராபியப்பெண் நின்றிருந்தாள். விமானத்திலும் என் பக்கவாட்டு இருக்கையில் வந்தாள்.  பொன்னிறம். முகம் முழுக்க பருவந்த சிவந்த தழும்புகள். நீலக்கண்களுக்கு மைதீட்டியிருந்தாள். சிவந்த பெரிய உதடுகள். முதல்பார்வையில் அவளது இரு கண்களும் இரு அழகிய பொன்வண்டுகள் போல கவர்ந்தன. மெல்லமெல்ல அவள் என்ன செய்தாலும் பேரழகை காட்ட ஆரம்பித்தாள். கூந்தலை ஒதுக்கினாள். மீண்டும் மீண்டும் பாஸ்போர்ட்டை கூர்ந்து வாசித்தாள். கவலையுடன் வெளியே பார்த்தாள். அருகே நின்ற கணவனிடம் ஏதோ சொன்னாள். அவன் பதில் சொல்ல மெல்ல கன்னம் சிவந்து நாணினாள். என்ன அழகிய கண்கள் என்ற எண்ணமே என் மனமாக நீண்டு நீண்டு மணிக்கணக்காக விரிந்தது. விமானத்திலும் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

இம்முறை ஜன்னலோர இருக்கை.  லண்டன் லென கீழே போனது. அது லண்டனே அல்ல, ஏதோ புறநகர். கீழே தெரிந்த நிலம் திருவனந்தபுரம் போலவே இருந்தது.  நீர்நிலைகள், சுற்றிலும் பசுமை, குன்றுவளைவுகள், அவற்றைச்சுற்றி சாலை வளையங்கள். திருவனந்தபுரம் என்றே தோன்றிக்கொண்டிருந்தது. ஆனால் சீக்கிரமே மேகம் கவிந்துவிட்டது. சீனா நூலை படிக்க ஆரம்பித்தேன். உலகிலேயே அதிக சமூக ஏற்றதாழ்வுகள் கொண்ட முதலாளித்துவ அமைப்பு ஒன்றை உருவாக்கி அதை கம்யூனிசம் என்று அம்மக்களை நம்பவைக்கும் சீன அரசின் இணையில்லா வல்லமையை பல்லவி அழகாகவே சொல்லியிருந்தார்.

அமெரிக்க மண்ணில் இறங்கினேன். சன்னல் வழியாகத்தெரிந்த முதல் காட்சியே என் மனதில் அழுத்தமான ஒரு பதிவை ஏற்படுத்தியது. பசுமை. பசுமையே நிலமாக ஆனது போல. இறங்கி வெளியே வந்து வரிசைகளில் நின்று பாஸ்போர்ட் விசாவை காட்டி அமெரிக்காவுக்குள் அதிகாரபூர்வமாக புகுந்தேன். ஒரு இளம் மொட்டை அதிகாரி என்னை அணுகி எங்கிருந்து வருகிறாய் என்றார். நான் இந்தியா என்றேன். என் பாஸ்போர்ட் விசாவை வாங்கி பார்த்தார். முகத்தில் கடுமை.

அவர் ”எத்தனைநாள் இருபபய்?” என்றார் ”இரண்டுமாதம்.செப்டெம்பரில் செல்கிறேன்” ”என்ன விசேஷமாக வந்தாய்?” ”சுற்றுலா” ”எவ்ளவு பணம் வைத்திருக்கிறாய்?” ”பணம் அதிகமில்லை. இருநூறு டாலர்தான்” ”இருநூறு டாலருடன் சுற்றுலாவா?” ” எனக்கு இங்கே நிறைய நண்பர்கள். நான் ஒரு எழுத்தாளன்” ”என்ன எழுத்தாளன்?” நான் காடு கொற்றவை விஷ்ணுபுரம் மூன்றையும் தூக்கி வைத்தேன். ”ஊப்ஸ்…. நீங்கள் பெரிய  ஆள் போல” அப்படியே தோரணை மாறியது. ஒரு பிரமுகரிடம் பேசும் பணிவு பிரியம்.  ”இதெல்லாம் என்ன?” ”நாவல்கள்” ” அபுனைவு எழுதுவதில்லையா?” ‘இலக்கிய விமரிசனங்கள் எழுதுவேன்” ”மொத்தம் எத்தனை நூல்கள்?” ”ஐமது”

”கடவுளே ஐம்பது நூல்களா?” ”ஆமாம்” ”நீங்கள் பெரிய பணக்காரர் இல்லையா?” ”அதெல்லாம் அமெரிக்காவில். எங்களூரில் இலக்கிய்வாதி பெரிய பணக்காரன் இல்லை” ”அபப்டியா? அழகான நூல்கள். அந்த புத்தகத்தின் அட்டையில் உள்ள தீயின் படம் அற்புதமாக இருக்கிரது” அது கொற்றவை. ”அமெரிக்கவுக்குந் அல்வரவு சார்…இங்கே கூட்டங்கள் உண்டா?” ”ஆமாம்” ”நானும் வாசிப்பேன். அதிகம் இல்லை. உங்களை சந்தித்த்தில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.  இது ஒரு கௌரவம்…” ”பரவாயில்லை…பெட்டியை திறக்கவா?” ”சேச்சே வேண்டாம். நீங்கள் போகலாம். நான் உங்களுக்கு எவ்வகையிலாவது உதவ வேண்டுமா?” ”வேண்டாம் என் நண்பர்கள் வந்திருப்பார்கள்” ”ஆமாம், வாசகர்கள் இருபபர்களே. நீங்கள் ஏதாவது சிக்கல் என்றால் உள்ளே வாருங்கள் நான் இங்கே இருப்பேன்”

நான் புன்னகை செய்தேன். இதே அனுபவம்தான் எனக்கு கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும். புத்தகங்களைக் கண்டதுமே மரியாதையும் பிரியமும் ஏற்படுகின்றன. அச்சமூகங்களில் அடிநாதமாக ஓடும் அறிவுவழிபாட்டின் விளைவு அது. கொஞ்சம் கூட மிகையாகச் சொல்லவில்லை– இன்றுவரை எனக்கு எந்த ஒரு இந்திய அலுவலகத்திலும் அதிகாரியிடமும் எழுத்தாளன் என்பது குறைந்தபட்ச மரியாதையைக்கூட பெற்றுத்தந்ததில்லை. பல சந்தர்ப்பங்களில் என்னை ஒரு உதவாக்கரையாக, தீவிரவாத நோக்கம் கொண்டவராக காட்டவே அது உதவியிருக்கிறது. ”இந்தப்புத்தகங்களை எப்படி விற்பாய்?” என்று பெரும்பாலான அதிகாரிகள் கேட்பார்கள். ”ஐநூறு ரூபாயா?” என்பார்கள். குமுதமே பத்து ரூபாய்தானே? நம் கல்விமுறை கடைசிபப்ரீட்சை எழுதியதுமே புத்தகங்களை தூக்கிக் கடாசவே கற்பிக்கிரது. அதன்பின் மிஞ்சிய  வாழ்நாள்முழுக்க புத்தகவிரோதம்தன். அதிலும் இந்திய ஆட்சிபப்ணி, காவல்பணி உயரதிகாரிகளைப்போல நூல்களையும் எழுத்தாளர்களையும் வெறுப்பவர்களை பார்க்கவே முடியாது. அவர்கள் அந்த தேர்வுக்காக ஐந்துவருடம் படித்திருப்பர்கள். தேருவு ஜெயித்தபின் படிப்பே தேவையில்லாதவர்கள் ஆகிவிட்ட உணர்வை அடைந்துவிடுவார்கள்

பாஸ்டன் பாலாவிஉம் அவர் நண்பர் பாலாஜி [வெட்டிப்பயல் என்ற பேரில் இணையத்தில் எழுதுபவர்] விமானநிலையம் வந்திருந்தார்கள். என்னை உடனே அடையாளம் கண்டுகொண்டார்கள். அமெரிக்காவில் கால் வைத்தேன்

முந்தைய கட்டுரைவேலையும் இலக்கியமும்
அடுத்த கட்டுரைதியடோர் பாஸ்கரன்:கடிதங்கள்