முட்டன்கிடா. மட்கிய கம்பிளியின் கொச்சைவாடையுடன் தாடிதழைய குறுங்கொம்புடன் நின்று பர்ர் என்று செருக்கடித்தது. முன்காலால் தரையை இருமுறை உதைப்பதுபோல பிறாண்டித் தலையைக் குனித்து வாசனை பிடித்தபோது அதன் மூக்கு நெளிந்தது. அதன் ஒவ்வொரு அசைவிலும் கம்பீரம்.
சிதம்பரம் அதனருகே நெடுநேரம் நின்றுவிட்டான். பின்பு கொஞ்சம் துணிவுடன் அதை நோக்கிக் கையை நீட்டினான். கனத்த உறுமலுடன் கிடா இரு கால்களையும் தூக்கி ஆக்ரோஷமாக முட்டவந்தது. அவன் சட்டென்று பின்னால் நகர்ந்துகொண்டான். இல்லாவிட்டால் அபப்டியே தூணோடு அவனைச்சேர்த்து நசுக்கியிருக்கும்.
யாரும் பார்க்கவில்லை என்று ஆறுதலுடன் வேகமாகப் பின்னகர்ந்ததனால் மண்சுவரில் உரசிய முழங்கையைத் துடைத்துக்கொண்டான். மெல்லிய சிரிப்பொலி. உண்மையிலேயே கேட்டதா, இல்லை அவனுடைய பிரமைதானா? சுற்றுமுற்றும் பார்த்தான். யாருமில்லை. நிம்மதியாக இருந்தது. எச்சில் தொட்டு சிராய்ப்பில் பூசிக்கொண்டு கீழே கிடந்த ஒரு மண்கட்டியை எடுத்துக் கிடாவை நோக்கி எறிந்தான். அது மிகச்சரியாகத் தலையைத் திருப்பி அந்த மண்கட்டியை முன்னந்தலையால் முட்டி உடைத்தது.
‘டேய் செலம்பரம். இங்க என்ன செய்றே? காட்டூர்சித்தப்பா கேட்டுகிட்டே இருக்காரு’ என்றபடி அண்ணன் வந்தான். கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தபடி ‘ஒண்ணொண்ணா முடிச்சு மொத்தக் கூட்டத்தையும் வண்டியில ஏத்துறதுக்குள்ள வெயிலேறிடும்லே’ என்றான்.
கிடாவைப்பார்த்து ’ இவருதானா ஆளு? சும்மா மஸ்து ஏறில்ல கெடக்குது’ என்று கிடா அருகே சென்று அதன் நெற்றியில் கையை வைத்தான். அது தலைகுனிந்து மெல்லப் பின்னகர்ந்தது. அவன் இயல்பாக அதன் தாடியையும் தலையின் பின்பகுதியையும் தடவிக்கொடுத்தான்.
‘முன்னாடி பழக்கமா ?’ என்றான் சிதம்பரம்
‘எத?’
‘கெடாய…’
‘இல்லியே…..இப்பதான் பாக்கேன்… இதுதானே பொலி?’
‘ஆமா…என்னைய முட்டவந்தது’
‘முட்டும்..கெடா வசக்கேடா முட்டினா வெலா எலும்பு சும்மா முறுக்குமாதிரி நொறுங்கிரும்… மேலகரம் மாமாவோட மூத்தபையன கெடாமுட்டித்தானே பெரியாஸ்பத்திரியிலே பத்துநாள் கிடந்து செத்தான்…கெடாவோட தலை இரும்புமாதிரி… ராமக்கோனாரோட கெடா தவிட்ட திங்க ஆசைப்பட்டு மாம்பலக கதவை உடைச்சு உள்ள போய்ட்டுது தெரியுமா?’
‘ஏன் உன்னை முட்டல?’
‘அதுக்கு தெரியும்லே… ‘ அண்ணன் அதன் மண்டையை குத்தினான்.
சிதம்பரம் கிடாவையே பார்த்துக்கொண்டிருந்தான். அதற்கு என்னதான் தெரிகிறது? அண்ணனையும் அவனையும் எதைக்கொண்டு அது பிரித்து அறிகிறது? அதன் கண்கள் இரு சிப்பிகள் போலிருந்தன. அந்தக் கண்களுக்குப்பின்னால் ஒரு அறிவு இருப்பதாகவே தெரியவில்லை.
‘வா’ என்று அண்ணன் கிளம்பினான். ‘சித்தப்பா உனக்கு ஒரு பட்டுவேட்டி எடுத்திருக்காரு…அதைக் கட்டிட்டு வரணுமாம்…’
‘பட்டுவேட்டி இடுப்பிலே நிக்காதே’
‘பெல்ட்ட போடுடா…என்னமோ பேசுறான்…வா’
‘லே பளனி’ என்று அப்பா அண்ணனைக் கூப்பிட்டார். அவரால் அண்ணன் இல்லாமல் எதையுமே செய்யமுடியாது. ‘வாறேன்’ என்றான் அண்ணன்.
சிதம்பரம் அண்ணன் பின்னால் சென்றான். அண்ணன் அவனைவிட இரண்டு வயதுதான் மூத்தவன். ஆனால் அவனுடைய நடையும்பேச்சும் எல்லாமே பெரியவர்களைப்போல இருக்கும். அப்பா உட்பட எல்லாருமே அவனைப் பெரியமனிதனாகத்தான் நடத்துவார்கள். சிதம்பரத்தைக் கொஞ்சமாவது இளைஞனாக நினைப்பது பீடாக்கடை செல்லையாநாடார்தான். அவன் இன்னும் பீடிபிடிக்க ஆரம்பிக்கவில்லை என்பதில் பெரிய மனக்குறை. ‘என்னவே சண்டியரே… வெளைஞ்சிட்டீரு…ஆனா அதுக்குண்டான வளிமொறைகளைக் காணுமே…இந்தாரும் ஒரு சொக்கலால் இளும்…பொகை உள்ள போனாத்தான்வே உள்ள இருக்கப்பட்ட சின்னப்புள்ளத்தனம்லாம் வெளிய போகும்…’ கண்ணடித்து ‘நாலுநாள் பொகைவிடும். அஞ்சாம்நாளு கலக்கல் கேப்பீரு’
முற்றம் முழுக்க பெஞ்சுகள் போல செங்கல் அடுக்கி அதன்மேல் பலகைகளைப் போட்டிருந்தார்கள். அதில் தலைக்கட்டுகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தன. அத்தை எல்லாருக்கும் கருப்பட்டிக் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். பித்தளை லோட்டாக்களில் ஊற்றப்பட்ட கருப்பட்டிக் காப்பியில் சுக்கு மணத்தது. ஆனால் பெரும்பாலும் பெரிசுகள் அதை விரும்பவில்லை. மேகாட்டுமாமா சிரித்தபடி சொல்லியே விட்டார். ‘ஏனம்மிணி, நாங்க உள்ள வச்சிருக்கப்பட்டது தீயாக்கும். தண்ணி ஊத்தி அதை அணைக்கணும்னு சொல்லுறே?’ எல்லாரும் சிரித்தார்கள்.
‘தீயில கும்பி எரியப்படாதுன்னுதான் அண்ணா… ‘ என்றாள் அத்தை ‘இன்னும் கொஞ்சநாள் இருக்கணும்ல அது?’
மேகாட்டுமாமா திரும்பி சிதம்பரத்தைப் பார்த்தார். ’யய்யா….நம்ம சின்னராசால்ல வாறது…வாங்க வாங்க…என்ன புதுச்சட்டையா?’
சிதம்பரம் எரிச்சலுடன் பல்லைக்கடித்துக்கொண்டு பக்கத்தில் சென்று நின்றான். மேகாட்டு மாமாவின் சிரிப்பு கைநீட்டுதல் எல்லாமே பள்ளிக்கூடப் பையனிடம் பேசுவது போலிருந்தன.
மேகாட்டு மாமா அவன் தோளைப் பிடித்தபடி ‘நல்லா கறிசோறு திங்கணும் மாப்ள…உடம்ப இப்டியா வச்சிருக்கிறது? அந்தக்காலத்திலே உங்கப்பன் தோளிலே நான் தேங்காய அடிச்சு உடைப்பேன் பாத்துக்கிடுங்க…’ என்றார்.
‘ஆம…உங்க மருமான் தோளிலே ஒரு மெதுவடைய வச்சு ஒடைச்சுப்பாருங்க’ என்று அத்தை சொன்னாள்
‘இந்தா மீனாட்சி, ஒண்ணு பண்ணு, அண்ணன் தம்பி ரெண்டுபேரிலே யாரு எளவட்டக்கல்ல அதிகமாத் தூக்குறானோ அவனுக்குத்தான் சானகின்னு ஒரு போடுபோடு…சின்ன மாப்புள்ள நாலே மாசத்திலே உருட்டுக்கட்டையா ஆயிட மாட்டாரு?’
‘என்னது கடைசியிலே ராமலச்சுமணனுங்கள சண்டையக்காட்டி பிரிச்சுவிட்டிருவீரு போலிருக்கே…’ என்றார் சுப்பு மாமா. ‘அந்த வெத்தலைய இந்தால எடுக்கிறது. வாயி நமநமங்குதுல்ல?’
‘வாயி நமநமப்புக்கு இதெல்லாம் ஆகாது மேலக்காட்டான்…’
சுப்பு மாமா கண்ணைக் காட்டினார். மேகாட்டு மாமா சிரித்தார்.
அத்தை திரும்பிப்பார்த்து ‘நாத்தத்தண்ணியக் குடிக்கிறதுக்கு ரகசியம் வேற .கண்ணக்காட்டுறாராம். பொட்டச்சிகள்ட்ட அந்தப் பயமிருந்தா காடுகரை ஏன் அடமானத்துக்குப் போவுது?’ என்றாள்
‘இந்தா மீனாச்சி வாயில நாக்கிருக்குன்னு பேசிப்பிடாதே… காடு எப்டி அடமானம்போச்சு? நான் குடிக்கேன்னா அது நான் வேலசெஞ்ச காசு. காட்ட அடமானம் வச்சு மூத்தவளுக்கு நக போடச்சொன்னது உந்தங்கச்சி…கேட்டுப்பாரு’
’வடக்கூரானுக்கு அடமானமாக் குடுத்தா வெலையா குடுக்கிறதுண்ணுதான் அர்த்தம்…போயி தலமுழுகிட்டு சோலியப்பாருங்க’
‘அப்டி விட்டிருவோமா? வாற ஆவணியிலே லோனு வந்ததும் மூட்டுக்கவேண்டியதுதான்’
‘போயிப்பாரு…நோட்டு ஒண்ணு சொல்லும். அவன் ஒண்ணு சொல்லுவான். அப்பன்காரன் அம்பது சேத்துச் சொல்லுவான்…மறுபேச்சுப் பேசினா அருவாளத்தூக்குவான்…’
‘அருவா நம்ம கையிலேயும் இருக்கண்ணோவ்’
‘இருக்குலே…இது பாவப்பட்டவன் அருவா…கூர் பத்தாது. அவனோட அருவாள போலீஸு கோர்ட்டும் சேந்து கூர் தீட்டிவச்சிருக்கு பாத்துக்க’
அண்ணன் வந்து ‘வண்டி வந்தாச்சு மாமா….கெளம்பீரலாம்’
‘எல்லாத்துக்கும் ஒத்தவண்டியா மாப்ள?’
‘ஆம்புளையாளுங்களுக்கு ஒத்தவண்டி. பொண்டுகளுக்கு இன்னொருவண்டி வருது…’
‘நாம மொதல்ல போவம் மாப்ள’ என்றார் கணக்குச் சித்தப்பா
‘ஆமா…போயி அந்தால தொம்பன் காச்சுற சாராயத்த ஏந்துங்க’ என்றாள் தாயம்மா சித்தி
‘செரி போகல்ல…இருந்திருவோம்…’
‘ஏன் இங்க எங்கியாம் பொதைச்சு வச்சிருக்கீயளோ?’
‘இவ என்னலே, முன்னாலபோனா கடிக்கா. பின்னால போனா ஒதைக்கா’
‘ஆமா நாங்க களுதைங்கதான்…களுதைக்க மஞ்சக்காணிக்கு ஆசைப்பட்டுதானே வந்தீக’
‘ஆத்தா அண்ணனை விட்டிரு….இப்ப நீ பேசின பேச்சுக்கு அவரு இன்னும் ஒரு குப்பி அடிச்சு ஏத்தணும்…அதுக்குண்டான காசு அவரு கையிலே இருக்கும்ணு தோணல்ல’
அண்ணன் சிதம்பரத்திடம் ‘லே…உன் பட்டுவேட்டியும் சட்டையும் அரங்குல வச்சிருக்கு…கட்டிட்டு வந்திரு’
‘வேணாம் அண்ணா’
‘போய் கட்டிட்டு வாலே…சித்தப்பு ஆசையா எடுத்துக் கொண்டுவந்து குடுத்திருக்காரு…போ’
சிதம்பரம் வீட்டுக்குள் சென்றான். மாமா வீடு அவனுக்கு எப்போதுமே பிடிக்கும். அவன் வீட்டுக்குள் இல்லாத ஒரு இதமான இருட்டு அங்கே உண்டு. வாசலின் வெளிச்சம் சதுரவடிவ குளம்போல உள்ளே விழுந்து மெலிதாக அலையடித்தது. கொடியில் ஒரு மஞ்சள்நிறமான சேலை கிடந்து காற்றில் நெளிந்தது. அந்த ஒளியில் அறைச்சுவர்கள் அந்தியில் தெரிவதுபோல தெரிந்தன.
கொல்லைப்பக்கம் ஒரே சந்தடி. சித்திகளும் அத்தைகளும் அவர்களின் பெண்களும் அலங்காரம் செய்துகொண்டிருந்தார்கள். மரிக்கொழுந்தும் மல்லிகையும் குங்குமமும் கலவையாக மணத்தன. பளிச்சிடும் நிறங்களில் சேலையும் பாவாடைகளும் தாவணிகளும் அணிந்த பெண்கள் கொல்லைப்பக்கம் வழியாக கடந்துசென்றபோது வெயில்பட்டு பிரதிபலித்து வீட்டுக்குள் சிவப்பிலும் மஞ்சளிலும் நீலத்திலும் ஒளி மாறிக்கொண்டிருந்தது
அரங்கு அறையின் கதவு சாத்தப்பட்டிருந்தது. சிதம்பரம் சாவிக்காகத் தேடினான். அது தொங்கும் ஆணியில் இல்லை. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மெல்லிய சிரிப்பொலி. கேட்டதா இல்லை, அதுவும் பிரமையா?
‘சாவியா தேடுறீங்க?’ என்று மெல்லிய குரல்
அவன் உடனடியாகத் திரும்பவில்லை. கழுத்து இறுக்கமாக விரைத்துக்கொண்டதுபோலிருந்தது. ‘ம்’
‘கேக்கலாமில்ல?’
‘கொண்டா’
‘இந்தாங்க’
அவன் திரும்பினான். ஜானகி சிவப்புத்தாவணியும் மஞ்சள்நிறப்பாவாடையும் அணிந்திருந்தாள். ரெட்டைச்சடையில் ஒன்றை முன்னால் தூக்கிப்போட்டிருந்தாள். வகிடு அரை இருட்டில் துல்லியமாகத் தெரிந்தது.
அவன் கைநீட்டி சாவியை வாங்கிக்கொண்டான். அவள் உள்ளங்கையும் வெண்மையாகத் தெரிந்தது. வாழைப்பூ நிறம் அதற்கு.
‘என்ன அங்க, கெடாகிட்ட ஒரு வீரம்?’
‘என்னது?’ என்றான்
அவள் சிரித்து ‘நான் பாத்தேன்..’ என்றாள். பற்கள் வெண்முல்லைச்சரம் போல பளிச்சென்று இருளுக்குள் மலர்ந்தன.
அவன் கோபத்துடன் ’ஒண்ணுமில்ல’ என்றான்
‘பயப்படாதீங்க கெடாதான் முட்டவரும். கெடாக்கறி ஒண்ணும் செய்யாது’
‘இருட்டுக்குள்ள இருட்டு மாதிரி நின்னு வேடிக்கை பாக்கிறியா?’
‘ஆமா இவுரு பெரிய சுண்ணாம்புக்கல்லு நெறம்…’
‘அப்ப செவப்பான ஆளாப் பாத்துக்கிடுறது….கெடாயக்கண்டா பயப்படாம நெத்தியத்தொட்டு வெளையாடுறவங்க இருக்காங்களே… ’
‘பாத்துக்கிட்டாப்போச்சு…. ’
‘அப்ப அவன்கிட்டப் போயி பேசு போ’
‘ஏன், கொளுந்தன்கிட்டயும் பேசப்படாதோ?’
சிதம்பரம் கடும் கோபத்துடன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பிறகு அடக்கிக்கொண்டு அரங்கைத் திறந்து பட்டுவேட்டியைக் கட்டிக்கொண்டான். காகிதத்தைக் கட்டிக்கொண்டதுபோல இருந்தது. சட்டைவழியாக மார்புமுடிகள் தெரிந்தன.
சிதம்பரம் வெளியே வந்தபோது எல்லாரும் லாரியில் ஏறிக்கொண்டிருந்தார்கள். லாரிக்குமேல் இருபக்கமும் மூங்கில்நட்டு மேலே தார்ப்பாய் விரித்து நிழல் செய்யப்பட்டிருந்தது. உள்ளே அமர்வதற்காகவும் மூங்கில் வைத்து கட்டியிருந்தார்கள். சேவல்மலைத் தாத்தாவும் கணேசமூர்த்தி தாத்தாவும் பூசாரி மாணிக்கம் தாத்தாவும் லாரியின் இரும்புத் தரையில் உட்கார்ந்திருந்தார்கள்.
‘வாங்க மாப்ள… ஏறிக்கிடுங்க’
‘ஆகா…மாப்ள என்ன களையா இருக்காரு…நம்ம பொண்ணைக் கட்டிக்குடுக்கலேண்ணா அப்டியே அள்ளிட்டுப் போயிடலாம்னு தோணுதே’
‘மாப்ள பெரியவர்ல? அவரு எங்க?’
‘அவருதானே இங்க எல்லாம்…வந்திருவாரு…’
‘பளனி எங்க மாப்ள?’
‘அண்ணன் பைக்ல வருவாரு’
‘அது சரி’
‘முருகேசன் முடிவுசெஞ்சுட்டானாமா?. கெடாவெட்டுறான்?’
‘கெடாவெட்டு எப்ப வேணுமானாலும் செய்யலாம்டா’
‘இல்ல…சாமி முன்னால ஒரு வார்த்த சொல்லிக்கிட்டா நல்லதுதானே? பளனிக்கும் இப்பம் தையிலே இருபத்தஞ்சாயிரும்…சானகிக்குப் பதினெட்டு. நல்ல கணக்குதானே?’
‘என்னமாம் கணக்கு இருக்கும்போல…’
‘இருக்குங்கிறேன்.. இல்லேன்னா ரெண்டாயிரத்தப்போட்டு கெடா வாங்கி வெட்டுவானாங்கிறேன்’
அண்ணன் கிடாவை இழுத்துக்கொண்டு வந்தான். லாரியில் ஆடுகளை ஏற்றுவதற்குரிய தடப்பலகையைப் பின்பக்கம் சாய்த்துவைத்தான்.
‘ஏன் மாப்ள, இதிலயா ஈரோவும் ஏறுறாரு?’
‘அது பேசாம நின்னுக்கிடும் மாமா…’
குழையைக் காட்டியதும் கிடா அதுவே கம்பீரமாக ஏறிக்கொண்டது.
‘கெடாவுக்குள்ள கெம்பீரியமே வேற சித்தப்பு..’
‘ஏலே, எது நல்லதோ அது சாமிக்கு….அதாக்கும் கணக்கு’ என்றார் பூசாரித்தாத்தா. ’பொலிண்ணா என்னான்னு நினைக்கே? பொலியறது. தங்கமா பொலியறது. அதெல்லாம் சாமிக்கு…’
‘சும்மாவா அய்யனாரு கெடா கேக்காரு…கெடாக்கறி தின்னாக்க கொல்லவும் சாகவும் தெம்பு வந்திரும் மச்சான்’
கிடாவை ஓரமாகக் கட்டினார்கள். தொங்கவிடப்பட்ட குழையை மென்றபடி அது பர்ர் என்றது.
‘ஏன் மாப்ள வாடிப்போயிருக்காரு?’
‘மாமன் பொண்ண அண்ணன் கொண்டு போய்ட்டாருல்ல?’
‘நீ ஒண்ணியும் கவலப்படாத மாப்ள…நான் பெத்துத்தாறேன் நல்ல காராமணிமாதிரி பொண்ணு உனக்கு…உங்கத்தைகிட்ட நீயும் ஒரு வார்த்தை சொல்லிரு’ . வண்டியே சிரித்தது.
வண்டி குலுங்கிக் குலுங்கிச் சென்றது. சிதம்பரத்தின் தலை இருமுறை வண்டியில் முட்டிக்கொண்டது. அவனுக்கு அப்படியே குதித்து ஓடினால் என்ன என்று தோன்றியது.
‘டேய் வண்டிய நிப்பாட்ரா…டேய்’ என்று செந்தட்டி அண்ணா கத்தினார். வண்டி நின்றதும் அப்படியே குதித்து கோனாரின் கடையின் பின்பக்கம் சென்று அங்கிருந்து ஒரு பெரிய கேனை எடுத்து வந்தார்.
‘டேய், ஊரையே கொளுத்திரலாம் போலிருக்கே’
‘இது என்ன மாப்ள…என்னைய விடுங்க…ஒரே இருப்பில குடிச்சுக் காட்டறேன்’
குழல்போலக் கொண்டுவந்த பிளாஸ்டிக் கோப்பைகளில் இருந்து உருவி ஒவ்வொருவருக்காகக் கொடுத்தான் செந்தட்டி அண்ணா. கேனிலிருந்து ஊற்றும்போது தெறித்தது. லாரிக்குள் சாராயவாடை. கோப்பைகளில் ஊற்றிக் குடித்துக்கொண்டே வந்தார்கள்.
செவலைக்காட்டுப் பொட்டலுக்குப் போய்ச்சேரும்போது எல்லாருமே நல்ல மப்பில் கண்கள் சிவந்து காற்றிலாடும் கருவேலமரம்போல இருந்தார்கள். காட்டூர் சித்தப்பா ஏப்பம் விட்டபடி ‘மாப்ள, நீ நம்ம பட்டுச்சட்டையிலே ரசினி மாதிரி இருக்கே பாத்துக்க.. டேய் நீ ரசினிடா…நல்ல ஒரிசினல் ரசினி’ என்று சிதம்பரத்தின் தோளைப் பற்றினார். லாரியிலிருந்து அவர் கையில் ஒட்டிய அழுக்கெல்லாம் வெள்ளைச்சட்டையில் படிந்தது
அப்பா அண்ணாவின் பைக்கில் பின்னால் ஏறி வந்து சேர்ந்திருந்தார். அவர் வாயில் பீடாவை அதக்கியிருந்ததைப் பார்த்தபோது அவரும் நன்றாகவே குடித்திருந்தார் என்று தோன்றியது. இருமுறை மெலிதாக ஏப்பம் விட்டார்.
இன்னொரு பைக்கில் மாமாவும் வந்து சேர்ந்தார். அவருக்குப்பின்னால் ஒரு பெரிய நார்ப்பெட்டியை மடியில் வைத்துக்கொண்டு அத்தை அமர்ந்திருந்தாள்.
மாமா ‘உங்க தங்கச்சி கடசீ நேரத்திலே பூவ எடுத்து வைக்காம விட்டுட்டா மச்சான்…பைக்ல போயி எடுத்திட்டு வாறோம்’ என்றார்.
லாரியிலிருந்து ஒவ்வொருவராக குதித்தார்கள். அண்ணா வந்து தடப்பலகையை சாய்த்து கிடாவைக் கீழே இறக்கினான். கிடா துரை போல டக் டக் என்று பிடரி அசைய இறங்கி வந்தது. தடப்பலகை வழியாக வயசாளிகள் மெல்ல இறங்கினார்கள். பூசாரித்தாத்தா அதன் தாடையைப்பிடித்து வாயைப்பிளந்து பார்த்தார். ‘‘பல்லெல்லாம் இருக்கு மாப்ள…நல்ல ஐட்டம்’ என்றார்.
பெண்கள் வந்த லாரி தூசுப்படலத்தைப் பின்னால் எழுப்பியபடி பொட்டலில் வந்தது. கலங்கிய ஆறுபோலக் கிடந்த லாரித்தடத்தில் அது பெரிய படகுபோல ஆடி ஆடி வந்து ஆழமான மூச்சுடன் நின்றது. சுப்பு மாமா சென்று லாரியின் உள்ளே இருந்து ஏணியை எடுத்துப் பின்னால் சாய்த்து வைத்தார். பெண்கள் ஒவ்வொருவராக இறங்கினார்கள். எல்லாரும் மஞ்சள்பூசிய முகத்தின் மீது பூசப்பட்ட பௌடர் வியர்வையில் வழிய, தலைமுடி காற்றில் கலைந்து பறக்கத் தெரிந்தாலும் உற்சாகமாக சிரித்து கூச்சலிட்டுப்பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஜானகி கடைசியாகத்தான் இறங்கினாள். அவளைத் தான் பார்ப்பதை எவரேனும் கவனிக்கிறார்களா என்று சிதம்பரம் நான்குபக்கமும் பார்த்தான். யாருமில்லை. அண்ணன் அவனிடம் வந்து ‘டேய், எல்லாருக்கும் பாய எடுத்து விரிக்கச் சொல்லு…நான் இந்தா வந்திடறேன்’ என்று சொல்லிவிட்டு பைக்கில் ஏறி உதைத்தான்
பெண்களின் லாரியிலேயே பனம்பாய்கள் வந்திருந்தன. கம்புசோளம் காயப்போடும் பாய்கள். உறுதியாக இருப்பதற்காக சாணி மெழுகப்பட்டவை. செந்தட்டி அண்ணன் பெரிய தூண்போல சுருட்டப்பட்டிருந்த பாயை எடுத்தபோது சிதம்பரம் பிடிக்கப்போனான். ‘நீ என்னத்துக்கு மாப்ள தொடுற? சட்ட அழுக்காயிரப்போவுது…’ என்றான் செந்தட்டி அண்ணன்
பனம்பாய்களில் பெண்கள் புடவையின் ஓர் அடுக்கை விலக்கி அடிப்பகுதி படும்படியாக அமர்ந்துகொண்டார்கள். செண்பகம் அக்கா லாரியிலிருந்து வெற்றிலைப்பெட்டியைக் கொண்டுவந்து வைத்தாள். எல்லாரும் வெற்றிலை போட்டுக்கொள்ள ஆரம்பித்தனர். பெரிய கேன்களில் தண்ணீர் கொண்டுவந்திருந்தார்கள். செந்தட்டி அண்ணனும் ராசப்பனுமாக அவற்றை எடுத்துக்கொண்டுவந்து வைத்தார்கள்.
பூசாரித்தாத்தா தன் உடுக்கையை அய்யனார் அருகே வைத்துவிட்டு கிடாவை அவிழ்த்துப் பிடரியை நீவிக் கூட்டிக்கொண்டு சென்றார். அதன் தலையில் நீர் தெளித்தபின் செவ்வந்தி அரளி சேர்த்துக் கட்டிய மாலையை அதன் கழுத்தில் மாட்டினார். கிடா நாக்கால் துழாவிப்பார்த்து எட்டாமல் தலையைத் தழைத்தது. அதை அய்யனார் அருகே இருந்த தறியில் கட்டினார்.
அய்யனார் என்று பேச்சே ஒழிய அது ஒரு செங்குத்தான கல்தூண்தான். அதைச்சுற்றிக் கல்லடுக்கிக் கட்டப்பட்ட சிறிய பீடம். ஒரு கல்விளக்கு. எல்லாமே மழையில் கருத்துப்போயிருந்தன. மாடன் மீது ஓர் ஓணான் அமர்ந்து வயிற்றை எக்கி எக்கி செதிலை விரித்தது. தாத்தா கொஞ்சம் தண்ணீரை அள்ளி வீசியதும் அது சிலிர்த்தபடி ஓடிப் பின்பக்கம் பாய்ந்தது.
மீனாட்சி அத்தை பூக்கூடையைக் கொண்டுவந்து வைத்தாள். பூசாரித் தாத்தா அய்யனார் மீது நல்லெண்ணை தடவி செவ்வரளியும் செவ்வந்தியும் சேர்த்துக் கட்டிய மாலையைத் தொங்கவிட்டார். வெள்ளைச்சுண்ணாம்பால் இரு பெரிய கண்களை வரைந்தார்.
‘வெளக்கு வைக்கிறது’ என்றார் தாத்தா. பெண்டுகள் எல்லாம் வந்து கூடி நின்றார்கள். கல்விளக்கில் நல்லெண்ணை விட்டு தீபம் கொளுத்தியபோது பெண்டுகள் கையால் வாய்பொத்திக் குலவையிட்டார்கள். காற்றில் தீபச்சுடர் பறந்து பறந்து எரிந்தது.
மேக்கூர் பெரியப்பா வடலிப்பனையில் மட்டை வெட்டி அந்த மிளாச்சில் வெள்ளைத்துணி சுற்றி எண்ணை விட்டு பந்தங்கள் செய்து கொண்டுவந்தார். அதைக் கொளுத்தி அய்யனாருக்கு இருபக்கமும் நாட்டினார் பூசாரித்தாத்தா. தீ சிதறி சிதறிக் காற்றில் தெறித்தது. ‘ஏலே மருமகனே எண்ணைய விட்டுட்டே இரு…அணைஞ்சிரப்பிடாது ‘ என்றார் பூசாரித்தாத்தா.
புகையிலைக்கற்றைகள் போலப் பெரிய சடைகளைப் பொட்டலம் போல சுற்றித் தலையில் வைத்திருந்தார். அதை அவிழ்த்துத் தோளில் புரளவிட்டுக்கொண்டார். அய்யனார் அருகே இருந்து உடுக்கையை எடுத்து திடுதிடுதிம் திடுதிடுதிம் என விரல்களால் மீட்டி கனத்த உடைந்த குரலில் பாட ஆரம்பித்தார்
‘மூணு பொளுதிருக்கு எஞ்சாமி மூணு பொளுதிருக்கு
ஆறு காலமில்லா எஞ்சாமி ஆறு காலமுல்லா
ஏளு நாளிருக்கே எஞ்சாமி ஏளு நாளிருக்கே
நாலு பூவிருக்கே எஞ்சாமி நாலு பூவிருக்கே
ஆண்டு முளுசெல்லாம் எஞ்சாமி ஆண்டு முளுசெல்லாம்
அருகிருந்து காக்கணுமே எஞ்சாமி அருகிருந்து காக்கணுமே
உடுக்கையின் துடிப்பு அவரது குரலில் கச்சிதமாகக் கலந்துகொண்டது. வந்திறங்கியதுமே அங்கங்காக சிதறிச்சென்ற ஆண்கள் எல்லாரும் வந்து கூடினார்கள். சாராயவாடை தூக்கியடித்தது. பைக்கின் ஒலி கேட்டது. அண்ணன் வந்திறங்கி அதை நிறுத்திவிட்டு வந்து பின்பக்கம் நின்றான்
சிதம்பரம் பெண்கள் கூட்டத்தில் தேடி ஜானகியை பார்த்தான். அவளுடைய கண்கள் வந்து அவனைத் தொட்டுச்சென்றன. அவளுடைய கொழுத்த கன்னம் கொஞ்சம் மடிந்தது. சிரிப்பு போல, அல்லது பழிப்பு போல. அவன் பார்வையை விலக்கிக் கொண்டான்.
பாட்டு முடிந்ததும் ‘பொலிய கொண்டாங்க… பொலிகுடுக்கிற குடும்பம் வந்து படைங்க’ என்றார் பூசாரித்தாத்தா
முருகேச மாமனும் மீனாட்சியத்தையும் வந்து முன்னால் நின்றார்கள். மாமன் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். மீனாட்சியத்தை முந்தானையை செருகிக்கொண்டார். செந்தட்டி அண்ணன் கிடாவை அவிழ்த்து முன்னால் நீக்கினான். முருகேசன் மாமனும் மீனாட்சியத்தையும் கிடாவின் கயிற்றை எடுத்துப் பூசாரியிடம் கொடுத்தார்கள்.
பூசாரித் தாத்தா அய்யனாரின் மாலையில் இருந்தே கொஞ்சம் பூ பிய்த்து முருகேசன் மாமனுக்கும் அத்தைக்கும் கொடுத்தார். அத்தை அதைக் கண்ணில் ஒற்றித் தலையில் வைத்துக்கொண்டார். மாமன் கையிலேயே வைத்துக்கொண்டார்.
கிடாவின் கயிற்றை அப்பா கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். பூசாரித்தாத்தா சூரிக்கத்தியை விரித்துக்கொண்டு கிடாவின் கழுத்தைப்பிடித்து பக்கவாட்டில் வளைத்துச் சாய்த்து சட்டென்று கழுத்தின் ரத்தக்குழாயை வெட்டினார். ரத்தம் பீய்ச்சியடித்தது. அதை வாகாகத் திருப்பி அய்யனாரின் காலடியில் விழும்படி செய்தார். குலவை ஓசை செவியை அடைத்தது. அய்யனாரின் வெள்ளைக்கண்கள் விழித்துப்பார்த்தன. சிதம்பரத்துக்கு வயிற்றுக்குள் உடுக்கின் அதிர்வு எஞ்சியிருப்பது போல இருந்தது. தாகம்போலவோ மூச்சுத்திணறல்போலவோ.
சட்டென்று காலடியில் தரையை யாரோ பாயாக இழுத்தது போல உணர்ந்தான். என்ன நடந்தது என உணர்வதற்குள் கீழே விழுந்துவிட்டான். கூச்சல்களையும் பிடிக்க நீண்ட கைகளையும்தான் கடைசியாகக் கண்டான்.
பின்பு தரையில் அமர்ந்திருப்பதைக் கண்டான். முகத்தில் யாரோ தண்ணீரை வீசியிருந்தார்கள். செந்தட்டி அண்ணன் ஒரு பிளாஸ்டிக் குவளையில் தண்ணீரைக் கொடுத்து ‘குடிலே..’என்றான். அவன் தலைகுனிந்து தண்ணீரைக் குடித்தான். இரண்டுமிடறு தண்ணீர் எல்லாவற்றையும் சரிசெய்ததுபோல இருந்தது. படபடப்பு குறைந்தது. தொண்டை ஈரமாயிற்று. மறுகணமே வெட்கம் வந்து உடம்பு சுருங்கியது.
‘ஒண்ணுமில்ல…காலம்பற சாப்பிட்டது வயத்துக்குப் பிடிக்கல்ல’ என்றாள் அம்மா.
’நீ சும்மா சப்பைக்கட்டு கட்டாதே…ரத்தத்தப் பாத்து பயந்திருக்கு நீ பெத்த பிள்ள…டேய் அவன அந்தப்பக்கமா போவச்சொல்லு’ என்றார் அப்பா
‘எந்திரிங்க மாப்ள’ என்று செந்தட்டியண்ணன் கை நீட்டினார். அவன் அதைப் பிடிக்காமல் எழுந்து நின்றான். சட்டை ஈரமாக இருந்ததை உதறிக்கொண்டான். கிடாவைக் காணவில்லை. பீடத்தைத் திரும்பிப்பார்ப்பதை தவிர்த்தான். அப்படியே ஓடிப்போய் பஸ் ஏறி வீட்டுக்குப்போய்விடவேண்டும் போலிருந்தது. அவர்கள் எவருடைய முகத்திலும் விழிக்கக்கூடாது. இனி இவர்கள் எவரையுமே பார்க்கக்கூடாது. அப்படியே திருநெல்வேலிக்குப் போய்விடவேண்டும். இல்லை, மதுரைக்கு. சென்னைக்கு…
‘மாப்ள ரத்தம் பாத்த பயத்த கறியத் தின்னு போக்கிக்கலாம்…போய் ரெஸ்ட் எடுங்க’ என்றார் சுப்பு மாமா. எல்லாரும் சிரித்தார்கள்.
அவன் மெல்ல பின்னால் நகர்ந்தான். ஜானகியின் பார்வையை உடம்பெங்கும் உணர்ந்தான்.
முருகேசன் மாமா ‘இல்ல…செலம்பரம் நிக்கட்டும்…’ என்றார்.
சிதம்பரம் நின்றுகொண்டான். ஆனால் தலையைத் தூக்கவே இல்லை.
பூசாரித்தாத்தா ‘செரி, பூவப்போட்டு சங்கல்பம் சொல்லணுமானா சொல்லிடறது…சாமி நிறைஞ்சு நிக்கிற நேரம்’ என்றார்
‘அதாகப்பட்டது, இப்பம் எங்க குட்டி சானகிக்கு வயசும் அறிவும் வந்தாச்சு…சாதிவழக்கப்படி செய்யவேண்டியதச் செய்யணும்….அதான்.சொந்தமும் சனமும் நமக்கு வேணும்’
பெண்கள் எல்லாரும் வாய் திறந்து கவனித்தனர்
‘நீ சொல்லுறதும் சரிதான் முருகேசா… இந்தக் காட்டுப்பொட்டலிலே நாமள்லாம் உசிரும் மானமுமா இருக்கிறதே சொந்தத்தாலதான்’ என்றார் காட்டூர் சித்தப்பா
‘இருவத்தஞ்சு வருசம் முன்னால சுடலை இந்தூருக்கு வந்தப்ப அவனுக்கு நெலமும் பொண்ணும்குடுத்து கூடவே வச்சுகிட்டேன். ரத்தினம் நான் தோளில போட்டு வளத்த பொண்ணு… …அவ அசலூரு போகப்படாதுன்னுதான் அதைச் செஞ்சேன். ஒத்த தங்கச்சிய நான் ஒருநாள் கூட பிரிஞ்சதில்ல. இப்ப அவளுக்கும் சிங்கக்குட்டிபோல ரெண்டு ஆம்புளப்புள்ள வீடுநெறைய வளந்து நிக்குது….குடுத்தத எடுத்துக்கிடறதுதான் நம்ம வழக்கம்… ‘
‘செஞ்சிரவேண்டியதுதான்… கெணத்துல தண்ணி இருக்கிறப்ப ஆறு என்னத்துக்கு?’ என்றார் கீகாட்டு மாமா
‘இதெல்லாம் அவுங்க சின்னஞ்சிறிசுகளா இருக்கிறப்பவே நாங்க மச்சானும் மச்சானும் முடிவுசெஞ்சதுதான். புதிசா ஒண்ணுமில்ல. இப்ப சிறிசுக வளந்து அதுக்குண்டான அறிவுவந்திட்டதினால நாலு பெரியமனுசங்க சொந்தபந்தம் சாட்சியா சாமிமுன்னால ஒரு சொல்லு சொல்லிப் பூவை வச்சிடலாம்னு முடிவுசெஞ்சிருக்கோம்’
‘வேண்டியதுதானே…நல்ல விஷயம் நடக்கட்டும்’ என்றார் கணேசமூர்த்தி தாத்தா ‘’ஏலே எல்லாரும் கேட்டாச்சாலே? வேத்துச்சொல்லு இருக்கப்பட்டவன் இப்பவே சொல்லிடுங்க…’ என்றார்
‘வேத்துச்சொல்லு என்ன மாமா? ஊரறிஞ்ச விசயம்தானே?’ என்றார் சுப்புமாமா.
’அப்ப பூவை வச்சிடறது’ என்றார் பூசாரித்தாத்தா
‘அதிலே ஒரு சின்ன விசயம். பெரிய மாப்பிளைட்ட பேசினேன். அவரு சின்னவருக்கு சானகியக் குடுக்கிறதுதான் நல்லாருக்கும்னு நெனைக்கிறார்….’
எல்லாரும் கலைந்து பேசிய ஒலி ரீங்காரமாக எழுந்தது
‘அதென்ன பேச்சு முருகேசு புதிசா?’ என்றார் சுப்பு மாமா
‘பெரியமாப்ள நிதானமானவரு…அவரு சொன்னா அர்த்தமிருக்கும்னு நானும் மேக்கொண்டு கேக்கல்ல…’ என்றார் மாமா.
பூசாரித்தாத்தா ‘அதும் சரிதான்…இதெல்லாம் அதுக்குமேலே கேக்கப்பிடாது…சின்னவருக்கும் சானகிக்கும் சம்மதமான்னு கேட்டுட்டு பூவப்போட்டிரலாம்’ என்றார்.
சிதம்பரம் என்ன நடக்கிறதென்ற பிரக்ஞையே இல்லாமல் நின்றான். சுப்பு மாமா ‘என்ன மாப்ள, கேட்டிகதானே? சானகிய பிடிச்சிருக்குதானே?’ என்றார்
பிரமையுடன் சிதம்பரம் தலையசைத்தான். மீண்டும் விழுந்துவிடுவோம் என்று தோன்றியது
பெண்கள்கூட்டத்தில் இருந்து செண்பகம் அக்கா ’சானகிக்கும் பிரியம்தானாம்…’ என்றாள்:
‘பிறவென்ன? மீனாச்சி சுந்தரேஸ்வரர் மாதிரி நெறைஞ்சிருக்கட்டும்’ என்றார் பூசாரித்தாத்தா. பெண்கள் கும்பலில் செண்பகம் அக்கா ஏதோ சொல்ல எல்லாரும் சிரித்தார்கள்.
‘சொடல என்ன சொல்றே? பூவ போட்டிரலாமா?’
அப்பா தலையசைத்தார்
அம்மா மட்டும் தயங்கி ‘இப்ப இப்டி சொல்றீக….எப்டின்னாலும் மூத்தவனுக்கு முடிச்சதுக்குப்பிறகுதான் சின்னவனுக்கு…’ என்றாள்
முருகேசமாமா ’அதென்ன அப்டி சொல்லிட்டே? மூத்தவனுக்கு வாறவதானே முதல் மகாலட்சுமி?’ என்றார்
‘பூவப் போட்டுடறது’ என்றார் பூசாரித்தாத்தா
பூவை மாமனும் அத்தையும் சேர்ந்து அய்யனார் காலடியில் போடுவதை சிதம்பரம் பார்த்திருந்தான். மனம் கல் மாதிரி அசையாமல் இருந்தது.
பூசாரித்தாத்தா உடுக்கை கடைசியாக அடித்துப் பாடி பூசையை முடித்ததும் ஆண்கள் ஆவலாகக் கிடாக்கறி வேகுமிடம் நோக்கிச் சென்றார்கள். கறிவேகும் மணம் அப்போதுதான் சிதம்பரம் மூக்கில் நுழைந்தது. அப்பாதான் முதலாளாகப் போய் நின்று வாழையிலைக்கீற்றில் வெந்த கறி வாங்கிக்கொண்டு கருவேலமரத்துப்பக்கமாகச் சென்றார். அதன்பின் ஒவ்வொருவராகக் கறி வாங்கிக்கொண்டு விலகினார்கள். வெவ்வேறு மரத்தடிகளில் சென்று சிறிய குழுக்களாக அமர்ந்துகொண்டார்கள்.
சிதம்பரம் கண்களை சுழற்றினான். ஜானகியைக் காணவில்லை. அவன் பார்ப்பதை செண்பகம் அக்கா சுட்டிக்காட்ட பெண்கள் சிரித்தார்கள். அவன் எழுந்து சென்று லாரியின் சக்கரத்தருகே போடப்பட்டிருந்த அட்டை மீது அமர்ந்துகொண்டான். ஏனோ மிகவும் களைப்பாக இருந்தது. தூங்கினால்போதும் என்று பட்டது. கறி சரியாக வெந்து குழம்பாக ஆக இன்னும் நேரமாகும். சோறு இப்போதுதான் அடுப்பிலேறியிருக்கிறது.
அசப்பில் திரும்பிப்பார்த்தபோது ஜானகியின் கண்களைச் சந்தித்தான். நுனிநாக்கை நீட்டிக்காட்டிக் கண்களை உருட்டினாள். பதறிப் பார்வையை விலக்கிக்கொண்டான்.
அண்ணன் வந்து ‘இங்கியா இருக்கே?’ என்றான். அவனுக்கு அப்பால் சென்று லாரியின் மறைவில் நின்றுகொண்டான்.
சிதம்பரம் பதில் சொல்லவில்லை
‘நீ எதுக்குலே பொலிரத்தம் முன்னால போய் நிக்கிறே?’ என்றான் அண்ணன். சுற்று முற்றும் பார்த்தபின் ஒரு கசங்கிய சிகரெட்டை எடுத்து நீவி நேராக்கி வாயில் வைத்தான். உதடை அசைக்காமல் ‘தலைங்க ஏதாவது வந்தா சொல்லுலே’ என்றபின் தீப்பெட்டி எடுத்துப் பற்றவைத்துக்கொண்டான். ஆழ இழுத்து மூக்கு வழியாகப் புகை விட்டான்.
‘நீ எதுக்கு அப்டிச் சொன்னே?’
‘என்னது?’
‘சானகிக்கு என்னைய–’
‘அவளுக்கு உம்மேலதான்லே பிரியம்…’ என்று சாம்பலைத் தட்டினான்
‘எப்டித் தெரியும்?’
‘தெரிஞ்சிருது…’
‘எப்டி?’
‘நமக்குப் பிடிச்சிருக்கிறவங்களுக்கு நம்ம மேலே பிரியமிருக்கான்னுதானே நாம பாப்பம்?’
அண்ணன் சிகரெட்டை ஆழ இழுத்தான். கனல் தீவிரமாகச் சிவந்து மெல்ல கருகியது
=================================