நிலம் [சிறுகதை]

இருபத்திரண்டு வருடங்களுக்குப்பின் ராமலட்சுமிக்கு பொத்தைமுடி ஏறிப்போய் வெட்டுவேல் அய்யனாரைச் சேவிக்கவேண்டுமென்று ஆசை வந்தது. எப்போது அவளுக்குள் அந்த எண்ணம் வந்தது என்று அவளுக்குத்தெரியவில்லை. உறைகுத்தின தோசைமாவு மறுநாள் காலை மூடியைத் தள்ளிவிட்டுப் பூத்துமலர்ந்திருப்பதுபோல காலையில் அவள் அது தன்னிடமிருப்பதை உணர்ந்தாள்.

அவள் முகம் பூரித்திருப்பதைக்கண்டு அன்னமயில் ‘ஏனம்மிணி, மொகத்திலே எளவெயிலுல்ல அடிக்குது?’ என்று கேட்டாள். ராமலட்சுமி புன்னகைத்துக்கொண்டாள்.

அடுத்தக்கணமே மனம் கூம்பியது. முகத்தை சுவரை நோக்கித் திருப்பிக்கொண்டாள். நாலைந்துவருடம் முன்புகூட காலையில் அப்படி அகம்பூரித்திருந்தால் நாலைந்துநாள் தள்ளிப்போயிருக்கிறது என்று அர்த்தம். அதன்பின் வேண்டுதல்கள், காணிக்கைமுடிதல்கள். உள்ளூர ஒவ்வொரு சொல்லும் மன்றாடலாக இருக்கும். காலடி எடுத்துவைக்கும்போதெல்லாம் வயிறு வயிறு என்று மனசு பதறும். நாட்கள் தாண்டத்தாண்ட நம்பிக்கை சோளக்கதிர் கனப்பதுபோல வளரும். பின்பு ஒருநாள் வாடிய செம்பருத்தி முற்றமெல்லாம் உதிர்ந்துகிடக்கும்.

அந்த நம்பிக்கையின் அலைக்கழிப்பு முழுமையாக அடங்கிப்போனதுகூட நல்லதுதான் என்று ராமலட்சுமி நினைத்துக்கொண்டாள். இனிமேல் அவள் கொல்லைப்பக்கச் சுவரில் நாட்களைக் கரியால் புள்ளிவைக்கவேண்டியதில்லை. வண்ணாத்தி சின்னு வரும்போதெல்லாம் கூசி அரங்குஅறைக்குள் ஒடுங்கிக்கொள்ளவேண்டியதில்லை.

கொல்லையில் தொழுவத்துப் புல்கூரைமேல் கருக்கிருட்டு வடிந்துகொண்டிருந்தது. கறுத்தானும் மாடசாமியும் பசுக்களை ஒவ்வொன்றாக அவிழ்த்துக் கொண்டுவந்து முளைத்தறிகளில் கட்டிக்கொண்டிருந்தார்கள். தொழுவத்தின் குண்டுபல்புகளைச்சுற்றிப் பூச்சிகள் புகைச்சுருள்போல பறந்துகொண்டிருந்தன. செவலை நன்றாகத் திரும்பி நின்று முளையில் சுற்றிய கன்றைப்பார்த்து அம்பே என்றபின் வாலைத்தூக்கி சடசடவென சிறுநீர் கழித்தது.

அன்னமயில் கூடைநிறைய எள்ளுப்புண்ணாக்கு அள்ளி இடுப்பில் வைத்து கொண்டுசென்று முந்தையநாளே தொட்டிகளில் கலக்கி வைத்திருந்த புளித்தகாடியில் கொட்டிக் கலக்கினாள். புண்ணாக்குவாசனைக்குப் பசுக்கள் கயிற்றை இழுத்து கனத்த நாக்கை நீட்டின.மூக்குக்கயிறு இழுக்க தலை தாழ்த்திச் சுற்றிவந்தன. மாடசாமி தொழுவத்தில் பெரியகருப்பியின் அருகே கன்றை அவிழ்த்துவிட்டான். செவலைக்கன்று. முதுகில் வெள்ளைக் கைக்குட்டையைப் போட்டதுபோல ஒரு தடம். மெழுகுமூக்கை நீட்டி நீட்டித் தாயின் அகிடைப் பிடிக்க முனைந்துகொண்டிருந்தது. கயிறு தளர்ந்ததும் குட்டிவாலை தூக்கியபடி  சென்று கனத்து நரம்புபுடைத்துத் தொங்கிய அகிடில் முட்டி இருமுறை ஏந்தியபின் வேகமாகச் சப்ப ஆரம்பித்தது. ராமலட்சுமிக்குப் புல்லரித்தது. கதவருகே சற்றே மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். படபடப்பில் அவளுக்குக் கால் பதறியது. ஒவ்வொருநாளும் அவள் பார்க்கும் காட்சிதான். ஒவ்வொருநாளும் அதை அவள் ஒளிந்துநின்றுதான் பார்ப்பாள். அன்னமயில் அடுத்தமுறை புண்ணாக்கு எடுக்க உள்ளே வரும் சத்தம் கேட்டதும் அவள் உள்ளே சென்றாள்

கொல்லைக்குச்சென்று மரச்சம்புடத்தில் தொங்கிய உமிக்கரியைக் கொஞ்சம் அள்ளிப் பூவரசம் இலையில் மடித்துக் கொண்டு வடலிப்பனையில் இருந்து ஓரு ஓலையைக் கீறிக்கொண்டாள். கொல்லைப்பக்கம் நின்ற வேப்பமரத்தில் காகங்கள் எழுந்து எழுந்து பறந்து பூசலிட்டுக்கொண்டிருந்தன. பனையோலை மறைப்பு போடப்பட்ட குளியலறைக்குள் பெரிய சிமிண்ட் தொட்டியில் அன்னமயில் தண்ணீர் நிறைத்து வைத்திருந்தாள். முந்தைய நாளே நிறைத்து இரவின் குளிரை வாங்கிவைத்திருக்கும் தண்ணீர். ராமலட்சுமி க்கு அதில் குளிக்க மிகவும் பிடிக்கும். அந்தத் தண்ணீருக்குக் கொஞ்சம் கனம் அதிகம் என்று தோன்றும். இந்த கரிசல்காட்டின் வெக்கைக்குத் தண்ணீர் சாதாரணமாக உடம்பில் விழுந்ததுமே உலர்ந்துவிடும். ராத்திரித்தண்ணீர் இன்னும் கொஞ்சநேரம் உடம்பில் நீடிக்கும் என்று அவளுக்கு ஒரு நினைப்பு.

குளித்து முடித்துவந்ததும் அவள் அரங்கு அறைக்குச் சென்று தேக்குப் பெட்டியைத் திறந்தாள். மரிக்கொழுந்து செண்ட் போட்டு வைத்த புடவைகள் அடுக்கப்பட்டிருந்தன. பெட்டியின் மூடியின் உட்பக்கம் அவளும் சேவுகப்பெருமாளும் திருமணம்செய்துகொண்டபோது எடுக்கப்பட்ட படம். அவள் கையில் ஒரு செண்டு இருந்தது. இங்கெல்லாம் அது வழக்கமே இல்லை. அன்று யாரோ திருநெல்வேலியில் இருந்து கொண்டுவந்து கையில் கொடுத்துவிட்டார்கள். அதை என்ன செய்வதென்றே தெரியாமல் கையில் வைத்திருந்தாள். மெத்தென்று குளுமையாக இருந்தது. கைக்குழந்தைபோல.

அவளுக்குப் புல்லரித்தது. ஆம், அதை மடியில் வைத்திருந்தபோது அதைத்தான் அவள் நினைத்தாள். பூச்செண்டு வாடாமலிருக்கத் தெளித்திருந்த பன்னீர் ஊறி அவள் சின்னாளப்பட்டுப் புடவையில் சொட்டித் தொடை ஈரமானபோது அவளுக்கு புல்லரித்துக் கண்ணீரே வந்துவிட்டது. உதட்டை இறுக்கியபடி தலையைக் குனிந்து கொண்டாள். சேவுகப்பெருமாளுக்கு அப்போதே ஊரெல்லாம் தோழர்கள். எல்லாருமே பெரியமனிதர்கள். மோட்டாரைப்போட்டுக்கொண்டு வந்தபடியே இருந்தார்கள். என்னென்னவோ பரிசுப்பொருட்கள். கடிகாரம் மட்டும் இருபத்தைந்துக்குமேல் வந்தது. ஒவ்வொருவரைப்பார்த்தும் அவள் புன்னகைக்கவேண்டியிருந்தது. புன்னகைசெய்தே முகம் வலிக்க ஆரம்பித்தது

ராமலட்சுமி அரக்குச்சிவப்புப் பட்டுப்புடவையை எடுத்தாள். அதை மெதுவாகத் தடவிப்பார்த்தாள். மதுரையில் அழகர்விழா பார்க்கப்போனபோது எடுத்தது. கல்யாணமாகி நான்கு வருடம் கழித்து. சேவுகப்பெருமாள் அதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தான். வெளியே கூட்டிச்சென்றால் கண்டிப்பாகப் புடவை உண்டு. ‘அய்யே இப்ப என்னத்துக்கு இது? நான் இதையெல்லாம் கட்டிக்கிட்டு எங்க போறேன்?’ என்று அவள் சொன்னாலும் அவன் கேட்கமாட்டான். ‘என்ன இப்ப? பொட்டியில வச்சுக்க…இல்லாட்டி வீட்டுக்குக் கட்டிக்க’ என்பான். ‘இதையா…நல்லாருக்கு பட்டுகட்டிகிட்டு காட்டுவேலைக்குப்போறேனக்கும்’ என்பாள் அவள். ‘காட்டுவேலை ஏன் செய்றே? நீ மகாராணியாக்கும்…நாக்காலியிலே அட்டணக்கால் போட்டுட்டு ஒக்காரு…’ அவள் சிரித்து ‘ஆமா… அட்டணக்கால் போடுறாங்க… மானம்பாத்த பூமியிலே அது ஒண்ணுதான் கொற’ ஏன் போட்டா என்ன? நீ யாரு? நீ வடக்கூரான் பெஞ்சாதி…கோயில்பட்டி சங்‌ஷனிலே போயி பேரச்சொல்லிப்பாரு. தெருவே எந்திரிச்சு நிக்கலேண்ண என்னாண்ணு கேளு…’

பட்டுப்புடவைக்குள் இருந்த பாச்சாஉருண்டைகள் எல்லாம் ஆவியாகிப் புடவையிலேயே கலந்துவிட்டிருந்தன. அதை எடுத்து முகர்ந்து பார்த்தபோது அவளுக்கு எங்கோ போய்விட்டதுபோலிருந்தது. மதுரை சாலைகளில் வண்டிப்புகையை சுவாசிப்பதுபோல இருந்தது. புதிய மோட்டார்காரில் ஏறியதுபோல இருந்தது. இளவாழையிலை போலிருந்த புடவையை மெதுவாகப் பிரித்து உதறிவிரித்தாள். மூன்றுமுழம் அகலத்துக்கு மயில் சரிகைபோட்ட முந்தானை. உள்ளுக்குள் செவ்வந்திப்பூ புட்டா. அந்தக்காலத்தில் அதைப்பார்ப்பதற்காகவே பெண்கள் பக்கத்து ஊரில் இருந்தெல்லாம் தேடிவருவார்கள்.

அவள் பீரோக் கண்ணாடியில் தன்னைப்பார்த்தாள். காதோரம் படர்ந்த நரையில் முகத்தின் மஞ்சள் கலந்து ஏதோ குருவியின் இறகுபோலிருந்தது. நெற்றியில் குங்குமம் வைத்த இடம் வட்டமாகக் கருகி அய்யனார் கோயில் கல்படியில் சூடவிளக்கு ஏற்றிய தடம்போலிருந்தது. கன்னம் கனத்து, கழுத்து குறுகி, உடம்பு உருண்டு அந்தத் தோற்றம். அது அவள்தான் என்று அவள் மனம் முழுக்க நம்பியதேயில்லை. திரும்பத்திரும்ப கண்ணாடிபார்த்த காலகட்டத்தில் மனதில்பதிந்த ஒரு சித்திரம் உண்டு. அவளுக்கு கே.ஆர்.விஜயாவின் சாயல் என்பாள் மேலகரம் அத்தை. ’அந்த விசயாக்கூட ஒன்னைமாதிரி கறுப்புதாண்டீ…லைட்டடிச்சு செவப்பாக் காட்டுறாங்க’ என்பாள். சேவுகப்பெருமாளிடமும் அதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். ‘உன்னைப்பாத்தா கே.ஆர்.விஜயாமாதிரின்னு சொன்னாங்க… அவ என்ன உன்னைய மாதிரி உளுந்து நெறத்திலயா இருக்கா?’ என்று அவன் முதலிரவில் கேட்டான் ‘ஆ, அவள பெயிண்ட் அடிக்கிறதுக்கு முன்னாடி பாத்துட்டு வந்து கேளுங்க’ என்றாள் அவள்.

அவள் புடவை கட்டி வெளியே வந்தபோது அன்னமயில் பெரிய செம்பில் விளிம்பு வழிய நுரைத்த புதுப்பாலுடன் உள்ளே வந்தாள். கண்கள் விரிய பார்த்து ‘ஏனம்மிணி….இண்ணைக்கு எங்கியாம் போறிகளா?’ என்றாள். ‘ஏன் போனாத்தானா? சும்மா கட்டிக்கப்பிடாதா?’ என்றாள் ராமலட்சுமி . ‘கட்டிக்கிடுறது…உங்களுக்கு என்ன மகராசி’ என்றபின் அவள் சமையல்கட்டுக்குள் சென்றாள்.

‘அன்னம், பாலைக்காய்ச்சி டீ போடுடீ…மதியம் குழம்பும் சோறும் சமைச்சிரு…நான் சும்மா பொத்தைமுடி வரைக்கும் போய்ட்டு வாறேன்’ என்றாள். ‘பொத்தைமுடிக்கா? இப்ப அங்க யாரு இருப்பா? வெசாகத்துக்கு சனம் ஈ மாதிரி அம்மும். அப்றம் மாடுமேய்க்கிற பயலுக கூட எட்டிப்பாக்க மாட்டாங்களே’ என்றாள் அன்னமயில்

‘அய்யனாரு இருப்பாருல்ல?’

‘அவருக்கென்ன? பசியா தாகமா வெயிலா மழையா?…நயினாரு கூட வாறாரா’

‘கேட்டுப்பாக்கிறேன்..’

ராமலட்சுமி முன்னறைக்குப்போய் வாசல்வழியாக எட்டிப்பார்த்தாள். சேவுகப்பெருமாள் பெரியகட்டில்நிறைத்துப் படுத்துக்கிடந்தான். சீரங்கம் பெரியபெருமாள் போல கன்னங்கரிய உடம்பு. ’வடக்கூரானா அவன் மதயானையாச்சே’ என்பார்கள் அக்காலத்திலேயே. பெண்பார்க்க வந்தபோதுதான் அவனை அவள் முதன்முதலாகப் பார்த்தாள். வெள்ளை வேட்டியை ஏற்றிக்கட்டி வெள்ளைச்சட்டைக்கையை நன்றாகச் சுருட்டி விட்டு கழுத்துக்குப்பின் கைக்குட்டை செருகி தோல்செருப்பு ரீக் ரீக் என்று ஒலிக்க நடந்து வந்தான். பெரிய மீசை. கம்பிச்சுருள்கள் போலத் லைமயிர் நெற்றியில் புரண்டது. திண்ணையில் அமர்ந்ததும் ‘டீ சாப்புடறீயளா?’ என்றார் அப்பா. ‘கொண்டாங்க’ என்று சொல்லி விட்டு ‘டம்ளரிலே வேணாம்…சொம்புல கொண்டாங்க’ என்றான். அப்பாவுக்குப் புரியவில்லை. கூடவந்த கழுகுமலை மாமா ‘அவ்வோ வீட்டிலே அதான் வழக்கம்…எல்லாம் கொஞ்சம் கூடுதலா இருக்கும்’ என்று சிரித்தார். பெரிய ஓட்டுச்செம்பு நிறைய கொதிக்கும் டீ வந்தது. அதை அப்படியே தூக்கி களக் களக் என ஒரே மூச்சில் குடித்தான். வாயிலிருந்து உலைவாய் போல ஆவி எழுந்தது.

அப்பாவுக்குத் தயக்கம்தான். ’ஏனம்மிணி, பையன் ஒருமாதிரி இருக்கானே…கையும்காலும் அய்யனாரு மாதிரி இருக்கு…’ அவளுக்கு ஒன்றும் சொல்லத்தெரியவில்லை. ஆனால் அம்மாச்சி உடனே சொல்லிவிட்டாள் ‘ஏளா என்ன சொல்லுதே? நரம்பனுக தான் பொட்டைக்குட்டிகள மதிக்க மாட்டானுக…இவன் அய்யனாரு அம்சம்…நம்ம குட்டிய ராணிமாதிரி வச்சுக்கிடுவான்…காலில விளுந்து கெடப்பான்…. ’ அதற்குமேல் எவருக்கும் கருத்து இருக்கவில்லை.

கல்யாணமெல்லாம் கனவுபோலதான் இருந்தது. என்ன நடக்கிறது என்றே தெரியாத துண்டுநிகழ்ச்சிகளின் ஓட்டம். கல்யாணமாகி நாலாம்நாள் மலையேறி வெட்டுவேல் அய்யனாரைப் பார்த்தபோதுதான் அவளுக்குள் ஏதோ நிகழ்ந்தது.விழித்த கண்களுடன் நின்ற அய்யனாரின் ஆளுயரக் கருங்கற்சிலை.வெட்டுப் பற்களில் ஒரு சிரிப்பு இருப்பதுபோலத் தெரிந்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. ‘ஏன்ளா? என்னாச்சு? என்ன?’ என்று அவன் கேட்டுக்கொண்டே இருந்தான். அவள் உதட்டை அழுத்திக் கண்ணீரைத் துடைத்தாள். திரும்பிப் படியிறங்கும்போது நாலாம்படியில் நின்றுவிட்டாள். ‘என்ன? என்னளா?’ என்றான் அவன் .சட்டென்று விசும்பிவிட்டாள். ‘எஞ்சாமி…தெய்வமா வச்சு கும்பிடுதேன்…எஞ்சாமி’ என்று சொற்கள் கசங்கின. அவன் அவள் தோளைப்பிடித்துத் தன்னுடன் சேர்த்துக்கொண்டான். அவள் உடல் நடுங்கியது. ஒரு நிமிடத்தில் ’அய்யோ’ என்று விலகிவிட்டாள். நல்லவேளையாக மலையில் வேறு யாருமே இல்லை. அவன் சட்டையில் கொஞ்சம் குங்குமம் ஒட்டியிருந்தது. அதை அவள் சுண்டிவிட்டாள். அவன் விலகிக்கொண்டு சிரித்தான்.

அவள் பார்வையை உணர்ந்ததுபோல அவன் இமைகள் அசைந்தன. சட்டென்று கண்களை விழித்து அவளைப் பார்த்தான். எழுந்து அமர்ந்து ’என்னளா?’ என்றபடி மீசையை நீவினான்.

அவள் ‘இல்லை’ என்று தலையை அசைத்தாள்

‘என்ன?’ என்று பல்லைக்கடித்துக்கொண்டு உரக்கக் கேட்டான்.

‘ஒண்ணில்ல…சும்மா அப்டியே பொத்தமுடிவரை போலாமாண்ணு’

‘அங்க இண்ணைக்கு என்ன? நாளைக்குப்போலாம்’ என்று எழுந்து லுங்கியைக் கட்டிக்கொண்டான். அருகே மேஜைமேல் இருந்த சந்தனப்பெட்டியில் இருந்து புலிநகம் போட்ட சங்கிலியை எடுத்து முடிநிறைந்த மார்பில் போட்டுக்கொண்டான். திரும்பி மீண்டும் ‘என்ன?’ என்றான்

‘ஒண்ணில்ல’

‘ஏளா, எனக்கு இண்ணைக்கு தலைக்குமேலே வேல கெடக்கு… வக்கீலுபிள்ளைய வரச்சொல்லியிருக்கேன்…’

அவள் தலையைக் குனிந்து கொண்டாள். ஆனால் அப்படியே நின்றாள்

‘வெந்நி எடுத்து வை’

‘ம்’

‘என்ன?’

‘ஒண்ணில்ல’

அவன் கைகளில் போட்டிருந்த மோதிரங்களைத் திருகினான். பின் குரலை மாற்றி சுவரைப்பார்த்தபடி ‘நாராயணன் வரட்டும்…சொல்லிட்டுப் போலாம்’ என்றான்

அவள் ‘ம்’ என்றாள்

‘பிடிச்சா பிடிச்ச பிடி….விட்டே குடுக்காத…அவனவன் ஆயிரம் சோலியிலே சாவுறான்…செரி போ…’

அவள் மெல்லப் பின்வாங்கி அவன் முன்னாலிருந்து விலகியதும் சிரித்துக்கொண்டு சமையலறைக்கு ஓடினாள்.

அன்னமயில் ‘என்ன சிரிப்பு?’ என்றாள்

‘வாறாரு’

‘அது என்ன புதிய விஷயமா? எப்ப தாலிய கட்டினாரோ அப்ப நயினாரு அடங்கியாச்சுல்லா? மீசையும் அருவாளுமெல்லாம் வீட்டுக்கு வெளியதானே?’

‘போடி’

சேவுகப்பெருமாள் குளித்துத் தலை துவட்டுவதில்லை. கையாலேயே இருமுறை பின்பக்கமாக நீவி விட்டுக்கொள்வான். உடம்பைத் துவட்டுவதுமில்லை. ஈரத்துடன் சட்டை போட்டுக்கொண்டால் உடம்பெல்லாம் அது ஒட்டி சொட்டுநீலம் பூசியது நீலத்தடங்களாகத் தெரியும். பௌடர் எல்லாம் போடுவதில்லை. ஒரு சின்ன சம்புடத்தில் புனுகும்மெழுகும் கலந்து வைத்திருப்பான். அதைப் பல்தேய்க்கும் பிரஷ்ஷால் எடுத்து மீசையில் போட்டு அதாலேயே நன்றாக நீவி விட்டுக்கொள்வான். அதன்பின் கன்னத்தில் முறுக்கி நிறுத்தித் திரும்பித்திரும்பிப்பார்ப்பான்

‘போரும் வடக்கூரான் சண்டியரே…மீசை நல்லா வெட்டரிவா கணக்காத்தான் இருக்கு’

‘போடி…அடிச்சுப் பல்லப்பேத்திருவேன்’

‘நாராயணன் வந்திருக்கான்…’

சேவுகப்பெருமாள் வாசலுக்கு வந்தான். கூடவே அவளும் பட்டுப்புடவையுடன் வந்ததும் நாராயணன் புரிந்துகொண்டான்

‘எங்க அண்ணி? கோயிலுக்கா?’

‘அய்யனார பாக்கணும்கிறா…’

‘வெயிலு வந்திருமே’

‘சுருக்குன்னு போய்ட்டு வந்திருதோம்…. வக்கீலுபிள்ள எப்ப வாறாரு?’

‘பத்துமணின்னு சொன்னாரு’

‘…முடிஞ்சிருமா?’

‘பிடிபிடின்னு நிக்கானுக….அவனுகள்ட்ட சும்மா பேசினா படியாது. அருவா பேசணும்’

’ம்’ என்று மீசையைக் கோதினான். அப்போது அவன் கண்கள் கீழே தழைவது அவளுக்குப் பிடிப்பதில்லை. அவன் வேறு எவரோ ஆகும் தருணம் அது.

‘பாத்துக்கிடுவோம்’ என்றபின் அவளிடம் ‘வாடி’ என்றான்.

பைக்கை அவன் எடுக்கையில் நாராயணன் தயங்கி ‘அண்ணா’ என்றான்

‘ஏண்டா?’

‘இல்ல…தனியாப்போறிக…’

அவன் புன்னகை செய்து முன்கூரையில் இருந்து தோல் உறையிட்ட அரிவாளை எடுத்து வண்டியில் நெடுக்குவாட்டாக வைத்தான். அதை வண்டியுடன் பொருத்த இரண்டு கிளிப்புகளைச் செய்திருந்தான். ‘அய்யனாருக்கு ஆயுதம்தான்ல தொணை…நீ போய்ப் பிள்ளைவாளப் பாரு…’

‘பொத்தைமுடிப்பக்கம் இந்நேரம் யாருமிருக்க மாட்டாங்க’

‘அய்யனாரு இருக்காருல்ல?’ அவன் பைக்கில் ஏறிக்கொண்டான். அவன் எடையில் பைக் அமிழ்ந்தது. ‘ஏறுட்டீ’

அவள் ஏறிக்கொண்டாள். ஒரே உதையில் அவன் வண்டியை இயக்கினான். வண்டி தடதடவென்று ஒலித்து செம்மண்சாலையில் ஏறியது. சரளைக்கல் உருண்டுகிடந்த எட்டடிச்சாலை வழியாக சென்றது. சாலையின் குழிகளை ஒதுக்கி வளைத்து வளைத்து ஓட்டினான். அவள் கூந்தலை இழுத்து முன்னால் விட்டுக்கொண்டாள். புடவைத்தலைப்பை இடுக்கிக் கொண்டாள்.

சித்திரை மாதம். ஆனாலும் காலையில் குளிர் இருந்தது. காலனி தாண்டியதும் இருபக்கமும் விரிந்த பொட்டல். சோளக்கொல்லைகள் குச்சி எச்சங்களுடன் காய்ந்து புழுதி பரவிக் கிடந்தன. காலைவெயிலில் பொட்டலில் கிடந்த கண்ணாடிக்காகிதங்கள் ஏனத்தில் தண்ணீர் பிடித்து வைத்ததுபோல ஒளிவிட்டன. உடைமுட் புதர்களுக்குள் அடைக்கலாங்குருவிகள் எழுந்து எழுந்து அமர்ந்து இரைதேடின.

கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு தன் எடையெல்லாம் கரைந்து விட்டதுபோலத் தோன்றியது. குருவி போல அவள் பொட்டல்மேல் பறந்துகொண்டிருந்தாள். எழுந்து அமர்ந்து சுழன்று சென்றுகொண்டே இருந்தாள்.

உச்சியில் தூக்கி வைத்ததுபோன்ற பாறையுடன் பொத்தைமுடி நெருங்கி வந்தது. அதில் ஒற்றைக்கண்போலத் தெரியும் அம்மணாண்டிக்குகை தெளிந்து தெளிந்து வந்தது. மலையுச்சியில் நிற்கும் ஒற்றைக்கருவேலத்தின் இலைகளைப் பார்க்கமுடியும்போலிருந்தது.

சேவுகப்பெருமாள் பைக்கை நிறுத்திப் பூட்டினான். அதிலிருந்து அரிவாளை எடுத்துக் கழுத்துவழியாக முதுகுப்பக்கம் சட்டைக்குள் போட்டுக்கொண்டான். வேட்டியை நன்றாகக் கட்டிக்கொண்டு ‘வா’ என்றான்.

கீழிருந்து பார்க்கையில் அவ்வளவு உயரத்தையும் ஏறமுடியுமா என்ற பிரமிப்பு எப்போதுமே ஏற்படும். ஆனால் எப்போதுமே அவள் இயல்பாக ஏறிவிடுவாள். சேவுகப்பெருமாள்தான் கொஞ்சம் மூச்சிரைப்பான்.

‘என்ன?’ என்றான் சேவுகப்பெருமாள் . அவள் முகத்தை எப்போதும் அவன் பார்த்துக்கொண்டிருப்பான். அவள் என்ன நினைக்கிறாள் என்று அவனுக்குப்புரியும்

‘ஒண்ணில்ல’

‘சொல்லுட்டி’

’இப்ப எதுக்கு இந்த அருவா?’

‘ஒரு சின்ன பிரச்சின போய்ட்டிருக்கு…அதான்’

‘என்ன பிரச்சின?’

‘உனக்கென்ன அதுக்கு? சொன்னா புரிஞ்சுகிடவா போற?’

‘ஆமா புரியறதுக்கு என்ன இருக்கு…எவனோ போக்கத்தவன் நெலத்த வளைக்கிறது. அருவாளக்காட்டி மெரட்டுறது. கேஸப்போட்டு வாட்டுறது….அடிச்சுத் தொரத்திட்டு அத சேத்துக்கறது…இதுதானே நடக்குது இருவத்தஞ்சு வருசமா’

‘இதான் நடந்திட்டிருக்கு ஆயிரம் வருசமா …லெச்சம் வருசமா. மண்ண மனுசன் விட்டிருவானா? மண்ணு வச்சிருக்கவன்தான் மனுசன்…’

‘பொண்ணாசையால ராவணன் கெட்டான் மண்ணாசையால துரியோதனன் கெட்டான்னு சொலவடை’

‘மண்ணுக்காக சாவுறதில ஒரு கெம்பீரம் இருக்குட்டீ’

‘என்ன சொன்னாலும் ஏறப்போறதில்லை…’. அடுத்த சொல் அவள் வாயில் எழுந்து உதடுகளில் கடிபட்டு நின்றது. பிள்ளையில்லாமல் எதற்கு இத்தனை நிலம். சொல்லாத சொல் உள்ளுக்குள் வீங்கியது. நெஞ்சுக்கூட்டை இறுக்கியது.

சேவுகப்பெருமாள் படிகளில் நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். கண்ணெட்டும் தூரம் வரை நிலம் விரிந்து கிடந்தது. தொடுவானில் ஒளிதேங்கிக்கிடந்து கண்கூசியது.

‘எவ்ளவு நெலம்…எவனெவனோ வச்சிருக்கான்….’ என்று அவன் சொன்னான் ‘நம்ம கிட்ட இருக்கிற இம்புட்டு நெலத்துக்காக இந்தப்பேச்சு பேசுற’

‘நூறு ஏக்கர்னா இம்புட்டு நெலமா?’

’கழுகுமலையிலே சிக்கைய நாயக்கர் எழுநூறு ஏக்கர் வச்சிருக்காரு’

‘அந்தப்பக்கம் அவருக்க தாத்தன் ஆயிரம் ஏக்கர் வச்சிருப்பான்… நாம எவ்வளவு நெலத்த வளைச்சுப்பிடிச்சாலும் ஒலகத்திலே அவ்ளவு நெலமும் மிச்சமாத்தான் கெடக்கும்…’

‘நீ சும்மா வாடி…பொட்டக்கழுத …ஒனக்கென்ன தெரியும்?’

‘ஆமா. எது சொன்னாலும் இப்டி ஒரு வார்த்தை சொன்னாப்போச்சு…’

மூச்சிரைக்க மூச்சிரைக்க நடந்தபின் அவன் பாதையோரப் பாறை ஒன்றில் அமர்ந்துகொண்டான். ‘தண்ணிப்பாட்டில் கொண்டாந்திருக்கணும்…’ என்றான்

‘இந்த பொத்தை ஏறி எறங்கறதுக்கு என்ன தண்ணி?’

‘தவிக்குதுல்ல….சூட்டிகையான பொட்டப்புத்தின்னா ஒரு பாட்டில் தண்ணி கையோட எடுத்து வச்சிருக்கணும்’

‘மலைமேலே ஊத்துத்தண்ணி இருக்கு…குடிச்சுக்கலாம்’

அவளும் அருகே அமர்ந்தாள். கையில் இருந்த பிளாஸ்டிக் பையில் தேங்காய் பூ பழம் கற்பூரம் எல்லாம் வைத்திருந்தாள். அதை அருகே வைத்தாள். ஒரு குரங்கு அருகே வந்தது. பெரிய தாய்க்குரங்கு. அடிவயிற்றில் குட்டி ஒட்டியிருந்தது. பெரிய கண்களைச் சிமிட்டிச்சிமிட்டி விழித்தது. அன்னையின் கன்னம் சிவப்பாக இருந்தது

‘இது கன்னம் எதுக்கு செவப்பா இருக்கு?’ என்றாள்.

’குட்டி போட்டிருக்குல்ல?’

‘தேங்காய குடுக்கட்டா?’

‘அய்யனாருக்கு உடைக்கவேண்டாமா? அப்றமா குடுப்பம்’

‘அய்யனாருக்கு பூ போரும்’ அவள் தேங்காயைத் தரையில் அறைந்து உடைத்து இரு மூடிகளையும் வீசினாள். குரங்கு பாய்ந்து ஒன்றை எடுத்துக்கொள்ள இன்னும் இரு குரங்குகள் பாறையில் இருந்து தாவி வந்தன. ஒன்று மூடியுடன் ஓட இன்னொன்று பின்னால் சென்றது.

‘போலாமா? வெயிலாயிரும் அப்புறம்’

மேலும் நடந்தபோது அவள் பலமுறை சொற்களை மேலெடுத்துத் திரும்ப உள்ளே போட்டபின் மெல்ல கேட்டாள். ‘’ஏங்க, சத்திரப்பட்டி சின்னத்தை கடைசியா என்னண்ணு கேக்கச்சொன்னாங்க’

‘என்னது?’ என்றான். அவனுக்கு உண்மையிலேயே நினைவில்லை என்று கண்கள் சொல்லின

‘மீனாச்சி விசயம்’

‘த…எவ்ளவு வாட்டி சொல்றது…சும்மா கெட…’

‘ஆமா…சும்மா கெடக்கேன். கடலு மாதிரி நெலமிருக்கு…கட்டியாள ஒரு வாரிசில்ல…பாழ்மரம் மாதிரி நிக்கிறேன்…பட்டுவிளுந்தா தூக்கிப்போட்டுத் தீய வைக்க ஒரு ஆளில்ல’

அவன் கோபத்துடன் நின்று அவள் கண்களைப்பார்த்தான். ‘முட்டாச்சிறுக்கி அப்டியே ஒரு அப்பு அப்பினா பல்லு உதுந்திரும்….நிப்பாட்டு ஏய் நிப்பாட்டுரீ…நிப்பாட்டச் சொல்றேன்’

அவளை மீறிக் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது. புடவை முந்தானையால் துடைக்கத்துடைக்கப் பெருகியது. பின் மூக்கைப் பிழிந்துகொண்டாள்

‘காலங்காத்தால இதுக்கா கூட்டிட்டு வந்தே? நான் போறேன்’ அவன் படியிறங்கினான்

‘இல்ல ராசாவே…இல்ல…சொன்னா கேளுங்க…ஏதோ பொட்டப்புத்தி…வாங்க’

அவன் நின்றான். முகம் மாறியது. ‘த…இந்த படியில வச்சுத்தாண்டி என்னையச் சொன்னே, அய்யனாருண்ணுட்டு…. அய்யனாரு சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவராக்கும்…’

அவள் தலைகுனிந்து நின்றாள்

‘இந்தாபாரு…இந்த சென்மத்திலே இன்னொரு பொண்ணு இல்ல…அது அன்னைக்கு இந்தப் படியில வச்சு முடிவுசெஞ்சது….இனி அந்தப்பேச்ச எடுக்காதே….’

‘ம்’

‘நமக்கு என்னட்டி கொற? சிங்கம்மாதிரி ரெண்டு தம்பிக இருக்கானுக…அவனுகளுக்க பிள்ளைய உன் இடுப்ப விட்டு எறங்கின நேரமில்ல…பின்ன என்ன?’

‘சரிதான்’

’வா’ என்று அவன் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு ஏறினான்

அவள் மெல்ல ‘பிறவென்னத்துக்கு இந்த நெலமெல்லாம்?’

‘அந்தப் பேச்ச விடு’

‘எப்டி விடுறது? எவ்வளவு ரத்தம்…எவ்ளவு சாபம்… எல்லாம் நம்ம தலையிலதானே விழுது…’

‘ரத்தம் இல்லாம நெலம் இல்ல… மகாபாரதமே அதுக்காகத்தானே’

‘அநியாயமா ஏழைங்க நெலத்த புடுங்கிட்டு புள்ளகுட்டிகளோட அடிச்சுத் தொரத்துறதுக்கு மகாபாரதமா தொண?’

‘நியாயம் அநியாயம்லாம் இங்க என்ன? நெலத்த வச்சிருக்க திராணியிருக்கிறவனுக்கு அது சொந்தம்….ரெத்தத்தக் கண்டா தொடைநடுங்கிற சனத்துக்குக் கூலிவேலதான் விதி’

‘இந்தப்பொட்டக்காட்டு நெலத்துக்கு இந்தப்போரு’

‘பொட்டக்காடா இருந்தாலும் இது நெலம்…பொட்டக்காடுன்னு சொன்னியே…இவனுக வச்சிருக்கிற கோமணம் மாதிரி நெலத்துக்கு என்ன மதிப்பு? நாலாடு நின்னு கடிக்க அதில எலையில்ல…ஆனா அதுக்காக சாவுறான்’

‘நீங்களும்தான் சாவுறீய’

‘அதான்…நெலமுண்ணா அதான்…கொல்லணும்,சாவத்துணியனும்…அதுக்குத்தான் நெலமே…’

‘நமக்கென்னத்துக்கு–’

’இப்ப சும்மா வாறியா இல்லியா?’

அப்படி அவன் கத்துவான் என்று அவள் நினைக்கவில்லை. அவனுக்குள் இருந்து அவள் அஞ்சும் அந்த துரியோதனன் வெளிவரும் தருணம். அவன் கண்கள் இடுங்கிவிடும். உடம்பே இரும்பாலானதுபோல ஆகிவிடும். அப்போது கைநடுங்காமல் அரிவாளைத்தூக்கி மரக்கிளையை வெட்டுவதுபோல ஒருவனின் கையை வெட்டித் தூக்கி அப்பால் போட அவனால் முடியும்.

மலைமேல் செல்லச்செல்ல அவன் மெல்ல இறுக்கமிழந்தான். ’அப்ப சொன்னியே ஆயிரம் ஏக்கர் வச்சிருக்கிறவருண்ணு…. ஒட்டப்பிடாரம் கிட்ணப்பநாயக்கர்னு கேள்விப்பட்டிருக்கியா?’

‘இல்ல’

‘ஆயிரம் ஏக்கர் வச்சிருந்தார்னு சொல்லுவாங்க…பதினெட்டு ஊர்லயா நெலமிருந்துச்சு… சொந்தமா ஒரு கம்மாயே வச்சு வெள்ளாம செஞ்சிருக்காரு… அவரோட அப்பன் குடுத்தது எண்பது ஏக்கருதான். மிச்சமெல்லாம் இவரே சம்பாரிச்சது…ஆயிரம் ஒழவுமாடு வச்சிருந்திருக்காரு…மாட்டைக்கவனிக்க ஒரு கிராமமே இருந்திருக்கு….’

’அவ்ளத்தையும் அள்ளிட்டுப் போனாராக்கும்?’

அவன் பதில் சொல்லவில்லை. மேலே அய்யனார் கோயில் உச்சி தெரிந்தது. ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் அங்கே அய்யனார் சிலை மட்டும்தான் இருந்தது. ஜின்னிங் ஃபேக்டரி வைத்திருந்த தாத்தையநாயக்கர்தான் காரைச்சுவரும் ஓட்டுக்கூரையும் போட்டு ஒற்றை அறைக் கட்டிடம் கட்டியது. கோயில் முன் ஓடுபோட்ட கூரையுடன் ஒரு சிறிய மண்டபம். பக்கவாட்டில் சிமிண்ட் மேடையில் விதவிதமான வேல்களும் சூலங்களும் நாட்டப்பட்டிருந்தன. எல்லாமே துருப்பிடித்துக் காய்ந்த மலர்மாலைசுற்றி நின்றன.வலதுபக்கம் கருவேல மரம் வேர்கள் பரப்பி நின்றிருந்தது. பிரம்மாண்டமானதோர் கழுகின் ஒற்றைக்கால் போலத் தெரிந்தது அடிமரம்

சட்டென்று அவள் திடுக்கிட்டாள். மண்டபத்தில் கிடந்த பண்டாரத்தை அடையாளம் கண்டுகொண்டாலும் படபடப்பு ஓய சில நிமிடங்களாயின.

‘என்ன?’ என்று கேட்டபின் அவனும் பார்த்தான். ’ஓ…பண்டாரம்…’ என்றான்

பண்டாரம் சடைமுடி மண்டிய தலையும் சடைகள் கலந்த தாடியுமாக அப்படியே கிடந்தார். அவர்கள் வருவதை அவர் முன்னரே கவனித்திருக்கவேண்டும். பொருட்படுத்தவில்லை. தூங்குகிறார் என்று தோன்றவில்லை. வெகுநேரமாகப் படுத்திருப்பார் போல. உடலில் சருகுகள் கிடந்தன

கோயிலுக்குக் கதவில்லை. சேவுகப்பெருமாள் ‘சட்டுபுட்டுனு பூசைய முடி… வெயிலேறினா இறங்கிக்கிட மாட்டே’ என்றான்.

அவள் பூசைப்பொருட்களைக் கோயில் முன்வைத்தாள். ‘பாத்துக்கிடுங்க…கொரங்கு வந்திரப்போவுது’ என்றபின் ஊற்றுக்குச் சென்றாள். மேலேறிச்சென்ற கரும்பாறையின் காலடியில் இருக்கும்ஒரு பெரிய ஏனம் அளவுள்ள பாறைக்குழிஅது. பாறையின் இரண்டு இடுக்குகளில் இருந்து நீர் ஊறி அதில் தேங்கிக்கொண்டே இருக்கும். மிஞ்சி வழிந்த நீர் வலதுபக்கமாக நீண்ட கரியபட்டைக்கறையாகக் கீழிறங்கி அங்கே நின்றிருந்த இலஞ்சி மரத்தடியில் மண்ணில் மறைந்தது. எருமைமாட்டின் கண்ணீர்த்தடம் போல.

கயிற்றில் கட்டப்பட்ட தகர டப்பா இருந்தது. அதில் நீரை அள்ளிக் குடித்தபின் கைகால் முகம் கழுவிக்கொண்டாள். இன்னொரு தகரப்போணியில் நீரை அள்ளிவிட்டு நிரப்பி அதைக் கையில் எடுத்தபின் கோயில் முகப்புக்கு வந்தாள்.

‘தண்ணிவேணுமானா போயி குடிக்கிறது’

சேவுகப்பெருமாள் ஊற்றுக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றான். ராமலட்சுமி கோயில் முன்னாலிருந்த பலிபீடத்தை நீர்விட்டுக் கழுவினாள். கொண்டுவந்த பிளாஸ்டிக் பையைப்பிரித்து அதிலிருந்து பழச்சீப்பு, பொரி ,வெல்லம் எல்லாவற்றையும் எடுத்து அந்த பலிபீடத்தில் படைத்தாள். ஊதுவத்தி கொளுத்தி வாழைப்பழத்தில் குத்தி வைத்தாள். புகைச்சுருள் காற்றில் சுழன்று பறந்து மறைந்தது.

இரு கூரையோடுகளால் பொத்திவைக்கப்பட்டிருந்த கல்விளக்கில் கொண்டுவந்திருந்த கடலை எண்ணையை ஊற்றித் திரிபோட்டுப் பற்றவைத்தாள். செவ்வந்திமாலையை அய்யனாரின் தோளில் தொங்கவிட்டாள். சேவுகப்பெருமாள் முகமும் சட்டையுமெல்லாம் நனைந்திருக்க வந்து அருகே நின்றான்.

ராமலட்சுமி மிகமெல்ல ’சாமியக் கூப்பிடலாமா?’ என்றாள்

‘அவரு சாமிகும்பிடறதில்ல’ என்றான் சேவுகப்பெருமாள்

‘பின்ன எதுக்கு இங்க இருக்கார்?’

‘ரெண்டுநாளைக்கு ஒருக்க இங்க எவனாவது திங்கிறதுக்குக் கொண்டாந்து குடுத்திடறான். ஊத்துத்தண்ணி இருக்கு. ஒதுங்க எடமிருக்கு…போரும்ல?”

அவள் திரும்பிப் பண்டாரத்தைப்பார்த்தாள். தூங்குகிறாரா? அவர்கள் பேசுவது கேட்கிறதா?

அவள் மேலும் மெதுவாக ‘இப்டி எதுக்கு இருக்கணும்?’ என்றாள்

‘நெலமில்லேன்னா இப்டி இருக்கலாம்…என்ன சரியா, இருந்திருவோமா?’

‘சும்மா இருங்க’ என்று அவள் அவனை மெல்லத் தட்டினாள். கற்பூரத்தை ஏற்றினாள். தீ அந்தரத்தில் எழுந்து பறந்தது. ‘கும்பிட்டுக்குங்க’ என்றாள். அவன் கைகூப்பினான்

பின்பக்கம் பண்டாரம் மெல்லிய குரலில் ‘’ஏலே, நீயும் அய்யனாரா? அரிவாளோட நிக்கே?’ என்றார்

சேவுகப்பெருமாள் திரும்பிப்பார்த்தான்

பண்டாரம் ‘அத வச்சுக்கிட்டுக் கும்பிடுலே…’

சேவுகப்பெருமாள் பேசாமல் கூர்ந்து பார்த்தான்

‘அந்த நம்பிக்க இல்லேன்னா எதுக்கு அய்யனாரக் கும்பிடுதே? அந்த அரிவாள நாட்டிக் கும்பிடுறதுதானே?’

சேவுகப்பெருமாள் ‘அய்யனாரு மேல நம்பிக்கை இருக்கு….’

‘என் மேலே இல்ல…’ பண்டாரம் சிரித்தார். அவரது பற்கள் அவ்வளவு வெண்மையாக இருந்ததை ராமலட்சுமி ஆச்சரியத்துடன் கவனித்தாள். ‘இல்ல என் மேலே பயமா?’

‘பயமா?’ என்றான் சேவுகப்பெருமாள் சிரித்தபடி

‘பயப்படாதே…எனக்கு மண்ணு இல்ல. மண்ணாசையும் இப்ப இல்ல’

சேவுகப்பெருமாள் அரிவாளை உறையுடன் எடுத்து மண்டபத்தில் வைத்துவிட்டு வந்து அவளருகே நின்று கும்பிட்டான். ராமலட்சுமி தீபத்தை தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டாள். அவனும் கண்ணில் ஒற்றிக்கொண்டான்.

‘பரவாயில்ல….திரும்பியே பாக்கலை….’ பண்டாரம் சிரித்தார் ‘ஏட்டி, அந்தப் பழத்திலே ரெண்டு எடுத்து இந்தப்பக்கமா போடு’

சேவுகப்பெருமாள் அரிவாளை எடுத்துக்கொண்டு ‘மண்ணாசை முன்னாடி இருந்திருக்கு….இல்ல?’ என்றான்

‘இருந்தது….உன்னைவிட பத்துமடங்கு மண்ணு. பத்துமடங்கு மண்ணாசை. அதனால பத்துமடங்கு பயம்.பத்துமடங்கு ஆயுதம்….’ பண்டாரம் சிரித்தார்

சேவுகப்பெருமாள் அவரையே கூர்ந்து நோக்கி நின்றான்

‘சரி போ…எங்கிட்ட பேசினா நீயும் வந்து அந்தத் திண்ணையிலே படுத்திரப்போறே’

சேவுகப்பெருமாள் ஏதோ சொல்ல வந்தபின் திரும்பி ராமலட்சுமி யிடம் ‘சீக்கிரம் வாடி’ என்றபின் படிகளில் இறங்கினான்.

‘சாமி அவல்பொரியும் வெல்லமும் சாப்பிடறீங்களா?’

‘போடம்மா அன்னலச்சுமி…கை நெறையப் போடு….உன் கையாலே பண்டாரம் ரெண்டுநாள் பசிய ஆத்திக்கட்டும்’

அவள் வாழையிலையில் பொரியும் அவலும் வெல்லமும் வாழைப்பழமும் கலந்து பண்டாரத்துக்கு எடுத்து வைத்தாள். அவர் எழுந்தமர்ந்து பழத்தையும் வெல்லத்தையும் அவலுடன் குழைத்தார். ராமலட்சுமி ஊற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து அவரருகே வைத்தாள்

பண்டாரம் முதல் உருண்டையை அருகே வந்த பெரிய ஆண்குரங்குக்குக் கொடுத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தார். ராமலட்சுமி கைகூப்பியபடி நின்றிருந்தாள். பண்டாரம் நிமிர்ந்து பார்த்து ‘ஒண்ணு சொல்றேன் கேக்குறியா?’ என்றார்

‘சொல்லுங்க சாமி’

‘பெத்தவளுக்கு ஒண்ணுரெண்டுபிள்ளை. பெறாதவளுக்கு ஊரெல்லாம் பிள்ளை’

அவளுக்கு குபுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது. ‘அதில்ல சாமி….இப்டி நெலம்நெலம்னு அலையுதாங்களே’

’எல்லா செடியும் மரமும் நெலத்தைத்தானே புடிச்சிட்டிருக்கு…விட்டா காத்து அடிச்சுட்டுப் போய்டும்ல?’

‘பிள்ளையில்லாம எதுக்கு சாமி இந்த மண்ணாச?’

‘பிள்ளை இல்லாததனாலதான்…’ பண்டாரம் சிரித்தார்.

ராமலட்சுமி அடிபட்டவள் போல எழுந்து விட்டாள். அவள் கால்கள் நடுங்கின. நிற்க முடியாமல் பின் வாங்கித் தூணைப் பிடித்துக்கொண்டாள்.

‘என்ன? என்றார் பண்டாரம் சிரித்துக்கொண்டு.

‘இல்ல சாமி’ என்று ராமலட்சுமி கைகூப்பினாள்

‘போ…காத்து நிக்கான் பாரு…’

தளர்ந்தநடையுடன் ராமலட்சுமி படிகளில் இறங்கினாள். வீடுவரை அவளால் ஒரு சொல்கூட பேசமுடியவில்லை.

[மறுபிரசுரம். முதற்பிரசுரம். Feb 20, 2013]

முந்தைய கட்டுரைநேரு – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபக்தியும் அறிவும்