சுமித்ரா- கடலூர் சீனு

நண்பர்களே , பொதுவாக என் இரவுகள் வாசிப்பில் கரையும் . இப்போதெல்லாம் இங்கு கடலூரில் , மாலை ஆறு மணி துவங்கி இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை ஒருமணிநேரம் மின்சாரம் வருகிறது . கொசுக்கடி . வாசிப்பு இன்பத்திற்கான முதல் வாசிப்பைக்கூட , அறுபடாமல் நிகழ்த்தி முடிக்க இயலாத சூழலில் இரு இரவு இழந்து , கல்பற்றா நாராயணனின் முதல் நாவலான ”சுமித்ரா ” முதல் வாசிப்பு முடித்தேன்

நவீனத்துவத்தை எனக்குள் இப்படி வரையறை செய்து வைத்துள்ளேன் . வீழ்ச்சியின் , தனிமைத் துயரின் கலைச் சித்தரிப்பு . ஜே ஜே சில குறிப்புகள் அதன் சிகரம் . எஸ் ராவின் உறுபசி வரை ஜே ஜே உண்டாக்கிய தாக்கத்தின் ஆழத்தைக் காண முடிகிறது . இன்றைய நாவல்கள் மேலும் தான் அள்ளும் வாழ்வின் விரிவை , அதன் எல்லைகளை விஸ்தரிக்க , நவீனத்துவம் முன்வைத்த தரிசனம் , வாழ்வெனும் வைரத்தின் ஒளிச்சிதறலின் ஒரு பட்டை மட்டுமே என்றாகிக்கொண்டிருக்கிறது

. எனினும் நவீனத்துவம் இதுவரை எட்டவியலாத கவித்துவ மொழியில் ,ஒரு நவீனத்துவ நாவல் ,சுமித்ரா . சுமித்ரா மரித்த நாளில் அவளது பிணம் கிடக்கும் கோலத்தில் துவங்குகிறது நாவல் . அவளது தகனம் வரை வந்து செல்லும் ,கணவன் மகள் , துவங்கி தோழியர் வரை அவர்களது நினைவில் விரியும் சுமித்ராவின் ஆளுமையே இக் கலையாக்கம்
.
அப்பு . செல்லமானவர்களுக்கு சூட்டப்படும் சிறிய பெயர் . ஒரு மீனின் துள்ளல் அளவே ,நீளம் கொண்ட பெயர் . இந்த ஒரு வரி போதும் முழு ஆக்கமும் எப்படி இருக்கும் என்பதை உணர்த்த . அப்புவின் பகல் கனவுகளில் காமம் . விளக்கை அணைத்தபின் எழும் முலைகளின் ஒளியில் எழுத்துக்களைப் படிக்கமுடியும் எனத் தோன்றியது . ஆம் கல்பற்றா எதையும் ”உள்ளது உள்ளபடி ” காட்டவில்லை . நம் அகத்திற்குத் தன் கவித்துவத்தால் ”உணர்த்திச் ‘ செல்கிறார் . நாவலில் நிகழ்சிகள் கோர்வையை விட , அதன் வழி நிகழ்வதை உணர்த்திச் செல்கிறார் . காமத்தில் தடம் புரளும் சீதா , மாதவி . தோழியாக கிடைக்கும் கறுப்பி , தாகம் தீராமல் சாகும் அப்புண்ணி , தந்தையின் இடத்திலிருக்கும் நரசிம்ம கௌடர் , சுமித்ராவுடன் ஒரு உறவுபோல கலந்துவிட்ட அவளது பழக்கலம் இல்லம் , அரிவாள் மணையால் வெட்டுப்பட்டு சாகும் சுபைதாவின் குட்டியானை என அனைத்து சித்திரங்களும் , கல்பற்றாவின் கவிநடையால் உச்சம் பெறுகின்றன .

பொதுவாக நவீனத்துவம் முன்வைக்கும் நம்பிக்கை வறட்சியை எதோ ஒரு நுண்ணிய அம்சத்தால் இந்நாவல் தாண்டிச் செல்கிறது . நாவலுக்குள்ளேயே தாசன் அதன் ஸ்தூலமாக வருகிறான் .இந்நாவலுக்குள் நிகழும் எதுகுறித்து எழுதினாலும் ,அது நம் முதல் வாசிப்பின் பரவசத்தைக் குறைத்துவிடும் என அஞ்சுகிறேன் . இதன் முதல் வாசிப்பு காதலியின் முதல் ஆலிங்கனம் போன்றது .

இதை நாவல் என்பதை விட நெடுங்கவிதை என்றே உணர்கிறேன் . கல்பற்றா நாராயணன் தமிழராக இருந்து இந்த நாவலை எழுதி இருந்தால் எத்தகைய மொழியாளுமையைப் பயன்படுத்தி இருப்பார் என உத்தேசிப்போமோ ,மொழி பெயர்ப்பாளராக அதை சாத்தியப்படுத்தும் மாயத்தை , வெற்றிகரமாக செய்திருக்கிறார் , கே .வி .ஷைலஜா . தமிழறிந்த எவரும் தவற விடக் கூடாத அனுபவம் .

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைநிழல்கள்
அடுத்த கட்டுரைஎஞ்சிய சிரிப்பு