கைதிகள் – கடிதங்கள்

ஜெ,

சமீபத்தில் நான் வாசித்த மகத்தான கதைகளில் ஒன்று கைதிகள். சமீபமாக நீங்கள் பழைய கதைகளை வெளியிடுவதனால் இதையும் பழைய கதை என்றே நினைத்தேன். நண்பர் சொன்ன பிறகுதான் வாசித்தேன். தர்மபுரியில் மண்ணும் வாசனையும் அற்புதமாக வந்திருக்கிறது. அதிலும் விடியற்காலையில் கேட்கும் அருவி ஓசை, நீரின் வாசனை எல்லாம்

அந்தக் குருவி. அது காட்டின் மனசாட்சி இல்லையா? அதன் சிறகடிப்பு நெஞ்சைப் பதறச்செய்தது

ஜெயமோகன் சார்,

கைதிகள் கதையைப் பற்றிய கடிதங்கள் இன்னேரம் உங்கள் inbox – ஐ நிரப்பியிருக்கும். எல்லோரும் சொன்னதையே நானும் சொல்ல வேண்டாம் என்று தான் கடிதம் எழுதல்.
ஆனா, நெடுங்குருதி பற்றிய உங்களது விமர்சனத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போது, நீங்களே எழுதியுள்ள இந்தப் பத்தி, கைதிகள் சிறுகதையின் கட்டுமானத்திற்கு 100% சதவீதம் பொருந்துகிறது, ஆகவே தங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன் :


காலயதார்த்தம் என்பது திட்டவட்டமானதோ வரையறை செய்யத்தக்கதோ அல்ல. அது வாசகர்களில் நாவல் உருவாக்கும் ஒருவிதமான நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கையை புனைகதைகள் பெரும்பாலும் ஆசிரியரின் அனிச்சையான சில தகவல் சுட்டிகள் மூலமே உருவாக்குகின்றன. திட்டமிட்டு அந்தக்காலகட்டத்தை உருவாக்கும் படைப்புகள் உண்டு அதைவிட ஆசிரியர் மனத்தில் அந்தக் காலகட்டம் என்றும்போதே வரும் சில காட்சிப்படிமங்கள், அவை அக்காலகட்டத்தின் சின்னங்களாகவே மாறி விட்டிருக்கும், மேலும் வலுவான கால உணர்வை உருவாக்கும். ஒரு வால்வ் ரேடியோ அறுபதுகளை நம் கண்முன் உருவாக்கிவிடும். பெல்பாட்டம் பான்ட் எழுபதுகளை உருவாக்கி விடும்.

கைதிகள் கதையில் காலயதார்த்தம் , நூதன் ஸ்டவ், எஸ் டி பைக், கோபால் பல் பொடி போன்றவற்றிலும், “எழுபத்தி ஏழுல ஒரு முறை” என்ற சொற்றொடரின் வாயிலாகவும் நுண்ணியமாக சொல்லியிருப்பது தங்கள் கலையின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

மற்றபடி கைதிகள் ஒரு கிளாசிக். பெருமாளின் ஞான குருவாக அப்பு மாறும் தருணம் நெகிழ வைத்தது.

நன்றி,

கிருஷ்ணன்.

முன் நின்று கல்நின்றவர்

அன்புள்ள எழுத்தாளருக்கு

நலமா?
இளங்கலை கோவையில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் தற்செயலாக ஆனந்த விகடனைப் புரட்டியபோது நாயக்கன் கொட்டாய் என்ற சொல்லைக் கண்டு சங்கச்சித்திரங்களின் ஒரு கட்டுரையை படித்தேன். அப்பு, பாலனைப் பற்றியது. அந்தச் சிலைகளை நான் மஞ்சமேட்டிலிருந்து தர்மபுரிக்குச் செல்லும் ஒவ்வொரு முறை யும் பார்த்திருக்கிறேன்.

பள்ளியில் படித்த அந்நாட்களில் நான் முனியப்பன் கோவில் சிலைகளுக்கு இருக்கும் காவலர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பருத்த அடிப்பாகங்களை கொண்ட புளிய மரங்கள் ,flouride காரை படிந்த பற்கள் என்ற வார்த்தைகள் மட்டுமே எனக்கு பரிச்சயமாக இருந்தன. கட்டுரையில் இருந்த கவித்துவம், கருத்துக்கள் எவையும் என்னுள் ஏறவில்லை . தொப்பி திலகம் மூலம் இணையத்துக்குள் வந்து உங்கள் படைப்புகளை புத்தகங்களாக படித்த பிறகு சங்கச்சித்திரங்கள் உங்களின் படைப்புகளில் முதன்மையாக்கி விட்டது . என் படுக்கையில் இருக்கும் புத்தகம் அதுவே.

நீங்கள் தர்மபுரி பற்றி எழுதவில்லை என்று கூறி வந்தாலும் தர்மபுரி குறித்த நினைவுகள் , நட்பு வட்டங்கள் சில சமயங்களில் வெளிப்படுத்துவது இருந்து கொண்டே இருக்கிறது. கைதி சிறுகதையைப் பாதி படிக்கும் முன்பே முன் நின்று கல் நின்றவரை இயல்பாகவே புரட்டிப் படித்தேன். கதை நீங்கள் பரிதாபமாகப் பார்க்கும் பார்வையில் ஆரம்பித்துக் குற்ற உணர்ச்சியுடன் முடிகிறது. சிறகடிக்கும் பறவை காட்டுவது மரணத்தின் மூலம் வலியின் விடுதலையை, குற்ற உணர்ச்சியை அல்லவா ? மூக்கனுர்பட்டி தங்கமணி அவர்களை சேலத்தில் தங்கள் நிகழ்ச்சியில் சந்தித்தபோது முன் நின்று கல் நின்றவர் பற்றி உரையாடினோம்.

நன்றிகள் பல!

தண்டபாணி

முந்தைய கட்டுரைபிரிவின் விஷம்
அடுத்த கட்டுரைஇஸ்லாம்-வஹாபியம்