பத்து மலையாளக் கவிதைகள்

எம் கோவிந்தன்
எம் கோவிந்தன்

 

 

நானும் சைத்தானும்

தேவனுக்கு உரியதை தேவனுக்கும்
தேசத்துக்கு உரியதை அதற்கும்
தந்துவிட நான் முன்வந்தபோது
ஒருவன் என் முன் வந்து சொன்னான்
“எனக்குரியது எனக்கே” என.
‘யார் நீ” என்றேன்
“தெரியாதோ சைத்தானை?” என்றான்
“அப்படியானால் கேள்
என்னுடையதெல்லாமே எனக்கே
என்பதே என் வேதம்”
என்றேன்
‘என்னுடையதை தந்தாய் நன்றி ”
என்று சிரித்து போனான்,
சைத்தான்

– எம் கோவிந்தன் –

 

ayyappa
அய்யப்பப் பணிக்கர்

 

குதிரை நடனம்

நான்கு பெரும் குதிரைகள்
அலங்கரித்துவந்தன.
ஒன்று வெள்ளை ஒன்று சிவப்பு.
ஒன்று கருமை ஒன்றுக்கு தவிட்டுநிறம்.

ஒன்றுக்கு நான்குகால்.
ஒன்றுக்கு மூன்றுகால்.
மூன்றாவதற்கு இரண்டுகால்.
நான்காவது ஒற்றைக்காலன்.

ஒற்றைக்கால் குதிரை சொன்னது,
மற்றவற்றிடம்
நடனத்துக்கு நேரமாயிற்று தோழர்களே
நாம் ஒற்றைக்கால் நடனம் ஆடுவோம்.

நடனம் தொடங்கியது .

நான்குகாலன் நடுங்கி விழுந்தது.
மூன்றுகாலன் மூர்ச்சையாயிற்று.
ரெட்டைக்காலன் நொண்டியடித்தது.

ஒற்றைக்காலன் குதிரை மட்டும்
நடனம் தொடர்ந்தது.

– அய்யப்ப பணிக்கர் –

 

ஆற்றூர் ரவிவர்மா
ஆற்றூர் ரவிவர்மா

ஒற்றையானையின் மரணம்

 

ஒற்றை யானையின் பிளிறலைகேட்டபடி
கட்டிமுடியாத வீடுகளின்
அடித்தளம் மீது நடப்பவன் எண்ணிக் கொண்டான்,
காடு தொலைவிலா அருகிலா?
அந்திமீது
அடர்கானக அமைதியும் குளிரும்
படிந்துள்ளன.
ஆனால் சுற்றிலும்
கட்டிமுடிவடையா மாநகர்.
காலியான தெருக்கள்.
விரிந்தகன்ற மைதானங்கள்.
குறுக்கும் நெடுக்கும் மொட்டைமேடுகளின்
முடிவற்ற வரிசை.
எங்கோ கடலின் நினைவு.

தொலைவில்
குண்டடிபட்ட யானையின் கடைசி பிளிறல்.
கரைந்து மறைந்தது சோகம்.
துடித்துசரிந்த வானச்செம்மையை
உண்டு களித்தது இரவுக்கருமை.
நானோ
முளியான மேடுகளினூடாக
எங்கெனத்தெரியாமல்
நடந்துகொண்டிருக்கிறேன்.

 

ஆற்றூர் ரவிவர்மா

 

attoor

பிறவி

கண்மூடினாலும் திறந்தாலும்
வேறுபாட்டு இல்லா இருளில்
சொன்னதையே சொல்கிறது
என்காதில் பெருமழை.

மழைபெய்யலாமென எண்ணாமலோ
இருண்டுவிடுமென அறியாமலோ
கிளம்பியவனல்ல நான்
எதற்கென்றா?
முழுக்க சொல்லவில்லை என்னிடம் கூட
அத்தனை ரகசியம்.

மழை ஓயக் காக்கவோ
விடியும்வரை தரிக்கவோ
முடியாத தவிப்பு.

கூவினேன் குரல்
துணையின்றி திரும்புகிறது
வாரிக்கொட்டிய இருளெல்லாம்
குன்றென குவிந்தது.

புள்ளிகள் நிறைந்த வானம் என்னுடன்
நான்குகாலில் நடந்தது.

காட்டுதீ எரிவதைபோல ஏதோ
கண்மூடினாலும் தெரிகிறது.
கடல்பொங்குதல் போலொன்று
கால்களில் அலைக்கிறது
புயல்போல பேரிரைச்சல்
காதுகளில் நிறைகிறது,.

பூமியின் பிரசவ வலி,
தீயல்ல காற்றல்ல கடலல்ல
யாதவர் குலத்திலோ
இடையர் குடிலிலோ
பூமியில் ஒரு குழந்தை பிறக்கிறது.

எங்கேஎன்று தெரியாமல்
எவ்வழி என்றும் அறியாமல்
முன்னோக்கி செல்லவும் முடியமல்
பின்னோக்கி நகரவும் முடியாமல்
கிளைகளினால் துழாவுகிறேன்.
வேர்களினால் தேடுகின்றேன்.

– ஆற்றூர் ரவிமர்மா –

சச்சிதானந்தன்
சச்சிதானந்தன்

சக்ரட்டீஸ¤ம் கோழியும்

உன்னையே அறிவாயாக
ஒரு மாலைநேரத்தில் விஷக்கோப்பை
அவன் காதில் சொன்னது.
வீட்டுக்குள் அனுமதிக்கா மனைவியிடமிருந்தும்
வசைபாடும் குழந்தைகளிடமிருந்தும்
தன்னை காத்த சகமனிதர்களுக்கு
நன்றிசொல்லி சிரித்தபடி
அவன் தன் கால்முதல் தலைவரை
படர்ந்த சில்லிப்பால்
மரணத்தை நிர்ணயித்தான்

அஸ்க்ளோப்பீஸ¤க்கு தரவேண்டிய
கோழியைப்பற்றி கிரீட்டோ மறந்துவிட்டான்.
பிளேட்டோவும் அரிஸ்டாடிலும்
சிண்டைப்பிடித்துக் கொண்டது அதற்காகவே
கடனுக்காகன வட்டி ஏறி எறி
கிரீஸையே விழுங்கியது

கோழிகள் என்ன அறியும்
கலாச்சாரத்தைப் பற்றி இல்லையா?

– கெ சச்சிதானந்தன் –

 

sachi

சிலைகள்

 

இன்று எங்கள் மகாகவிஞன் சிலை
இந்த தெருவழியாக சென்றது.
எழுத்துக்களும் அசைவுகளும் அற்ற
வெண்கல உதடுகள் மீது
இரு ஈக்கள் இணைசேர்ந்தன.
சுழிகளும் அலைகளும் எழுப்பிய
சுட்டுவிரலில்
ஒருகாகம் வந்தமர்ந்து மலமறுத்து திரும்பியது.
இதே தெரு வழியாகத்தான்
முன்பு எங்கள் நாட்டை ஆணிடிருந்த மன்னர்பிரானின்
கருங்கல் சிலையும் சென்றது.
இன்று அவர் கம்பீரம் குலையாமல்
நாற்சந்தியில் போக்குவரத்தை கட்டுப்படுத்துகிறார்.
பிறகும் எத்தனை சக்கரவர்த்திகள்
ராஜதந்திரிகள் மக்கள் தலைவர்கள்
கவிஞர்கள் படைத்தலைவர்கள்
இந்த தெருவழியாகக் கொண்டு செல்லப்பட்டனர்
அனைவரும்
நகரத்தெருக்களுக்கு திருஷ்டிப்பொம்மைகளாக ஆயினர்.
சட்டென்று
உயிருள்ள அனைத்தையும் தொட்டு சிலையாக்கும் சூனியக்காரியாக
காலம் என் முன் வந்து நிற்கிறது.

இறப்பது என்றால்
திருஷ்டிப்பொம்மையாக மாறுவதென்று அர்த்தம்.

– கெ சச்சிதானந்தன் –

கே ஜி சங்கரப்பிள்லை
கே ஜி சங்கரப்பிள்ளை

 

பல்லிவால்

பல்லியின் முறிந்து விழுந்த வால்
அமைதியாக திரும்பி பார்த்தது.

அதோ இருக்கிறதென் பல்லி.
ஏதும் நிகழ்ந்த சாடையே இல்லை.
பூவைப்பிரிந்த கொடி என
கண்ணீர்துளி உதிர்ந்த கவிஞன் என
அதோ இருக்கிறதென் பல்லி.

‘சென்றது நினைந்து வருந்தா
பண்ணித சிரேஷ்டனாய்’
அதோ இருக்கிறதென் பல்லி.

யாரோடும் எந்தவிதமான பகையும் இல்லாமல்
பிரபலமான அந்த
‘மதிப்பீட்டுச் சரிவுத்துயரம்’ கூட இல்லாமல்
அதோ இருக்கிறதென் பல்லி.
பின்பக்கம் தன்னைவிட பெரிய நிழலுடன்
அதோ இருக்கிறதென் பல்லி.
புதிய இரையோ துணையோ காத்து
அதோ இருக்கிறதென் பல்லி.

– கெ.ஜி.சங்கரப்பிள்ளை –

 

kg

திரும்புதல்

மியூசியமருகேபூங்காவில்
பென்ஷன் வெயில்.
முன்னாள் மந்திரி முன்னாள் நீதிபதியிடம் சொன்னார்.

‘இந்த பூங்கா நான் கட்டியது.
இதோ கற்பலகையில் பெயர் .
இளஞ்சிவப்பு மலர்களுடன் இந்த பூமரம்.
நான் சமத்துவ புரியிலிருந்து கொண்டுவந்தது.
அங்கே நாடெங்கும் ந்கரமெங்கும் இந்தப்பூக்கள்தான்.
கொண்டுவரும்போது சிவப்பு.
ரத்த மலர்கள் என்றார்கள்.

தேவாலயங்கள் கோயில்கள் நிரம்பிய மண்ணின்
வெண்ணிறக்காற்றில் இவை நிறம்கரைந்தன.
காவியின் மண்ணில்
இன்று இவையும் காவி நிறம்.

– கெ.ஜி.சங்கரப்பிள்ளை –

 

a ayya
ஏ அய்யப்பன்

 

இரவுணவு

கார்விபத்தில் இறந்த வழிப்போக்கனின்
ரத்தம் மிதித்து கூட்டம் நிற்க
செத்தவன் பையிலிருந்து பறந்த
ஐந்துரூபாய் நோட்டில் இருந்தது என் கண்.

நான் இருந்தும் தாலி அறுத்த மனைவி.
என் குழந்தைகளோ
பசியின் நினைவுப்பொம்மைகள்.

இன்றிரவு இரவுணவின் ருசியுடன்
என் குழந்தைகள் உறங்கும்.
என் மனைவிக்கும் எனக்கும் அரைவயிறு ஆனந்தம்.

செத்தவனின் பிணப்பரிசோதனையோ அடக்கமோ
இந்நேரம் முடிந்திருக்கும்.
நினைத்துக் கொண்டேன்
ரத்தம் மிதித்து நின்ற கால்களை.

வாழ்பவர்களுக்கு வாய்க்கரிசியிட்டு
செத்தவனை.

– ஏ.அய்யப்பன் –

 

ஆற்றூர் ரவிவர்மா
ஆற்றூர் ரவிவர்மா

இருப்பு

 

ஒரே இருப்பில் நான் பல வேலைகள் செய்கிறேன்
பொடிக்கவும் கலக்கவும் அரைக்கவும் செய்கிற
சமையல் யந்திரம் போல.
ஒரே நாவினால் பல மொழிகள் பேசுகிறேன்
காரமும் இனிப்பும் புளிப்பும் மாறி மாறி பரிமாறும்
ஓட்டல்தட்டுபோல.
நுழைந்து அமர்ந்து மறையும்
கதாபாத்திரங்கள் மீது மின்விசிறிபோல
மாறாத வேகம் நான்.
ஒரேநொடியில் எரியத்தொடங்கும் ஒளிபோல
எப்போதும் கவனமானவன்.
என் இருப்பும் பார்வையும் நடிப்பும்
கதகளி நடிகன் போல
கனகச்சிதம்.
பாத்திரத்துக்கு ஏற்ப உருமாறுவதும்
நிறமோ மணமோ ருசியோ அற்றதுமான
தூய்மை நான்.

– ஆற்றூர் ரவிவர்மா –

[தற்கால மலையாளக் கவிதைகள் என்றபேரில் தொகுப்பாக 1989ல் வெளிவந்த நூலில் உள்ள கவிதைகள் இவை. மதுரை பல்கலைகழகத்துக்கு இவை பாடமாக வைக்கப்பட்டன. மாணவர்களுக்கு கவிதை வாசிப்புக்கு உதவும்பொருட்டு அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி தமிழ்துறையால் ஏற்பாடுசெய்யப்பட்ட கூட்டத்தில்பேசியவற்றின் பதிவு இவ்வுரை ]

 

மறுபிரசுரம் -முதல்பிரசுரம் Mar 31, 2005 @ 5:05

 

கல்பற்றா நாராயணன் கவிதைகள்

http://jeyamohan.in/?p=341

http://jeyamohan.in/?p=331

மலையாளக்கவிதை பற்றி

http://jeyamohan.in/?p=342

http://jeyamohan.in/?p=340

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34