அன்புள்ள ஜெ
மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்களை நீங்கள் கண்டித்திருப்பதைக் கண்டேன். இந்தத் தருணத்தில் மனுஷ்யபுத்திரனின் குரலுக்கு எந்தவகையான விளைவுகள் இருக்குமென நினைக்கிறீர்கள்?
கே.ராமச்சந்திரன்
அன்புள்ள ராமச்சந்திரன்,
எல்லா மதங்களிலும் இரு வகையான தேக்கங்கள் உருவாகும். அதன் உலகியல் ஒழுக்க அடிப்படைகள் காலப்போக்கில் பழமையானவையாக ஆகும். அதன் ஆன்மீகத்துக்கான விளக்கங்கள் பொருந்தாமல் போகும். அந்நிலையில் அவற்றை மாற்றுவதற்கு எதிரான குரல்கள் எழும். மதச்சீர்திருத்தம் என நாம் சொல்வது அதையே
மதத்தின் ஆன்மீக உள்ளடக்கத்தையும் அதன் உலகியல் நடைமுறைகளையும் பிரித்தறிய முடியாதவர்கள் அதை மூர்க்கமாக எதிர்ப்பார்கள். மதத்தை ‘அச்சு அசலாக’ அப்படியே பின்பற்றவேண்டுமென வாதிடுவார்கள். நூல்களைச் சுட்டிக்காட்டுவார்கள்.
இந்துமதத்திலும் குழந்தைமணம் முதல் பெண்களுக்குச் சொத்துரிமை வரை தீண்டாமை முதல் ஆலயப்பிரவேசம் வரை இதேபோன்ற மூர்க்கமான எதிர்ப்புகள் நிகழ்ந்துள்ளன. அவற்றை மீறியே இங்கே மாற்றங்கள் வந்தன. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கிறித்தவமதத்தில் அத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தன.
அவை மதத்துக்கு எதிரானவை அல்ல. உண்மையில் அவை மதத்தை செம்மைப்படுத்துபவை. மதத்தின் ஒளியை மறைக்கும் ஒட்டடைகளை நீக்குபவை. அதை உண்மையான ஆன்மீகவாதிகள் புரிந்துகொள்வார்கள்.
உலக அளவில்கூட இஸ்லாமிய மதத்தில்தான் சீர்திருத்தக்குரல் மிகக்குறைவாக எழுகிறது. அக்குரல்கள் கொடுமையாக ஒடுக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் இஸ்லாம் இன்னும் இருவகை அடிப்படைவாதிகளிடம் சிக்கியிருக்கிறது. சம்பிரதாயவாதிகள். தூய்மைவாதிகள்.
வஹாபியர்கள் என்ற பேரில் இன்று அறியப்படுபவர்கள் தூய்மைவாதிகள். குர்ஆனை ’அப்படியே’ விளக்கிக்கொள்பவர்கள். அதாவது அது ஆயிரம் வருடம் முன்பு எப்படி விளங்கிக்கொள்ளப்பட்டதோ அதையே இன்றும் கடைப்பிடிக்கவேண்டும் என்பவர்கள்அவர்களுடையது ஓர் சர்வதேசிய இஸ்லாமிய அரசியலே ஒழிய ஆன்மீகமோ மதமோ அல்ல.
இன்றைய சூழலில் இந்த அடிப்படைவாதிகளை எதிர்ப்பதே உண்மையான ஆன்மீகத்திற்கான குரலாக இருக்கமுடியும். எந்த வகையில் எழுந்தாலும் அக்குரல் மிக ஆக்க்பபூர்வமான விளைவுகளையே உருவாக்கும்.
ஒரு சராசரி இஸ்லாமியன் ஜெய்னுலாப்தீன் போன்றவர்கள் வெளிப்படுத்தும் அநாகரீகமான வசைகளை மூர்க்கத்தை ஒருபோதும் ஏற்க மாட்டான் என்றே நினைக்கிறேன்.
ஜெ
அன்புள்ளஜெ
மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக நீங்கள் எழுதிய கட்டுரை கண்டேன்
ஜெய்னுலாப்தீனின் பேச்சை யு டியூபில் கேட்டீர்களா?
கருணாகரன்
அன்புள்ள கருணாகரன்,
இந்த ஜெய்னுலாப்தீன் தான் தொலைக்காட்சிகளில் அன்பையும் அமைதியையும் பொழிபவர். இஸ்லாம் இனிய மார்க்கம் என்ற பேரில் இனித்து இனித்து உருகுபவர். அவர்களுடைய ஒரு கூட்டத்தில் அவர் பேசும் மொழியில் உள்ள மூர்க்கமும் கசப்பும் அநாகரீகமும் அவர் உண்மையில் எவரெனக் காட்டுகின்றன
இதுதான் வஹாபியத்தின் உண்மை முகம். குர் ஆனின் வசனங்களை வாய்ப்பாகப் பயன்படுத்தி அவர்கள் கொடுக்கும் திரைநடிப்போ மேடைநடிப்போ அல்ல. இந்த முகம் ஆவணப்படுத்தப்பட்டாகவேண்டும்
நேற்றுவரை இவர்களை எதிரியின் எதிரி என்ற கணக்கில் தூக்கிக் கொண்டாடிய ஒவ்வொருவரும் அறிந்தாகவேண்டிய முகம் இது.
கமலஹாசன் -சுருதி பற்றிய அவரது பேச்சு தமிழ்ச்சமூகத்திற்கே அவமதிப்பு. இந்த மனிதனை இஸ்லாமின் பிரதிநிதியாக எண்ணுபவர்கள் இஸ்லாமை அவமதிக்கிறார்கள்
ஜெ