செய்தொழில்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


செய்தொழில் பழித்தல்என்ற பெயரில் நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரை அருமை. என் வாழ்க்கையிலும் இதை நான் காண்கிறேன். இதை மேலை நாடுகளில் கண்கூடாக காண்கின்றேன் அவரவருக்கு விருப்பமானதை படிக்கிறார்கள் அந்த அந்த துறைப் பணிகளை ஈடுபாடோடு செய்கிறார்கள் இதனால் பல கண்டுப்பிடிப்புகளை தத்தமது துறைகளில் சாதனைகள் புரிய முடிகிறது. இதன் உதாரணத்தை நம் தமிழ் இணையத்திலேயே காணலாம் பல தமிழ் எழுத்துருக்களும் , திறந்த மூல (Open Source) மென்பொருட்களும் தன்னார்வத்தினால்தான் வந்ததேதொழிய யாரும் கட்டாயப்படுத்தியதால் ஏற்படவில்லை. கணிப்பொறி துறையினரின் (நான் உட்பட) புலம்பகளுக்கு நான் நினைக்கும் மேலும் சில காரணங்கள் 1) கணிப்பொறி நிறுவனங்கள் பெரும்பாலும் முதலாளித்துவ கோட்பாடுகளை கையாளுகின்றன‌. தங்கள் ஊழியர்களை உயிருள்ள மெஷின்களாக மட்டுமே இவர்கள் பார்க்கின்றனர். அவர்கள் குறிக்கோள் எல்லாம் பணம் மீது தான். கோடிக்கணக்கில் உள்ள லாபத்தில் சில கோடிகள் குறைந்தாலும் இவர்கள் முதலில் குறிவைப்பது ஊழியர்களைத்தான். லாபம் சிறிது குறைந்தால் என்ன நம் ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இந்த நிறுவனங்கள் ஒரு ஆட்கள் சப்ளை செய்யும் மையம் போலத்தான் செயல்படுகின்றவனவே தவிர சமூக பொறுப்புடன் செயல்படும் நிறுவனங்களாக செயல்படவில்லை. 2)எப்பொழுதும் ஒரு பந்தயக் குதிரையின் மனோநிலையில் இத்துறையினர் உள்ளதால் பலர் மனரீதியில் , உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர். நன்றி,
ராம்குமரன்

மதிப்பிற்குரிய ஜெ,
நலம் தானே. நண்பர் ராம் அவர்களின் கேள்விக்கு உங்களின் பதில் மிக அருமை.
 
நானும் ஒருமுறை உங்களிடம் “நான் ஒரு ஏழை மூளைக் கூலித் தொழிலாளி” என்று கூறினேன். இது செய்தொழில் பழித்தலல்ல. மாறாக இது ஒரு பணிவு. அடையமுடியாத இடத்தை அடைந்துவிட்டால் வரும் அடக்கம். சிலருக்கு அகங்காரம் வருவது போல்.
 
“ஒருவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதற்கான துறையை தானே தேர்வுசெய்துகொள்வது அனேகமாக சாத்தியமில்லாமல் இருக்கிறது. பலசமயம் அபப்டி தெரிவுசெய்துகொள்வது நம் பொருளியல் சூழலில் தற்கொலைக்கு நிகரான செயலாகவும் இருக்கிறது.” – இது என் வாழ்கைக்குச் சொந்தமான வரிகள். ஒரு சிறு மாற்றத்துடன். தற்கொலையல்ல. “வென்றால் வாழ்வு இன்றேல் சாவு” – என்னும் வைராக்கியத்துடன் என் துறையை நானே தேர்வு செய்தேன். இன்று வாழ்கின்றேன்.
 
வருடம் 1996. நான் புனித சவேரியார் கல்லூரியில் கணிதம் முதுநிலை படித்துவிட்டு அடுத்து என்ன என்று விடைதெரியாத கேள்வியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலகட்டம். நண்பர்கள் பிஎட் முடித்தால் ஆசிரியர் வேலைக்குச் செல்லாமே என்று அறிவுரை சொன்னார்கள். எனது ஊரில் உள்ள அனைத்து நண்பர்களும் இதைத்தான் செய்துகொண்டிருந்தார்கள். (பின்னர் அனைவருக்கும் பலவருடம் கழித்து ஆசிரியர் வேலை கிடைத்தது சந்தோசமான விஷயம். ஒருவருக்கு பதிமூன்று ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு, இந்த ஆண்டு.)
 
பி எட் படிக்க எனது பொருளாதாரம் அவ்வளவு செழிப்பானதல்ல. வலை வாங்குவதற்கு அப்பா வங்கியிலிருந்து வாங்கிய பத்தாயிரம் ருபாய் கடனை முதுநிலை படிக்க பயன்படுத்தியாகிவிட்டது. அப்பாவிற்கு ஆஸ்துமா உண்டு. அதனால் அவரால் மீன்பிடிக்கச்செல்ல முடியாது. அம்மா சந்தையில் மீன் விற்றுக் கொண்டுவரும் சொற்பக் காசில்தான் மூன்று பெண் நான்கு ஆண் குழைந்தைகள் உள்ள குடும்பத்தை காப்பாற்றிக் கொண்டிருந்தார். நான் மூத்தவன். கல்யாண வயதில் இரண்டு தங்கைகள். எனவே இன்னும் படிப்பது பற்றி யோசிக்க முடியவில்லை. எனவே பி எட் முடித்தாலும் அந்த சம்பளத்தை வைத்து இந்த பெரிய குடும்பத்தை சமாளிப்பது இயலாத காரியம். எனவே ஆசிரியர் வேலைக்கு முற்றுப்புள்ளி. எனக்கு கணிதத்தில் ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்று தணியாத ஆவல். அதை இப்போது நினைத்துப் பார்க்க முடியவில்லை.
 
எப்படியாவது ஒரு தரமான நல்ல கைநிறைய சம்பளம் தரும் வேலை வேண்டும். அதுவும் உடனே வேண்டும். நான் படித்த கல்விக்கு எங்கே உடனே வேலை கிடைக்கும். ஆங்கிலம் சுத்தம். எனது ஒரு ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி ஒரு மென்பொருள் பயிற்ச்சி வகுப்பிர்க்குச்செல்ல முடிவாகியது. (குரு தெய்வத்திகுச் சமம் என்பதை உணர்த்தியவர்). அவர் சொன்ன வேத வாக்கு: மென்பொருள் பயிற்ச்சி முடித்துவிட்டு சென்னைக்கு ஓடிவிடு என்பதுதான். பாளையம்கோட்டையில் எனக்குத் தெரிந்த ஒருவரின் வீடு யாரும் வசிக்காமல் சும்மா கிடந்தது. அதில் தங்கி ஆரக்கிள் மற்றும் விசுவல் பேசிக் என்னும் இரண்டு மென்பொருள் பயிற்ச்சி வகுப்பிற்கும், மாலையில் வங்கி அலுவலர்கள் நடத்தும் வங்கி தேர்வு பயிற்ச்சி வகுப்பிற்கும் சென்றுகொண்டிருந்தேன்.. இரவில் IAS தேர்விற்கு என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். இப்படி சுமார் மூன்று மாதம் சென்றது.
 
ஒருநாள் வங்கி தேர்வு பயிற்ச்சி வகுப்பில் மன உறுதி குறித்து சொற்பொழிவார்ற  ஸதக்கத்துல்லாஹ் கல்லூரியின் கணினிப் பிரிவு தலைவர் வந்திருந்தார். சொற்பொழிவின் முடிவில் ஒரு கணிதப் புதிர் போட்டுவிட்டு அதற்குப் பதில் சொன்னால் தனக்குச் சொந்தமான கணினி பயிற்ச்சி மையத்தில் வேலை தருவதாகச்சொன்னார். அந்தப் புதிரின் விடை அவரது தொலைபேசி எண். நான் அந்த புதிருக்கு விடை கண்டுபிடித்து அவரை தொடர்பு கொண்டபோது என்னை அவரது வீட்டிருக்கு அழைத்து அவரது பயிற்ச்சி மையத்தில் ரூ.600 சம்பளத்தில் வேலைக்குச் சேர்த்துக்கொண்டார். அங்கிருந்து எனது மென்பொருள் திறனை வளப்படுத்திக் கொண்டேன்.  புதிய மென்பொருள் கற்பதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. காரணம் +2 மற்றும் கல்லூரியில் எனது சிறப்புப் பாடம் கணினி. இப்போது மென்பொருள்தான் எனது இலக்கு என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். முடிவில் 1996 டிசம்பர் 31-ம் நாள் சென்னைக்குச் செல்ல முடிவாகியது.
 
சென்னை சென்றதும் எனது சம்பளக்கனவு மெதுவாக நினைவாகியது. இந்தியாவில் நான் கடைசியாக 2005-ல் வாங்கிய மாதச் சம்பளம் ரூ.75,000/-. ( இப்போதெல்லாம் தற்ப்போதைய சம்பளத்தை வெளியில் சொல்வதேயில்லை. :) ). இந்த இலக்கை அடைய சென்னையில்  நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதற்குச் சமமாக உல்லாசமாகவும்.
 
மூன்று தங்கைகளுக்கும் திருமணம் முடிந்தது. (நான்?) கட்டிய பெரிய வீட்டில் எனது பெற்றோர். மூன்றாவது தம்பியை இந்த வருடம் பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டும்.
 
நான் இப்போது செய்வதும் எனது கனவு வேலை. ஆம் ஒரு மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் பொறியலாளர் செய்யும் வேலை. எம்பட்டட் சிஸ்டம் மென்பொருள் ஆய்வாளன். நான் வேலைபார்க்கும் பௌதிக ஆராய்ச்சி நிறுவனம் தயாரிக்கும் உற்பத்திப் பொருள் நாசாவிற்க்கும் செல்கின்றது. இப்போதெல்லாம் காசு சேர்க்க வேண்டுமென்று ஆசையில்லை.. இப்போதெல்லாம் என் மனம், நீங்கள் சொல்வதுபோல், இதுவல்ல என்வேலை என்று வேறு எங்கோ அலைபாய்கின்றது. இப்போது எழுத்தின் மீது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
 
இப்போது சொல்லுங்கள் நான் ஒரு ஏழை மூளைக் கூலித்தொழிலாளி தானே?
 
 
 நட்புடன்
 கே
அன்புள்ள ஜெ
செய்தொழில் பழித்தல் என்ற உங்கள் கட்டுரையை மீண்டும் மீண்டும் படித்தேன். எனக்கு நான் செய்யும் வேலை சம்பந்தமாக இருந்த பெரிய மனச்சிக்கலுக்கு அது பதிலாக அமைந்தது. கம்ப்யூட்டர் வேலைக்கு வந்தததனால்தான் என்னுடைய குடும்பம் இன்று வசதியாக இருக்கிறது. இல்லாவிட்டால் அரைப்பட்டினிதான் கிடந்திருப்போம். ஆனால் இது என்னுடைய வேலை இல்லை என்ற நினைப்பும் அடிக்கடி வரும். மிகுந்த மனச்சோர்வும் ஏற்படும். இது என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று எண்ணிக்கொள்ளும்போது எங்காவது ஓடிவிடலாமா என்ற நினைப்பு வரும். ஆனால் இந்தவேலைக்கு நான் நன்றியுடன் இருக்கவேண்டும் என்றும் நினைப்பேன். இரு எண்ணங்களையுமே எப்படி சமனப்படுத்திக்கொள்வது என்று உங்கள் கடிதம் காட்டியது
நன்றி
ஜெயராமன்.

முந்தைய கட்டுரைவரலாற்றை வாசித்தல்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅயன் ரான்ட் -4