மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்

இலங்கையைச்சேர்ந்த சிறுமி ரிஷானா நஃபீக் சவூதி அரேபியாவில் முறையான விசாரணை இல்லாமல் கொடூரமான முறையில் கொல்லப்பட்டமைக்கு எதிராக மனுஷ்யபுத்திரன் நக்கீரனில் எதிர்வினையாற்றியிருந்தை இப்போதுதான் வாசித்தேன்.

ரிஷானா சவூதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் கழுத்துவெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரிஷானா செய்த குற்றம் ஒரு குழந்தையின் மரணத்துக்குக் காரணமாக அமைந்தது. அக்குற்றத்துக்கு ஆதாரமாகச் சொல்லப்பட்டது அவரே அளித்ததாக முன்வைக்கப்பட்ட ஒரு வாக்குமூலம். அந்த வாக்குமூலம் அவருக்குத் தெரியாத மொழியில் இருந்தது, அவர் அதில் கையெழுத்திடச்செய்யப்பட்டிருக்கிறார்.

தன்னந்தனியாக சவூதியரேபியா சென்ற ,படிப்பறிவில்லாத முதிரா இளம்பெண்ணான ரிஷானா, அவளுடைய தரப்பை எடுத்துரைக்க எந்த வாய்ப்பும் அளிக்கப்படாமல் விசாரணைசெய்யப்பட்டுக் கடைசியில் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.

உலகமெங்கும் குற்றநடைமுறைச்சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் காவலில் இருக்கையில் அளித்த வாக்குமூலம் ஆதாரமாகக் கருதப்படுவதில்லை. சவூதி அரசின் ஷரியா சட்டம் அதைக் கருத்தில் கொள்ளவில்லை. எந்தக் குற்றத்திற்கும் நோக்கம் [மோட்டிவ்] ஒரு முக்கியமான ஆதாரம். ரிஷானா விஷயத்தில் அதுவும் கருத்தில் கொள்ளப்படவில்லை.

மரணதண்டனை அமுலில் உள்ள நாடுகளில் கூடத் திட்டமிட்ட தொழில்முறைக் கொலைக்கு மட்டுமே மரணதண்டனை வழங்கப்படுகிறது. அதாவது அரிதினும் அரிது என்று வகைப்படுத்தப்பட்ட குற்றங்களுக்கு. அதுவும் தெளிவான புறவய ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே அது அளிக்கப்படும்.

மரணதண்டனை மிகச் சாதாரணமாக அளிக்கப்படும் நாடுகளில்கூட அது இளம்குற்றவாளிகளுக்கோ பாலூட்டும் அன்னையருக்கோ அளிக்கப்படுவதில்லை. இங்கு அந்த கருணை எதுவும் காட்டப்படவில்லை.

உலகமே மனிதாபிமான நோக்கில் மன்றாடியும்கூட சவூதி இணங்கவில்லை. இஸ்லாமிய ஷரியா சட்டத்துக்கு ஒப்பவே தான் செயல்படுவதாகச் சொல்லிவிட்டது

மனுஷ்யபுத்திரன் மிக நிதானமாகவும் கவனமாகவும்தான் எதிர்வினையாற்றியிருக்கிறார். அவர் இஸ்லாமுக்கோ ஷரியாவுக்கோ எதிராக எதுவும் சொல்லவில்லை. ஷரியா சட்டம் இப்படி இயந்திரத்தனமாகக் கையாளப்படக்கூடாது என்று அவர் சொல்கிறார்.சட்டங்களை சமகால மனிதாபிமானநோக்கு வழிநடத்தவேண்டும் என்று சொல்கிறார்

அதற்குத் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பும் அதன் தலைவரான ஜெய்னுலாபிதீன் அளித்திருக்கும் கீழ்த்தர எதிர்வினை மிகமிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இஸ்லாமின் எதிரிகள் அல்ல, இஸ்லாமைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சவூதி அரேபியா போன்ற அரசுகளும் , எந்தவிதமான மனிதாபிமானமும் இல்லாமல் அவர்களை ஆதரிக்கும் இந்த மதவெறிக்குழுவினரும்தான் இஸ்லாமைக் கேவலப்படுத்துகிறர்கள் என்பதை இஸ்லாமியர் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தத் தருணத்தில் மனுஷ்யபுத்திரன் எடுத்திருக்கும் நிலைப்பாட்டுக்காக, அவரது தன்னம்பிக்கைக்காக அவரைப் பாராட்டுகிறேன். இந்த எதிர்ப்புகளையும் வசைகளையும் தாண்டிச்செல்லும் வல்லமையை அவரது கவிமனம் அவருக்கு அளிக்கட்டும்.

இத்தருணத்தில் தமிழில் கருத்துரிமைக்காகக் குரல்கொடுக்கக்கூடியவர்கள் அனைவரும் கருத்துவேற்றுமைகளைத் தாண்டி மனுஷ்யபுத்திரனுடன் இணைந்திருக்கவேண்டும் என்று கோருகிறேன். இந்தவகை மிரட்டல்கள் வசைகள் மெல்ல மெல்ல ஒரு கருத்துச்சூழலையே அழித்துவிடும் தன்மை கொண்டவை.

*

மனுஷ்யபுத்திரன் கட்டுரை


ஜெனுலாபிதீன் கட்டுரை [
மனுஷ்யபுத்திரனின் உடல் ஊனம் சம்பந்தமான வசைகள் பிற்பாடு நீக்கம் செய்யப்பட்டுள்ளன]


வினவு கட்டுரை


இந்து செய்தி


மனுஷ்யபுத்திரன் பதில்


மனுஷ்யபுத்திரன் பேட்டி

முந்தைய கட்டுரைஓர் அமரகாதல்
அடுத்த கட்டுரைவற்கீஸின் அம்மா