பாலகுமாரன்

வணக்கம்

உங்கள் வலைப்பூவையும் புத்தகங்களையும் தொடர்ந்து வசித்துவருகிறேன்; புனைவை விட உங்கள் வாழ்வனுபவங்களும் அதை எழுதுவதன் மூலம் நீங்களும், படிப்பதனால் வாசகர்களும் கண்டடையும் சிந்தனைதளங்களுமே என்னை படிக்க செய்கின்றன,

சமீபத்தில் நியூயோர்கரில் சல்மான் ருஷ்டி சிறுகதை வாசித்தேன் (சென்னையில் வாழும் இரு முதியவர்களை பற்றியது), அதிக இலக்கிய பரிச்சயம் இல்லாத எனக்கு அது எந்த விதத்திலும் சமகால தமிழ் சிறுகதைகளை விட சிறந்ததகவோ அல்லது தாழ்ந்த்தகவோ படவில்லை;  எழுதும் மொழியும் வாசகர் பரப்பும் ஒரு படைப்பு கடக்கவியலாத வரையறையாக படுகிறது;

இது தொடர்பாக ஒரு கேள்வி;   சிற்றிதழ்களில் எழுதும் பலரும் பாலகுமாரன் எழுத்துக்களை ஒரு எள்ளலோடு குறிப்பிடுவதை வாசித்திருக்கிறேன்; புதிய படைப்பாளிகளை பாலகுமாரன் வகையாரா என்று கட்டம் கட்டி ஒதுக்கி விடுவதையும் கண்டிருக்கிறேன்;  உங்கள் அனல்காற்று படித்த போது அது ஒரு பாலகுமாரன் நாவலின் ஆழ்ந்த வடிவமாகவே பட்டது.

இனி கேள்வி :  பாலகுமாரனின் இலக்கிய பங்களிப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்..? பதின்ம வயதினுருக்கான காதல் கதைகளை தமிழில் மிக சிறப்பாக அவர் எழுதினார் என்றே எனக்கு படுகிறது

– பிரதாப்
Seattle, USA

http://www.newyorker.com/fiction/features/2009/05/18/090518fi_fiction_rushdie

அன்புள்ள பிரதாப்

பாலகுமாரன் மீதான தமிழ்த் தீவிர இலக்கியச் சூழலின் விமரிசனம் – அல்லது புறக்கணிப்புக்கு- ஒரு பின்புலம் உண்டு. தொண்ணூறுகள் வரை தமிழில் சீரிய இலக்கிய முயற்சிகளுக்கு எந்தவகையான முக்கியத்துவமும் இருந்ததில்லை. முக்கியமான கலைப்படைப்புகளை எழுதிய படைப்பாளிகள்கூட முழுமையான புறக்கணிப்பையே கண்டார்கள்

இதற்குக் காரணம் அன்று ஓங்கியிருந்த வணிக இலக்கியச் சூழல். பிரபலமான வார இதழ்களை நம்பி இது இருந்தது. அவ்வார இதழ்களுக்கு அப்பால் அன்று வாசிப்புச் சூழலே இருக்கவில்லை. அதில் எழுதியவர்கள் மட்டுமே இலக்கியவாதிகளாக எண்ணப்பட்டார்கள். கல்வித்துறை அங்கீகாரம் அவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. விருதுகள் அவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டன. அது மட்டுமே இலக்கியம் என்று எல்லா தரப்பாலும் வலியுறுத்தப்பட்டது.

இந்த பெரும்பொதுப்போக்குக்கு அப்பால் ஒரு சிறிய அந்தரங்க உலகமாக சீரிய இலக்கியம் செயல்பட்டுக்கொண்டிருந்தது. ஐநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட சிற்றிதழ்களில் அவ்வாக்கங்கள் வெளியாகின. சிலநூறுபேரால் அவை வாசிக்கப்பட்டன. ஆனால் அந்த சிறு வட்டத்துக்குள் மிகத்தீவிரமான விவாதங்கள் நடந்தன. உலக இலக்கியமும்  உலகளாவிய சிந்தனைகளும் பேசப்பட்டன. உலகின் எந்த மொழியிலும் வெளிவருவதற்கு நிகரான ஆக்கங்கள் பிரசுரமாகின.

இவ்விரு உலகங்களுக்கும் இடையே அடிப்படைகளே வேறுபட்டன. வணிக இலக்கியம் ஒரு பிரம்மாண்டமான சராசரிக்காக உருவாக்கப்பட்டது. அந்த சராசரியின் மொழிப்பயிற்சி, அந்தச் சராசரியின் விழுமியங்கள், நம்பிக்கைகள், அந்தச் சராசரியின் பொதுவான ரசனைப்பயிற்சி ஆகியவற்றை அது தாண்டமுடியாது. அதற்கு ஏற்ப மட்டுமே அது செயல்பட முடியும்.

அதேசமயம் சிற்றிதழ் சார்ந்த இலக்கியம் தேர்ந்த ரசனை கொண்ட ஒரு சிறுவட்டத்துக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. அந்த வாசகர்கள் ஏற்கனவே உலக இலக்கிய அறிமுகம் கொண்டவர்கள் என்றும் தமிழிலக்கிய மரபை அறிமுகம் செய்துகொண்டவர்கள் என்றும் அது உருவகித்துக்கொண்டது. வாசகனுக்காக சமரசம் செய்துகொள்ள மறுத்தது.

இவ்விரு உலகங்களும் ஒன்றை ஒன்று மறுத்தன. எப்படி சிற்றிதழ்சார்ந்த இலக்கிய உலகம் வணிக இலக்கிய உலகை நிராகரித்ததோ அதே போலவே வணிக இலக்கிய உலகமும் சீரிய இலக்கிய உலகை காண மறுத்தது, நிராகரித்தது என்பதைக் காணலாம். அன்ரைய மாபெரும்ந ட்சத்திரமான அகிலன் போன்றவர்கள் சிற்றிதழ் சார்ந்த இலக்கியத்தை முழுக்க நிராகரித்தும் அவமதித்தும் எழுதினார்கள்.  நா.பார்த்தசாரதி போன்றவர்கள் இரண்டு  உலகையும் இணைக்கவும் முயன்றார்கள்.

பாலகுமாரன் எழுபதுகளின் வணிக இதழ்களின் பொற்காலத்தில் உள்ளே வந்தவர். சுஜாதாவும் பாலகுமாரனும்தான் அக்காலகட்டத்தின் வணிக எழுத்தின் நாயகர்கள். அவர்களையே இலக்கியவாதிகளாகவும் எண்ணிய ஒரு தலைமுறை அன்று இருந்தது. ஆகவே அவர்களை நிராகரித்து இலக்கியம் என்றால் வேறு என்று சொல்லியாகவேண்டிய கட்டாயம் அன்றைய சிற்றிதழாளர்களுக்கு இருந்தது.

என்னைப்பொறுத்தவரை எந்த ஒரு எழுத்தையும் முழுமையாக நிராகரிப்பவன் அல்ல. எல்லாவகையான எழுத்துக்களுக்கும் அவற்றுக்கான இலக்கிய இடம் ஒன்று உண்டு. சமூகப்பங்களிப்பு உண்டு. அவற்றை ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் நாம் ஓவ்வொரு எழுத்தாளனையும் மதிப்பிடுவதே முறை.மேலும் சுஜாதா, பாலகுமாரன், வாசந்தி, இந்துமதி, சிவசங்கரி போன்றவர்கள் முழுக்கமுழுக்க வணிக எழுத்தாளர்களும் அல்ல. இலக்கிய ஆக்கங்களையும் அவர்கள் உருவாக்கியிருக்கிரார்கள்

ஆனால் தமிழில் முன்னோடிகளான சீரிய எழுத்தாளர்களைப்பற்றியே  பெரிதாக ஆய்வுகளும் விமரிசனங்களும் வராத நிலையில் இவர்கலைப் பற்றி எழுதுவதென்பது ஒரு அதிகப்பற்றாக அமையும் என்றும் தோன்றுகிறது. இருந்தாலும் இச்சந்தர்ப்பத்தில் நீங்கள் கேட்டதை ஒட்டி என் கருத்தைச் சுருக்கமாகப் பதிவுசெய்கிறேன்.

*

இந்திய இலக்கியமும், கேளிக்கை எழுத்தும் ஏறத்தாழ சமமான காலகட்டத்தில் உருவானவை. ஒரே வகையான பண்பாட்டுமூலங்களில் இருந்து முளைத்து இரு கிளைகளாக வளர்ந்தவை அவை. ஒரு எழுத்து ஒரு பிரச்சினையில் பெருவாரியான வாசகர்களை உணர்ச்சிகரமாக ஈடுபடுத்தி அவர்களை மகிழ்விக்கும் நோக்கம் கொண்டிருந்தால் அது வணிக எழுத்து. இலக்கியத்தை ஒரு கல்வியாக எடுத்துக்கொள்ளும் வாசகர்களடம் அப்பிரச்சினையை  எடுத்துச்சென்று அதன் பல கோணங்களை அவர்களுக்கு வெளிப்படுத்தும் என்றால் அது இலக்கிய ஆக்கம் என எளிமையாக வரையறை செய்யலாம்.

இந்திய மறுமலர்ச்சியின் விளைவாக இந்தியாவின் அடிப்படையான பல பிரச்சினைகள் பொதுத்தளத்தில் விவாதத்துக்கு வந்தன. அவற்றில் முக்கியமானது ஆண்பெண் உறவு. இந்தியச் சூழலில் ஆண்பெண் உறவை புரிந்ந்துகொள்வது மிகச் சிக்கலான ஒன்று. மூன்று அடிப்படை சக்திகள் அதில் உள்ளன எனலாம்.

ஒன்று, பழங்குடிப் பண்பாட்டு அம்சம். இந்திய மனநிலைகளில் பழங்குடிப்பண்பாட்டு பழக்கவழக்கங்கள் ஆழமாக வேர்விட்டவை. நம்முடைய பாலியல் நம்பிக்கைகளும் ஆசாரங்களும் தொன்மங்களும் பெரும்பாலும் பழங்குடி பூர்வீகத்தில் இருந்து வந்து இன்றும் வலுவாக இருப்பவை. உதாரணம் தாலி..

இரண்டு, பெருமதங்கள். சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய பெருமதங்கள் நம் சமூகத்தில் உள்ள பல்வேறு பண்பாட்டுக்கூறுகளை தொகுத்து ஒருங்கிணைத்தன. அவற்றை அவை பெரும் அமைப்புகளாக ஆக்கின.ஆகவே ‘பேரறங்கள்’ உருவாகி  வந்தன.  சிறந்த உதாரணம் சிலப்பதிகாரம். சங்க இலக்கியங்களில் நாம் காணும் நெகிழ்வான ஒரு பாலியல் நெறியமைப்பை கற்பு என்ற அசைக்க முடியாத கட்டுமானமாக மாற்றி சிலப்பதிகாரம் நிலை நாட்டுகிறது

மூன்று, பிற்காலப் படையெடுப்புகலும் அதன் விளைவான நிலையின்மையும். பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் இந்தியாவில் மத்திய ஆசியாவில் இருந்து தொடர்படையெடுப்புகள் ஆரம்பித்தன. கொள்ளையடித்தல் அப்படையெடுப்புகளின் மைய நோக்கம். பெண்களும் அவர்களுக்குக் கொள்ளைச்செல்வங்களே. இந்தக் காரணத்தால் இந்தியாவெங்கும் பெண்களை பாதுகாக்கும் மனநிலை உருவானது. பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன. கிட்டத்தட்ட பெண்கள் வீட்டுச்சிறைக்குள் காவலுக்குள் செலுத்தப்பட்டார்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் கருத்துகக்ள் இந்தியாவுக்கு வந்தபோது இங்கே பெண்களின் ஒடுக்கப்பட்ட நிலையும் அதன் விளைவாக உருவாகும் பாலியல் நெருக்கடிகளும்தான் முக்கியமான சிக்கல்களாக இருந்தன. இளமைமணம், குலம் கோத்திர கட்டுப்பாடுகள் போன்றவற்றால் காதல் முற்றிலும் இல்லாத ஒரு சூழல் இருந்தது. ஆணும் பெண்ணும் கொள்ளும் காதல் பாவமாக கருதப்பட்டு சமூகத்தால் ஒடுக்கப்பட்டது. விதவைமுறை, தாசிமுறை போன்றவற்றால் பெண்கள் ஒடுக்கப்பட மறுமுனையில் ஆண்களின் பாலியல் அதற்கிணையான ஒடுக்குதலைப் பெற்றது

இப்பிரச்சினைகளையே ஆரம்ப கால இலக்கியங்களில் கணிசமானவை பேசின. அவற்றுக்கு வாசக எதிர்வினைகளும் அதிகமாக இருந்தன. ஆகவே இந்தியாவில் உருவான வணிக இலக்கியமும் இதையே பேச ஆரம்பித்தது. இதை இந்தியா முழுக்க நாம் காணலாம்.  இக்காலகட்டத்தில் இந்தியா முழுக்க உருவான வணிக எழுத்துக்களில் ஆழமான பாதிப்பைச் செலுத்தியவர் சரத் சந்திரர். அவரது தேவதாஸ், ஸ்ரீகாந்தன் போன்ற நாவல்கள் தமிழில் மிகப்பெரிய பரபரப்பை உண்டுபண்ணின.

தமிழில் பாலியல் சார்ந்து எழுத ஆரம்பித்த இலக்கிய முன்னோடி என்றால் கு.ப. ராஜகோபாலன்தான். அவருக்கு சரத்சந்திரரின் பாதிப்பும் வலுவாக இருந்தது. குபராவின் தொடர்ச்சி இரு போக்குகளாக பிரிந்தது. ஒரு போக்கு தி.ஜானகிராமனின் வழி. அதை சீரிய இலக்கியம்ச் சார்ந்தது எனலாம். பாலியல் சிக்கல்களை எடுத்துக்கொண்டு உளவியல்ரீதியகவும் ஆன்மீக ரீதியாகவும் ஆராயும் படைப்புகள் அவை. இன்னொரு போக்கு ஆர்வி வழியாக உருவானது. பாலியல் சிக்கல்களை பாலியலார்வத்தை தூண்டுவது, உணர்ச்சிப்பெருக்கை உருவாக்குவது என்ற அளவில் கையாண்டவை அவை

ஆர்வியின் வழி தமிழில் பிரபலமான வணிக இலக்கிய வகைமுறையாக உருவம் கொண்டது. ஆர்விக்குப் பின்னர் பிவிஆர் அந்த வகையில் முக்கியமான ஆக்கங்களை உருவாக்கினார். அதன்பின்பு அந்த வழியில் வந்தவர்தான் பாலகுமாரன். ஆர்வியின் மிகச்சிறந்த ஆக்கம் அணையாவிளக்கு. பிவிஆர் ‘கூந்தலிலே ஒரு மலர்’ பாலகுமாரன் ‘கரையோர முதலைகள்’

**

இந்தவகை எழுத்தின் சில அடிப்படைகளை குறிப்பாகச் சொல்லலாம்.

1. நேரடியான கதை. எங்கோ பார்த்ததுபோன்ற கதைமாந்தர்கள் .அவர்களின் உறவுச்சிக்கல்கள் வழியாக விரியும் அக்கதை பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட தளத்தில் ஒரு சின்ன புதுமையம்சத்தை மட்டும் இணைத்துக்கொண்டு முன்னகரும்.

2. சரளம். ஆழமும் சரளமும் இலக்கியத்தில் நேரெதிரானவை. இரண்டையுமே அடையும் பெரும் ஆக்கங்கள் உண்டு. பொதுவாக வணிக ஆக்கங்கள் சரளத்தை மட்டுமே கணக்கில் கொண்டு நுட்பங்களையும் ஆழங்களையும் பொருட்படுத்தாமல் முன்னகரும்

3. நேரடித்தன்மை. வாசகர் அவரது அனுபவம் சார்ந்தும் கற்பனைமூலமும் ஊகித்து எடுக்க எதையுமே விட்டு வைக்காமல் நகரும் தன்மை.

4. கதைமாந்தர்களில் இருக்கும் மாதிரித்தன்மை– டைப் என்று ஆங்கிலத்தில் சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட கருத்தின் அல்லது குறிப்பிட்ட குணத்தின் பிரதிநிதியாக இருபபர்கள் கதை மாந்தர். அவர்களுக்கு உட்சிக்கலோ வளர்ச்சியோ இருக்காது. இந்த அம்சங்கள் இத்தகைய ஆக்கங்கள் அனைத்துக்குமே இருப்பதைக் காணலாம்.
ஆர்வி, பிவிஆர் பாணியிலேயே முன்னகரும் படைப்பாளிதான் பாலகுமாரன். பொது அம்சங்களில் முக்கியமானது, உரையாடலுக்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவம். மொத்தக்கதையையும் உரையாடலே நகர்த்திக்கொண்டுசெல்வதுபோலிருக்கும். உரையாடல் கதைக்கு அபாரமான சரளத்தன்மையை அளிக்கும் என்பதைக் காணலாம். இரண்டு, வர்ணனைகளுக்கு அதிக இடம் கொடுக்காமல் சுருக்கமாக விவரிப்பது, உள்ள ஓட்டங்களை அதிகம் நுட்பமாகச் சொல்லாமல் எளிமையான எண்ணங்களாகவே அமைப்பது.

இம்மூவருமே பெண்களின் கதைகளையே அதிகமும் எழுதியிருக்கிறார்கள். நடுத்தரவற்க, உயர்குடிப்பிறப்புள்ள, பெரும்பாலும் அழகும் இளமையும் கொண்ட, பெண்கள். அவர்களுக்கு ஆண்களுடனான உறரவின் சிக்கல்களும் முடிச்சுகளுக்மே பேசுபொருளாக உள்ளன. பொதுவாகவே இவர்கள் இயற்கையின் சித்திரங்களை அளிப்பதில்லை. ஒப்பு நோக்க பிவிஆர் அதிகமான இயற்கைச்சித்திரங்களையும் புற உலகச்சித்திரங்களையும் உருவாக்கியிருக்கிறார்.

இவ்வகை எழுத்து படைப்பு சார்ந்த ஊக்கத்தில் இருந்து எழுவதல்ல. அது ஒரு கருத்தில் இருந்து எழுகிறது. இப்படிப் பார்த்தால் என்ன என்ற எண்ணமே முதல் விதை. பின்னர் வெறும் எழுத்துத் தொழில்நுட்பத்தால் அது விரிவாக்கம்செய்யப்படுகிறது. ஆகவேதான் உலகில் எங்கும் உள்ள எந்த வணிக எழுத்தாளரையும் ஓரிரு நூல்களைப் படித்தாலே அவரது எழுத்துத் தொழில்நுட்பம் பிடிகிடைத்துவிடும். அதன்பின் அவர் எப்படி எழுதுவார் எங்கே கொண்டு செல்வார் என்பதை வாசகன் ஊகித்துவிட முடியும். கற்பனைகொண்ட வாசகன் தொடர்ந்து அவரை வாசிக்க முடியாது.

மாறாக இலக்கிய ஆக்கம் என்பது எப்போதும் எதிர்பாராத தன்மையுடன் புதிய வழிகளை உண்டுபண்ணிக்கொண்டு செல்வதாக இருக்கும் – தரையில் வழிந்த நீர் தன் வழியை தானே கண்டடைவது போல. அந்த புதுமை அம்சமே இலக்கியத்தின் அடிப்படை இயல்பாகும். அதை வைத்தே நாம் இலக்கியத்தையும் வணிக எழுத்தையும் அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்.

ஒரு புரிதலுக்காக தி.ஜானகிராமனையும் பாலகுமாரனையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மேலோட்டமான வாசகனுக்கு இருவரும் ஒரேபோன்ற எழுத்தாளர்கள் என்ற எண்ணம் ஏற்படக்கூடும். ஆனால் மோகமுள்ளையும் அதன் பல உணர்வுநிலைகளைக் கொண்ட மெர்க்குரிப்பூக்களையும் ஒருவர் ஒப்பிட்டால் அந்த வேறுபாட்டை அறியலாம்.

இரண்டுநாவல்களுமே உரையாடலைந் அம்பி சரளமான ஓட்டம் கொண்டு ஒழுகிச்செல்பவை. இரண்டுமே மையக்கதாபாத்திரத்தின் நெகிழ்ச்சியான உணர்வுநிலைகளை வெளிப்படுத்தக் கூடியவை. இரண்டுமே கதாநாயகியை கதாநாயகனின் காமம் சார்ந்த நோக்கு வழியாக சித்தரிப்பவை. அதன் வழியாக வாசகனிடம் காமத்தை நினைவுறுத்திக்கொண்டே இருப்பவவை. இரண்டுமே ‘இதற்குத்தானா’ என்ற கேள்வியி, ‘இதற்குத்தான்’ என்ற பதிலில் முடிவடைபவை.

ஆனால் மோகமுள் யமுனா,பாபு இருவருடைய  ஆழ்மனங்களுக்குச் சாதாரணமாக ஊடுருவிச் செல்கிறது. பல இடங்களில் பாபுவின் மன ஓட்டங்கள் மிகநுட்பமான  உளக்காட்சியை நமக்கு அளிக்கின்றன.  யமுனா பாபு உறவையே பல கோணங்களில் மாற்றி மாற்றிச் சொல்லி அதன் சாரம் என்ன என்று ஆராயப்புகுகிறது மோகமுள். குறிப்பாக அதில் இசை குறித்த பாபுவின் நினைவோட்டங்களை அவனுடைய உறவுசார்ந்த நெகிழ்ச்சிகளுடன் சம்பந்தப்படுத்தி வாசித்தால் நாவல் பல தளங்களுக்கு விரிவடையும்

மெர்க்குரிப்பூக்கள் ஒரு பொதுவாசகனின் பொதுவான ஆர்வம் அவனுடைய தார்மீக நிலை ஆகியவற்றின் எல்லைக்கு உட்பட்டே செல்வதை நாம் காணலாம். அத்துடன் அதன் உள விவரிப்புகள் பாசாங்கான ஒரு மொழிநடையில் உள்ளன. மெர்க்குரிப்பூக்களைப்போலவே மோகமுள்ளின் பாதிப்பு உள்ள, இத்துடன் ஒப்பிட்டு இந்த தளத்தில் வாசிக்க வேண்டிய ஒரு வணிகநாவல் ‘ஓர் ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’ [புஷ்பா தங்கத்துரை

*

பழகிப்போன ரசனைக்காகச் சமைப்பதுதான் வணிக எழுத்தாளன் மாட்டிக்கொண்டே ஆகவேண்டிய பொறி. அது அவன் எழுத்தை தேங்க வைத்து ஒரு ‘மாதிரிவடிவ’மாக மாற்றி விடுகிறது. எல்லா எழுத்துக்களும் ஒரே மாதிரியானவையாக ஆகின்றன. தமிழில் கல்கி முதல் இன்றைய தேவிபாலா வரை இந்த தேக்கநிலை இல்லாத எழுத்தாளர் எவரும் இல்லை.

படைப்பூக்கம் இல்லாமல் தொழில்நேர்த்தியை நம்பியே எழுதும் போக்கு காரணமாக மொழிநடை மெல்ல மெல்ல உயிரிழந்து செயற்கையான ஒரு நிரந்தர வடிவை அடைகிறது. நடை உயிரோட்டத்துடன் இருந்தால் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கும். அந்த எழுத்தாளன் ஒவ்வொரு ஆக்கம் சார்ந்தும்  கொள்ளும் மன எழுச்சி சார்ந்து அது மாறுபடும். அவனுடைய வளர்ச்சிக்கேற்ப அதுவும் வளரும்.  வணிக எழுத்தின் நடை ஒருவகை இயந்திர வெளிப்பாடு போன்றது.

வணிக எழுத்து அனைவரையும் சென்று சேரவேண்டிய கட்டாயத்தில்  இருக்கிறது. ஆகவே அதற்கு அந்தரங்கத்தன்மையே இல்லை. அது உத்தேசிக்கும் வாசகர்களின் சராசரியை முன்னிறுத்திப் பேச வேண்டியிருக்கிறது.  நேர் மாறாக இலக்கியப்படைப்பு அது உத்தேசிக்கும் வாசகர்களின் ஆகச்சிறந்தவர்களை மட்டுமே முன்னிறுத்திப் பேசும்.

தமிழைப்பொறுத்தவரை வணிகப்படைப்பு சற்று மிதமிஞ்சி தன்னை வெளிப்படுத்தியாகவேண்டும். உணர்ச்சிகள் மிகையாக இருக்க வேண்டும். சிக்கல்கள் மிகையாக இருக்கவேண்டும். குணச்சித்திரங்களும் மிகையாக இருந்தாகவேண்டும். நடையின் அலங்காரங்களும் மிகையாக  இருப்பது அவசியம்.

இந்த எல்லா சிக்கல்களும் பாலகுமாரனின்  எழுத்துக்களுக்கு இருப்பதைக் காணலாம். மெர்க்குரிப்பூக்கள், கரையோரமுதலைகள் ஆகிய இருநாவல்கள் வழியாக அவரது நிரந்தர அச்சுவடிவம் உருவாகி விட்டது. சிறு சிறு மாறுபாடுகளுடன் அதையே அவர் மீண்டும் மீண்டும் எழுதுகிறார். சிறிய சிறிய சொற்றொடர்கள் கொண்ட அவரது நடையும் அவ்வாறே நிரந்தரமாக வடிவம் கொண்டு விட்டது.

மாதநாவல் உலகுக்குச் சென்ற பின் பாலகுமாரன் தன்னையே மீண்டும் மீண்டும் பிரதி எடுத்து அவரில் இருந்த குறைந்த பட்ச ஈர்ப்பைக் கூட இழந்து ஒரே வகையான  இயந்திரத்தனமான எழுத்துக்களை வெளிப்படுத்த ஆரம்பித்தார். அவரது எழுத்தில் உள்ள குணச்சித்திரங்களும் சரி அவற்றின் உனர்ச்சிகளும் சரி மிகையானவை. ஆகவே அவை சட்டென்று போலித்தனம் கொண்டுவிடுகின்றன.

பாலகுமாரன் வாசிக்க ஆரம்பிக்கும் வயதில் சொற்கள் வழியாக வாழ்க்கையை கற்பனையில் நிகழ்த்திக்கொள்ளும் பயிற்சியை அளிக்கும் ஆரம்பகால எழுத்தாளராக ஒரு பங்கை ஆற்றுகிறார். ஆனால் அவர் வழியாகச் சென்று நாம் வாழ்க்கையின் எந்த உண்மையான தளத்தையும் அடைய முடியாது. நம்முடைய பகர்கனவையே அவர் எழுதுகிறார். அவற்றின் பற்பல சாத்தியக்கூறுகளை அவர் நமக்கு எழுதிக்காட்டுகிறார் அவ்வளவுதான் .வாழ்க்கையின் உட்சிக்கல்களை அதன் நுண்மைகளை நம்மில் நிகழ்த்திக்காட்டும் ஆக்கங்களே இலக்கியங்கள். பாலகுமாரன் எழுதுபவை வணிக எழுத்துக்கள் மட்டுமே.

உங்கள் வினாவுக்கு கடைசியாக வருகிறேன். அனல்காற்று பாலியல் சார்ந்த சிக்கலை எடுத்துக்கொண்டதனால் மட்டுமே பாலகுமாரனின் உலகை தொடுகிறது. அதன் கதாபாத்திரங்களின் அகம் விவரிக்கப்பட்டிருக்கும் விதமும் சரி, சொன்னதைவிட சொல்லாத தளங்கள் வழியாக வாழ்க்கையைப் பேச முயன்றிருக்கும் விதமும் சரி, இலக்கியத்தின் வழிமுறைகள். வணிக எழுத்துக்குரியவை அல்ல. அனல்காற்று த்.ஜானகிராமன் வகை எழுத்து. ‘மரப்பசு’ போன்ற ஒன்று. வாசகனின் கற்பனை தொட்டு வளர்த்தெடுக்க வேண்டிய பல தளங்கள் கொண்டது அது.
ஜெ

முந்தைய கட்டுரைமருத்துவம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகல்வியழிதல்:ஒருகடிதம்