குகைகளின் வழியே – 22

இந்தப் பயணம் குகைகளைப் பார்ப்பதற்காக திட்டமிடப்பட்டது. இந்தியாவிலேயே மிகப்பெரிய குகை அல்லது பிலம் பெர்ரா குகை. அதைக் கடைசியில் பார்ப்பதாக கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். ஆகவே அனந்தபூரில் இருந்து காலையில் கிளம்பி பெர்ரா குகைகளுக்குச் சென்றோம். காலை ஒன்பதுக்கே சென்றுவிட்டோம். குகையை பத்து மணிக்குத்தான் திறந்தார்கள்.

பெர்ரா என்றால் ஒரிய மொழியில் துளை என்று பொருள். பொரா என்பார்கள். இந்த குகை அரக்கு மலைச் சமவெளியின் விளிம்பில் உள்ளது. மலை மிக ஆழமாக இறங்கிச் சென்று ஆழத்தில் ஓடும் கோஸ்தனி என்ற ஆற்றை அடைகிறது. அரக்கு சமவெளி அதிகமாக மழைபெய்யக்கூடியது. மலையில் ஊறிய மழைநீர் பாறைப் பிளவில் ஊறி அடியில் உள்ள சுண்ணாம்புப் பாறைகளைக் கரைத்து, கீழே ஓடும் கோஸ்தனியை அடைய முயன்ற வழிதான் பெர்ரா பிலம்.

இந்த பிலம்தான் இந்தியாவிலேயே ஆழமானது. இந்தியாவிலேயே உயரமானது. சிறிய படிகளின் வழியாக இறங்கிச் சென்றால் குகையின் பிரம்மாண்டமான முகப்பு தெரிகிறது, மிகப்பெரிய தோரணவாயில் போல. இருநூறு அடி உயரமான வாயில். அதனுள் நுழைகையில் நாம் ஒரு சிரு பூச்சியைப்போல உணர்வோம். உள்ளே செல்லப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே சென்றதும் நாம் காணும் வட்டவடிவமான குகைக்கூடம் 328 அடி உயரமானது. உட்குடைவான கோபுரம் போல அதை உணர்வோம். அண்ணாந்து பார்த்தால் எட்டாத உயரத்தில் வெண்ணிறமான தேனீக்கூடுகள் போல சுண்ணாம்புக்கல் விழுதுகள் உறைந்து தொங்கி நிற்பதைக் காணமுடியும்.

பெர்ரா குகைகளின் பிரம்மாண்டம்தான் அதன் பெரும் கவர்ச்சி. பிலம் குகைகள் மடிப்பு மடிப்பாக ஆழத்திற்கு இறங்கிச் செல்பவை. குகைக்குள் மூச்சு திணறிச்செல்லும் உணர்வை அளிப்பவை. பெர்ரா குகைகள் அவற்றின் பேரளவு காரணமாக குகைக்குள் நிற்கும் உணர்வை அளிப்பதில்லை. நல்ல காற்றோட்டமான இடத்தில் நிற்கும் உணர்வுதான். குகை முழுக்க விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மஞ்சள் ஒளி குகைகளுக்குள் விழுந்து, சரிந்து, புரண்டு, இரையெடுத்து தூங்கும் ராட்சதக்குழந்தைகள் போல கிடக்கும் பெரும்பாறைகளில் பட்டு விதவிதமான நிழல்களை உருவாக்குகின்றன.

புராணங்களில் அதலம் விதலம் என ஆரம்பிக்கும் ஏழு பாதாள உலகங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் பாதாளத்தில் நாகங்கள் வசிக்கின்றன. அது மண்ணுக்கடியில் உள்ள உலகம். மண்ணுக்குமேல் உள்ள உலகின் ஆடிப்பிம்பம் போன்றது. அங்கே மாபெரும் நாகங்கள் தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கும். அங்கே கூரை என்பது மண், அடிப் பக்கம் முடிவில்லாத இருண்டவானம். அதன் தலைவன் வாசுகி என்ற மாபெரும் நாகம். பெர்ரா குகைகளை ஒரு பாதாள உலகம் என்று சொல்லலாம். வானமாக மண். மண்ணாக இருள். அசைவிலாது தொங்கும் பூதவடிவங்கள். நாகங்கள் ஆமைகள் எருமைகள் யானைகள். வெண்ணிறமான ராட்சத வவ்வால்கள்…

சொல்லிழந்து சென்றபடியே இருப்பதுதான் பெர்ரா குகைகள் அளிக்கும் அனுபவம் எனலாம். எல்லாமே பிரம்மாண்டம். கூரையின் உச்சி வளைவை கைவிளக்கின் ஒளி சென்று சேர்வதில்லை. தூரத்தில் விழுந்து கிடப்பதுபோலத் தெரியும் பாறை, அருகே சென்றதும் நம் தலைக்குமேல் செல்லும் குட்டி மலையாக மாறிவிட்டிருக்கும். சட்டென்று இன்னொரு பிரமை. மாட்ரிக்ஸ் படத்தில் தப்பிப் பிழைத்த மனிதகுலம் பூமியை துளையிட்டு உள்ளே சென்று குகைநகரங்களை உருவாக்கி அங்கே வாழும். பெர்ரா ஒரு குகை நகரம். உள்ளேயே குட்டி மலைகளும், ஓடைகளும், பாதைகளும், சாலைகளும் கொண்டது.

பெர்ரா குகை

பெர்ரா குகைக்குள் ஓரிடத்தில் மஞ்சளாக நீர் ஓடுகிறது. அது கந்தக நீர். சீதாவின் மஞ்சள் கரைந்து ஓடுவது அது என்று உள்ளூர் நம்பிக்கை. எங்களை வழிகாட்டி இட்டுச்சென்றவர் அந்த சுண்ணாம்புக்கல் விழுதுகளில் சிவபார்வதியை, கணபதியை , நந்தியை எல்லாம் சுட்டிக்காட்டிக்கொண்டே சென்றார். எல்லா வடிவங்களுக்கும் அங்கே இடமிருக்கிறது. வடிவம் என்பது புற இயற்கையை நம் சித்தம் சந்திக்கும் ஒரு தருணம் மட்டும்தானே!

பெர்ரா குகைகள் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன்னரே உருவானவை. புராதன கற்காலத்திலேயே அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஆந்திரப் பல்கலைகழக ஆய்வாளர்கள் அங்கே புராதன கல்லாயுதங்களையும் எலும்புகளையும் அகழ்ந்து எடுத்திருக்கிறார்கள். பின்னர் ஒரிய பழங்குடிகள் வழிபட்டு வந்த இடமாக அது இருந்திருக்கிறது. மேலே இருந்த காட்டில் மேய்ந்த ஒரு பரு மண் பிளந்து அறுபதடி ஆழத்தில் விழுந்ததாகவும் அங்கிருந்து அது நடந்து மறுபக்கம் காட்டின் குகை வழியாகவெளியே வந்ததாகவும் சொல்லப்படுகிறது. பழங்குடிகள் உள்ளே வந்தபோது அங்கே நின்ற பெரிய சுண்ணாம்புக்கல் குவையை சிவலிங்கமாக அடையாளம் கண்டார்கள், நெடுங்காலம் அவர்களால் வழிபடப்படும் இடமாக இது இருந்திருக்கிறது.

1807ல் வில்லியம் கிங் ஜார்ஜ் இந்த பெரும்குகையை அடையாளம் கண்டு ஆய்வுகள் செய்தார். 1997ல்தான் இந்த குகை சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டு பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். இந்த குகைக்குள் உள்ள நுண்ணுயிர்கள் பற்றி விரிவான ஆய்வுகள் செய்யப்படுகின்றன. பல உயிர்கள் முழுக்க முழுக்க சூரிய ஒளியையே அறியாமல் வாழ்பவை. உள்ளே வவ்வால்களும் அச்சிற்றுயிர்களும் எழுப்பும் ரீங்காரமும், சிறகடிப்பும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

பெர்ரா குகை

பெர்ரா குகைகளில் ஒரு சிறிய கோயில் உள்ளது. குகைக்கு மேலே இருந்து சொட்டும் நீர் கீழே விழுந்து அதிலுள்ள சுண்ணாம்பு உறைந்து உருவாவது Stalagmite. அந்த நீர் மேலே சொட்டி நிற்கும்போது உருவாகும் சுண்ணாம்பு படிவம் Stalactite. கீழே உள்ளது கூம்புவடிவமாக இருக்கும். மேலே உள்ளது தொங்கும் ஊசி போன்றிருக்கும். காலப்போக்கில் இவை ஒன்றாக இணைந்து விழுதுகளாக ஆகும். அவ்வாறு விதவிதமான மாபெரும் விழுதுகள் இக்குகைக்குள் உள்ளன. அவற்றில் மிகப்பெரிய விழுது ஒரு பாறையாக உள்ளது. அதை நோக்கி ஏறிச்செல்ல படிகள் உள்ளன. அந்த விழுதுக்குள் ஒரு குகை. வசதியாக பத்துபேர் நிற்க இடமுள்ள குகை. அதில் ஒரு சிவலிங்கம் உள்ளது. அதுவும் ஒரு சுண்ணாம்புக்குவைதான். ஒரிய பழங்குடி ஒருவர் அங்கே பூசைசெய்கிறார். அக்கோயில் அவர்களுக்கு உரிமைப்பட்டது.

பெர்ரா குகைகளுக்குள் இருந்து வெளியே வருவது ஒரு பாதாள மீட்சிதான். ஆனால் மண்ணில் எல்லா நிழல்களிலும் பாதாளம் உள்ளது. நெடுங்காலம் முன்பு பஞ்சத்தில் வாடிய ஒரு நாடார் சாதிப்பெண் தன் பிள்ளைகளை தூக்கி கிணற்றில் போட்டாள் என்று ஒரு கதை உண்டு. அந்த கிணறு ஒரு பாதாள வாய். குழந்தைகள் நேராக பாதாளத்திற்குச் சென்று விழுந்தன. கடைசியாக அவள் குதிக்கவிருக்கையில், பிள்ளைகளுடன் பாதாள நாகராசன் வெளியே வந்தான். என்ன என்று கேட்டான். பஞ்சத்தின் துயரத்தை அந்தப்பெண் எடுத்துச் சொன்னாள். அவன் இரண்டு பாதாள மூர்த்திகளை மண்ணுக்கு மேலே அனுப்பினான். அவர்கள் மண்ணில் பெருகினார்கள். அவர்களால் நாடார் சாதி பஞ்சத்தில் இருந்து கரையேறியது. எருமையும் பனையும். திரும்பிப் பார்த்தபோது இருட்டை ஒரு அருளாக, அணைப்பாக உணர முடிந்தது.

போஜனகொண்டா மலை

விசாகப்பட்டினம் அருகே அங்கப்பள்ளி தாண்டி உள்ள பௌத்த தலமான போஜனகொண்டா லிங்கலகொண்டா மலைகளுக்குச் சென்றோம். இரண்டாயிரம் வருட பழமை கொண்ட பௌத்த தலம் இது. உண்மையில் இது ஒரு மலை. ஒரு பூகம்பத்தால் இரண்டாக ஆகியிருக்கிறது. உள்ளூர்க்காரர்கள் ஒரு மலையை போஜனகொண்டா –சாப்பாட்டு மலை- என அழைக்கிறார்கள். மலைமேல் அக்காலத்தில் உணவு போடப்பட்டதனால் என்றும் மலைமேலிரூக்கும் புத்தர்சிலை சாப்பாட்டுக்கு அமரும் கோலத்தில் இருப்பதனால் என்றும் சொல்கிறார்கள். இன்னொரு மலை லிங்கல கொண்டா. சிவலிங்க மலை.

போஜனகொண்டாவில் செங்குத்தான படிக்கு மேலே மகாசைத்யம் உள்ளது. அலங்கார வளைவுள்ள முகப்பு கொண்ட குடைவரை. உள்ளே பதினாறு தூண்கள் நடுவே தூபம் உள்ளது. குடைவரையின் வாசலில் துவாரபாலகர்கள். மேலே தியானத்தில் அமர்ந்த இரு பெரிய புத்தர் சிலைகள். அழகான சிலைகள். வெகு தூரத்திலேயே ததாகதரின் மென் புன்னகையை காணமுடியும். ஒரு புத்தர் சிலை கைகளை மடிமீது லய பாவனையில் வைக்காமல் பெருக்கல் போல வைத்திருந்தார். அப்படி புத்தர் கையை வைத்திருப்பதை முதல் முறையாகப் பார்க்கிறேன்.

குடைவரைக்கு மேலே மகாதூபம் உள்ளது. இயற்கையாக பாறையில் வெட்டப்பட்ட தூபி அதற்குமேல் செங்கற்களை கட்டி அடுக்கி பிரம்மாண்டமாக எழுப்பட்டிருந்திருக்கிறது. இப்போது கீழே மட்டும் செங்கல் கட்டுமானம் எஞ்சியிருக்கிறது. பாறைமீது கட்டப்பட்ட செங்கல் கட்டுமானத்துடன் முப்பதடி உயரமான பெரும் தூபியாக அது இருந்திருக்கக் கூடும். தூபிக்கு நேர் முன்னால் பெரும் கட்டிடம் ஒன்றின் அடித்தளம் உள்ளது. மகாவிகாரம் அது. நான்குபக்கமும் ஏராளமான சிறிய அறைகள் வெட்டப்பட்ட பாறை ஒன்றுக்குமேல் செங்கல்லால் அந்த விகாரம் கட்டப்பட்டிருந்திருக்கிறது. செங்கல்லால் ஆன சிறிய கோயில்களுக்கு நடுவே பெரிய கூடம். அதன் நடுவே ஒரு பெரிய பீடம். தலைமை பிட்சு அமர்ந்திருக்கும் இடம் அது. தூபியை நோக்கி அமர்ந்திருக்கும்படி அது அமைந்திருக்கிறது.

கைகளைக் குறுக்காக வைத்த புத்தர் சிலை ஒன்று

போஜனகொண்டாவில் ஆறு குடைவரை கோயில்கள் உள்ளன. பாறைகளை ஏறிக்கடந்து சென்று பார்க்கவேண்டும். குடைவரைக்கோயில்களுக்குள் தியானத்தில் அமர்ந்த புத்தர் அஜந்தா குகைகளை நினைவுபடுத்தினார். அஜந்தா போலவே இருகபக்கமும் சுவர்களில் புடைப்புச்சிலைகளாக பெரிய போதிசத்வர்கள் நின்றிருந்தார்கள். வெளியே பலவகையான புத்தர்சிலைகள். நாகபடத்துக்கு கீழே அமர்ந்த யோகபுத்தர். நின்றிருக்கும் புத்தர். இங்கிருக்கும் கல் மென்மையான மணற்பாறையாலானது. ஆகவே பெரும்பாலான சிலைகள் கரைந்துருகிய வடிவத்தில் உள்ளன. அதுவேகூட ஒரு அழகை கொடுத்தது. காலத்தின் திரைக்கு அப்பால் மறைந்திருக்கும் புத்தரை பார்க்கும் உணர்ச்சி.

இங்கே தேரவாதம், மகாயானம், வஜ்ராயனம் ஆகிய மூன்று பௌத்த மரபுகளும் முரண்பாடில்லாமல் ஒரே சமயம் புழங்கியிருக்கின்றன. வஜ்ராயன பௌத்தத்தின் தெய்வமாகிய திகம்பர கணபதியின் சிலை ஒரு சுவரில் இருக்கின்றது. சிதைந்த சிலை. நிர்வாணியாக நிற்கும் கணபதி. நான் இப்போதுதான் அத்தகைய சிலையை பார்க்கிறேன். இருளுக்குள் அமர்ந்திருந்த புத்தரை பார்த்து நிற்கையில் மெல்ல இருள் வில்கி அவர் அருள்முகம் தெளியும் அனுபவம் குகைகளுக்கே உரியது.

லிங்கலுகொண்டா தேரவாதிகளின் மலை. இதுதான் காலத்தில் மூத்தது. இங்கே இரு பெரும் தூபிகள் நேரடியாக கல்லில் செதுக்கப்பட்டிருக்கின்றன. முப்பதடி உயரமானவை. அவற்றின் பிரம்மாண்டமான வடிவம் ஒரு வகையான பணிவை தனிமையை ஏக்கத்தை மனதில் நிறைத்தது. இந்த குன்று முழுக்க தூபிகள்தான். போஜனகொண்டாவில் எல்லா பாறைகளையும் தூபிகளாக செதுக்கியிருந்தார்கள். அதைவிட இங்கே அதிகம். ஐநூறு தூபிகள் ஒரே இடத்தில் குவியலாக நின்றிருந்தன. தூபிகளைத்தான் லிங்கம் என்று எண்ணி பெயரிட்டிருக்கிறார்கள். தூபிகள் எல்லாமே மழையில் அரித்துப்போனவையாக இருந்தன.

எங்கள் பயணத்தின் கடைசி இடம் இது. குகைகளின் வழியிலான பயணம் குகேஸ்வரனாகிய புத்தரின் சன்னிதியில் அந்தியின் பொன்னொளியில் முடிவடைவது ஓர் அழகிய திரைச்சரிவுதான்.

http://www.istream.com/tv/watch/97090/Bojjana-Konda-a-Buddhist-sanctuary

படங்கள்

முந்தைய கட்டுரைஎன் நூல்கள்
அடுத்த கட்டுரைகுகைகளின் முடிவில்