அயன் ராண்ட் கலைக்கலஞ்சியம் என்ற ஒரு நூலை அமெரிக்க நூலகத்தில் பார்த்த நினைவிருக்கிறது. அயன் ராண்டின் கொள்கைகளை பிரச்சாரம்செய்வதற்கான ஆய்வுமையத்தால் வெளியிடப்பட்டது அது. அயன் ராண்ட் பல்வேறு விஷயங்களைப் பற்றி சொன்ன கருத்துக்கள் அதில் அகரவரிசையில் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவரது நோக்கின் மையச்சரடு என்பது அவராலேயே புறவயவாதம் என்று வகுத்துரைக்கப்பட்டது.
இந்தபூமியில் உள்ள எல்லா சிந்தனைகளையும் இரண்டாகப் பிரிக்கலாம் என்பது அயன் ரான்டின் வாதம். ஒன்று, பூமியை நமக்குப் பயன்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உரிய சிந்தனைகள் அடங்கியது. இரண்டு, பயனற்ற இலட்சியவாதச் சிந்தனைகளும் காலாவதியான நம்பிக்கைகளும் வழக்கங்களும் அடங்கியது. பிந்தையதை முழுக்க நிராகரித்து பயனுள்ள சிந்தனைகளை மட்டுமே வளர்த்துக்கொள்வதற்குப் பெயரே புறவயவாதம் என எளிமையாகச் சொல்லலாம்.
பயனற்ற சிந்தனைகள் என்பவை அர்த்தமில்லாத அச்சம் போன்ற உணர்ச்சிகளால் உருவாகி நீடிப்பவையான, அல்லது சென்றகாலத்தில் ஏதேனும் வகையில் பயன்பட்டு இப்போது பொருளிழந்துபோன அகவயமான உணர்ச்சிகளால் ஆனவையாக இருக்கும். அவற்றுக்கு இன்று புறவய மதிப்பு இருக்காது. அவற்றை அடையாளம் காண்பதற்குச் சிரந்தவழி அவற்றின் புறவயமதிப்பை அளவிடுவதே. அதுவே புறவயவாதம்
‘மண்ணில் வாழ்வதற்கான தத்துவம்’ என புறவயவாதத்த்தை அயன் ராண்ட் சொன்னார். மானுட சிந்தனைகள் என நமக்கு இப்போது கிடைப்பவற்றை பரிசீலனைசெய்து எது உண்மையிலேயே பயனுள்ளது என்று உணர்வதற்கும் அப்படி உண்மையை உணர்ந்தபின்னர் அதை ஏற்றுக்கொள்ளவும் முன்வைத்துப் பேசவும் இருக்ககூடிய மனத்தடைகளை வெல்வதற்கும் உதவக்கூடிய அடிப்படையான வாழ்க்கை நோக்கே புறவயவாதம்
இப்படிச்சொல்லலாம், பிறர் பொருட்டு வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை என்ற சித்தாந்தம் நம் சூழலில் உயர்ந்த விழுமியமாக முன்வைக்கப்படுகிறது. உண்மையில் அது பயனுள்ளதா? அயன் ராண்டின் புறவயவாதம் அதை இப்படி ஆராயும். ஒன்று, மண்ணில் எவருமே அப்படி வாழ்வதில்லை. வாழ முடிவதில்லை. அது உயிரின் அடிப்படைக்கே எதிரானது. எல்லா உயிர்களும் தங்களுக்காகவே வாழ்கின்றன. அந்த சுயநலம் மூலம்தான் மண்ணில் அவை போராடி தங்கி வாழமுடியும். சுயநல நோக்கு இல்லாத ஒரு சமூகம் அழியத்தான் வேண்டும்.
சமூகத்தை முன்னிறுத்தி தன்னை நிராகரிப்பதற்கு தனிமனிதர்களை தயாரிக்கும்பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு கருத்து இது. பெரும்பாலான பழங்குடிகளில் இது உள்ளது. அங்கே குடி மட்டுமே இருக்கும் குடிமகன் இருக்கமாட்டான். இந்த நோக்கை திரள்வாதம் [collectivism] என்கிறார் அயன். திரள்வாதமானது மதத்தின் வழியாக ‘புனிதப்படுத்தப்பட்டு’ முன் வைக்கப்படுகிறது. மதம்சார்ந்த இலக்கியங்களும் கலைகளும் அதை உணர்ச்சிகரமாக முன்வைக்க்கின்றன. நம் சமூகத்தில் இன்று நிலவும் விழுமியங்கலில் பெரும்பாலானவை திரள்வாதம் சார்ந்தவை மட்டுமே என்கிறார் அயன் ரான்ட்
புறவயவாதம் என்பது திரள்வாதத்துக்கு முற்றிலும் எதிரான ஒன்று. ஒரு விழுமியம் உணர்ச்சிகரமானதாக இருக்கிறதா நெடுங்காலமாக இருந்துகொண்டிருக்கிறதா என்பதெல்லாம் அதற்கு முக்கியமே அல்ல. அது பயனுள்ளதா, நடைமுறைச்சாத்தியமானதா என்பது மட்டுமே அதற்கு முக்கியம். பயனுள்ள ஒன்று ஒருபோதும் ஓர் அகவய மன எழுச்சியாக இருக்காது. அந்தப்பயன் புறவயமாக நிறுவப்படக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பது புறவயவாதத்தின் ஓர் அடிப்படை.
அகவயவாதம் விழுமியங்களை நிராகரிக்கிறது என்பதல்ல இதன் பொருள். அந்த விழுமியங்களின் பலன் என்பது புறவயமாக நிறுவப்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் வாதம். கருணை பாசம் அன்பு தர்மம் எதுவானாலும் அதன் பயன்மதிப்பு, நடைமுறைச்சாத்தியமே அது தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்கவேண்டும்
திரள்வாதம் சார்ந்த இலட்சியக்கருத்து உயர்பண்பாக முன்வைக்கப்பட்டு வலியுறுத்தப்படும்போது அதை நம்புகிறவர்கள் அந்த திசையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்று அது முடியாமலாகும்போது ஏமாற்றம் அடைகிறார்கள். அதற்குள் அவர்களுக்கு சுய அடையாளம் உருவாகியிருக்கும். அதை அவர்களால் துறக்கவும் முடியாது. ஆகவே அவர்கள் மெல்லமெல்ல போலிகளாக ஆகிரார்கள். தங்களை பிறருக்க்காக வாழ்பவர்களாக எண்ணிக்கொண்டு அந்தரங்கத்தில் சுயநலமிகளாக இருக்கிறார்கள். அயன்டின் கோணத்தில் மானுட இயல்புக்கு மாறான எந்த ஒரு இலட்சியமும் மனிதனை போலியானவனாகத்தான் ஆக்கும்.
மிக விரிவாகவே அயன் ராண்ட் முன்வைத்து வாதிடும் புறவயவாதத்தை இப்படி சுருக்கிவிடமுடியாது. இது ஒரு எளிமையான சாராம்சப்படுத்தல் மட்டுமே. புறவயவாதத்தை எப்படி தங்கள் வகையில் பொருள்கொள்வது, எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை வாசகர்களே தீர்மானிக்கலாம். அது இங்கே விவாதவிஷயம் அல்ல. ஆனால் புறவயவாத என்பது தத்துவத்தின் பரிணாம வரலாற்றில் எங்கே வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
மேலைத்தத்துவ மரபை மிகப்பொதுப்படையாக இரு பெரும் ஓட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று கிரேக்கமரபு. இன்னொன்று செமிட்டிக் மரபு.. கிரேக்க மரபு தருக்கத்துக்கும் மொழிதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. செமிட்டிக் மரபு நம்பிக்கைக்கும் படிமங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. முந்தையது தனிமனிதனை நோக்கிப் பேசியது. பிந்தையது திரளான மக்களை நோக்கிப் பேசியது. ஆகவே பிந்தையது மதமாக ஆகி நேரடியாக அதிகாரத்தைக் கையாள ஆரம்பித்து அந்த அதிகாரத்தைக் கொண்டு கிரேக்க மரபை முற்றாகவே ஒழித்தது.
மத்தியகாலகட்டம் என்பது சிந்தனையில் செமிட்டிக் மரபு மட்டுமே நீடித்த, அது மட்டுமே அனுமதிக்கப்பட்ட, ஒரு காலகட்டம். திரள்வாதம் என்று அயன் சொல்லும் அனைத்துமே மத்தியகாலகட்ட கிறித்தவ சிந்தனைக்கே சரிவரப்பொருந்துவதை சாதாரணமாகக் காணலாம். கிறித்தவத் திரள்வாதத்தால் தனிமனித சிந்தனையும் ஆன்மீகத்தேடலும் முழுக்க முழுக்க கட்டுப்படுத்தப்பட்டன, மீறல்கள் ஒடுக்கப்பட்டன. அதை ஐரோப்பிய நாகரீகத்தின் இருண்டகாலக்ட்டம் என்று இன்று குறிப்பிடுகிறார்கள்
ஐரோப்பிய மறுமலர்சி என்பது பதினைந்தாம் நூற்றாண்டுமுதல் மெல்லமெல்ல உருவாகி பதினெட்டாம் நூற்றாண்டில் முழுமை அடைந்த ஒன்று. அதன் மூன்று அடிப்படைக்கூறுகள் ஒன்று, நிரூபணவாத அறிவியல், இரண்டு, ஜனநாயகம், மூன்று, உலகளாவிய நோக்கு.
நிரூபணவாத அறிவியல் பகுத்தறிவு வாதத்தை உருவாக்கியது. அதன் விளைவாக நவீன நாத்திகவாதம் உருவாகியது . அது கிறித்தவத்துக்கு எதிரான ஒரு வலிமையான கருத்தியல் சக்தியாக பரிணாமம் கொண்டது. நிரூபணவாத அறிவியலே நாம் இன்று காணும் புறஉலகை உருவாக்கியது என்றால் அது மிகை அல்ல. இயந்திரத்தொழில் நுட்பமும், இயந்திர விதிகளின் படியே அமைக்கப்பட்ட சமூக அமைப்புகளும், புறவயமான சமூக அறிவியல் ஆய்வுமுறைகளும் எல்லாம் அதன் சிருஷ்டிகளே.அயன் ரான்ட் நிரூபணவாத அறிவியல் சார்ந்தே தன் அடிபப்டைக்கோணங்களை உருவாக்கிக் கொண்டிருப்பதை நாம் காணலாம். ஒன்றை புறவயமாக எப்படி நிர்ணயிப்பது? அது புறவயமாக நிரூபிக்கப்படும்போது மட்டுமே– இல்லையா?
ஜனநாயகம் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் ஆதாரமான விசைகளில் ஒன்று. அதாவது சாமானியர்களுக்கு அரசதிகாரம். அவர்களை பெருந்திரளாக ஆக்கி அடக்கி ஆளும் நோக்குக்கு எதிரான கருத்தியல் எழுச்சி அது. கம்யூனிசமேகூட ஐரோப்பிய ஜனநாயகவாதம் என்ற பெரும் சொல்லாடலின் ஒரு பகுதியாக உருவானதுதான்.
அந்த ஜனநாயகவாதத்தின் அடிப்படை கருத்துநிலை என்பது தனிநபர்வாதம். தனிநபரை முழுக்க நிராகரித்து அவனை வழிநடத்தப்படும் ஆடாகக் கண்ட கிறித்தவத்துக்கு எதிரான குரல் அது. முந்நூறு ஆண்டுகளாக உருவாகி வந்த மேலைநாட்டு தனிநபர்வாதத்தை விரிவாகப்புரிந்துகொள்ளாமல் அங்குள்ள மனித உரிமை நோக்கு, அடிப்படை உரிமை நோக்கு, மேட்டிமைவாதம், அறிவுமையவாதம் எதையுமே புரிந்துகொள்ள முடியாது. ஒருவன் தன்னை ஒரு தனித்த இருப்பாக, தன் சொந்தச் சிந்தனையை சமூகத்தின் சிந்தனை அமைப்பின் அடிபப்டைத்துளியாக, உணரும்போதே ஜனநாயகம் பிறக்கிறது. அவன் சமூகத்தின் அதிகாரத்தில் தனக்குரிய பங்கை கோருகிறான். அதற்கான அரசியலமைப்பை நாடுகிறான். அதுவே ஜனநாயகம்.
தனிமனிதனை முற்றாக நிரகாகரித்த செமிட்டிக் சிந்தனைகளுக்கு எதிராக முன்வைக்கபப்ட்டது தனிமனிதவாதம். தனிமனிதனை சமூகத்தின் அடிப்படை அலகாகக் காண்பதில் இது ஆரம்பிக்கிறது. தனிமனிதன் மட்டுமே இருக்கிறான், சமூகம் என்பதே இல்லை என்று சொல்லும் அதீத நிலை வரை சிலசமயம் சென்றடைகிறது.
மூன்று ஆப்த வாக்கியங்களாக இந்த ஒட்டுமொத்த விரிவை சுருக்கிப் புரிந்துகொள்ளலாம். தெகார்த்தேயின் ‘நான் சிந்திக்கிறேன், ஆகவே நான் இருக்கிறேன்’ மார்க்சின் ‘நமது வேலை உலகத்தை புரிந்துகொள்வது அல்ல, அதை மாற்றியமைப்பதுதான்’ சார்த்ரின் ‘மனிதன் அவனை உருவாக்கிய சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்’
முதல் சிந்தனையை மேலைநாட்டு சுதந்திர இச்சை இயக்கத்தின் [Free Will Movement] சாரம் எனலாம். பல்வேறு கோணங்களில் இன்றுவரை விளக்கப்படும் இந்த வரியானது சிந்திக்கும் மனிதனின் இருப்பை நிறுவக்கூடியது. சிந்திப்பதன்மூலம் மனிதன் தன் இருப்பை உருவாக்குகிறான். இருப்பதற்காக சிந்திக்கிறான். சிந்திப்பவன் மட்டுமே இருக்கிறான். சிந்தநை என்பதே மனிதன் தன் இருப்பை உணர்வதுதான்
இரண்டாவது சிந்தனை இந்தச் சிந்தனையின் இன்னொரு கோணத்திலான நீட்சி. தன்னைப்பற்றி சிந்திக்கும் மனிதன் தன் சூழலை மாற்றியமைத்து தனக்குரிய உலகை தானே உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற உத்வேகத்தை அடைகிறான். ந்தினெட்டாம் நூற்றாண்டு முதலாளித்துவசிந்தனைகள் அனைத்திலும் சாராம்சமாக ஓடுவது இந்த எண்ணமே. உலகம் முழுக்க ஐரோப்பியர்களைக் கொண்டுசென்றது, இன்றைய தொழில்நுட்ப உலகை உருவாக்கியது, இயற்கையைச் சூறையாடசெய்தது இந்த எண்ணமே. முதலாளித்துவ சிந்தனையில் உருவான ‘நான் உலகம் சமைப்பவன்’ என்ற தன்னுணர்வு அடுத்த கட்டத்தை அடைவதே கம்யூனிசம். அதாவது மார்க்ஸ் உருவகித்த கம்யூனிசம் என்பது முதலாளித்துவத்தின் இன்றியமையாத வளர்ச்சிநிலை மட்டுமே.
மூன்று இந்த இரு உணர்வெழுச்சிகளின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. தனிமனிதனாக தன்னை உணர்ந்த மனிதன் காலம் வெளி என்னும் பிரம்மண்டங்களின் முன்பு தன்னை உணரும்போது உருவாகும் அர்த்தமின்மை இவ்வரியில் உள்ளது. இதுவே இருத்தலியமாக பல தளங்களில் விரிவாக்கம் பெற்ற சிந்தனை.
எந்த ஒரு சிந்தனைக்கூறையும் சட்டென்று உலகலாவியதாக உருவகித்துக்கொள்வது என்பது ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம் முதல் உருவாகிவந்த ஒரு மனநிலை. பெரும்பாலான ஐரோப்பியச் சிந்தனைகளில் இந்த அம்சத்தைக் காணலாம். இந்தப்போக்கின் முதல் புள்ளி பெருங்கவிஞர் கதே என்று சார்த்ர் ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார். எந்தக்கருத்தையும் இப்படி மானுடப்பொதுவிதியாக ஆக்கும்போக்கில் ஐரோப்பா ஏராளமான கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறது. அயன் ரான்ட் போன்றவர்கள் கூட ‘மானுடம்’ நோக்கிப் பேசுவதைக் காணலாம்.
இந்த மனநிலையை நிராகரித்தது பின் நவீனத்துவம்தான். நாகார்ஜுனன் எண்பதுகளில் தமிழில் தெளிவற்ற முறையிலானாலும் இச்சிந்தனையை முன்வைத்து மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறார். பன்மைத்துவம், விளிம்புகள், மையமின்மைகள் ஆகியவை சிந்தனையில் எந்த இடத்தை வகிக்கின்றன என்று சொல்லி தமிழியர்கள் போன்றவர்களால் வசைபாடப்பட்டார்.
உண்மையில் ஒருவிஷயத்தை தர்க்கபூர்வமாக மானுடமளாவ மாறுவது சாத்தியமே அல்ல. மானுடம் என்பது என்ன? ஐரோப்பிய மனிதனும் பப்புவா நியூகினியா பழங்குடியும் சேர்ந்த ஒரு அமைப்பு அல்லவா? உள்ளுணர்வு சார்ந்து ஒரு மானுடப்பொது உணர்ச்சியை ஒருவன் அடைவதென்பது வேறு. தர்க்கபூர்வமாக மானுடம் என்று சொல்லும்போது ஒரு சராசரியே உருவகிக்கப்படுகிறது. அந்தச் சராசரி என்பது பெரும்பாலும் ஐரோப்பிய சராசரியே [ இங்கே ஒரு சின்னக் குறிப்பு ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அமெரிக்கா என்பது ஐர்ப்போய பண்பாடு மற்றும் சிந்தனையின் நீட்சிதான்]
இந்த செமிட்டிக் எதிர்ப்புச் சிந்தனைப்போக்கின் விளைவாக ஐரோப்பாவில் பல்வேறு சிந்தனைகள் உருவாகி வந்தன. அவற்றின் பரிணாமநிலைகளை நாம் எந்த ஒரு தத்துவ அறிமுக நூலிலும் காணலாம் ·பாயர்பாக் முதலியவர்களால் முன்வைக்கபப்ட்ட எளிய பொருள்முதல்வாதம் அங்கிருந்து இந்தியா வரை வந்து பகுத்தறிவுவாதம் என்ற பேரில் இன்றும் வலுவாக உள்ளது. அதன் அடுத்தகட்ட வளர்ச்சிநிலை என்பது முரணியக்க வரலாற்று பொருள்முதல்வாதமான மார்க்சியம்.
அதன் பின்னர் நேர்காட்சிவாதம், புலனறிவாதம், பயனுறுவாதம் [Utilitarianism], நடைமுறைவாதம் [Pragmaticism] என பல்வேறு சிந்தனைமுறைகள் ஐரோப்பிய சொற்களனில் உருவாகி வந்திருக்கின்றன. இந்தத்தரப்பு என்பது ஐரோப்பிய சிந்தனையில் என்றும் வலுவாக இருந்துகொண்டே இருக்கக் கூடிய ஒன்றாகும். இவற்றை பொதுவாக அதிதூய பொருள்முதல்வாத நோக்குகள் எனலாம். இன்னும் நிறைய சிந்தனைகள் இக்கிளையில் உருவாகும். இது மனிதனை, வரலாற்றை கருத்துமுதல்வாத நோக்குடன் சாராம்சப்படுத்தும் எந்த அணுகுமுறைக்கும் எதிரானது. இதற்கு உண்மையில் பெரிய ஒரு தத்துவ-சமூக பங்களிப்பு உண்டு என்றே நான் எண்ணுகிறேன்.
உண்மையில் பொருள்முதல்வாதத்தின் நீட்சியான மார்க்ஸியம் என்பது ஒரு கருத்துமுதல்வாதமாகும். வரலாறுக்கு தனக்கே உரிய ஓர் பரிணாமமும் இலக்கும் உள்ளது என்கிறது மார்க்ஸியம். இந்த வரலாற்றுவாதம் என்பது ஒரு கருத்துமுதல்வாத உருவகம். வரலாற்றுக்கு ஒரு ‘உள்ளக்கிடக்கை’ உண்டு என்ற எண்ணம் இதில் உள்ளது. பொருள்முதல் வாதத்தில் மார்க்சியத்தால் சேர்க்கபப்ட்ட இந்த இலட்சியவாத அம்சத்தைக்கூட இல்லாமலாக்கி அதை தூய புறவய தர்க்கங்களால் ஆன ஒன்றாக தொகுக்கும் முயற்சி என்று நாம் மேலெ சொன்ன சிந்தனைகளைச் சொல்லலாம்
அதாவது ஒரு புரிதலுக்காக இப்படி வகுத்துக்கொள்ளலாம். மேலைநாட்டில் செமிட்டிக் சிந்தனைகளை மறுத்து கிரேக்க பின்னணியில் இருந்து ஊக்கம் பெற்று உருவான பொருள்முதல்வாத சிந்தனை முறையில் இரு கிளைகள். அதை முதலாளித்துவம் , மார்க்சியம் எனலாம்.அதில் மார்க்ஸியம் என்ற கிளை தனக்குள் செமிட்டிக் மரபில் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு கருத்துமுதல்வாத அம்சத்தைச் சேர்த்துக்கொண்டது. இன்னொரு கிளையான முதலாளித்துவம் தன்னை தூய பொருள்முதல்வாதமாக நிலைநாட்டிக்கொள்ள முயலும்போது உருவாகும் சிந்தனைகளே மேலெ சொன்னவை
உலகசிந்தனைக்கு அமெரிக்காவின் கொடை என்பது இதுதான். அமெரிக்காவிலேயே உருவாகிவந்த, அமெரிக்காவுக்கே உரிய தத்துவசிந்தனை என்பது நடைமுறைவாதம்தான். அது தொடர்ச்சியான பல சிந்தனையாளர்களால் உருவாக்கபப்ட்ட ஒரு சிந்தனை மரபு. அமெரிக்காவின் பெரும்பாலான சிந்தனையாளர்களில் நடைமுறைவாதத்தின் வலுவான செல்வாக்கு உண்டு. அங்கே கல்லூரி வட்டாரங்களில் நடைமுறைவாதம் கிட்டத்தட்ட ஒரு மதக்கொள்கைபோல கடைப்பிடிக்கபப்டுகிரது என்று நான் கற்பனைசெய்துகொள்கிறேன். அமெரிக்க நடைமுறைவாதத்தில் முளைத்த ஒரு சிறு கிளை, மேற்கொண்டு வளர்ச்சி இல்லாமல் நின்றுவிட்ட ஒன்று, தான் அயன் ரான்டின் புறவயவாதம் என சுருக்கிக்கொள்ளலாம்.
நடைமுறைவாதத்தை நான் நிராகரிக்கவில்லை. எனக்கு அதன்மீது பெரும் மோகமே உண்டு. நடைமுறைவாதம் சார்ந்து ஒரு தமிழ் நூலைஇ எழுதுவதாக இருக்கிறேன். ஆனால் என் வழக்கபப்டி நான் ஒரு தத்துவ தரப்பை அதற்கு நெர் எதிரான தரப்பையும் கணக்கில் கொண்டே யோசிப்பேன். நான் அத்வைதத்தில் நம்பிக்கை கொண்டவன், ஆனால் எனக்கு உலகாயத சிந்தனைகள் அதே அளவுக்கு முக்கியமானவை. இந்திய உலகாயதச் சிந்தனைகள் வளர்ச்சி குன்றி நின்றுவிட்டன. அவற்றின் வளர்ச்சி முழுமையாக இருந்திருந்தால் எங்கே வந்திருக்குகோ அதுவே அமெரிக்கந் அடைமுறைவாதம். ஆகவே எனக்கு அது மிக முக்கியமானது. ஆனால் அது எனக்கு முழுமையானது அல்ல
அமெரிக்க நடைமுறைவாதம் என்பது அமெரிக்காவுக்கே உரிய இன்னொரு தனித்த சிந்தனைமுறையான ஆழ்நிலைவாதத்துக்கு நேர் எதிரானது. எமர்சன், தோரோ போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட ஆழ்நிலைவாத [Transcendentalism ] த்தால் ‘சீண்டப்பட்டு’ உருவானது என்று கூட சொல்லலாம். மனிதனை உன்னதமான ஒரு படைப்பாக காண்கிறது ஆழ்நிலைவாதம். இயற்கையை பெரும் பேணும்சக்தியாக அணுகுகிறது. இயற்கையின் ஒரு பகுதியான மனிதன் இயற்கையின் பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இயங்க வேண்டியவன். ஐரோப்பிய மறுமலர்ச்சியில் உருவான இயற்கைவாதத்தின் [Naturalism ]அடுத்த வளர்ச்சிலை என ஆழ்நிலை வாதத்தைச் சொல்லலாம்.
இந்த கருதுக்க்களை அயன் ராண்ட் ஒரே சொல்லில் திரள்வாதம் என நிராகரித்து மேலே செல்வார். அதன் சாராம்சமான உணர்ச்சிகளுக்குள் செல்ல அவர் முயல்வதே இல்லை. அயன் ராண்டின் நோக்கிலேயே பார்த்தால்கூட இந்த வகையான இலட்சியவாதச் சிந்தனைகளின் பயன்மதிப்பு என்ன என்று ஆராயலாமே. இவை ஏன் மனிதனில் உருவாயின, எவ்வாறு பரிணாமம் கொண்டன என்று பார்க்கலாமே. உதாரணமாக தியாகம் என்ற விழுமியம் தர்க்கபூர்வமாக அபத்தமாக இருக்கட்டும். அதன் பயன்மதிப்பு என்ன? ஏன் அது மனிதனில் உருவானது? ஏன் நிலைநிற்கிறது?
எல்லா கருத்துக்களும் கருவிகள். அவை ஆற்றக்கூடிய பணி என்று ஒன்று உண்டு. அப்பணியே அவற்றின் நிலைநிற்பை நியாயப்படுத்துகிறது. கருத்துக்களை அவற்றின் பரிணாமம், பயன்பாடு என்ற நோக்கில்தான் நடைமுறைவாதம் கருத்தில் கொள்கிறது. அயன் ரான் அந்த அளவுக்கு திறந்த மனத்தைக்கூட காண்பிப்பதில்லை. முன்னோடிகளான நடைமுறைவாடக்ச் சிந்தனையாளர்கள் ஆழ்நிலைவாதத்தை விரிவாகவே விவாதத்துக்கு எடுத்துக்கொண்டபின்னர்தன் நிராகரிக்கிறார்கள். அதன் அடிபப்டைகளை தத்துவார்த்தமாக எதிர்கொள்கிறார்கள். அந்த விவாதமே முக்கியமானது.
ஐரோப்பிய தனிமனிதவாதத்தை விரிவாக இங்கே பேச முடியவில்லை. அதன் பல்வேறு படிநிலைகளை மட்டும் சொல்லிச்செல்லலாம். கிரேக்க மரபில் தனிமனிதன் ஒரு முக்கியமான அடிபப்டை அலகாக கருதபப்ட்டான். அதை ந் ம் பிளேட்டோவின் குடியரசு விவாதங்களில் திட்டவட்டமாகக் காணலாம். ஆனால் கிரேக்க தனிமனிதன் என்பவன் ‘குடிமகன்’ [ப்ளீபியன்] மட்டுமே. குடிமக்கள் அல்லாத அடிமைகள் பெண்கள் போன்றவர்களுக்கு தனிமனித உரிமையும் தனித்தன்மையும் அனுமதிக்கப்படவில்லை.
கிரேக்க தனிமனிதவாதம் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில் மீட்கபப்ட்டபோது அது மானுடம் சார்ந்ததாக உருவகிக்கப்பட்டது. எல்லா தனிமனிதர்களுக்கும் தனித்துவமும் சிந்தனை உரிமையும் உருவகிக்கப்பட்டன. மானுடவாதம் என்ற சிந்தனைமுறையாக இது உருவாகி வந்தது. தனிமனித வாதத்தை ஒரு கருத்துமுதல்வாத நோக்குடன் இலட்சியக் கோட்பாடாக வளர்த்தெடுத்தது மானுடவாதம். வால்டேர் ரூசோ போன்றவர்களை இதன் முன்னோடிச் சிந்தனையாளர்களாக நாம் அறிவோம். மானுடவாதமும், இயற்கைவாதமும் கலந்த கலவையே ஐரோப்பாவில் எமர்சன், தோரோ போன்றவரக்ளால் முன்வைக்கப்பட்ட ஆழ்நிலைவாதம். மனிதனின் உள்ளார்ந்த நல்லியல்பு, அவனது இயல்பான சுதந்திரம், மானுட சமத்துவம் ஆகிய மூன்றும் ஆழ்நிலைவாதத்தின் அடிபப்டைக்கருத்துக்கள்.
ஐரோப்பிய மறுமலர்ச்சியின்போது மீட்டிருவாக்கம் செய்யபப்ட்ட பொருள்முதல்வாதச் சிந்தனையின் ஒரு பகுதியாகவே தனிமனிதவாதம் புத்துயிர் பெற்றது. ஆனால் அது மானுடவாதவாத்மாக கருத்துமுதல்வாத வளர்ச்சி கொண்டபோது அந்த கருத்துமுதல்வாத கருத்துநிலையை ரத்து செய்யும் சிந்தனைகள் உருவாயின. அவ்வாறு உருவான சிந்தனைகள் மானுட சமத்துவம் என்ற இலட்சியக்கருத்தை நிராகரித்தன. மனிதனின் உள்ளார்ந்த நல்லியல்பு, மானுடனின் பிறப்புச்சமநிலை போன்றவை வெறும் ‘ஆன்மீக ஊகங்கள் ‘ என்று நிராகரிக்கபப்ட்டன. இயல்பாகவே அவை கிரேக்க தனிமனித வாதத்தை நோக்கி சென்றன. பிளேட்டோ சொல்வதுபோல தகுதி கொண்டவர்களுக்கே தனிமனித உரிமைகள் என்ற நிலையை அடைந்தன. இதை நாம் அமெரிக்க நடைமுறைவாதிகளில் காணலாம்’
இந்த நோக்கையே நாம் அயன் ரான்டில் காண்கிறோம். அவர் தனிமனித உரிமைகளைப்பற்றி பேசுகிறார். ஆனால் அனைத்து மனிதர்களுக்கும் உரிய தனிமனித உரிமைகள் அல்ல. அவை தேர்வுசெய்யபப்ட்ட, தகுதியான, படைப்பூக்கம் கொண்ட ‘ உலகை நிர்மாணிக்கும்’ மக்களுக்கு மட்டுமே உரிய சுதந்திரம் மட்டுமே. ‘பொதுமக்கள்’ இவர்களால் வழிநடத்தப்படவேண்டியவர்கள். கிட்டத்தட்ட பிளேட்டோவின் நோக்குக்கு அளிக்கப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட வள்ர்ர்சிநோக்கு இது. மானுடவாதம் மார்க்ஸியமாக வளர்ச்சி அடைந்து கண்முன் நின்றபோது அதையும் ஆழ்நிலைவாதத்தையும் முற்றாக ரத்துசெய்யும் நோக்குடன் உருவாக்கபப்ட்ட அதீத நிலையே புறவயவாதம்
என் நோக்கில் எமர்சனின் உணர்ச்சிபெருக்குள்ள ஆழ்நிலைவாதம் ஒரு அதீத எல்லை. அயன் ராண்டின் புரவயவாதம் இன்னொரு அதீத எல்லை. நான் நடுவே செல்லவே விரும்புவேன். அதுவே புத்தர் சொன்ன பாதை
**********
ஓர் இலக்கிய ஆக்கத்துக்கு இருக்கவேண்டிய சுதந்திரமான தேடலும் அதன் விளைவான பரிணாமகதியும் இல்லாமல் முன் தீர்மானிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் கட்டமைக்கபப்ட்ட ஒரு இயந்திரத்தனமான நாவல்தான் அயன் ரான்டின் ஃபௌன்டன் கெட்
அயன் ரான்ட் பேசும் தனிமனிதவாதம் என்பது கிரேக்கசிந்தனையில் வேர்கொண்டு, ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில் ஜனநாயகத்தின் அடிப்படையாக கருதப்பட்டு மீட்கப்பட்ட ஒன்று. அயன்ரான்ட் அதை மிகைப்படுத்தி அறிவுஜீவிமையவாதமாக ஆக்குகிறார்.
ஐரோப்பியப் பொருள்முதல்வாதத்தில் மார்க்ஸியம் உருவாக்கிய கருத்துமுதல்வாதத்திருப்பத்தை ரத்துசெய்து தூய பொருள்முதல்வாதத்=த்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட அமெரிக்க நடைமுறைவாதத்தில் உருவான ஒரு குறிப்பிட்ட வாதகதி மட்டுமே அயன் ரான்டின் புறவய வாதம்
[இந்த நாலாவது கட்டுரையை முடிப்பதற்குள் அமெரிக்கா கிளம்பிவிட்டேன். பாஸ்டனில் பாஸ்டன் பாலா இல்லத்தில் இருந்து அவசரமாக எழுதுகிரேன். பிறிதொரு தருணத்தில் இன்னும் விரிவாக புறயவ வாதம் குறித்து எழுதுவேன்