குகைகளின் வழியே – 21

முச்சுந்தில் இருந்து திரும்பும் வழியில் டுடுமா அருவிகளைப் பார்த்தோம். சாலையில் நின்றபோது இரண்டு அருவிகள் மலையுச்சியில் இருந்து வானத்தின் விழுவது போல இறங்கி ஆழத்திற்குள் செல்வது தெரிந்தது. நான் இந்தியாவில் பார்த்த அருவிகளில் அவைதான் மிக உயரமானவை. ஆனால் பள்ளத்தாக்கிலிருந்து பிரம்மாண்டமான ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. கீழே விழும் அருவிகள் அங்கே பாறைகளில் நுரைத்தோடுகின்றன போலும் என நினைத்தோம்

காரை நிறுத்திவிட்டுப் படிகளில் இறங்கிச்செல்ல ஆரம்பித்தோம். ஏறத்தாழ ஆயிரத்தைநூறு அடி ஆழத்திற்கு இறங்கிச்செல்லும் அந்தப் பள்ளத்தாக்குக்குள் செல்லப் படிகள் கட்டப்பட்டிருக்கின்றன. உயரமான படிகள் . குதித்துக் குதித்துத்தான் செல்லவேண்டும். செல்லச்செல்ல அச்சம் ஏற்பட்டது. அந்த படிகளை முழுக்க திரும்ப ஏறி வரவேண்டுமே என்ற எண்ணம்தான். படிகளுக்குப்பின் நேரடியாக காட்டுக்குள் செல்லும் ஒற்றையடிப்பாதை இறங்கிச்சென்றது. இருபக்கமும் காடு அடர்ந்து செறிந்திருந்தது. சுற்றுலாப்பயணிகளுக்கான எந்த ஏற்பாடும் இல்லை. அங்கே அப்படி எவரும் வருவதுமில்லை என்று நினைத்தேன்.

கீழே சென்று பாறைகள் வழியாக இறங்கி நின்றபோதுதான் நான் என் வாழ்க்கையில் கண்ட மகத்தான இயற்கைக்காட்சி ஒன்றின் முன் நின்றுகொண்டிருப்பதை உணர்ந்தேன். அங்கே நாங்கள் காணாத பேரருவி ஒன்று வான் தொட்டு நின்ற மலையுச்சியில் இருந்து வெண்ணிறமான பெருங்கொப்பளிப்பாகப் பெருகிக் கொட்டிக்கொண்டிருந்தது. இந்தியாவின் மிக உயரமான அருவி அதுதான். பெரும்பாலான அருவிகளைப்போலப் படிப்படியாகப் பாறைகளில் விழுந்து கீழே சரியவில்லை. பிரம்மாண்டமாகச் சரிந்து ஒரு பாறை மடிப்பில் விழுந்து அப்படியே கொந்தளித்து எழுந்து அதைவிட இருமடங்கு ஆழமுள்ள அடிவாரத்தில் கொட்டியது.

அருவிகள் கீழே விழும்போது நீர்த்தோகைகளாக விழுவதே வழக்கம். அவற்றிலேயே நாம் குளிக்க முடியும். செங்குத்தாக நேரடியாக விழும் அருவிகள் நீர்க் குச்சிகளாக விழும். அவற்றை நெருங்க முடியாது. ஆனால் விழுந்த உயரத்திலும் வேகத்திலும் அப்படியே நீர்ப்புகை போல ஆகிப் பாறையைச்சூழ்ந்த அருவியை அப்போதுதான் பார்க்கிறேன். விழுந்த வேகத்தில் அப்படியே சீறி எழுந்து மறுபக்கப் பாறையில் முட்டி வளைந்து மேலேறி சுருண்டு மீண்டும் கீழிறங்கியது அருவி. அடிவாரத்தில் அருவியாலான ஒரு பெரும் u வடிவம் உருவாகியது. பிரமிப்பூட்டும் பயங்கரம்

நல்லமழைக்காலத்தில் குற்றாலம் பேரருவில் எவ்வளவு நீர் இருக்குமோ அவ்வளவு நீர். பேரருவியை விட இருமடங்கு உயரத்தில் இருந்து செங்குத்தாக விழுந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபார்த்தால் டுடுமா அருவியை மனக்கண்ணில் காணமுடியும். மழைக்காலத்தில் இந்ந்த அருவியைப் பார்க்கவே முடியாது. அந்தப்பகுதி முழுக்க நீர் பொங்கிக்கொப்பளிக்கும். பாதுகாப்பாக அருகே செல்ல வழி கிடையாது.கோடைகாலமானதனால் பாறைகள் வழுக்கவில்லை.

நேற்று குப்தேஸ்வர் குகைகளில் அடைந்த சிறிய தயக்கத்தை வெல்லவேண்டும் என்ற எண்ணம் எங்கோ இருந்திருக்கவேண்டும். பாறைகளில் தொற்றித்தொற்றி ஏறினேன். அருவியை அருகே சென்று பார்த்தேன். கிருஷ்ணன் மட்டும்தான் மேலே வந்தார்.மற்றவர்கள் நின்றுவிட்டார்கள்.

அந்தப்பாறைகளில் நிற்கையில் அருவிகள் விழுதுகளாக இறங்கிய ஒரு பளிங்கு ஆலமரத்தின் அடியில் நிற்பதுபோல உணர்ந்தேன். முன்பக்கம் பேரருவி. பின்பக்கம் அதே உயரம் கொண்ட ஆனால் பாதியளவே ந்நீர் கொண்ட இரு பெரும் அருவிகள். மனோவசியம் செய்யும் காட்சி கனவில் நிறுத்திவைக்கும் காட்சி.

அருவி ஏன் அந்த பெரும் மன எழுச்சியை அளிக்கிறது? நீரில் தெரியும் அந்த மூர்க்கமான பேராற்றல் அச்சமூட்டுவது. அகம் நடுங்கச்செய்வது. அதேசமயம் கண்களை எடுக்கவும் முடிவதில்லை. உள்ளூர ஒரு சின்னக்குழந்தை கை நீட்டி குதித்துக் குதூகலித்தபடியே இருக்கிறது. அது ஆதிப்பேராற்றல். விண்ணையும் மண்ணையும் சமைத்த விசையின் ஒரு துளி. அந்த ஆற்றலே நம்முள்ளும் உறைவதனால்தான் அந்தக் குதூகலமா? ஆற்றல் ஆற்றலை அடையாளம் கண்டுகொள்கிறதா என்ன?


அருவியைக் கண்டுகண்டு தீரவில்லை. கைக்குழந்தையை ,யானையை , சூரிய உதயத்தை, தீப ஒளியில் நிற்கும் கருவறைமூர்த்தியைக் கண்டு சலிப்பதில்லை மனம். எவ்வளவு கண்டபின்னும் ஒரு கணம் கூட அதில் கவனம் தரிக்கவில்லை என்றே தோன்றும். அக்கணம் பார்க்க ஆரம்பித்ததாகவே பிரமை எழும். அள்ளிக்குடிக்கக் குடிக்க விழித்தாகம் அதிகரிக்கும். மேலிருந்து கொந்தளித்துக்கொட்டிக்கொண்டே இருந்தது அருவி. அக்கணம் கொட்ட ஆரம்பித்தது போல. அப்பால் ஏதோ பனிமலை பெயர்ந்து சொரிவதுபோல. அதிபிரம்மாண்டமானதோர் புன்னகை போல.

படிகளில் ஏற ஆரம்பித்தோம். நின்று மூச்சிரைத்து இளைப்பாறி மீண்டும் ஏறினோம். படிகளில் ஏறுவது எப்போதுமே சவாலானதுதான். ஆனால்நின்று நின்று ஏறினால் எந்தப் படிகளையும் ஏறிவிட முடியும்

வழியில் பழங்குடிகள் காட்டுக்குத் தீவைத்துக்கொண்டிருந்தார்கள். செடிகளை வெட்டிக்காயப்போட்டு தீவைத்தபின் அங்கே நடவுசெய்வது அவர்களின் வழக்கம். எது கிடைக்கிறதோ அதை வைத்துக்கொள்வார்கள். நடுவதைத்தவிர வேறு உழைப்பு ஏதுமில்லை. செந்நிறமான நாக்குகளாக தீ எழுந்து பறந்தது. கரித்திவலைகள் வானிலிருந்து கொட்டின. படிகள் வழியாக அந்த நெருப்பைப் பார்த்துக்கொண்டே ஏறி வந்தேன். படியருகே வரை வந்து நின்றெரிந்தன கொழுந்துகள்.

மாலையே ஆந்திரா நோக்கி வர ஆரம்பித்தோம். ஒரிசாவிலிருந்து ஆந்திரா வரும் வழியில் உள்ளது அரக்கு மலைச்சமவெளி. இதை ஒரு பெரிய சுற்றுலாமையமாக வளர்த்து வருகிறது ஆந்திர அரசு. ஏராளமான விடுதிகள். ஆந்திர அரசின் சுற்றுலா விடுதியான ஹரிதா [பசுமை]. ஆனால் எல்லாமே விலை அதிகம். அரக்குவேலியைச்சுற்றி உள்ள மலைகளில் பலவகையான மலைக்களியாட்டங்கள் உள்ளன. பறத்தல் மலையேறுதல் மலைச்சரிவில் பலூனில் உருளுதல் பழங்குடிகளை வேடிக்கைபார்த்தல்..

நாங்கள் அரக்கு சமவெளி இறங்கி கீழே வந்தோம். அனந்தபூர் என்ற ஊரில் ஹரிதா விடுதியில் இடம் கேட்டால் மூவாயிரம் ரூபாய் கேட்டார்கள். எங்கள் பட்ஜெட்டுக்கு அதிகம். அவர்களிடமே ஆலோசனை கேட்டு இன்னொரு இடத்தில் இருந்த ஹரிதா விடுதிக்கு சென்றோம். அங்கு அறைகள் இல்லை. ஆகவே திரும்பி மீண்டும் அனந்தபூர் விடுதிக்கே வந்தோம். வரும் வழியில் ஒரு டீக்கடையில் டீ குடித்தோம். தமிழர்கள் கடைவைத்திருந்ந்தனர். திருவண்ணாமலை செங்கம் அருகே இருந்து வந்தவர்கள்

அனந்த்பூர் விடுதியிலும் சரி இப்பிராந்தியத்திலும் சரி எங்குமே செல்பேசி வசதிகள் இல்லை. இணையம் இல்லை. ஆகவே இன்றையபதிவை இணைய்த்தில் ஏற்ற முடியவில்லை. நாளை வெளியே எங்காவது செல்பேசி சமிக்ஞை கிடைத்தால் ஏற்றவேண்டியதுதான்.

நல்ல குளிர். இங்கே பழங்குடி நடனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். அந்த மத்தள ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. நிறைய வெள்ளையர்கள் காமிராக்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் என்னால் அதைப்பார்க்கச்செல்லத் தோன்றவில்லை. ‘பிரபுக்கள்’ முன்னால் அப்பழங்குடிகள் பரிதாபமான கோலத்தில் வந்து நின்று ஆடும் காட்சியை என்னால் எப்போதுமே தாங்கமுடிவதில்லை. சுற்றுலாவுக்காக அவர்களைப் பேணும் கலாச்சாரம் மிகக் குரூரமானது என்பதே என் எண்ணம்.

அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமெல்லாம் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். அந்தப் பழக்கத்தை இங்கும் நம்மவருக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். சுற்றுலா வளர வளர பழங்குடிகள் வெள்ளையருக்கு கேளிக்கைக்கான பொம்மைகளாக ஆகிறார்கள். சமீபத்தில் அந்தமானில் ஜாரவா பழங்குடியினரை சில்லறை கொடுத்து நிர்வாண நடனமிட வைத்துப் படமெடுத்து இணையத்தில் ஏற்றிய வெள்ளையரது செயல் பலத்த கண்டனத்தைப்பெற்றது. உச்சநீதிமன்றம் தலையிட்டு ஜாரவா பகுதிகளில் அன்னிய நடமாட்டத்தைத் தடைசெய்தது

ஆனால் அந்த மனநிலை எப்போதும் வெள்ளையரிடம் இருக்கிறது. அவர்கள் பிறரை வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்கள் ‘பரிவுடன்’ குனிந்து கீழே பார்க்கிறார்கள். அது அவர்களுக்கு தங்களை ‘நாகரீக கனவானாக’ உணர வழிசெய்கிறது. பழங்குடிகளை மட்டுமல்ல நம்மையும்தான். அவர்களுக்கு பெரிய வேறுபாடு கண்ணுக்குப் படுவதுமில்லை. பல ஊர்களில் வெள்ளையர் இந்தியக் கிராமங்களில் புகைப்படங்கள் எடுக்கையில் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது கண்களிலும் உதடுகளிலும் மெல்லிய குரலிலும் வெளிப்படும் நக்கலையும் நமுட்டுச்சிரிபையும் கவ்னித்திருக்கிறேன். சமீபத்தில் ரயிலில் சந்தித்த மெல்மூர் என்ற பிரெஞ்சு கனடியனிடம் அதைச் சொன்னேன். ‘ஆமாம் உண்மைதான். இங்கே நிரந்தரமாக வருவதற்கு முன் நானும் அந்த மனநிலையில்தான் இருதேன்’ என்றவர் பின் உரக்கச்சிரித்து ‘நான் இப்போது வெள்ளையர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்’ என்றார்

இரவு நல்ல தூக்கம். தூக்கத்தில் ஒரு கனவு. பிரம்மாண்டமான நெருப்புத்தழல்களாக டுடுமா பேரருவிகள் கொட்ட்டிக்கொண்டிருக்கின்றன. நாங்கள் கீழே நின்று கொண்டிருக்கிறோம். வெப்பம் இல்லை. குளிர்தான். உற்சாகமாக சிரித்துப்பேசிக்கொண்டு அதைப்பார்த்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் முன் துடித்து அசைந்துகொண்டிருந்தது வேதம் சொல்லும் சுவர்ண ஜிஹ்வா. பிரம்மத்தின் தங்கநாக்கு!

[மேலும்]

முந்தைய கட்டுரைகுகைகளின் வழியே – 20
அடுத்த கட்டுரைஎன் நூல்கள்