அயன் ராண்ட் – 3

நான் ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் இருந்தபோது பேரா.காசிநாதனைச் சந்தித்தேன். என்னை அவர் ஒருநாள்முழுக்க காரில் வெளியே அழைத்துச்சென்று மெல்பர்ன் நகருக்கு வெளியே உள்ள சிற்றூர்களைக் காட்டினார். இலங்கையில் தத்துவத்தில் ஆசிரியராக பணியாற்றிய காசிநாதன் அவர்கள் லண்டனில் தத்துவம் பயின்றவர். அவர் பயிலும்காலத்தில் தத்துவத்தில் பெரும் பரவசத்தை உருவாக்கிய ஆளுமை விட்கென்ஸ்டீன். காசிநாதன் அவர்கள் விட்கென்ஸ்டீன்னின் தத்துவத்தில் உயராய்வு செய்தார். கடந்த முப்பது வருடங்களாக அவருக்கு விட்கென்ஸ்டீன்தான் ஆய்வுப்பொருளாக இருக்கிறார். நாங்கள் ஒரு கிராமத்துப் புத்தகக் கடைக்குச் சென்றிருந்தோம். காசிநாதன் அங்கேயும் ஒரு விட்கென்ஸ்டீன் பற்றிய நூலைத்தான் வாங்கினார்.

அயன் ராண்டின் ரோர்க் மறைமுகமாக விட்கென்ஸ்டீனின் ஆளுமையை முன்னுதாரணமாகக் கொண்ட ஒரு கதாபாத்திரம் என்று எனக்குப் படுகிறது. அந்நாவல் எழுதப்பட்ட காலகட்டத்தில் மேலை அறிவுத்துறையின் நாயகனாக அவர் கருதப்பட்டார். ஆனால் இப்படிச்சொல்லவேண்டும், ரோர்க் விட்கென்ஸ்டீன்னின் பிரதியல்ல. விட்கென்ஸ்டீனை முன்வைத்து அயன் ராண்ட் விருப்பக் கற்பனைசெய்துகொண்டு உருவாக்கிய கதாபாத்திரம். அத்துடன் அயன் ராண்ட் எப்போதுமே தன் கதாபாத்திரங்களுக்கு தன் கணவர் ·ப்ராங்க் ஓ கானரின் சாயலையும் கொடுப்பது வழக்கம்.

லுட்விக் விட்கென்ஸ்டீன் [Ludwig Wittgenstein] தனிவாழ்க்கை உண்மையில் அயன் ராண்ட் எழுதிய நாவலைக்காட்டிலும் பத்துமடங்கு நாடகத்தன்மை கொண்டது. 1889 ல் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் பிறந்த விட்கென்ஸ்டீன் மிகப்பெரிய தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்தார். அன்று உலகில் இருந்த மாபெரும்செல்வந்தர்களில் ஒருவர் அவரது தந்தை. அத்துடன் அவரது குடும்பமே அசாதாரணமான அறிவுத்திறனுக்காகப் புகழ்பெற்றிருந்தது.   1908 ல் விட்கென்ஸ்டீன் மான்செஸ்டர் பல்கலையில் பறத்தலியல் பொறியியல் கற்க ஆரம்பித்தார். பொறியியலின் சாரம் கணிதம் என உணர்ந்து அவர் கணிதத்துக்குச் சென்றார். 1911 அவர் அன்று கணித தத்துவத்தில் உலகப்புகழ்பெற்றிருந்த பெர்ட்ரண்ட் ரஸ்ஸலிடம் கல்வி கற்க லண்டனுக்குச் சென்றார்

கட்டுக்கடங்காத தன்மையும் பொதுவாகவே மானுடம் மீது அலட்சியமும் கொண்டிருந்த விட்கென்ஸ்டீன் ரஸ்சலை ஓரளவுக்கு கவர்ந்தார். மெல்லமெல்ல அவரது மேதமையை ரஸ்சல் புரிந்துகொண்டார். அவர் தத்துவத்தில் தான் சந்தித்த புதிர்களை விடுவிப்பார் என எழுதினார். ஆனால் முறையான படிப்பில் விட்கென்ஸ்டீன் ஆர்வம் காட்டவில்லை. ரஸ்சல், கீய்ன்ஸ் முதலியவர்களிடம் உரையாடுவதிலேயே அவரது ஆர்வம் இருந்தது. படிப்பபை முடிக்காமலேயே 1913ல் அவர் நார்வேயின் கடலோரக்கிராமம் ஒன்றுக்கு தலைமறைவாகச்சென்று தனியாகத் தங்கியிருந்து மீன்பிடித்துக்கொண்டு தத்துவச் சிக்கல்களைப் பற்றி ஆரா¡ய்ச்சி செய்தார்

1914 ல் முதல் உலகப்போர் ஆரம்பித்தது. விட்கென்ஸ்டீன் ஆஸ்திரிய ராணுவத்தில் சேர்ந்து போரிட்டார். 1917ல் அவர் போர்க்கைதியாகப் பிடிக்கப்பட்டு சிறையில் இருந்தார். அவர் தன்னுடைய தத்துவ நூலின் அடிபப்டைக்குறிப்புகளை இச்சிறைவாழ்க்கையின்போதுதான் எழுதினார் என்கிறார்கள். சிறை மீண்டபின் அது முதலில் ஜெர்மனியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் வெளிவந்தது. தத்துவத்தின் எல்லா சிக்கல்களைய்ம்  அந்நூலில் தான் தீர்த்துவிட்டதாக விட்கென்ஸ்டீன் நினைத்தார். தன்னுடைய குடும்பம் அளித்த மாபெரும் செல்வத்தை துறந்தார். 1020 முதல் ஒன்பது வருடம் பல்வேறு வேலைகள் செய்து வாழ்ந்தார். சின்னஞ்சிறு கிராமம் ஒன்றில் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்தார். ஒரு பண்ணையில் வேலைபார்த்தார். ஆம், கட்டிட வரைவாளராகவும் இருந்தார்

1929ல் விட்கென்ஸ்டீன் மீண்டும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு வந்தார். தன்னுடைய முந்தைய தத்துவத்தீர்வுகளை தானே நிராகரித்தார். இக்காலகட்டத்தில் அவர் மரபான தத்துவ சிந்தனைக்கு முற்றிலும் எதிராக இருந்தார். மரபான தத்துவ விவாத முறையைக்கூட அவர் கடைப்பிடிக்கவில்லை. 1945 ல் அவர் தன் ‘முழுமையான’ தத்துவத் தீர்வுகளை தயாரித்தார் என்றாலும் கடைசி நேரத்தில் அதை அச்சுக்குக் கொடுபதைத் தவிர்த்தார்.  இக்காலகட்டத்தில் விட்கென்ஸ்டீன் விரிவான உலகப்பயணங்களை மேற்கொண்டார். 1951ல் அவர் மரணமடையும்போது அவர் ”நான் அற்புதமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தேன்”என்று சொன்னதாகச் சொல்லப்படுகிறது. அவரது மரணத்துக்குப் பின் அவரது முழுமையடையாத தத்துவக் குறிப்புகள் பிரசுரமாயின. அவை எழுதப்பட்ட நோட்டுபுத்தகங்களின் நிறத்தின் அடிப்படையில் நீலநிறப்புத்தகம், பழுப்புநிறப்புத்தகம் என அழைக்கப்பட்டன.

விட்கென்ஸ்டீன் இசைக்குறிப்புகள் எழுதியிருக்கிறார். சிற்பங்கள் செதுக்கியிருக்கிறார். கட்டிடங்கள் கட்டியிருக்கிறார். ஆம், கலையின் மூன்று நிலைகளிலும் அவர் செயல்பட்டிருக்கிறார். விட்கென்ஸ்டீன்னின் தத்துவத்தைப் பற்றி இங்கே பேச இடமில்லை. அவர் மரபான தத்துவத்தை எதிர்ப்பவர். சாராம்சவாதத்துக்கு எதிரானவர். தன்னுடைய சொந்தச் சிந்தனையைத்தேடி உள்ளும் புறமும் வாழ்நாளெல்லாம் அலைந்தவர். நேற்றில் இருந்து எதையுமே பெறாமல் தன்னை சுயம்புவாக உருவாக்கிக்கொள்ளும் சவாலை தனக்கு விதித்துக்கொண்டவர் விட்கென்ஸ்டீன்.தன்வாழ்நாளில் தத்துவத்தின் எல்லா பிரச்சினைகளையும்  தீர்த்துவிட்டதாகவே விட்கென்ஸ்டீன் எண்ணினார்.

நான் பேராசிரியர் காசிநாதனிடம் கேட்டேன், ”இன்று விட்கென்ஸ்டீன் முக்கியமானவராக கருதப்படுகிறாரா?” அவர் ”இல்லை. அவர் பின்னகர்ந்துவிட்டார். குறைவானவர்களே அவரைப்பற்றிப் பேசுகிறார்கள்” என்றார். இன்றைய தத்துவ சிந்தனையின் கேள்விகள் வேறு திசைக்கு நகர்ந்துவிட்டன.

நான் ”ஒற்றை வரியில் சொல்லுங்கள் சார், தத்துவத்துக்கும் உலகசிந்தனைக்கு  விட்கென்ஸ்டீனின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு என்ன?” முப்பது வருடங்களாக விட்கென்ஸ்டீன்னின் சிந்தனைகளில் மோகம் கொண்டு ஆராய்ச்சி செய்யும் ஒருவர் சொல்லப்போகும் பதிலை வைத்துத்தான் அவரை மதிப்பிடவேண்டும் என எண்ணியிருந்தேன். என் மனம் படபடத்தது என்றால் மிகையல்ல.காரை ஓட்டியபடி ஒருநிமிடம் தலைசாய்த்து சிந்தனைசெய்தபின் காசிநாதன் சொன்னார் ”டிட்டர்மினிசத்துக்கு எதிரான அவரோட விமரிசனங்கள்தான்”

அக்கணம் அவரை நான் புரிந்துகொண்டேன். தத்துவஞானம் ஒருவரை எங்கே கொண்டுசேர்க்கவேண்டுமோ அங்கே சென்று சேர்ந்த ஒரு ஆசானின் முன்னிலையில் நான் இருப்பதாக உணர்ந்து என் மனதுக்குள் அவர் காலைத்தொட்டு வணங்கினேன். ஆம், தத்துவத்தில் ஒருவருடைய ஆகப்பெரிய பங்களிப்பே அவ்வளவுதான் இருக்கமுடியும். இது நம் கண்முன் விரிந்துகிடக்கும் பிரபஞ்சமென்னும் முடிவிலியைப் பற்றி மானுடம் நிகழ்த்தும் பிரம்மாண்டமான ஓர் உரையாடல் மட்டுமே. இதில் ஒருகுரலாகவே எந்தச் சிந்தனையும் இருக்க முடியும். அது இன்னொரு குரலின் நீட்சி, இன்னொரு குரலுக்குப் பதில், அவ்வளவுதான்.

காசிநாதன் தன் இயல்பான விவேகத்தால் விட்கென்ஸ்டீன் போன்ற ஒரு மேதையை அவருக்குரிய இடத்தில் வைக்கிறார். ஆனால் விட்கென்ஸ்டீன் குறித்து எழுதப்பட்ட பிம்பத்தைக் கொண்டு ஒரு சுயம்புவான, முழுமையான ஆளுமையாக அவரைக் கற்பனைசெய்துகொண்ட ஒரு முதிராவயதுப் பெண் போல இருக்கிறார் அயன் ராண்ட். அத்தகைய ஏதோ பிம்பத்தை முன்னுதாரணமாகக் கொண்டு அவர் ஒரு பூரணமனிதனின் உருவத்தைக் கற்பனைசெய முயன்றதன் விளைவாக இருக்கலாம் ரோர்க்.

இன்றும் விட்கென்ஸ்டீன் போன்ற கவற்சியான மேதை ஆளுமைகள் நம்மிடையே உள்ளன. ரிச்சர்ட் பெயின்மான், கென் வில்பர் இருவரையும் சிறந்த உதாரணங்களாகச் சொல்லலாம். இவர்களின் சிந்தனைகளைவிட இவர்களின் ஆளுமைகளை அறிந்து அதனால் கவரப்பட்டவர்களே இளைஞர்களில் அதிகமானவர்கள். இந்த அம்சமே ·பௌண்டன் ஹெட் போன்ற நாவல்களின் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது.

ஒவ்வொரு இளைஞரும் மிக அந்தரங்கமாக தன்னை அசாதாரணமானவனாகவும், பிறரில் இருந்து முற்றிலும் வேறுபட்டவராகவும், எதிர்காலத்தில் உலகையே உலுக்கப்போகும் சிலவற்றைச் செய்யும் சாத்தியம் கொண்டவராகவும்தான் உணர்கிறார்கள். அந்த பகல்கனவைத்தொட்டுச் சீண்டுகிறது ·பௌண்டன் ஹெட். ஆகவேதான் அது உயர்கல்வி மாணவர் நடுவே அந்த அசாதாரணமான கவற்சியை அடைந்திருக்கிறது.

பொதுவாக இளைஞர் நடுவே இருக்கும் இன்னொரு ஆத்ரச பிம்பத்துக்கும் ரோர்க்குக்குமான உறவை இவ்விவாதத்தில் கவனிக்கவேண்டும். சே குவேரா. சே ஏறத்தாழ ரோர்க்கின் காலகட்டத்திலேயே இளைஞர் மத்தியில் பெரும் ஈர்ப்பை உருவாக்கியவர். ரோர்க்கைப்போலன்றி எதிரான ஒரு தளத்தில் நிற்பவர். பொதுவாக ஒரு கல்வி நிறுவனத்தில்  ரோர்க் அல்லது அதைப்போன்ற ஒரு முதலாளித்துவ அறிவுஜீவியை ஆதர்ச பிம்பமாகக் கொண்ட ஒருவர் சே’வை ஆதர்சபிம்பமாகக் கொண்ட ஒருவருக்கு நேர் எதிரானவராகவே இருப்பார்

ஏனென்றால் சே இடதுசாரி அறிவுஜீவி என்பதன் ஆதர்சபிம்பம். சேவுக்கு முன்னாலேயே அப்படிபப்ட்ட பல பிம்பங்கள் இருந்தன. ஸ்பானிஷ் உள்நாட்டுப்போரில் உயிர்துறந்த கிறிஸ்டோபர் கால்ட்வெல் போன்றவர்கள் ஐரோப்பாவில் ஐம்பதுகளில் பெரிய பிம்பங்கள் என்று அறிந்திருக்கிறேன். சேயை அறிவார்ந்த தீவிரம், தன் நம்பிக்கைகளுக்கு முழுமையான நேர்மையுடன் இருந்ததல்,  உண்மையான மனிதாபிமானம், தியாக உணர்வு, சாகசத்தன்மை ஆகியவற்றின் தொகுப்பு என்று சொல்லலாம்.

சேவுக்கு நேr எதிராக உருவாக்கப்பட்ட ஆளுமைபிம்பம் என்றுகூட நாம் ரோர்க்கைச் சொல்ல முடியும். முதலாளித்துவ அறிவுஜீவியின் ஆதர்சபிம்பம். ரோர்க்கின் ஆளுமையில் அறிவாrந்த தீவிரம்,  தன் நம்பிக்கைகளுக்கு முழுமையான நேர்மையுடன் இருந்ததல்,சாகசத்தன்மை ஆகியவை இருப்பதைக் காணலாம். மனிதாபிமானம், தியாக உணர்வு ஆகியவை மதத்தால் உருவாக்கப்பட்ட போலியான உணர்வுகள் என்று ரோர்க் எண்ணுகிறான். அவனுடைய அர்ப்பணிப்பு தன்னுடைய படைப்புத்திறனுக்கும் தனித்தன்மைக்கும் மட்டும்தான்.

அயன் ராண்ட் ரோர்க்குக்கு நேர் எதிரான சக்தியாக உருவாக்கப்பட்டிருக்கும் தூஹே [ Ellsworth M. Toohey] என்ற கதாபாத்திரம் மனிதாபிமானம், தியாக உணர்வு போன்ற மதிப்பீடுகளை முன்வைக்கிறது. ஆனால் கலைத்திறன் கைகூடா எல்லா நாவல்களிலும் செய்யப்பட்டிருப்பதுபோல இக்கதாபாத்திரம் போலியானதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதாபாத்திரமும் உண்மையானதாக உக்கிரமானதாக இருக்கும்போதுதான் ரோர்க் மூலம் முன்வைக்கப்படும் தரப்புக்கு கருத்தியல் சவால் இருக்கிறது. நாவலின் முரண்பாடு வலுவடைகிறது. அது நிகழவில்லை.

தூஹே தன்னை மனிதாபிமானியாகக் காட்டிக்கொள்கிறார். உண்மையில் உள்ளூர அவர் அது அல்ல. தான் யாரோ அதுவாக ஆகமுடியாமல் போனதனால் மனிதாபிமானம் போன்ற மதம் சார் கருத்துக்களினால் தன்னை சமாதானம்செய்துகொண்டவர்தான் அவர். இந்நாவலில் மதம் சார்ந்த கருத்துக்களை திரள்வாதம் [Collectivism] என்று அயன் ராண்ட் வரையறைசெய்கிறார். மனிதனை ஒரு மந்தையாக ஆக்கும், அவனுடைய தனித்தன்மைகளை அழிக்கும், அவன் தன்னை தன் கூட்டத்துக்காக முழுமையாக தியாகம்செய்வதை வலியுறுத்துவதே திரள்வாதம். தூஹே திரள்வாதத்தின் முழுமையான குரல். ஆகவே அவர் போலியானவர் என்பது அயன் ராண்ட்டின் தரப்பு..

உண்மையில் ரோர்க்க்குக்கு எதிராக நாவலில் நிறுத்தப்பட்டிருக்கவேண்டியவர் சே அல்லவா? சேயின் மனிதாபிமானத்தையும் உச்சகட்ட தியாகத்தின் மூலம் அவர் அடைந்த முழுமையையும் அல்லவா ரோர்க்கின் தனிமனித வாதத்துடனும், படைப்புசக்திமூலம் அடையப்படும் முழுமையுடனும் அயன் ராண்ட் ஒப்பிட்டிருக்க வேண்டும்? ஆனால் அயன் ராண்ட் அதைச்செய்யமுடியாது. ஏனென்றால் அயன் ராண்ட் ஒரு மார்க்ஸிய வெறுப்பாளர். அவர் கண்ணில் சே கூட ஒரு சுய ஏமாற்றுக்காரர்தான். தன் உண்மையான முழுமையை அடையமுடியாமல் போலியான திரள்வாத உணர்ச்சிகளில் தன்னை விரயம் செய்துகொண்டவர்தான்.

க.நா.சு மார்க்ஸியத்தை ஏற்றுக்கொண்டவர் அல்ல. அதன் உலகவரையறையே அடிப்படையில் பிழையுள்ளது என எண்ணியவர். அவர் சே குறித்து இப்படி ஒரு நிலைபாட்டை எடுப்பாரா? ஒருபோதும் மாட்டார். சே’யின் தரப்பையும் அவரால் உண்மையுடன் பார்க்கமுடியும். ஆகவே அவரால் மானுட வாழ்க்கையில் நிகழ்ந்த்கொண்டிருக்கும் விழுமியங்களின் முரண்பாட்டை அவரால் காணமுடியும். அந்த முரண்பாட்டை முன்வைக்கும் ஆக்கங்களையே அவர் முதிர்ச்சியான இலக்கியங்கள் என்று சொல்வார். அயன் ராண்ட் ஒருபக்கச்சார்பான, முன்முடிவுகள்கொண்ட, சாராம்சத்தில் கசப்புகொண்ட உலகப்பார்வை உள்ளவர். ஆகவேதான் க.நா.சுவின் கண்களுக்கு அவர் அரைவேக்காடாக தென்பட்டார். ஒரு சராசரி மார்க்ஸியப்பிரச்சார எழுத்தாளரை எப்படி அவர் அரைவேக்காடாகக் கண்டாரோ அப்படித்தான் அவர் அயன் ராண்டையும் கண்டார்.

ஆனால் சே,ரோர்க் இருவருக்கும் இருக்கும் ஒரு பொது அம்சம்தான் இருவரையும் இளைஞர்களுக்குரியவர்களாக ஆக்குகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இருவருமே ‘வெகுஜனங்களில்’ இருந்து ஒருபடி மேலானவர்கள். வெகுஜனங்களில் ஒருவர் அல்ல அவர்கள்.  இருவரும் தங்களுடைய தனித்தன்மையினாலேயே அசாதாரண மனிதர்களாக ஆனவர்கள். ரோர்க் தன் படைப்புத்திறனால் மேம்பட்டவனாகிறான். சே அவரது அசாதாரணமான மனிதாபிமானத்தால் மேம்பட்டவனாக ஆகிறார்.

இருவரும் தேர்ந்துகொண்ட வழிகள் வேறு. சே ‘புரட்சிமனப்பான்மை இல்லாத, வரலாற்றுணர்வில்லாத , சாதாரண வாழ்க்கை வாழக்கூடிய’ மக்களின் பொருட்டு தான் போராட முன்வந்தவர். அவர்களுடைய விதியை தானே தீர்மானிக்க வேண்டும், தன்னால் மட்டுமே அது முடியும், அது தன் கடமை என எண்ணி ஆயுதம் எடுத்தவர். அதன்பொருட்டு கொல்லப்பட்டவர். ரோர்க் ‘படைப்புத்திறன் இல்லாத, திரளில் ஒருவராக மட்டுமே இருக்கச் சாத்தியமான, சாதாரண வாழ்க்கை வாழக்கூடிய’ மக்களினால் ஆன மானுடப்பண்பாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லும்பொருட்டு பாரம் சுமக்க முன்வந்தவன். அவர்களுக்கு அவர்களின் உலகத்தை ஆக்கிக் கொடுக்கும் தகுதியும் பொறுப்பும் தனக்குண்டு என்று அவன் நம்புகிறான்.

ஆக, இருவருமே மேநிலையாளர்கள். [Elites] இரண்டு வகையான மேட்டிமைவாதம்தான் இருவரையும் இயக்குகிறது. கோடானுகோடி மக்கள் வாழ்ந்து வாழ்ந்து உருவாகும் வரலாற்றுப்பெருவெள்ளம், அதன் மாபெரும் படைப்பு சக்தி இருவருக்குமே ஒரு பொருட்டல்ல. இருவருமே ‘நாங்கள் செய்வோம்’ என்ற மன எழுச்சி கொண்டவர்கள். அது முதிரா இளமையின் மனநிலை. அதை இவர்கள் பிரதிபலிப்பதனாலேயே இவர்கள் இளைஞர்களின் ஆதர்சங்களாக ஆனார்கள்.

அயன் ராண்ட் சோவியத் ருஷ்யாவில் இருந்து ஓடிவந்தவர். தீராத கம்யூனிச வெறுப்பால் உருவாக்கப்பட்ட ஆளுமை. அவர் முன்வைப்பது கம்யூனிசத்துக்கு எதிரான ஒரு முதலாளித்துவ முழுமனிதனை. கம்யூனிசம் என்பது திரள்வாதத்தை ஒரு பொருளியல் கோட்பாடாக மாற்றிக்கொண்ட ஒன்றுதான் என்று அயன் ராண்ட் ஒரு இடத்தில் சொல்கிறார். மனிதனின் தனித்தன்மையை முழுக்க நிராகரித்து, பெரூந்திரளுக்கு அவன் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்று கோருகிறது கம்யூனிசம் என்று நம்பிய அயன் ராண்ட் அதற்கு எதிராக எந்நிலையிலும் தன் தனித்தன்மையை கைவிடாது அதை முழுமைப்படுத்துவது மட்டுமே மானுட விடுதலை என சொல்கிறார்.

ஆச்சரியமான ஓர் உண்மை, ஸ்டாலினிய ருஷ்யா உருவாக்கிய முழுமனித பிம்பமும் அயன் ராண்ட் உருவாக்கிய முழுமனித பிம்பமும் பெருமளவில் ஒத்துப்போகின்றன என்பதே. இருவருமே இரும்பால் ஆன மனிதர்கள்.  ரத்தத்தையும் சதையையும் தங்கள் ஆளுமையால் இரும்பாக இறுக்கிக் கொள்வதே அவர்களின் யோகம். அயன் ராண்ட்டின் ரோர்க் என்னும் கதாபாத்திரத்துடன் ஒப்பிடவேண்டிய கதாபாத்திரம் என்றால் அது ‘உழுது புரட்டிய கன்னிநிலம் ‘ நாவலில் மைக்கேல் ஷோலகோவ் முன்வைக்கும் ‘டாவிடோவ்’ என்னும் கதாபாத்திரம்தான்.

டாவிடோவ் ஸ்டாலினியக் கருத்தியலால் உருவாக்கப்பட்ட உன்னத மனித உருவகம். ஓர் உதாரணக் கமிசார். கம்யூனிசச் சமூக  உருவாக்கத்த்தின் திட்டமே அவனுடைய வாழ்க்கையின் சாரம். அதைத்தவிர எதையுமே அவன் பொருட்படுத்துவதில்லை. அதைப் புரிந்துகொள்ளாத ‘ஜனங்கள்’ அவனைச்சுற்றி வாழ்கிறார்கள். கூட்டுப்பண்ணை அமைக்கும்போது மாடுகளை எடுத்துக்கொள்வார்கள் என்று தெரிந்ததும் மொத்த ஊரே ஒரே இரவில் தங்கள் மாடுகளைக் கொன்று தின்றுவிடுகிறது. மறுநாள் ஊரே வயிற்றுப்போக்குவந்து சூரியகாந்திச்செடிகள் நடுவே குந்தி அமர்ந்திருக்கிறது. அந்த ‘எளிய’ மக்கள் நடுவே டாவிடோவ் கம்யூனிச சமூகக் கட்டுமானம் என்னும் மீட்புத்திட்டத்தை அவர்களை எச்சரித்தும், தண்டித்தும், வதைத்தும், நிறைவேற்றுகிறான். ஆட்டுமந்தைகள் போல மனிதர்களை வழிநடத்துகிறான் டாவிடோவ்

சோவியத் ருஷ்யாவிலேயே தங்கிவிட்ட ஷோலக்கோவும் ஓடிவந்த அயன் ராண்டும் இலட்சியத்தில் வேறுபாடு கொண்ட ஒரேவகையான மனிதர்களை இலட்சிய உருவகமாகக் கான்கிறார்கள். அவர்கள் வாழும் மண்ணுக்கு பல்லாயிரம் காதம் இப்பால் இன்னொரு பண்பாட்டில், இன்னொரு ஞானமரபின் நீட்சியில், இன்னொரு விவேகத்தின் மடியில் வாழும் எனக்கு இருவரும் ஒருவராகவே தெரிகிறார்கள்.

[மேலும்]

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைவரலாற்றை வாசித்தல்:கடிதங்கள்