குகை-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார் ,
வணக்கம், விஷ்ணுபுரம் விழாவில் என் மகனுடன் வந்து தங்களை சந்தித்தது மிக்க சந்தோசமாக இருந்தது,அஜிதன் எங்கள் அருகில் அமர்ந்திருந்தான் .அவனிடமும் பேசிக்கொண்டிருந்தோம், மகிழ்ச்சி.
தங்கள் இந்தியப்பயணம் கட்டுரை உங்களுடன் வந்து உணரும் உணர்வுகளை உருவாக்கி வருகிறது .குறிப்பாக இந்தியாவில் ஒரு நயாகரா ஒரிசாவில் புத்த சிலைகள் குறித்த தங்கள் அனுபவங்கள் பற்றிய குறிப்புகளை முழுமையாக உள்வாங்க முடிந்தது .மனதில் பயணம் மேற்கொள்ள தீராத ஆர்வம் .நான் தொழில் நிமித்தமாக அஜந்தா அருகில் உள்ள ஜல்கான் நகருக்குப் பலமுறை சென்றுள்ளேன் .அஜந்தாவிற்கும் 2 முறை சென்றுள்ளேன் .அது போல வேறு பயண வாய்ப்புகள் அமையவில்லை .ஆனால் தற்பொழுது நம் அன்னை தேசம் முழுக்க அலையவேண்டும் என்ற தாகம் தங்களால் அதிகரித்துள்ளது ,
நன்றி

C .மாணிக்கம் ,

//ஒரு வடிவப்பிரபஞ்சம் பிறந்து சில கணங்கள் நீடித்து அழிவதுபோல. தொங்கும் சரவிளக்குகள். நெளியும் திரைச்சீலைகள். காளான்குடைகள். கவிழ்ந்த சிப்பிகள். சுண்ணாம்புச்செடிகள். இறுகிய மேகப்படலங்கள். மாபெரும் சோழிகள். பிசைந்து மிச்சம் வைத்த சோறு. திறந்து வைக்கப்பட்ட மூளைச்சுருள். பிளந்த மீன் வாயின் பற்கள். மண்டைஓடுகள்…//

//ஒவ்வொரு வடிவமும் வடிவமின்மையின் முடிவிலியில் அலையடித்து மிதந்து கிடக்கிறது. வடிவமின்மை போல நம்மை அச்சுறுத்துவது ஏதேனும் உண்டா? வடிவமின்மைவெளியில் வடிவம் தேடித் தவிக்கிறது பிரக்ஞை. அன்னிய ஊரில் உறவைத்தேடித்தவிக்கும் கைவிடப்பட்ட குழந்தை போல//

//நீர் ஊறி ஓடும் ஆழ்ந்த குடல்கள். சுருங்கி விரிகின்றனவா என்ற பிரமை எழுப்பும் இரைப்பைகள். செரித்துக்கொள்ள கைநீட்டும் குடல்விரல்கள். .நெளியும் சேற்றுச்சுவர்கள்…//

//ஆழத்தில் உறையும் இருள்லிங்கம். எண்ணம் மட்டுமேயான சிவம்….நம் இருப்பை நாம் ஒரு பிரக்ஞை மட்டுமாகவே உணர முடிந்தது. பிரபஞ்ச இருள். யோகத்தின் இருள்.//

இந்தப் பயணத்தில் இதுவரை வந்ததில் மிகமிகச்சிறந்த கட்டுரை. வர்ணனை உருவகங்களாகவும், படிமங்களாகவும் அடித்துப் புரண்டு கொண்டு பாய்ந்து வருகிறது. மூச்சு முட்டி, கண் ஒளி இழந்து, பிரக்ஞை மட்டுமாக இருந்து மீண்டும் ஒளியும் வண்ணமுமான உலகிற்கு மீண்டு வந்தது போல் இருக்கிறது.

-பிரகாஷ்
//பெசரெட் என்ற தோசை பிரபலம். நம்மூர் அடைதான். நாம் துவரம்பருப்பு அரைத்து செய்வதுபோலக் கடலைமாவு அரைத்துச் செய்கிறார்கள். மிகவும் ருசியான காலையுணவு. இரவுணவு வெறும் பழங்கள். ஆகவே காலையுணவின் சுவை அதிகம்.//

அன்புள்ள ஜெயமோகன் சார்,

தெலுங்கில் பெசுலு என்றல் பச்சை பயறு என்று பொருள்.

பச்சை பயற்றை ஊறவைத்து சில மசாலா பொருட்களை சேர்த்து அரைத்து அடை செய்தால் அதுதான் பெசரெட்டு.

பழனிவேல்

முந்தைய கட்டுரைகுகைகளின் வழியே – 18
அடுத்த கட்டுரைகுகைகளின் வழியே – 19