குப்தேஸ்வர் குகைகள் ஒரிசாவில் ஜேய்ப்பூர் அருகே உள்ளன. எங்கள் பயணத்திட்டத்தில் இது முக்கியமான இடம். ஆனால் அங்கே செல்வது அப்படி ஒரு கஷ்டமான நிகழ்வாக இருக்குமென நினைக்கவில்லை. வட ஆந்திரா, சட்டிஸ்கர் இரண்டுக்கும் அருகே இருப்பதனால் இப்பகுதியின் காடுகள் மாவோயிஸ்டுகளின் ஊடுருவல் உள்ள பகுதிகள். ஆகவே சட்டிஸ்கரில் கண்ட அதே சூழ்நிலையே இங்கும் நீடித்தது. எங்கும் முட்கம்பி வேலி போடப்பட்ட துணை ராணுவப்படை, எல்லைக் காவல்படை முகாம்கள். உடைக்கப்பட்ட பாலங்கள், பாழடைந்த சாலைகள்.
காலையில் கிளம்பி, இடுப்பொடியப் பயணித்து, மதியம் ஒருமணிக்கு இருநூறு கிலோமீட்டரை கடந்து குப்தேஸ்வர் வந்து சேர்ந்தோம். குப்தேஸ்வர் அருமையான பெயர்- ரகசிய இறைவன். இங்குள்ள ஒரு குகைக்குள் இருக்கும் கல்வடிவம் சிவனாக ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக வழிபடப்பட்டு வருகிறது. பழங்காலத்தில் குப்தேஸ்வர் மிகமிக சிலரே வரக்கூடிய அடர் கானகப்பகுதி. சிவராத்திரி அன்று மட்டும் ஓரளவு கூட்டம் இருக்கும்.
இன்றும் நிலைமை பெரிதும் மாறிவிடவில்லை. சாலை இருக்கிறது. ஆனால் அங்கே எந்த வசதிகளும் இல்லை. மாவோயிஸ்டு பிரச்சினை இருப்பதனால் அதிகம்பேர் வருவதில்லை. ஆகவே வணிகர்கள் உருவாகவில்லை. பெரும்பாலும் பழங்குடிகள் மட்டுமே கண்ணுக்குப் பட்டார்கள். அவர்களுடைய கடைகள் மூங்கிலும், புல்லும், பிளாஸ்டிக் காகிதமும் கொண்டு கட்டப்பட்டவை. பூக்கள், சாம்பிராணிக் கூடைகள் விற்கக்கூடிய சிறிய கடைகள்தான். ஒரே ஒரு கொட்டகை ஓட்டல். அதை ஒரு பெண்மணி நடத்தினாள். நாங்கள் சென்று இறங்கும்போது சோறு முடியப்போகும் தருணம். அவசரமாகச் சாப்பிட்டோம். பசிக்கு அவள் அளித்த நல்ல சோறும், பருப்புக்குழம்பும் நன்றாகவே இருந்தது. சாப்பாடு ஐம்பது ரூபாய்.
கொலாப் நதிக்கரையில் அமைந்துள்ள குப்தேஸ்வரின் மலைகள் சுண்ணாம்புக் கற்களால் ஆனவை. பொதுவாக சுண்ணாம்புக் கற்களால் ஆன மலைகளில்தான் குகைகள் உருவாகின்றன. இங்கே ஏழெட்டு குகைகள் உள்ளன. மூன்று குகைகள்தான் பெரியவை. இவை மூன்றுமே பிலங்கள் அல்ல, மலைக்குமேல் உள்ள குகைகள். நேராக சென்று நதிக்கரையில் விசாரித்து ஒரு வழிகாட்டியைப் பிடித்தோம். அவனுக்குப் பத்து வயதுதான் இருக்கும். ஒரு டார்ச் விளக்குடன் வந்து கூட்டிச்சென்றான். பள்ளிக்கூடம் இல்லாத காரணத்தால் அவனுடைய நண்பர்களும் சேர்ந்துகொண்டார்கள்.
கூட்டமாக சென்றோம். குகை வாயில்வரை அரசு அமைத்த பழைய சிமிண்ட் பாதை உள்ளது. குப்தேஸ்வரின் முதற்குகையின் வாயில் கொஞ்சம் பெரியது. முப்பதடி உயரமிருக்கும். ஒரு பெரும் கோபுரவாயில் என நினைத்தேன். உள்ளே நுழைந்ததும் ஒரு வட்டமான கூடம் போன்ற அமைப்பு. வவ்வால் நெடி. மெல்ல குகைக்குள் நுழைந்தோம். பாதை குறுகியபடியே சென்றது. ஒரு கட்டத்தில் நன்றாகக் குனிந்தேதான் செல்லவேண்டியிருந்தது. தலையில் பாறை இடித்தால் ரத்தக்காயம்தான். ஏனெனால் நீர் வழிந்து உருவான இந்தப்பாறைகள் கூரிய கத்திபோல நீட்டிக்கொண்டிருக்கும்.
குகைகளுக்குள் மட்டுமே உள்ள அடர்ந்த இருளும் செவிகளைக் குத்தும் நிசப்தமும். குகையின் காற்றிலும் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தது. உள்ளே செல்லச் செல்லப் பல கிளைகளாகப் பிரிந்து சென்றபடியே இருந்தன வழிகள். எங்கள் தலைக்குமேல் மரங்களும் பாறைகளுமாக ஓங்கி நின்ற மலையின் கருப்பைக்குள் நுழைகிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. மலைக்கும் அது தெரியும் என்று தோன்றியது. குகைகளின் வெப்பம்தான் அவற்றை உயிருள்ள ஒரு துளைவழி என்று எண்ணச் செய்கிறது போல.
அரை கிலோமீட்டருக்குப்பின் சட்டென்று குகை சரிவாக இறங்க ஆரம்பித்தது. அமர்ந்து சறுக்கிச் சறுக்கித்தான் செல்ல வேண்டும். நண்பர்களுக்குப் பிறரது டார்ச் விளக்கை எப்படி அடிப்பதென்று தெரியவில்லை. ஒளியை நிலையாக வைத்திருந்தால் குகைக்குள் விரியும் வெளிச்சத்துக்குக் கண்கள் பழகி குகை தெரிய ஆரம்பிக்கும். ஆனால் பதற்றத்திலும், ஆர்வத்திலும் ஒளியை சுழல விட்டுக் கொண்டே இருப்பார்கள். அது இருளும் ஒளியுமாக மாறி மாறிக் கண்ணில் விழச்செய்து கிட்டத்தட்ட நம்மைக் குருடாகவே ஆக்கிவிடும். பிரசாத் விளக்கை சுற்றிக் கொண்டே இருந்தார். சற்று நிலையாகப் பிடியுங்கள் என்றேன்.
அந்தக் கீழ்நோக்கி இறங்கும் சுரங்கவழியின் எல்லையில் மிகச்சிறிய ஒரு பாதை. அமர்ந்து, நுழைந்து பின் முழுமையாகத் தவழ்ந்துதான் உள்ளே செல்ல வேண்டும். இரண்டடி உயரம் மூன்றடி அகலம் இருக்கும். அதனுள் சிறுவர்கள் எறும்புகள் போல சரசரவென்று சென்றுவிட்டார்கள். நான் அதன் விளிம்புவரை வந்தேன். மேலே இருந்த நண்பர்கள் காற்று வரும் வழியை முழுமையாகவே அடைத்து விட்டதனால் சட்டென்று மூச்சுத் திணறிவிட்டது. வழிகேட்டுப் பின்னால் வந்துவிட்டேன்.
எங்கள் குழுவில் மிகப் பெரியவரான நீல்கண்ட் சரசர வென்று படுத்து உள்ளே சென்றுவிட்டார். நாலைந்து அடிதூரம் சென்றபின் ஒரு படி வழியாக இறங்கினால் உள்ளே மிகப்பெரிய அறையும் நீளும் பாதையும் இருப்பதாகச் சொன்னார். சற்று தயங்கியபின் ராஜமாணிக்கமும், கிருஷ்ணனும் உள்ளே சென்றார்கள். ‘வாருங்கள் சார், ஒரு நாலடி தூரம்தான் இந்தச் சின்ன வழி’ என்று கிருஷ்ணன் வற்புறுத்தினார். நானும், பிரசாத்தும், ரவியும் வெளியே நின்றுவிட்டோம்.
நான் ஏன் உள்ளே செல்லவில்லை என யோசித்துக் கொண்டே இருந்தேன். அது என் இயல்பே அல்ல. அனேகமாக அப்படி ஒரு சாகசப் பயணத்தில் நான் செல்லாமல் இருந்தது அதுவே முதல்முறை. அது வயதாவதை உணரும் தருணம். உடலின் எல்லை நம் மனதுக்குத் தெரிகிறது. நம்மால் ஓர் எல்லைக்கு மேல் உடலை வளைக்க முடியாதென்ற அச்சம். மூச்சு நம் கையில் இல்லை என்ற அச்சம். அதை வெல்ல வேண்டுமென்றால் தொடர்ந்து உடலுடன் ஒரு போட்டியில் இருக்க வேண்டும். உடலைப் பயிற்றுவித்துத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். அது என் இயல்பல்ல. நடை தவிர எந்த உடற்பயிற்சியும் என்னால் செய்யமுடியாது. என் சிந்தனை ஓட்டத்தை ஒத்திவைத்து ஒரு பயிற்சியில் ஈடுபடுவது எனக்கு சாத்தியமே அல்ல.
அல்லது மனதின் எல்லையை உடல் உணர்கிறதா? இளமையில்தான் மனிதர்கள் உயிருக்குத் துணிந்து பெரிய விஷயங்களைச் செய்கிறார்கள். அப்போது உயிரும் வாழ்க்கையும் துச்சமாகத் தெரிகின்றன. முதிர்ந்தவர்கள் உயிர்த் தியாகம் செய்வதில்லை. வாழ்க்கை அவர்களுக்கு மிக அருமையானதாக ஆகிவிடுகிறது. இந்தத் தேன் கோப்பையின் அடி தெரிய ஆரம்பிக்கிறது.கிழவர்கள் வாழ்க்கைமேல் மேலும் பற்றுக் கொண்டிருக்கிறார்கள். சற்றே படபடப்பாக இருந்தாலும் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லக் கோரி கூச்சலிடுகிறார்கள். எப்போதும் மரண பயத்துடன் இருக்கிறார்கள்.
கிருஷ்ணனும், ராஜமாணிக்கமும் திரும்பி வந்தனர். உள்ளே குகை இன்னும் உருவாக்க நிலையில் இருப்பதுபோல உள்ளது என்றார்கள். சுவர்கள் சேறால் ஆனவை என்று தோன்றின என்றும் ஆனால் தொட்டுப் பார்த்தால் அவை பாறைகள் என்று தெரிந்தன என்றும் கிருஷ்ணன் சொன்னார். தரையில் நீர் ஓடும் சதுப்பு. பெரிய சுண்ணாம்புக்கல் தூண்கள் பல இருக்கின்றன என்றார் ராஜமாணிக்கம். குகை மேலும் பல கிலோமீட்டர் தூரம் சென்றுகொண்டே இருப்பதாகவும் ஆழத்துக்குச் செல்ல முடியாது என்று தோன்றியதாகவும் சொன்னார்.
இரண்டாவது குகை திரும்பும் வழியில் இருந்தது. இது சற்றே சிறிய குகை. உள்ளே ஒரு காளி சிலையைப் பிரதிஷ்டை செய்திருந்தார்கள். எவரோ பூசை செய்வதாகத் தோன்றியது. ஒரு இருக்கை போடப்பட்டிருந்தது. மேலேறிச்செல்லும் சரிவான பாதை வழியாகச் சென்றோம். அரை கிலோமீட்டர் வரை சரிவு சென்றது. செல்லச் செல்ல உயரம் குறைந்து கொண்டே சென்றது. அதன்பின் ஒரு சிறிய கூடம். இந்தக் குகைக்குள் ஸ்டால்மேட்கள் எனப்படும் சுண்ணாம்புக்கல் வழிந்த வடிவங்கள் மேலும் அதிகம். விசிறி மடிப்புப் பாறைகள். பனங்கிழங்கு போன்று தூண்கள். டார்ச் லைட் ஒளியில் அவை உருவாகி வந்தபடியே இருந்தன.
இந்தக் குகை வழியாகச் சென்ற நீர் சிறிய இடுக்குகள் வழியாக மறுபக்கம் சென்றிருந்தது. ஒரு கட்டத்தில் குகை மிகச்சிறியதாக ஆகி நின்றுவிட்டது. இடைவெளிகள் வழியாக டார்ச் அடித்துப்பார்த்தோம். ஓர் இடத்தில் இறங்கிச் செல்வதற்கான வழி தென்பட்டது. எப்போதோ இரும்புப்படிகள் அமைத்திருந்தார்கள். ஆய்வாளர்கள் அன்றிப் பிறர் அங்கே செல்லமுடியாது. அவ்வளவு இடுக்கமான ஈரமான பாறைச்சந்து அது.
நண்பர்களின் உடைகள் முழுக்க சேறாகிவிட்டன. நதியில் இறங்கிக் கழுவிக்கொண்டோம். ஒரு டீ குடித்தபின் குப்தேஸ்வர் மலைமேல் ஏறினேன். இருநூறு படிகள் இருக்கும். மேலே சென்றால் சாதாரணக் கோயில் போல ஒரு வாசல் தென்பட்டது. எவர்சில்வர் கம்பியால் வாசல் போடப்பட்டது. சிறிய கோயில். வாயிலின் இருபக்கமும் நந்தியும், பூதகணமும் காவல் காப்பதுபோல சிலைகள். ஆனால் உள்ளே சென்றதும் அதுவும் ஒரு குகை என்று தெரிந்தது. சிறிய குகைவழி வழியாக இறங்கி உள்ளே செல்லவேண்டும். உள்ளே சிறிய குகை அறைக்குள் சிவலிங்கம் இருந்தது. அமர்நாத் பனிலிங்கம் போன்றது. இதுமேலிருந்து சொட்டும் நீர் விழுந்து விழுந்து அதிலுள்ள சுண்ணாம்பு உறைந்து உருவான வடிவம். இது வளர்ந்துகொண்டே இருப்பதாக ஐதீகம், அது உண்மையும் கூட.
குப்தேஸ்வருக்குப் பின்னால் மேலும் கீழிறங்கும் வழி உள்ளது. அதில் இறங்கிச்சென்றால் பெரியதோர் குகை விரிகிறது. அப்படி ஒரு பெரிய குகை அங்கிருப்பதை ஊகிக்கவே முடியாது. பெரிய சுண்ணாம்புக்கல் தூண்கள் ஆலமர அடி போல, யானைக்கால் போல நின்றிருந்தன. மலையின் வேட்டியின் மடி போல, மலைப்பசுவின் அகிடு போல, தொங்கும் சுண்ணாம்புப்பாறை கூம்புகளும் குவைகளும். இரு கைவழிகளாக குகை பிரிந்து உள்ளே சென்றபடியே இருந்தது.
இந்த குகையும் அரை கிலோமீட்டருக்கு அப்பால் மிக மிகக் குறுகலாக ஆகிவிட்டது. அங்கே செல்வதற்காக படிகளைச் செதுக்கியிருந்தார்கள் என்றாலும் தொழில்முறை குகைப்பயணிகள் மட்டுமே மேலும் செல்லமுடியும். பாதை மிகச் சறுக்கலானது. சறுக்கி விழுந்து உருண்டால் நான்குபக்கமும் திறந்து அடி காணமுடியாத இருட்டுடன் வாய்திறந்து நின்ற குகைச்சந்துகள் எதிலாவது விழுந்து மாட்டிக்கொள்ள நேரிடும். உள்ளே நெடுந்தொலைவு செல்லவேண்டாம், திரும்பி வரும் வழி மறந்துவிடும் என பூசாரி எச்சரித்திருந்தார். ஆகவே எங்களால் முடிந்தவரை சென்று டார்ச் அடித்துப் பார்த்து விட்டு திரும்பி விட்டோம்.
மீண்டும் அதே மலைப்பாதையில் பயணம். இரவு ஜேய்ப்பூரில் தங்குவதாக திட்டம். வரும் வழியில் கிருஷ்ணன் சொன்னார். ’குகைக்குள்ளே ஒருமணி நேரம் இருந்துட்டு வரப்பதான் சார் ஒளியும் காற்றும் எவ்வளவு அற்புதம்னு தெரியுது! எல்லாமே புதுசா கழுவித் துடைச்சு வச்சமாதிரி இருக்கு. இதுக்காகவே ஒருநாள் முழுக்க உள்ளே இருந்தா என்னன்னு தோணுது.’
நான் இரு நூல்களை நினைவு கூர்ந்தேன். ஒன்று ஹென்றி ஷாரியரின் பாப்பிலான். அதில் ஷாரியரை ஸ்பானிஷ் கொலம்பியா அரசு, ஒரு தண்டனைச் சிறைக்கு அனுப்புகிறது. அது கைவிடப்பட்ட கனிச் சுரங்கங்களால் ஆன ஒரு பெரும் பொந்து. அதை கம்பிகளாக தடுத்து சிறையாக ஆக்கியிருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் சேற்று நீர் சிறையை நிரப்பி வடிந்து செல்லும். எலிகள் கூட்டம் கூட்டமாக அங்கே வாழ்ந்தன. வெள்ளம் வரும்போது கம்பிகளில் ஏறி அமர்ந்து அது வடிந்த பின் சதுப்பை சுத்தம் செய்யவேண்டும்.
இருட்டுக்குள் சேற்றுக்குள் ஒரு வாழ்க்கை. இரவுபகல் இல்லை. ஆகவே உடலின் ஒழுங்குகள் குலைகின்றன. நினைவில் இருந்த ஒளிமிக்க காட்சிகள் கூட கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமலாகி சூரியனைப்பற்றி நினைவு கூரவே முடியாமல் ஆகிறது. பெரும்பாலும் அனைவரும் சில நாட்களுக்குள் மனநோயாளிகளாக ஆகிவிடுவார்கள். மயிரிழையில் ஷாரியர் அந்த மனமுறிவில் இருந்து தப்பிப்பான்.
இன்னொரு நூல் அலெக்ஸ் ஹேலி எழுதிய ரூட்ஸ். அதில் பிடிக்கப்பட்டு கப்பலின் அடித்தளத்து இருட்டில் கைதிகளாக அடைக்கப்பட்ட கறுப்பின அடிமைகள், அமெரிக்காவுக்கு ஆறுமாத காலப் பயணத்தில் கொண்டு செல்லப்படுகிறார்கள். ஒரே ஒரு துளை வழியாக வரும் சிறிது வெளிச்சத்துக்காக அவர்கள் ஏங்கி முண்டி அடித்து முகம் திருப்புவார்கள். காற்றை விட உணவை விட ஒளி முக்கியமாக ஆகும் தருணம். தன் மலத்தை எடுத்துப் பலகையில் அப்பி அதில் குழியிட்டுத் தன் நாட்களை கணக்குவைப்பார் ஒருவர். ஒளியை விடக் காலம் முக்கியமாக ஆகிறது!
ஆனால் பெரும்பாலான பிலங்களுக்குள் பௌத்த சமண பிட்சுக்களும் சைவ பைராகிகளும் விரும்பிச் சென்றிருக்கிறார்கள். அங்கே தவம் செய்திருக்கிறார்கள். அவர்கள் அங்கே எதைத்தேடிச்சென்றார்கள்? தனிமையை? ஒளியின்மையை? காலமின்மையை? அல்லது ஒட்டுமொத்தமாக இன்மையை. புறத்தே உள்ள அனைத்தும் இன்மையாக ஆகும்போது அவர்களுக்குள் உள்ள தன்னுணர்வு மட்டும் நிர்வாணமாக எஞ்சும்போல. அதை அப்படிப் பார்க்க அது ஓர் எளிய வழி போல! குப்தேஸ்வர்! ரகசிய தெய்வம்! மறைந்திருக்கும் தெய்வம்! இருளில் மறைந்திருக்கும் தன்னுணர்வுதான் அதுவா?
[மேலும்]