குகைகளின் வழியே – 18

இந்த பயணத்தொடரின் மிக நீளமான, மிகக் களைப்பான பயணம் இது. நேற்றிரவு பாலுகாவ்ன் என்ற ஊரில் தங்கியிருந்தோம். அங்கே வந்துசேரவே இரவு பத்து மணி ஆகிவிட்டது. புவனேஸ்வரில் இருந்து நேராகக் கீழ்நோக்கி வந்துகொண்டே இருந்த பயணத்தில் அந்த சிற்றூரின் விடுதியில் தங்கினோம்.

காலை எழுந்ததும் அருகிலேயே இருந்த சிலிகா ஏரிக்கு ஒரு படகுப்பயணம் செல்லலாம் என்று கிளம்பினோம். சிலிகா இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரி. கடலின் கைக்குழந்தை என்றுதான் சொல்லவேண்டும். நாங்கள் பகல் முழுக்க நீண்டதோர் பயணம் செய்து இன்னொரு குகைக்குச் செல்லவேண்டியிருந்தது. ஒரு மாறுதலுக்காக சிலிகாவைப் பார்க்கலாமென நினைத்தோம்.

படகுத் துறை

சந்தடிமிக்க குறுகலான தெருக்கள் வழியாக ஏரிக்கரையை அடைந்தோம். அது ஒரு கடற்கரை என்ற மனப்பிம்பம் நீங்காமலேயே இருந்தது. கரிய சேறு மண்டிய கரையோரமாக ஏராளமான படகுகள். பெரும்பாலானவை மீன்பிடிப்படகுகள். சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்லவும் முன்வருவார்கள். மூன்றுமணி நேரம் முதல் ஒருநாள் முழுக்க வரை பல்வேறு பயணத்திட்டங்கள்.

ஏரிக்குள் ஒரு தீவில் இருக்கும் துர்க்கை மா கோயிலுக்கும் சேற்றுத்தீவான பறவைத்திடலுக்கும் சென்றுவரத் திட்டமிட்டு ஒரு படகை வாடகைக்கு எடுத்தோம். யமகா மோட்டார் பொருத்தப்பட்ட சாதாரண மரப்படகு. அதி உற்சாகமான ஒரு சிறுவன், உதவியாளர் ஒருவர் படகைச் செலுத்தினார்.

கார்த்திக், ஷிமோகா ரவி முன்னே அமர்ந்திருக்க பின்புறம் கிருஷ்ணனுடனும், ராஜ மாணிக்கத்துடனும் நான்

கடல் அலையில்லாமல் அமைந்தது போலிருந்தது ஏரி. நல்ல குளிர் அடித்தது. கொஞ்ச நேரத்திலேயே எல்லாப் பக்கமும் கரைகள் மறைந்தன. பாலிதீன் பொட்டலத்துக்குள் இருப்பது போல உணர்ந்தேன். பனிமூட்டமா ஒளிமூட்டமா என்று தெரியாதபடி நான்கு பக்கமும் வானம் சூழ்ந்துகொண்டது. நீர்ப்பரப்பு கண்ணாடிப் பச்சை நிறத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஓயாத மோட்டார் ஒலி. அலையும் அவ்வொலியும் சேர்ந்து அனைவரையும் மௌனமாக்கின.

எனக்குக் கடல் மீதோ ஏரி மீதோ பயணம் செல்வது பிடிப்பதில்லை. அதை விரும்பமாட்டேன் என்றில்லை. ஆனால் மலையில் பயணம்செய்யும்போது இருக்கும் குதூகலம் இருப்பதில்லை. தனிமையும் கொந்தளிக்கும் நினைவுகளுமாக நிலையழிந்திருப்பேன். நீர்மேல் எனக்கு மன ஒருமையே கூடியதில்லை. என்ன காரணம் தெரியவில்லை. சூழ இருக்கும் அலைகள்தான் காரணமோ என்னவோ.

படகைச் செலுத்தும் சிறுவன்

சதுப்பு அருகே படகை நிறுத்தினார்கள். இறங்க முடியாது. ஆழமில்லாத நிலம். இரண்டடி நீர் இருக்கும். தூரத்தில் புதர்மரக் கூட்டங்களில் நிறையப் பறவைகள். பறவைகளைப் பார்க்க தூரநோக்கி தேவை. அது இல்லை. ஆகவே சும்மா கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தோம்.

துர்க்கை ஆலயம் மிகச்சமீபமாக கட்டப்பட்ட சிறிய கான்கிரீட் கட்டிட்டம். நிறைய கடைகள் இருந்ந்தன. டீ குடித்துவிட்டு கொஞ்சநேரம் சுற்றி வந்தோம்.

அதன்பின் கரை. கரைக்கு வந்த விடுதலையைக் கொண்டாடவேண்டும் போல உணர்ந்தேன். செல்லும்போது ஏரிக்கரையில் ஓர் விடுதியில் காலையுணவு சாப்பிட்டேன். கடைக்காரப்பையன் உபசரித்து திரும்பி வரும்போது மீன்சாப்பாடு இருக்கும் என்று சொல்லியிருந்தான். ஆகவே அங்கே சென்றோம்.

ஏரியில் ஒரு படகு

மிக அசுத்தமான சூழல். அருகே மீன்சந்தை. ஆனாலும் சாப்பிடலாமென நினைத்தேன். நினைதது போலவே மிகப்புதிய மீனின் சுவை கொண்ட குழம்பும் பொரியலும். நான் நன்றாகவே சாப்பிட்டேன். வயிறுக்கு ஏதாவது செய்யுமோ என்ற அச்சம் இருந்தது. காரணம் படைபடையாக ஈக்கள். வாழைப்பழம் சாப்பிட்டேன். பாக்டீரியா உள்ள உணவைச் சாப்பிட நேர்ந்தால் கூடவே வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது, அது பாக்டீரியா பெருகுவதைத் தடுக்கும் என டாக்டர் தம்பான் சுவாமி ஒருமுறை சொன்ன நினைவு.

அதன்பின் விடுதிக்கு வந்து காரில் ஏறிப் பயணம்தான். மொத்த ஒரிசாவையும் தாண்டி வரவேண்டும். ஆந்திரத்துக்குள் நுழைந்து மீண்டும் ஒரிசாவுக்குள் நுழைந்து செல்லவேண்டும். ஐநூறு கிமீ. அதில் முந்நூறு கிமீ தொலைவை இன்றே கடக்கவேண்டும்.

பொதுவாக நாங்கள் இரவுப் பயணங்கள் செய்வதில்லை. அது பாதுகாப்பானதல்ல. மட்டுமல்ல நன்றாகத் தூங்காவிட்டால் பயணங்கள் சுவாரசியமளிக்காது. ஆனால் எல்லாப் பயணத்திலும் சிலநாட்கள் இப்படி  ஆகிவிடும். நாங்கள் முதலில் வந்து சேர்ந்த குனுபூர் என்ற சிறிய நகரில் நான்கே விடுதிகள். நான்கிலும் அறைகள் இல்லை. மது அருந்தி உற்சாகமாக இருந்த ஒருவர் வந்து பேரன்புடன் எல்லா விடுதிக்கும் கூட்டிச்சென்று காட்டினார். உணவு விடுதிக்கு அழைத்துச்சென்று உபசரித்தார்.

அங்கிருந்து மீண்டும் கிளம்பி ராய்கிரகா என்ற நகரை வந்தடைந்தோம். வரும் வழி முழுக்க காடும் குக்கிராமங்களும். வழிகேட்க எவருமில்லை. ஓர் ஊகத்திலேயே வந்தோம். மிகச்சிறிய நகரம். இங்கே ஒரு விடுதியில் அறை. பன்னிரண்டு மணி நெருங்குகிறது.

பயணங்களில் ஒன்றுமே நிகழாமல் சில நாட்கள் செல்லும். ஒன்றுமே நிகழவில்லை என்பது ஒரு ஒப்புநோக்கு மட்டுமே. பலசமயம் சில வருடங்கள் கழித்து நாம் நினைவுகூரும் பல விஷயங்கள் இந்த ஒன்றுமே நிகழாத நாளில் நிகழ்ந்தவையாக இருக்கும். கூட்டம் கூட்டமாக வந்து ஒரே சமயம் தெலுங்கிலும் ஒடியமொழியிலும் வழிசொன்னவர்கள், டீ இல்லை என்று சொன்ன பின் எட்டு டீ என்று கேட்டதுமே டீ உண்டு என்று சொன்ன கடைக்காரப்பெண்மணி என எவ்வளவோ முகங்கள் நாளை நினைவில் எஞ்சக்கூடும்.

இந்தக்குறிப்புக்குப்பின் நான் தூங்கவேண்டும். ஒவ்வொருநாளும் குறிப்பை எழுதுவதென்பது ஒரு பெரிய சவால். ஆனால் நினைவுகளை எழுதுவதை விட நிகழ்வுகளை எழுதுவதில் உள்ள உடனடித்தன்மைக்கு மதிப்பு அதிகம் என்பதனால் இதை எழுதுகிறேன்

இன்றிரவு என் தூக்கத்தில் அலைகள் அடித்துக்கொண்டே இருக்கும். சிற்பங்களின் அலைகள். பாறைகளின் அலைகள். மனிதமுகங்களாக வீடுகளாக நெடுஞ்சாலையாக விரியும் காலத்தின் அலைகள். குகைகளுக்குள் தேங்கும் காலமின்மையின் அலைகள்

[மேலும்]

படங்கள்

முந்தைய கட்டுரைகவிதைக்கு ஒரு தளம்
அடுத்த கட்டுரைகுகை-கடிதங்கள்