குகைகளின் வழியே – 17

பயணத்தின் மிகக்களைப்பான நாட்களில் ஒன்று. காலையில் எழுந்ததுமே புவனேஸ்வருக்குள் நுழைந்தோம். நகரின் நடுவிலேயே இரு முக்கியமான  குன்றுகள் உள்ளன. கண்டகிரி, உதயகிரி என்ற இரு பாறைக் குன்றுகளும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து ஒரு மாபெரும் பூகம்பத்தால் இரண்டானவை என்பது தொன்மம். இவ்விரு மலைகளும் சமணக்குகைகளால் நிறைந்தவை. கிட்டத்தட்ட தேன்கூடு.

கண்டகிரியில் எழுநூறுக்கும் மேற்பட்ட குடைவரைகள் இருந்துள்ளன. பூகம்பத்தால் அப்பகுதியே இடிந்து சரிய, இப்போது முப்பது குகைத்தொகுதிகள் எஞ்சியிருக்கின்றன. உதயகிரியில் பதினைந்து. கண்டகிரி என்றால் உடைந்த மலை என்றும், உதயகிரி என்றால் பிறந்தமலை என்றும் பெயர் என்றார்கள்.

சாதவாகனர் ஆட்சிக்காலத்தைய குடைவரைகள் இவை. முதலில் உதயகிரிமேல் ஏறிச்சென்றோம். இது நகரின் ஒரு முக்கியமான பிக்னிக் இடமாக உள்ளது. குடைவரைகளில் சிற்பங்களென அதிகம் இல்லை. வெறும்சதுரங்கள். சில குடைவரைகளின் விளிம்புகளில் அழகிய வளைவுகள் செதுக்கப்பட்டுள்ளன.

உதயகிரியின் உச்சியில் ஒரு சமணக்கோயில் உள்ளது. இடிபாடுகளில் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அங்கே எட்டடி உயரமான கன்னங்கரியசலவைக்கல்லில் செதுக்கப்பட்ட பார்ஸ்வநாதர் ஓர் அறையில் நின்றுகொண்டிருக்கிறார். அழகான சிலை. ஆனால் சமீபத்தில் செதுக்கப்பட்டது. அப்பகுதி முழுக்க மலைக்குடைவுகள் இடிந்த எச்சங்கள். சில குகைகளுக்குள் சுவரில் புடைப்பாகச் செதுக்கப்பட்ட தீர்த்தங்கரர் சிலைகள் உள்ளன.

ஓர் இடத்தில் குகை இருந்த பாறை அப்படியே பிளந்து சரிந்திருக்க, எட்டா உயரத்தில் புடைப்பாகச் செதுக்கப்பட்டிருந்த தீர்த்தங்கரர் மற்றும் யட்சி சிலைகள் அழகாக இருந்தன. அப்பகுதியில் இரு சாமியார்கள் குட்டி ஆசிரமங்களை அமைத்துத் தங்கியிருக்கிறார்கள். சாக்தேயர்கள் போலத் தெரிந்தனர். அவர்களை நாம் பார்த்துவிட்டால் காணிக்கை எதிர்பார்க்கிறார்கள்.

கண்டகிரி இன்னும் பெரிய குன்றுப்பகுதி. பிரதான் என்ற வழிகாட்டியை அமர்த்திக்கொண்டோம். நாடகத்தனமான உடைந்த ஆங்கிலத்தில் அவர் அப்பகுதியை விளக்கினார். இந்தக்குகைகள் சாதவாகன மன்னர்களால் சமணத்துறவிகளுக்கு செதுக்கிக் கொடுக்கப்பட்டவை. பின்னர் தொடர்ச்சியாக ஏழாம் நூற்றாண்டு வரை இவை செதுக்கப்பட்டுள்ளன. எட்டு அடுக்குகளாக மலைகளில் இக்குகைகள் செதுக்கப்பட்டிருந்தன என்றும் ஒரு பெரும் பூகம்பத்தால் இப்பகுதி இடிந்து சரிந்தபின் கைவிடப்பட்டது என்றும் பிரதான் சொன்னார்.

மேலிருந்து குகைகள் செதுக்கப்பட்ட பாறைகள் குகைகளுடனேயே உருண்டு கீழே வந்து கிடந்தன. இப்போது மூன்றடுக்குகளே உள்ளன. மிச்ச அடுக்குள் பாறைகளாக உடைந்து பரவி விட்டன. குகைகளில் பெரும்பாலானவை உடைந்து பாதிப்பாதியாக எஞ்சியிருக்கின்றன.

இப்பகுதியின் பாறைகள் மென்மையான மணற்பாறைகள். ஆகவே கரைந்தழியாத சிற்பம் என ஏதும் இங்கே இல்லை. கீழே குகைகளின் மையப்பகுதி ஒரு பெரிய திறந்தவெளி அரங்கு. அதன் வலப்பக்கத்தில் மன்னனும் அரசியும் அமரும் மேடை. இடப்பக்கம் அமைச்சர்களும் பெருங்குடியினரும் அமரும் மேடை. கீழே மக்களுக்கான இடம். சுற்றி சிறிய குடைவரைக்கோயில்கள். இப்போது எவற்றிலும் தெய்வங்கள் இல்லை.

குடைவரைக்கோயில்களின் மேல்விளிம்பில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிலைகள் உள்ளன. அவற்றில் ஒரு சிலைத்தொடர் முக்கியமானது. கையில் உலகத்தை ஏந்தியபடி இன்னொரு கையில் வாளுடன் போருக்கு வருகிறார் அசோகர். அவருக்கு முன்னால் குழந்தைகளுடன் பெண்கள் போருக்கு வந்து நிற்கிறார்கள். கலிங்கப்போரின் இறுதியில் அத்தனை ஆண்களும் இறந்துவிட பெண்கள் போருக்கு வந்தனர் என்றார் பிரதான். அசோகர் போரை நிறுத்தி மனம் மாற அது முக்கியமான காரணம். அந்த உத்தியேகூட புத்த பிட்சுக்களால் சொல்லிக்கொடுக்கப்பட்டதாக இருக்கலாம்.

கண்டகிரி சமண பௌத்த மதங்களுக்குப் பொதுவான இடமாகவே இருந்திருக்கிறது. குடைவரைகளை சாதவாகனர்கள், சோமவன்ஷிகள் உட்பட பௌத்த மன்னர்களும் இந்து மன்னர்களும் கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். இந்த விஷயத்தை எப்போதுமே கவனிக்கமுடிகிறது. இந்தியாவில் நாங்கள் கண்ட பெரும்பாலான சமண பௌத்த கோயில்களும் குடைவரைகளும் சைவர்களும் வைணவர்களுமான மன்னர்களால் கட்டிக்கொடுக்கப்பட்டவை. அவர்கள் அம்மதங்களைப் பேணியிருக்கிறார்கள்.

கண்டகிரி குகைகளின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று இங்கிருக்கும் யவனத்தொடர்பு. குகைகளின் வாயில் காவலர்களாக யவன வீரர்கள் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். கால்களில் பெரிய சப்பாத்துகள் அணிந்து யவன குட்டைக்கால் சட்டையும் இரும்புக்கவசங்களும் போட்ட வீரர்கள் கிமு ஒன்றாம் நூற்றாண்டிலேயே செதுக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

தமிழ் வரலாற்றுக்கு இந்த குகைகள் மிக மிக முக்கியமானவை. சொல்லப்போனால் தமிழகத்தின் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றையே இந்த குகைகளை சொல்லியபடி தொடங்குவதே நல்லது. சென்ற சில நாட்களுக்கு முன் ஆய்வாளர் துளசி ராமசாமி என்னைப் பார்க்க வந்திருந்தார். தமிழிலக்கியங்களில் மூலவரிகளில் பாண்டியர் சோழர் போன்ற சொற்கள் இல்லை என்றும் கல்வெட்டுகளிலும் பாண்டியர் என்ற சொல் இல்லை என்றும் எங்காவது மூலவரிகளில் உள்ளதா என்பது ஆய்வுக்குரியது என்றும் சொன்னார். பழையன், செழியன் என்றும் பாண்டியர்கள் குறிப்பிடப்படுகிறார் என்றார்.

ஆனால் கிமு இரண்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த ஒரு கல்வெட்டு இந்த குகைகளில் உள்ளது. கண்டகிரியில் உள்ள மிகப்பெரிய குடைவரை ஹாத்தி கும்பா குடைவரை. இன்று பாதி இடிந்ந்துள்ள இந்தக் குடைவரை முன்பு யானைமுகப்பு கொண்டதாக இருந்ததாம். இதில் காரவேல மன்னரின் புராதனமான கல்வெட்டு ஒன்றுள்ளது. பதினேழு நீளமான வரிகள் கொண்டது இக்கல்வெட்டு. இந்தியாவின் புராதனமான விரிவான கல்வெட்டுகளில் ஒன்று இது. இதில் பாண்டிய என்ற சொல் வருகிறது.

நூற்றைம்பது ஆண்டு காலமாகக் கலிங்க நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த திரமிர அல்லது தமிர மன்னர்களை காரவேலர் அடக்கினார் என்றும் திரமிள அல்லது திரமிர ஆதிக்கத்தை நிறுத்தினார் என்றும் சொல்லும் இக்கல்வெட்டு, பாண்டியர்களை வென்று கொண்டுவந்த திறையால் காரவேலர் நகரத்தை அமைத்ததையும் குமரிமலை மீது சமணர்களுக்கு உறைவிடங்கள் அமைத்ததையும் குறிப்பிடுகிறது. தமிழ், திராவிடம்,பாண்டியம், குமரி மூன்றும் சேர்த்துக்குறிப்பிடப்படும் இக்கல்வெட்டை ஆய்வாளர் முக்கியமாகக் குறிப்பிடுகிறார்கள்.

உண்மையில் இக்கல்வெட்டைப்பற்றி நான் வாசித்திருந்தாலும் அது என் நினைவில் இல்லை. ராஜமாணிக்கம் இக்கல்வெட்டைப்பற்றிச் சொன்னபோதுகூட கொஞ்சம் மிகையாக சொல்லப்பட்ட ஊகமாக இருக்கலாம் என்ற எண்ணமே ஏற்பட்டது. கண்ணால் இந்தக் கல்வெட்டைப்பார்த்தது ஒரு முக்கியமான திறப்பு. ஒரு தரிசனம் என்றே சொல்லலாம்.

கண்டகிரியில் உள்ள கல்வெட்டுகளைப்பற்றி விரிவாகவே எழுதவேண்டும். பிராமி லிபியில் எழுதப்பட்ட பாலிமொழி கல்வெட்டுகள் அவை. சாதவாகனர் முதல் பல்வேறு அரசர்களைப்பற்றியவை.

மாலையில் அருகே உள்ள கொனார்க் சூரியக் கோயிலுக்குச் செல்லலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள். நான் பலமுறை வந்திருக்கிறேன். சென்ற 2008 இந்தியப்பயணத்தில்கூட கொனார்க் வந்திருந்தோம். ஆனால் நண்பர்கள் புதியவர்கள். ஆகவே கோயிலுக்குச் சென்றோம்.

கொனார்க்கின் ஆச்சரியம் பற்றி முன்னரும் எழுதியிருந்தேன். தொலைவில் அது எவ்வளவு பெரிய ஆலயம் என்பது நமக்குப் புரியாது. நெருங்க நெருங்க அதன் மூச்சடைக்கச்செய்யும் பிரம்மாண்டம் நம்மைச் சூழ்ந்துகொள்ளும். அந்த மாபெரும் ரதம் ஒரு மனிதனின் கனவு என்றால் அவன் சிற்பி அல்ல தேவன்.

கொனார்க் சிற்பங்களின் கனவுலகம். அச்சிற்பங்கள் அனைத்தும் செந்நிற மணற்பாறைகளால் ஆனவை. அவை காலத்தில் கரைந்துருகி விட்டன. கரையாத ஒரு சிறிய சிற்பம்கூட இல்லை. நடனமும் இசையும், காமமும் போரும். கிழக்கில் உதித்து எழும் சூரியதேவன் முன் இவ்வுலகம் எப்படித்தெரியுமோ அப்படி செதுக்கப்பட்ட கோயில். பல்லாயிரம் கொண்டாட்டங்கள். பல்லாயிரம் களியாட்டங்கள்.

கொனார்க்கின் மாபெரும் சிற்பவெளியில் சில கணங்களிலேயே சித்தம் பிரமித்துவிடுகிறது. கனவில் உலவும் அனுபவம் வாய்த்துவிடுகிறது. அங்கே செதுக்கப்பட்ட பேரழகிகளின் சலன உறைநிலைகள் காலத்தை ஒரு பெருங்கனவுப்பரப்பாகக் கண்டவன் திடுக்கிட்டு விழித்துக்கொண்ட ஒற்றைக்கணம்.

ஒரு தம்பதியைக் கவனித்தேன். ஒரியர்கள். புதுமண இணைகள். அவன் அவளை அன்றி எதையுமே பார்க்கவில்லை. கண்ணாலும் காமிராவாலும் சொல்லாலும் கைகளாலும் அவளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான். இத்தனை ஆயிரம் அழகிகளும் கேளிகளும் அவனுக்கு பொருட்டல்ல.

ஆனால் எங்கோ மானுட மனம் குறையை உணர்கிறது. அது ஒரு மனித உடலின் குறை அல்ல. மானுட உடலின் போதாமை. அந்த இடைவெளியை நிரப்பக் கலையை அள்ளி அள்ளிக்கொட்டிக்கொண்டே இருக்கிறான் மனிதன். இசையை, ஓவியத்தை, நடனத்தை, கவிதையை, காவியத்தை.

மானுட உடலின் அந்தக்குறை எது? மூத்து தளர்ந்து மட்கியழியும் அதன் நிலையின்மை பற்றிய உணர்வுதானா அது? இதோ கல்லும் மட்கியிருக்கிறதே

அழியாதது அந்த முழுமைக்கான தாகம் மட்டும்தான். அதுவே கலையாகிறது. கலை மனிதனின் முழுமை அல்ல. முழுமைக்கான விழைவு மட்டுமே

[மேலும்]

முந்தைய கட்டுரைநீலகிரிப் பழங்குடிகள்
அடுத்த கட்டுரைஜெ.சைதன்யாவின் கல்விச்சிந்தனைகள்