நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது?

buddha-street-art-The-Tattooed-Buddha

நெடுஞ்சாலைப் புத்தர் 

நேற்று நான்
நெடுஞ்சாலையைக் குறுக்கே கடக்கும்
புத்தனைக்கண்டேன்

சாயங்காலப் பரபரப்பில்
கடக்க முடியாமல்
இப்பக்கம்
வெகுநேரமாக நின்றிருந்தேன்

ஐம்பதோ
அறுபதோ
எழுபதோ
வருடம் நீளமுள்ள வாழ்வில்
எப்படிப் பார்த்தாலும் ஒரு ஒன்றரை வருடம்
நாம் இப்படி கடக்க முடியாமல்
காத்து நிற்கிறோம்
என்று எண்ணியபடி …

அப்போது ஒருவன்
சற்றும் தயங்காமல்
மெதுவாக நெடுஞ்சாலையை கடப்பதைக் கண்டேன்
அவனைப் பின் தொடரத் தொடங்குகையில்
ஒரு வண்டி
குரோதத்துடன் என்னை நோக்கி வந்தது

எந்த வண்டியும்
அவனுக்காக வேகத்தைக் குறைக்கவில்லை
இயல்பான
அகன்ற
தனித்த
எப்போதும் அங்கிருக்கும் பாதையில்
அவன் நடந்து மறுபக்கம் சேர்ந்தான்.

kalpa

‘நெடுஞ்சாலை புத்தர்’ என்ற கல்பற்றா நாராயணன் இந்தக் கவிதை எனக்கு ஆழமான ஓர் அனுபவத்தை அளிப்பதாக இருந்தது. அந்தச் சொற்சேர்க்கையே ஒரு ‘ஜென் தன்மை’ வாய்ந்தது. நெடுஞ்சாலையில் புத்தர். புத்தர் என்றாலே அமைதி முழுமை கம்பீரம்- ஓங்கி விண்தொடும் மலைச்சிகரங்கள் போல. அஜந்தாகுகைகளின் கருவறை ஆழத்தில் இருக்கும் புத்தர் சிலைகளைப்பார்க்கும்போது அவை மலைகளின் அங்கம் என்ற எண்ணமே என்னை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. அம்மலைகளிலிருந்து வழியும் ஆறுகளின் கருணையாலானது நம் கலாச்சாரம். அம்மலைகளின் மரங்கள் அம்மலைகளின் மருந்துகள்…. அம்மலைகளை உடைத்து நாம் வீடுகட்டிக் கொண்டு குடியிருக்கிறோம். நம் நாகரீகமே மலைகளின் மடியில் நடந்துகொண்டிருக்கும் ஒரு சில்லறை செயல்பாடு. புத்தர் இந்நாகரீகங்கள் எழுவதையும் விழுவதையும் பார்த்தபடி மேகமுடிசூடி அப்பால் அமர்ந்திருக்கும் மகாமௌனம்.

மௌனத்துக்கும் நிம்மதிக்கும் நேர் எதிரான சொல் நெடுஞ்சாலை. நம் நாகரீகத்தின் இதயம். ஒரு கணம்கூட ஓயாத துடிப்பு. உலோகம், சத்தம், புகை , வேகம், போக்கு, வரவு , போட்டி …. அதுதான் புதுமைப்பித்தன் சொல்வானே, ‘மகா மயானம்’ அல்லது ‘ டிராம் நாகரீகம்.’ இந்நூற்றாண்டைப் பற்றி பேசவந்த பல எழுத்தாளார்கள் கலைஞர்கள் நெடுஞ்சாலையை அதன் குறியீடாகச் சொல்லியிருக்கிறர்கள். அங்கே ஓடாத முட்டிமோதாத எதற்குமே இடமில்லை.

நாராயணனின் கவிதையில் நெடுஞ்சாலையில் சட்டென்று வந்துவிடும் புத்தர் தரும் அனுபவம் அலாதியானது. ‘இவர் எங்கே இங்கே?” என்ற எண்ணத்துக்குப் பதிலாக “ஆம் இங்கும் இவர் உண்டு ” என்ற மனம்நிறைந்த புன்னகையையே இக்கவிதை உருவாக்குகிறது . எந்த ஓசைவெளியிலும் மௌனத்துக்கு இடம் உண்டல்லவா? ஓசைகளெல்லாம் உண்மையில் அந்த மௌனம் மீது நிகழ்வனதானே ? அத்தனை ஓசையையும் தன் மீது அசையும் நிழல்கள் போல எடுத்துக் கொண்டு நதிபோல அந்த மௌனம் காலத்தில் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது அல்லவா? மலை உச்சியில் நின்று பார்க்கும்போது இதே நகரத்து நெடுஞ்சாலை எத்தனை அமைதியுடன் உள்ளது. நீலம் போர்த்தி அமர்ந்திருக்கும் அந்த சிகர புத்தர் எப்போதும் கண்ணுறும் நம் நகரம் அமைதி மிக்கதுதானா?

கல்பற்றா நாராயணன் கவிதையில் இரைந்து வழிந்தோடும் வண்டிகளில் எதிலும் மோதாமல் இயல்பாகச் சாலையை கடக்கிறார் புத்தர் ‘அவன் காட்டில் நுழையும்போது இலைகள் அசைவதில்லை. அவன் நீரில் இறங்கும்போது அலைகள் எழுவதில்லை’ அத்தனை சாதாரணமாக. சேற்றில் உந்தி நிற்கும் கற்கள் மீது மட்டும் கால்வைத்து மறுபக்கம் செல்வதுபோல அவன் அந்த நெடுஞ்சாலை களேபரத்திற்குள் தேங்கியுள்ள மௌனத்திலும் அசைவின்மையிலும் மட்டும் காலெடுத்துவத்து மறுபக்கம் சென்றுவிட்டான். எப்போதும் அங்கிருக்கும் பாதை அது. எதனாலும் கலைக்கமுடியாத ஒன்று..

கல்பற்றா நாராயணன், அன்வர் அலி, அனிதா தம்பி , டி பி ராஜீவன், வீரான்குட்டி, பி ராமன், பி பி ராமசந்திரன் ஆகிய ஏழு கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய இத்தொகைக்காக கவிதைகளைப் படிக்கையில் நெடுஞ்சாலை புத்தர் என்ற படிமமே பொது அடையாளமாக மாறியது என் மனதுக்குள். இவை அனைத்திலும் நாம் காண்பது சமகால வாழ்க்கையின் ஓசைப்பெருநதியின் மீது அதன் மௌனத்திட்டுகள் மீது மட்டும் காலெடுத்துவைத்து மெல்ல அப்புறம் கடக்க முயலும் கவிமனங்களை என்று பொதுவாகச் சொல்லலாம். இந்த மௌனத்தை ஓசையினூடாகக் கண்டுகொண்டமையினால்போலும் இவற்றில் வீரான்குட்டி கவிதைகள் தவிர பிற அனைத்திலும் ஆழமான ஒரு நகைச்சுவை இருப்பதைக் காணாலாம். மற்றபடி உத்திகள் கூறுமுறை அனைத்திலுமே இவை வேறுபாடுகள் கொண்டவை.

மலையாளக் கவிதையின் மாறிய முகத்தை நாம் இக்கவிதைகளில் காணலாம். சச்சிதானந்தன், பாலசந்திரன் சுள்ளிக்காடு போன்ற முந்தைய கவிஞர்களின் குரல் ஓசைக்கு எதிரான இன்னொரு ஓசை. கலகம், கோபம் கொண்ட குரல். அரசியல் சார்ந்த கோபம் . அறம் சார்ந்த கோபம். அவர்கள் எழுதிய கவிதைகளில் மௌனங்கள் இல்லை. மௌனத்துக்கான தேடலும் அவற்றில் இல்லை. அவர்கள் கண்டது ஒருபக்கம் ஓசை, மறுபக்கம் ஆழ்ந்த தர்மசங்கடமான அமைதி. இந்த சமநிலையின்மைக்கு எதிரான பொறுமையிழப்பே அவர்களைக் கவிஞர்களாக்கியது. ‘ஓசை எழுப்புங்கள் ஓசை எழுப்புங்கள்’ என்று அவை மௌனமான அத்தளம் நோக்கி அதட்டின, மன்றாடின, அறைகூவின.

கடம்மனிட்ட ராமகிருஷ்ணனின் கவிதையில் நீண்ட வரலாறு முழுக்க குரல் இல்லாமல் இருந்த காட்டாளன் ‘ நெஞ்சில் ஒரு பந்தம் குத்தி’ வந்து நின்று ‘நீங்கள் என் கரிய குழந்தைகளை சுட்டு தின்றீர்கள், நீங்கள் அவர்களின் கரிய கண்களை தோண்டியெடுத்தீர்கள்!’ என்று முழங்கினான்.[ காட்டாளான். பார்க்க தற்கால மலையாளக் கவிதைகள். மொழியாக்கம் ஜெயமோகன்] கெ ஜி சங்கரப்பிள்ளை தன் கவிதையில் மௌனம் பூண்ட நடுத்தர வற்கத்தை நோக்கி ‘ சகோதரா அச்சம் காரணமாக ஒரு நாய் கூட தான் கண்டதை சொல்லமல் இருப்பதில்லை ‘ என்று குத்தி ‘ நொண்டிச்சாக்குகளின் சிதையின்மீது நம்முடைய வாழ்நாள்நீளும் எரிந்தடங்கலை’ சித்தரித்துக் காட்டினார்.

இது வரும் புரட்சியின் எழுபதுகளும் வராதுபோன புரட்சியின் எண்பதுகளும் சென்று மறைந்த பிறகு உருவான தலைமுறை . இது ஊடகங்கள் சமைக்கும் அன்றாடப் புரட்சிகளின் அலைவந்து அடிக்கும் கரை. இங்கே எவருக்குமே குரல்கள் இல்லாமல் இல்லை. எல்லா குரல்களுமே ஒன்றுக்குப் பத்தாகப் பெருகிவிட்டன. எழுபதுகளின் புரட்சிக் கவிஞர்கள் தொலைக்காட்சிகள் வழியாக நம்மைநோக்கி கர்ஜித்துக் கொண்டிருக்கும் காலம். இது ஓசைகளின் நெடுஞ்சாலை. பிம்பங்களின் நெடுஞ்சாலை. படிமங்களின் நெடுஞ்சாலை. இங்கே புத்தரைத் தேடும் அந்தரங்கமான யத்தனமாக மாறியிருக்கின்றது இன்றைய கவிதை. மிக மௌனமான தேடல். சொற்களால் கூட அல்ல, சொற்கள் அமர்ந்து நீங்கிய இடத்தில் எஞ்சும் மெல்லிய தடங்களால் எழுதப்பட்ட கவிதைகள் இவை . அந்தரங்கமான வலிகளால் தனக்குத்தானேகூட சொல்லிக் கொள்ள தயங்கும் உவகைகளால் ஆன கவிதைகள்.

இக்கவிதைகள் பொதுவாக கவிதைகளில் காணப்படும் போலியான துக்கங்களைச் சுமக்கவில்லை என்பதை முதலில் கவனிக்கலாம். தத்துவார்த்தமான பெரிய அல்லல்களை இவை அடையவில்லை. பெரிய வினாக்களை எழுப்பிக் கொண்டு காலம் மற்றும் வெளிக்கு முன் பதைத்து நிற்கவில்லை. தமிழ்க் கவிதைகளுடன் ஒப்பிடும்போது நாம் முதலில் காணும் வேறுபாடே இவை தத்துவார்த்த மொழியை முற்றாக உதறிவிட்டிருக்கின்றன என்பதே. நம் கவிதைகள் ‘பெரிய’ விஷயத்தை சொல்ல முனையும் முகபாவனையுடன் தொடங்குகின்றன. இவையோ ‘ஒன்றுமில்லை , ஒரு சின்ன விஷயம்;’ என்ற இலகுவான பாவனையுடன் தொடங்குகின்றன. மீண்டும் மீண்டும் அன்றாட அனுபவங்களை தஞ்சமடைகின்றன. முற்றம் கூட்டிப் பெருக்குதல். பேருந்து பிடித்தல் போல. பெரிய கோட்பாடுகளை எழுதவில்லை, சாதாரணமாக பூனைக்குட்டிகளைப் பற்றி எழுதுகின்றன. இந்த அன்றாட எளிமை வழியாக ஆழத்தில் ஓடும் மௌனநதியை காட்டிவிட முயல்கின்றன இவை. நிறமற்ற , தூய வெண்ணிற மலர்களையே புத்தரின் காலடியில் வைக்கவேண்டும் என்பார்கள். இவை அத்தகையவை.

இக்கவிதைகள் எதிலுமே படிமங்களும் உருவகங்களும் அடைந்து கிடக்கவில்லை என்பதை நாம் கவனிக்கலாம். எண்பதுகளின் இறுதியில் எழுதப்பட்ட கவிதைகள் படிமங்கள் மூலமே தங்கள் இயக்கத்தை நிகழ்த்துவனவாக இருந்தன. இக்கவிதைகளில் அபூர்வமாகவே படிமங்கள் வருகின்றன. உருவகங்கள் அதைவிட அபூர்வமாக. இவை ஒரு குறிப்பிட்ட முறையில் சொல்வதன்மூலம் தங்கள் கவித்துவ சலனத்தை நிகழ்த்துவனவாக உள்ளன. உதாரணம் ‘காலத்தின் தலைவன்’ ‘கனம்’ .காரணம் நவீன ஊடகங்கள் மூலம் படிமங்கள் நுரைக்குமிழிகள்போல ஊதி பெருக்கப்பட்டு காற்றை நிரப்பும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே. படிமங்கள் மழையாகப் பெய்யும் எம் டி வி யின் பத்துபாடல்களை பார்த்தால் பிறகு நம்மால் எளிதில் படிமங்களில் ஈடுபடமுடியாது. கவிதை என்பது சமகால அதி ஊடகங்களின் அராஜகத்துக்கு எதிரான செயல்பாடாக மாறியுள்ள இன்று இயல்பாகவே இக்கவிஞர்கள் படிமங்களை உதறி விட்டு மொழியின் நுட்பமான வண்ணமாற்றங்களை நோக்கிச் சென்றுவிட்டிருக்கிறார்கள். டி பி ராஜீவனின் ‘மனசாட்சிக் காவலர்களிடம்..’ என்ற கவிதை உதாரணம். அதில் உள்ள் கவித்துவக்கூறு அதன் மொழியாட்சி மூலமே உருவாகக் கூடியது. காட்சி ஊடகத்தால் தீண்டப்பட இயலாத ஒன்று அது.

அன்றாட வீட்டு உபயோகப்பொருள் போல இருப்பதே இவற்றின் முக்கியத் தனித்தன்மை .நதி , கடல் போன்ற எக்காலத்துக்கும் கவிதைக்கு உரிய ‘மிகப்பெரிய’ உருவகங்களை எடுத்துக் கொள்ளும்போதுகூட அவை உருவாக்கும் தத்துவார்த்த கனத்தை இயல்பான நகைச்சுவை மூலம் இல்லாமலாக்கி விடுகின்றன இக்கவிதைகள் . அதாவது முற்றாகக் கனமற்று காற்றில் மிதக்கும் ஒரு இறகு போல ஆவதற்கு முயல்கின்றன .மிதக்கும் இறகு தன் ஒவ்வொரு அசைவின் மூலமும் காற்று மண்டலத்தைக் காட்டுகிறது. தன் உடல் மூலம் பிரம்மாண்டமான ஒரு மொழியை அது பேசிக் கொண்டிருக்கிறது. அந்த லாகவத்தை அடைய முயல்கின்றன இக்கவிதைகள் எனலாம். உதாரணமாக பி பி ராமசந்திரனின் கனம் என்ற கவிதை. எத்தனை உக்கிரமான அனுபவம் அது. ஆனால் அதை ஒரு மெல்லிய நகைச்சுவைக்குள் பொதிந்து முன்வைக்கிறார். கிழவியை அதட்டும் மதிய சூரியன் கூட செல்லமாகவே அப்படி செய்கிறது. ஆனால் சென்ற காலக் கவிதைகளின் ஓசைக் கொந்தளிப்பை விட பல மடங்கு ஆழமாக நம் மனசாட்சியை ஊடுருவுகிறது இக்கவிதை. இந்த மௌனவலிமையே மலையாளக் கவிதைகளின் சிறந்த பிரதிநிதிகளான இவர்கள் இப்போது அடைந்துள்ள சிறப்பம்சம் என்று எனக்குப் படுகிறது.

*** *** ***

இத்தொகுதி 2004 மே மாதம் 21,22,23 நாட்களில் ஊட்டியில் நாராயணகுருகுலத்தில் நித்ய சைதன்ய யதி நினைவாக நடத்தப்படும் தமிழ் மலையாளக் கவிதை அரங்குக்காக மொழிபெயர்க்கப் பட்டது. தமிழில் இருந்து எம் யுவன், கலாப்ரியா, தேவதேவன், மனுஷ்யபுத்திரன், முகுந்த் நாகராஜன், நாஞ்சில்நாடன், சூத்ரதாரி, க.மோகனரங்கன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். கவிதைகளை இரு மொழிக்கும் மாற்றி ஏற்கனவே மொழிபெயர்த்து வைத்துக் கொண்டு அவற்றை வாசித்துப் பேசுவது வழக்கம் . 1999 நவம்பரில் 20,21,22 தேதிகளில் குற்றாலத்தில் கவிஞர் கலாப்ரியாவுக்குச் சொந்தமான வீட்டில்முதல் கூட்டம் நடந்தது. ஏறத்தாழ இதே கவிஞர்கள்தான் பங்கெடுத்தார்கள். அதன் பிறகு ஊட்டியில் ஒருமுறை , ஒகேனெக்கலில் ஒன்று, குற்றாலத்தில் ஒன்று என மொத்தம் நான்கு சந்திப்புகள் இதேபோல தமிழ் மலையாளக் கவிதைப் பரிமாற்றத்துக்காக ஏற்பாடு செய்திருந்தோம்.

இக்கவிதைப்பரிமாற்ற அரங்கில் ஆரம்பத்தில் கவிதை குறித்த கடுமையான முரண்பட்ட கருத்துக்களும் பூசல்களும் நட்பு எல்லை மீறாமல் நிகழ்ந்தன. மலையாளக் கவிஞர்களில் ஒருசாரார் எழுதியிருந்த கவியரங்கத்தன்மை கொண்ட கவிதைகள் பலவாறாக சர்ச்சைக்கு உள்ளாயின. பின்பு அவ்விவாதம் மாத்யமம் , பாஷாபோஷிணி போன்ற இதழ்களுக்கும் பரவியது. விவாதங்களைத் தொடக்கிவைத்த கல்பற்றா நாராயணன் தவிர பிற கவிதை ஆர்வலர்கள் பலரும் கருத்துக்களை எழுதினர். பாஷா போஷ்ணியில் நான் மலையாளாக் கவிதைகளின் கட்டுப்பாடற்ற வடிவம் மற்றும் செய்ற்கை ஓசைத்தன்மை ஆகியவற்றை கடுமையாக விமரிசித்து எழுதிய கட்டுரை பலவாறாக விமரிசிக்கப்பட்டது. பற்பல வசைக் கவிதைகள் என்னைப்பற்றி எழுதப்பட்டன. என் கருத்துக்கள் ‘சுத்த கலைவாதம்’ என்று விமரிசிக்கப் பட்டன. அந்நோக்குடன் உடன்பாடு கொள்ளுதலை ‘குற்றாலம் இ·பக்ட்’ என்றே சிலர் சொன்னார்கள்

எந்த விவாதமும் வெறுமே ஒற்றைப்படையாக நிகழ்வது இல்லை. வருத்தங்கள் கோபதாபங்கள் திசை திரும்பல்கள் எல்லாம் நிகழும். கவிதை விவாதம் ஒரு கட்டத்தில் தமிழ் மலையாள விவாதமாக திசை திரும்பியது. ஆனால் இப்போது ஐந்துவருடம் கழித்து இக்கவிதைகளை தொகுத்துப் பார்க்கையில் குற்றாலம் கூட்டம் தொடங்கி வைத்த விவாதம் ஆக்கபூர்வமான ஒரு மாற்றத்தை உருவாக்கியிருப்பதையே காண்கிறேன் . இதுகுறித்து சற்றுப் பெருமிதம் கொள்ள எனக்கு உரிமை உள்ளது என்றும் படுகிறது. இன்றைய மலையாளக் கவிதையில் முன்பிருந்த ‘தசை இறுகி நிற்கும்’ போக்கும், அனாவசியமான இசைத்தன்மையும் இல்லை என்றே படுகிறது. நுட்பமான அக மௌனத்தால் ஆனவையாக இக்கவிதைகள் உள்ளமை என் எதிர்பார்ப்பை நிறைவு செய்கின்றன.

அதைவிடமுக்கியமானது இச்சந்திப்புகள் மூலம் தமிழ் மலையாளக் கவிஞர்கள் இடையே உருவாகி பல தளங்களுக்கு நீடித்து வளாரும் தனிப்பட்ட நட்பு எனலாம். இவ்வரங்குகளுக்கு வெளியே அவர்கள் விவாதித்துக் கொள்வதும் இருமொழி இலக்கியப்போக்குகளுக்கும் பெரிதும் உதவியானதே. பெரிய அமைப்புகள் உருவாக்கும் அரங்குகள் உருவாக்க முடியாத திட்டவட்டமான மாற்றத்தை குறைந்த அளாவு பணவசதியுடன் நிகழ்த்திய இக்கூட்டங்கள் உருவாக்கியிருப்பதை ஆத்மார்த்தத்தின் வெற்றி என்றே எண்ணுகிறேன்.

ஆரம்பம் முதலே இந்த கூட்டங்களை அமைப்பதில் எனக்கு உதவிய என் ஆத்ம நண்பரும் மொழிபெயர்ப்பாளாருமான நிர்மால்யா [மணி]க்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன்

[தமிழினி வெளியீடாக வந்துள்ள ‘நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் ‘ மலையாளக் கவிதைகள் மொழிபெயர்ப்பின் முன்னுரை]

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Mar 31, 2008 

கல்பற்றா நாராயணன் கவிதைகள்

http://jeyamohan.in/?p=341
http://jeyamohan.in/?p=331

நெடுஞ்சாலை புத்தரும் ஒரு பாதசாரியும்

முந்தைய கட்டுரைகாவேரி – வெள்ளமும் வறட்சியும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – ‘திசைதேர் வெள்ளம்’