திண்ணை ஆசிரியருக்கு கடிதம்

ன்புள்ள ஆசிரியருக்கு

கோ.ராஜாராம் எதிர்வினை கண்டேன்.

இலக்கிய விவாதங்களில், அவையடக்கம் அல்ல பிரச்சினை. மதிப்பீடுகளும், அதிலுள்ள நேர்மையும் தான். தன்னடக்கம் முதலிய ‘எளிமைகள்’ தமிழ் படைப்பாளிகளிடமிருந்தே எதிர் பார்க்கப் படுகின்றன.  பிற சூழல்களில் அப்படி இல்லை. ஆண்டையைக் கண்டவுடன் அக்குளில் அங்க வஸ்த்திரத்தை இடுக்கிக் கொள்ள வித்வானிடம் எதிர்பார்த்த காலத்தின் மிச்சங்கள் அவை.

கோ.ராஜாராம் ஒரு பட்டியல் போட்டுள்ளார். அது அவரது அளவீடுகளைப் பொருத்தது. அப்படி பற்பல பட்டியல்கள் ஒரு சூழலில் வரலாம். அவை முன் வைக்கப் பட்டு விவாதத்தைத் தூண்டலாம். விவாதிபவர்கள் பொதுக் கருத்துக்கு வந்ததாக வரலாறே இல்லை. ஆனால் அவை வாசகனுக்கு முன் நடத்தப் படுகின்றன. அவையே படிப்படியாக ஒரு பொதுக் கருத்தை ஒரு சூழலில் ஏற்படுத்துகின்றன. மலையாளத்தில் வருடம்தோறும் இப்படி வரும் தேர்வுகள் ஏறத்தாழ இருபது நூல் களாகும். ஆங்கிலத்தில் எவ்வளவு என்பது நாமறிந்ததே. ஆனால் அங்கு அவை நூல்களாக வருகின்றன. தமிழில் அந்த வசதி இல்லை. எனவே தான் வெறும் பட்டியல். தன்  பட்டியலை தந்ததற்காக கோ ராஜாராம் அவர்களுக்கு நன்றி.

அத்துடன் தமிழின் வழக்கப்படி உள் நோக்கம் கற்பிக்கும் செயலில் ஈடுபடாததற்காக விசேஷ நன்றி.

கோ. ராஜாராமின் மதிப்பீடு பற்றிய என் மறுப்பை மட்டும் பதிவு செய்து வைக்க விரும்புகிறேன். படைப்புகளை அவை முன் வைக்கும் கருத்துகளின் அடிப்படையில் மட்டும் மதிப்பிடும் பார்வை அவருடையது. அக்கருத்துகளுடனான முரண்பாடும், உடன்பாடும் மட்டுமே அவரது அளவீட்டை தீர்மானிப்பவை எனத் தெரிகிறது. அது நமது இடது சாரி இலக்கிய அணுகு முறையில் பழகிப் போனதும் கூட. படைப்பின் நிலைப் பாடுகள் அவற்றின் அடிப்படை மதிப்பை தீர்மானிப்பவை அல்ல என்றே நான் கருதுகிறேன். அப்படைப்பின் பல அம்சங்களை அவையே தீர்மானிக்கின்றன என்ற போதிலும் கூட. தெள்ளத் தெளிந்த கருத்துகளை முன் வைத்து வாதிடவோ, வலியுறுத்தவோ முயல்வது நல்ல படைப்பு அல்ல என்பதே என் வாசிப்பனுபவத்தினூடாக நான் பெற்ற மதிப்பீடாகும். படைப்பை மொழியினூடாக அகமனத்தில்/அதிலுள்ள வரலாற்றில் நடத்தப்படும் ஒரு பயணமாகவே என்னால் காண முடிகிறது. அப்பயணத்துடன் நகரும்போது நாம் நமது அகத்தை அடையாளம் காண்கிறோம். அகம் எந்நிலையிலும் எளிய நிலைபாடுகளாகவோ, முடிவுகளைத்  திரட்டி வைப்பதாகவோ இருப்பதில்லை.  நமது புறப் பாவனைகளுக்கும், தோரணைகளுக்கும் அப்பால் தான் அதன் பெரும் விரிவு உள்ளது. எனவே நல்ல படைப்பு அதன் எல்லா தளங்களிலும் உள்ச்சிக்கல்கள் நிரம்பியதாகவே இருக்கும். மீண்டும். மீண்டும் அதில் நம்மை நாம் கண்டடைந்தபடியே தான் இருப்போம். என் தேர்வில் உள்ள படைப்புகள் ஏதோ ஒரு வகையில் என் அகத்தை நான் கண்டடைய உதவியவையே. கோ.ராஜாராமின் தேர்வில் உள்ள படைப்புகள் பல[உதாரணமாக புதிய தரிசனங்கள்] மிக தட்டையானவை. காரணம் அவை எந்த வகையிலும் அகப் பயணத்தை மேற் கொள்ள வில்லை. அவற்றில் உள்ளது படைப்பாளியின் அரசியல்/கருத்தியல் நம்பிக்கையும் நிலைப்பாடுகளும் தான். [அபூர்வமாக குழப்பங்கள்] அவற்றுடன் நான் என் நம்பிக்கைகளாலும், நிலைப்பாடுகளாலும் மட்டுமே உரையாடமுடியும். அதை செய்ய நான் இலக்கியப் படைப்பை நாட வேண்டியதில்லை.

கோ.ராஜாராமின் ஒரு கருத்தை மிக மிக கடுமையாக கண்டிக்க விரும்புகிறேன். அது தமிழ் சூழலின் படிப்பு பற்றியது. தமிழ் வாசகர்களின் எண்ணீக்கை மிகமிக குறைவு என்பது, எந்த அளவு உண்மையோ, அந்த அளவு உண்மை தமிழின் சீரிய வாசகர்களின் வாசிப்புத் தரம் எந்த உலகத் தரத்துக்கும் இணையானது, பலசமயம் மேலானது என்பதும். கோ.ராஜாராமின் வாசிப்புத் தரம் அதை மதிப்பிடும் தகுதியுள்ளதல்ல என்றே அவரது எழுத்தை வைத்து நான் மதிப்பிடுகிறேன். [அவையடக்கம் இங்குதான் தேவைப்படுகிறது]. தமிழின் புதுத் தலைமுறை எழுத்தாளர்களில் பலரை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.சில கருத்தரங்குகளில் அமெரிக்க /ஐரோப்பிய படைப்பாளிகளை சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது. அவர்களை விட எல்லா வகையிலும் மேலானவர்களாகவே தமிழ் படைப்பாளிகளை என்னால் மதிப்பிட முடிந்தது. எந்த ஒரு முக்கிய உலக இலக்கியப் படைப்பும் ஒரு வருடத்தில் இச்சூழலில் பழையதாகி விடுகின்றது என்பதே உண்மை. புதிய தமிழ்ப் படைப்பாளிகளான பிரேம் -ரமேஷ், எஸ்.ராமகிருஷ்ணன், எம்.யுவன் முதலியோருக்கு விரிவான முறையில் மரபிலக்கிய பயிற்சியும், தத்துவ பயிற்சியும் உண்டு. இவ்வகையில் அமெரிக்க /ஐரோப்பிய இளம் படைப்பாளிகளின் ‘தரம்’ என்னை அதிர்ச்சி கொள்ள வைத்ததுண்டு. அதை எழுதியுமுள்ளேன். கோ.ராஜாராமின் கூற்று ஒருவகையில் அவதூறின் பணியையே ஆற்றுகிறது. கோ.ராஜாராமின் உலக இலக்கிய அறிமுகம் பொன்னீலனின் அரசியல் தகவல் பதிவையும், தமிழவனின் தழுவலையும் ரசிக்கும் நிலைக்குத் தான் அவரை உயர்த்தியுள்ளது என்பதை காண்கையில் அவர் சொல்ல வருவது என்ன என்று புரிகிறது.

யமுனா ராஜேந்திரனின் இலக்கிய/திரைப்பட விமரிசனங்களை அவ்வப்போது கவனிப்பவன் நான். கலைப் படைப்புக்கும், துண்டுப் பிரசுரங்களுக்கும் ஏதாவது வித்தியாசம் காண்கிறார் என்பதற்கான தடையங்களை அவர் இது வரை வெளிப் படுத்தியதில்லை. அப்படி காண முடிகிறவர்களுக்காகவே இலக்கியம் எழுதப் படுகின்றது என்பது என் கணிப்பு. என் நாவல்கள் பற்றி அவர் சொன்ன கருத்துகள் வெறும் அக்கப் போர்களும், அவதூறுகளும் மட்டுமே. குறிப்பாக விஷ்ணுபுரத்தை ஆர் எஸ் எஸ் அரசியலுக்குள் தள்ள முயல்வது இங்கு இடதுசாரிகள் எடுத்த [இதற்குள் பிசுபிசுத்துப் போன] அவதூறின் மூலம் அழித்தொழிக்கும் உத்தி மட்டுமே. ராஜேந்திரனை போன்ற ஸ்டாலினிஸ்டுகளிடமிருந்து வேறு எந்த இலக்கிய அணுகுமுறையை எதிர்பார்க்கமுடியும்?அவர் பன்னிப் பன்னி பேசிவரும் இரண்டாம் தர பிரகடன நாவல்களுடன் ஒப்பிட்டால் விஷ்ணுபுரமும், பின் தொடரும் நிழலின் குரலும் உலகப் பேரிலக்கியங்கள் தான். சமீப காலத்தில் உலக இலக்கிய தளத்தில் பேசப்பட்ட எந்த நாவல்களுக்கும் இவை குறைந்தவையல்ல என்று இலக்கிய ரசனையும், வாசிப்பும் உள்ள எவரும் மறுக்க முடியாது என்றே நான் கருதுகிறேன். அதை நம்ப தக்க வாசிப்பும் எனக்குண்டு. அதை இப்போதைக்கு ராஜேந்திரனின் வாசிப்பு நெருங்க முடியாது என்பதற்கு அவரது இலக்கிய கருத்துக்களே சான்று எனக்கு.

இவ்விரண்டு விமரிசனக் குறிப்புகளிலும் உள்ள ஒரு தோரணையை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். இன்றைய சூழலில் பெயர்கள், மேற்கோள்கள் முதலியவை நாளிதழ் இணைப்புகளில் இருந்தே கிடைக்கும். ஒருவரது படிப்பையும், திறனையும் காட்டுவது அவரது தருக்க முறைதான். மிக மேலோட்டமான, புராதனமான [தி.க.சித்தனமான என்பது தமிழ்நாட்டு மரபு] கருத்துகளை அக்கப்போர் மொழியில் முன் வைக்கும் இக்கட்டுரைகளுக்குள் தரப்பட்டுள்ள பெயர்களும், மேற்கோள்களும் ஆழமான அவநம்பிக்கையையே உருவாக்குகின்றன. இந்த தரத்தில் இன்று தமிழ்நாட்டில் புதிய இடதுசாரிகள் எவரும் எழுதுவதில்லை. ஆனால் இவை ஏதோ மேலும் உயர் தரத்தில் உலாவுபவையாக பாவனை செய்கின்றன என்பது தான் விசித்திரமாக உள்ளது.

***

முந்தைய கட்டுரைதஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
அடுத்த கட்டுரைமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1