குகைகளின் வழியே – 16

புவனேஸ்வர் அருகே மூன்று முக்கியமான பௌத்தமையங்கள் உள்ளன. புஷ்பகிரி, ரத்னகிரி, லலிதகிரி ஆகிய மூன்று குன்றுகளும் முன்பு மூன்று மாணிக்கக் கற்கள் என்று சொல்லப்பட்டன. மூன்றையும் இணைத்து ஒடிசாவின் அரசு ஒரு பௌத்தத் தாழ்வாரம் என அறிவித்துள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் சுற்றுலா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தோஷாலி என்ற பேரில் முதல்தரமான சுற்றுலா விடுதிகள் கட்டப்படுகின்றன. அற்புதமான கட்டிடங்கள் அவை. சுற்றுலா மையங்களும் மிகச் சிறப்பாக பராமரிக்கப் படுகின்றன.

நாங்கள் முதலில் சென்றது புஷ்பகிரிக்கு. புஷ்பகிரி கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்த ஒரு பௌத்த கல்வி மையம். கலிங்கம் மீது படையெடுத்து வந்த அசோகர் இங்கே இருந்த பிட்சுக்களால் மன மாற்றமும், மத மாற்றமும் செய்யப் பட்டார். அவர் இந்தக் குன்றிலிருந்த தொன்மையான பௌத்த விகாரத்தை பெரும் பொருட் செலவில் புதிப்பித்துக் கொடுத்தார் என்று சொல்லப் படுகிறது.

புஷ்பகிரி புவனேஸ்வரிலிருந்து 90 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள குன்றுகளில் இதுவே பழமையானது. தக்‌ஷசிலா நாளந்தா பல்கலை கழகங்களுக்கு காலத்தால் மூத்ததும், பெரியதும் இதுதான் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.மகாநதியின் துணைநதிகளான கேலுகா, கெங்குடிஸ் நதிகளின் நடுவே இந்த படுகை உள்ளது. மிக, மிக வளமான ஒரு மருத நிலம் இது. உயரமில்லாத சிறிய குன்று இது. புஷ்பகிரியில் இன்று முழுமையான கட்டிடம் ஏதுமில்லை. கேரளப் பகுதிகளில் காணப் படும் சரள் கல்பாறைகளால் ஆனது இந்த குன்று. இங்குள்ள கட்டிடங்களும், சிலைகளும் கூட இந்தப் பாறையில் செதுக்கப் பட்டவை.

பாறைச் சிற்பங்கள்

வட்டமான படிகள் வழியாக மேலேறிச் சென்றோம். அங்கே அப்போது எவருமில்லை. ஒரு வழிகாட்டி கூடவந்து சிலைகளைக் காட்டினார். அனேகமாக எல்லா சிலைகளும் உடைந்தவை. வேண்டுதலுக்காக கற்களில் செதுக்கப்பட்ட சிறிய தூபிகள் அப்பகுதியெங்கும் பரந்திருக்கின்றன. பாறைகளில் நேரடியாகவே வெட்டப்பட்ட தூபிகள் மிக, மிகப் பழைமையானவை. அப்பாறைகளில் பிராமி லிபிகளில் அசோகரின் பெயர் காணப்படுகிறது. மண்தொடும் பாவனையில் அமர்ந்திருக்கும் புத்தர் சிலை, தாராதேவி சிலைகள் உள்ளன.

புஷ்பகிரிக்கு மேல் ஒரு ஸ்தூபி இருந்திருக்கிறது. அது இடிந்து அதன் புராதனமான அடித்தளம் மட்டுமே இன்று எஞ்சியிருக்கிறது. அதனருகே பல சிறிய விகாரங்களின் அடித்தளங்களும், செங்கல் சுவர்களின் எச்சங்களும் உள்ளன. இந்த மடாலயத்துக்கு கிபி 639ல் யுவான் சுவாங் வந்திருக்கிறார். புசி பொ கிலி என்று இக்குன்றை அவர் குறிப்பிடுகிறார். புஷ்பகிரியில் தேரவாத பௌத்தம் செல்வாக்குடன் இருந்திருக்கிறது.

ரத்னகிரி உயரமற்ற குன்று. குன்றின் மீது பரப்பு அதிகம். கிட்டத்தட்ட ஒரு சிறிய நகரமே இந்தக் குன்றின் மீது இருந்திருக்கிறது. ஒரு பெரிய பல்கலை கழகம் அது. பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை மிகச் செல்வாக்குடன் இருந்த இந்த தலம் பின்னர் மெல்ல, மெல்ல செல்வாக்கிழந்தது. ஆனால் பதினாறாம் நூற்றாண்டு வரைக்கும் கூட செயல் பட்டுக் கொண்டிருந்தது. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின் கைவிடப் பட்டு அழிந்தது.

ரத்னகிரி தாந்த்ரீக பௌத்த மரபான வஜ்ராயனத்தின் மையம். இது இன்று திபெத்தில்தான் எஞ்சியிருக்கிறது. பௌத்தஞானத்தை பல்வேறு மறைச்சடங்குகள் ஆசாரங்களாக விரித்து எடுத்தது வஜ்ராயனம். புத்தர் மற்றும் போதிசத்வர் சிலைகளுக்கு பல்வேறு புதியவடிவங்களை அளித்தது இது. இந்தக் குன்றில் உள்ள சிலைகள் பிற இடங்களில் காணக் கிடைக்காதவை.

ஸ்தூபி-1

ரத்னகிரி முழுக்க ஆயிரக்கணக்கான சிறிய தூபிகள் உள்ளன. சற்றுப் பெரிய சிவலிங்கங்கள் போன்ற தூபிகள். கண்ணுக்குத் தெரியும் தூரம் வரை தூபிகள்தான்.குன்றின் மீது செங்கல்லால் கட்டப்பட்ட விகாரங்களின் அடித்தளங்கள், எஞ்சிய பகுதிகள் உள்ளன. உறுதியான செங்கற்கள் ஆயிரம் வருடங்களாகியும் உடையாமல் கரையாமல் எஞ்சியிருப்பது மிக ஆச்சரியமானது.

அந்த அடித்தளங்கள் மிக, மிகக் கனமாக அமைந்துள்ளன. ஆகவே அவற்றின் மீது பிரம்மாண்டமான மரக்கட்டுமானங்கள் இருந்திருக்க வேண்டும். நான்கு பக்கமும் சிறிய கோயில்களும் நடுவே பிரம்மாண்டமான உள்முற்றமும் உடைய விகாரங்கள் அவை. மையக்கருவறையில் பிரம்மாண்டமான புத்தர் சிலைகள் அமர்ந்திருக்கின்றன. பக்கவாட்டுகோயில்களில் இருந்த சிறிய புத்தர்சிலைகள் அருங்காட்சியகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.

புத்த விகாரம்

இப்பகுதியில் உள்ள புத்தர்கள் இருவகை. ஒன்று மண் தொடு பாவனையில் அமைந்திருக்கும் புத்தர். இரண்டு அவலோகிதேஸ்வரர் அல்லது லோகேஸ்வரர் சிலை. கையில் தாமரை மலருடன் நகைகளும், மணிமுடியும் அணிந்து வரத முத்திரையுடன் இருக்கும் புத்தர் இவர். மகாயான பௌத்தத்தின் இறுதிப் பகுதியில் உருவாகி வந்த இந்த தெய்வ வடிவம் பின்னாளில் வஜ்ராயன பௌத்தத்துக்கு மிக முக்கியமானதாக ஆகியது.

இந்தக் குன்றின் மீது பல பிரம்மாண்டமான தூபிகள் இடிந்து எஞ்சிய செங்கல் பகுதிகள் உள்ளன. முழுமையாக இருப்பவை நடுத்தர அளவுள்ள கருங்கல் தூபிகள் மட்டுமே. இந்தத் தூபிகளின் நான்கு பக்கமும் நான்கு பாவனையில் அமர்ந்திருக்கும் புத்தரின் சிலைகள் உள்ளன.

ரத்னகிரியை சுற்றிவர நெடுநேரமாகும். பெரிய நிலவெளி அது. இன்னும் அகழ்ந்து எடுக்கப் படாத பகுதிகளும் பல உள்ளன. பன்னிரண்டு அடி உயரமுள்ள பிரம்மாண்டமான புத்தர், அவலோகிதேஸ்வரர் சிலைகள் மண்ணில் நாட்டப்பட்டு வெட்டவெளியில் நிற்பது அற்புதமான மன எழுச்சியை அளிப்பது. தொலைவில் நின்று பார்க்கையில் அந்தச் சிலையின் தனிமை துணுக்குறச் செய்கிறது. நெருங்க, நெருங்க அச்சிலையின் பிரம்மாண்டம் நமக்குள் தனிமையை நிறைக்கிறது.

மண்ணில் பதித்து வைக்கப்பட்ட அவலோகிதேஸ்வரர் சிலை

லலிதகிரி தேரவாத பௌத்ததின் புராதன மையம். இங்கே சமீபத்தில் அகழ்வாய்வில் மிக முக்கியமான ஒரு பொருள் கிடைத்தது. ஒரு சிறிய பொற்சிமிழ் கிடைத்தது. அதற்குள் ஒரு வெள்ளிச்சிமிழ் இருந்தது. அதற்குள் ஒர் கற்சிமிழ். அந்தச் சிமிழுக்குள் சில சிறிய எலும்புத்துண்டுகள் இருந்தன. அவை புத்தரின் எலும்புகள் என நம்பப்படுகிறது.

ரத்னகிரியில் மிக முக்கியமான ஒரு பௌத்த அருங்காட்சியகம் உள்ளது. இப்பகுதியில் கிடைத்த புத்தமதச் சிலைகள் இங்கே சேமிக்கப் பட்டுள்ளன. ஆளுயரமுள்ள புத்தர் தலைகள் இரண்டு இரு அறைகளில் உள்ளன. எட்டாள் உயரமுள்ள புத்தர்சிலையின் எஞ்சிய பகுதிகள் அவை. விதவிதமான புத்தர்கள். அமர்ந்து, நின்று, யோகத்திலாழ்ந்தவை. தர்மசக்கரத்தை சுழற்றுபவை. நல்லுரையாற்றுபவை. மண் தொட்டு அமர்ந்திருப்பவை.

புத்தர் சிலைகளில் ஒன்று

புத்தரின் இருபக்கமும் இரு போதிசத்வர்கள் நிற்பதுண்டு. போதிசத்வ பத்ம பாணி. போதிசத்வ வஜ்ரபாணி. ஒருவர் தாமரையை ஏந்தியவர், இன்னொருவர் மின்னலை ஏந்தியவர். மிக,மிக,மிக மெல்ல மலரும் ஒன்று, கண்காணா கணத்தில் மலரும் இன்னொன்று. சித்தத்தில் ஞானம் உதயமாவதின் இரு கணங்கள். இரண்டுக்கும் நடுவே புத்தர். இரண்டும் ஆனவர். இரண்டுக்கும் அப்பாற்பட்டவர். திரும்பத் திரும்ப அந்த இரண்டு எல்லைகளின் முடிவில்லா சாத்தியங்களை நோக்கிச் சென்று, மண்டை அறைபட்டுச் சரிந்து கொண்டிருந்தது என் பிரக்ஞை.

சூழ்ந்திருக்கும் புத்தர்கள். ஒளியில் அதிர்ந்து ஒருபொருள் பல நூறாகத் தெரிவதுபோல என் சித்த அதிர்வில் புத்தர் பலவாகி விட்டாரா என்ன? இந்தப் பித்தம் தெளிந்த பின் ஒன்றாக மாறி என் முன் நிற்பாரா என்ன? ஒரு புத்தர் முன் அமர்ந்தேன். அந்த அருங்காட்சியகத்திலேயே அழகான சிலை. நழுவி, நழுவி பட்டுத்துணி போல, தேன்போல கனவுக் காட்சி போல விலகிச்சென்றது பிரக்ஞை.

அக்கணம் ஒன்றை உணர்ந்தேன். எல்லா தெய்வங்களும் நம்மை நோக்குகின்றன. எல்லா சிலைகளும் பார்வை கொண்டவை. புத்தர் நம்மை பார்ப்பதே இல்லை. அவர் கண்கள் அவரை மட்டுமே நோக்குகின்றன. அவருக்குள் உறையும் அகண்ட காலத்தை, பெருவெளியை. அதனால்தான் அவர் முகத்தில் அந்த பேரமைதியா? அந்த மெல்லிய துக்கமா? பேரமைதி என்றால் மெல்லிய துக்கம் அதில் ஊடாட வேண்டுமா என்ன?

புத்தர் சிலை முன்…

அந்தக் கண்கள் திறக்குமென எண்ணியது போல, உணவுக்காக காத்துத் தவித்து நிற்கும் நாய்போல என் போதம் ஏங்கி நின்றது. காலங்கள் முழுக்க வளைந்து, வளைந்து ஓடிச்சென்றது. எங்கெங்கோ மானுட இனம் பிறந்து, பிறந்து இறந்தது. கல் மட்கி மண்ணாயிற்று, மண் இறுகி கல்லாயிற்று

பின் கண்விழித்தேன். புத்தர் அங்கே இருந்தார். வேறு புத்தர்.

[மேலும்]

படங்கள்

முந்தைய கட்டுரைபயணம்- கடிதம்
அடுத்த கட்டுரைபிரபஞ்சனுக்குச் சாரல் விருது