பயணம்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
நலம் தானே ? நீண்ட நாட்களுக்குப் பின்
,கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து உங்களுக்குக் கடிதம்
எழுதுகிறேன் . கடைசியாக , என் கோரிக்கையை ஏற்று ஊட்டி கவிதை அரங்கிற்கு
இ மெயிலில் அழைப்பு அனுப்பியிருந்தீர்கள் . அப்போது கல்லூரி சுற்றுலா
சென்றிருந்ததால் மூன்று நாட்களுக்குப் பின்தான் கடிதம் கண்டேன் . பின்னர்
தங்களைப் பல முறை அலைபேசியில் அழைத்துப் பேச நினைத்தும் தங்களுடன் விரிவாக
உரையாடும் மன நிலை வரவில்லை . கல்லூரி,அதன் வாழ்க்கை வேறொரு தளம்
என்றாலும் தங்களின் passive வாசகனாகப் பின் தொடர்ந்த்திருக்கிறேன் .

உங்களின் குகைகளின் வழியே-15 இன்று காலை படித்தேன் . பயணக்குறிப்பாக
எழுதப்பட்டாலும் அது அதி முக்கியமான கட்டுரை என நான் கருதுகிறேன் .
படித்தது முதலே என் இரு வருட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற
மன எழுச்சி . தாங்கள் எழுதிய இந்த முக்கியமான கட்டுரையின் சாராம்சம்
இந்திய இதழியலையும் மக்களின் மனோநிலையையும் நன்றே வெளிக்கொணரக் கூடியது .

தங்களின் வழியைப் பின்பற்றி என் கல்லூரிப் படிப்பு
முடிந்தவுடன் ஒரு இந்தியப் பயணம் சென்றேன் . உடன் அவ்வளவு தூரம் வர யாரும்
தயாராய் இல்லை . பொதுவாக என் வயது இளைஞர்களைப் பொறுத்தவரை பயணம் என்றால்
ஒரு மலை வாசத்தலம்.சாகசப்பயணம் என்றால் wonderland,vega land மட்டுமே .
மே இறுதியில் ஆரம்பித்து ஜூன் இறுதி வரை,ஒவ்வொரு நாளும் நான் கண்ட
இந்தியா வேறு. அகல் பாதாள குளம் போல் குளிர்ச்சியாக , ஒவ்வொரு துளியும்
தேன் . கோவையிலிருந்து ஆக்ரா ,மதுரா ,தில்லி என ஆரம்பித்து அம்ரித்சர்
,ஜம்மு என நீண்டு காஷ்மீரில் முடிந்த நெடும் பயணம். இன்று எண்ணுகையில்
அதன் சாத்தியமின்மை ,வந்திருக்கக் கூடிய இன்னல்களும் தெரிகின்றன . ஆனால்
அன்று அந்த மன நிலை . தனியாகப் பயணித்தாலும் மக்கள் எங்குமே துணையாய்
இருந்தனர். என் மனதில் இந்தியா பற்றி இருந்த போலி பிம்பம் காஷ்மீரை
விட்டுச் செல்கையில் உடைந்தே விட்டது . நான் கண்ட இந்தியாவின்
சித்திரத்துடன் ஒத்துப் போவது தங்கள் எழுத்தின் மூலம் படியும் சித்திரம்
மட்டுமே . அனுபவ தரிசனமும் தர்க்கமும் கலந்த நிதர்சனங்கள் அவை . உங்களின்
எழுத்து அவர்களின் சூடோ தளத்திலும் எடுத்துச் செல்லப்பட வேண்டும் .

அன்புடன் ,

பன்னீர் செல்வம் வேல்மயில்

அன்புள்ள பன்னீர் செல்வம்

இந்தப்பயணத்தின் மதிப்பை நீங்கள் இன்னும் போகப்போகத்தான் உணர்வீர்கள். வாழ்க்கையின் தொடக்கத்திலேயே வாழும் நாட்டையும் பண்பாட்டையும் திறந்த மனத்துடன் நேரடியாக சந்திப்பவன் என்றென்றைக்குமான ஒரு செல்வத்தை ஈட்டிக்கொள்கிறான் என்றே பொருள்.

இந்தியா கருத்தியல்தளத்தில் வேட்டையாடப்படும் ஒரு தேசம். உலகளவில் இந்த அளவுக்கு இகழப்படும் அவதூறு செய்யப்படும் ஒரு தேசம் வேறு இல்லை. ஒரு தேசத்தின் உயர்குடிகள் ஒட்டுமொத்தமாக அந்ததேசத்தைப்பற்றி இளக்காரம் கொண்டிருக்கும் தேசம் , ஒரு தேசத்தின் அறிவுஜீவிகள் பெரும்பாலானவர்கள் அதைக் காட்டிக்கொடுத்துப் பிழைக்கத் தயாராக இருக்கும் இன்னொரு தேசமும் உலகில் இல்லை.

இந்தியாவை நேரடியாகப்பார்ப்பது இந்த இளக்காரங்களை அவமதிப்புகளை அவாதூறுகளைத் தாண்டி நம்மை, நம் முன்னோரை சரியாகப்புரிந்துகொள்ள உதவக்கூடியது

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைவிசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் பற்றி சுவாமி சித்பாவனந்தர்
அடுத்த கட்டுரைகுகைகளின் வழியே – 16