குகைகளின் வழியே – 15

இந்தப்பயணத்தில் முழுமையாகவே காரில் செலவழித்த நாள் இன்றுதான். சட்டிஸ்கரில் இருந்து ஜார்கண்ட் வழியாக ஒரிசாவுக்குள் நுழைந்து புவனேஸ்வர் பாதையில் சென்று இங்கே ஒரு நண்பரின் விருந்தினர் மாளிகைக்கு மாலையில் வந்து சேர்ந்தோம். அறுநூறு கிலோமீட்டர் காரிலேயே, நல்லவேளையாக பெரும்பாலான தூரத்துக்கு நல்ல சாலைதான்.

பகல் முழுக்க இந்தப்பயணத்தைப் பற்றி அதைத்தொடர்ந்து எழும் நினைவுகளைப்பற்றி பேசிக்கொண்டே இருந்தோம். நான் என் நண்பர்களுடன் எப்போதும் சொல்லிவரக்கூடிய ஒரு விஷயம் உண்டு. இந்திய யதார்த்தம் என்பது நேரடியாக இந்தியாவில் சுற்றியலைவதன் மூலம் மட்டுமே கிடைப்பது. இந்தியாவை அலைந்து கண்டுபிடித்த எழுத்தாளர்கள்தான் இந்தியாவின் முக்கியமான படைப்பாளிகள். வைக்கம் முகமது பஷீர், சிவராம காரந்த், பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய…

இப்படி சுற்றிவருவதில், வெறுமே பார்த்துச் செல்வதில் என்ன பயன்? வணிகநிமித்தமாக இந்தியாவை சுற்றிவரக்கூடிய பலர் இருக்கிறார்களே? இதெல்லாம் அடிக்கடி எழும் வினாக்கள்.

முந்திய நாள் பயணத்தின்போது ஓரிடத்தில்…

நாம் ஏதாவது ஒரு சொந்த விஷயமாகச்செல்லும் பயணங்களை ஒருபோதும் பயணங்களின் பட்டியலில் சேர்க்கக் கூடாது. அவை நம் அகத்தின் பார்வையை மூடிவைத்திருக்கின்றன. நாம் அப்போது எதையுமே பார்ப்பதில்லை, உள்வாங்குவதுமில்லை. அப்போது மிகக்குறைவான நேரமே நம் அகம் திறந்திருக்கிறது. விசேஷமாக ஏதாவது நடந்தால் மட்டுமே நாம் எதையாவது கவனிக்கிறோம். நம்முடைய் தொழில்முறைப் பயணங்களில் நாம் சின்ன விஷயங்களை உள்வாங்குவதே இல்லை. உண்மையில் சின்ன விஷயங்கள் மட்டுமே ஒரு வாழ்க்கையை, பண்பாட்டை அவதானிக்க முக்கியமானவை.

பயணத்துக்காகவே பயணம் செய்யவேண்டும். அப்போது நாம் நம்முடைய சொந்தக் கவலைகளில் இருந்து முழுமையாக விடுபடுவதை நேரடியாக உணர முடியும். பயணத்துக்கான பயணம் தொடங்கிய இருநாட்களுக்குள் நம்முடைய சொந்த ஊரே நமக்கு மறந்துவிடும். நாம் இருக்கும் ஊரில் முழுமையாகவே வாழ ஆரம்பித்துவிடுவோம். நம் அகம் திறந்துவிடும். அப்போது ஒவ்வொரு நிமிடமும் விழிப்புநிலை கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் நாம் கவனிக்கிறோம். ஒட்டுமொத்தமாக ஒரு மனப்பிம்பம் நம்மிடம் திரண்டுகொண்டே இருக்கிறது.

கிருஷ்ணனும், ராஜ மாணிக்கமும்…

உதாரணமாக ஜார்கண்ட் முழுக்க ஏராளமான சைக்கிள்கள். புதிய சைக்கிள்கடைகள் மிக அதிகம். சைக்கிள் பழுது பார்க்குமிடங்களும் நிறையவே உள்ளன. இந்த அளவு சைக்கிள்கள் நம்மூரில் இல்லை என்ற எண்ணம் எப்போதோ உருவாகிறது. அதைத்தொடர்ந்து பற்பல அவதானிப்புகள். அந்த சைக்கிள்கள் அதிகமும் பெண்கள் பயணப்படுபவை என்ற புரிதல் உருவாகிறது. அது பெண்கள் அதிகமாக வெளியே செல்ல ஆரம்பித்திருப்பதன் அடையாளமாக ஆகிறது.

இந்தியச்சூழலில் இரு விஷயங்களை நாம் கவனிக்கவேண்டும். ஒன்று நம்முடைய கவனமில்லாத தொழில்முறைப் பயணிகள் உருவாக்கும் எளிய மனப்பிம்பங்கள். உதாரணமாக பல மலையாளிகள் தொடர்ந்து தமிழ்நாடு வழியாகப் பயணம் செய்து சென்னைக்கு செல்கிறார்கள். அவர்களுக்குத் தமிழகம் மிக மிக வறண்ட நிலம் என்ற மனச்சித்திரம் இருக்கிறது. கேரளத்தில் இருந்து சென்னைசெல்லும் ரயில் பெரும்பாலும் இரவில் செல்கிறது. பகலில் அது காட்டும் நிலம் வறண்டது. அதைவைத்து இந்த மனப்பிம்பத்தை பல ஆண்டுகளாகப் பேணி வருகிறார்கள். அவர்கள் தஞ்சையைப் பார்த்தே இருக்கமாட்டார்கள். நாம் ஆந்திரம், கர்நாடகம் பற்றிக் கொண்டிருக்கும் பல புரிதல்கள் இத்தகைய பொத்தாம்பொதுவான பிம்பங்கள்.

வழியில் ஒரு கிராமத்தில்…

அதைவிட முக்கியமான இன்னொன்று உண்டு. இந்தியா ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற இரண்டு பகுதிகளால் ஆனது. நகர்ப்புற இந்தியா கிராமப்புற இந்தியா. நகர்ப்புறத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு கிராமத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்கள் அச்சிலும், காட்சியிலும் கிடைத்த பிம்பங்களை வைத்து கிராமங்களைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம். படித்தவர்கள் என்ற ஆணவம் என்று அதைச் சொல்லலாம். தாங்கள் கிராமத்தைப்பற்றிப் புரிந்துகொண்டிருப்பதை அந்த கிராம மக்களிடம் சொல்லி அவர்களும் அதை ஏற்றாகவேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

உதாரணமாக சமீபத்தில் ஒரு சென்னைவாழ் நண்பருடன் தமிழக கிராமம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். ஒரு கிராமவாசி பகல் முழுக்க எங்களை வழிகாட்டிக் கூட்டிச்சென்று உதவினார். நண்பர் அவருக்குப் பத்து ரூபாய் அன்பளிப்பாகக் கொடுத்தார். பெற்றவர் முகம் கண நேரத்தில் வாடினாலும் உடனே சிரித்துக்கொண்டு ‘சரிங்க’ என்றார். நான் இருநூறு ரூபாய் கொடுத்தேன்.

நண்பர் என்னிடம் காரில் ஏறியதுமே வாதிட ஆரம்பித்தார். கிராமப்புறத்தில் ஒருநாளுக்கு முப்பது ரூபாய் வருமானத்தில் குடும்பமே வாழ்கிறது, அவர்களுக்குப் பத்து ரூபாய் பெரிய தொகை என்றார். அவர். அவர்களுக்குக் கஞ்சி கூழ் தவிர வேறு செலவே இல்லை, ஆகவே அவர்களுக்கு அதிக பணம் கொடுத்தால்கூட அவர்களால் செலவிடமுடியாது என்றார். அவர் சொல்லும் கிராமம் எங்கே இருக்கிறதென்று எனக்கு தெரியவில்லை. நண்பர் பெரிய படிப்பாளி. அவரிடம் விவாதித்து எதையும் நிறுவ முடியாது. புத்தகங்களாக சுட்டிக் காட்டுவார். நான் பேசாமல் இருந்தேன்.

ஹோட்டல் ஒன்று…

இத்தகையவர்கள் விசித்திரமானவர்கள். ஒரு நகைச்சுவை உண்டு. ‘சார் ஓடுங்கள். உங்கள் வீடு தீப்பிடித்து எரிகிறது’ என்று சொன்னால், ‘தொந்தரவு செய்யாதே. நாளைக்கு இதை இண்டுவிலே படித்துக்கொள்கிறேன்’ என்பவர்கள்.

நம்முடைய ஆங்கில இதழியலும், கல்வித்துறைசார் சமூக-மானுடவியல்-பொருளியல் ஆராய்ச்சிகளும் மேலே சொன்ன நகர்ப்புற மனிதர்களால் எழுதப்படுகின்றன. எப்போதும் அவர்கள் தங்கள் உள்நோக்கங்களையும் முன்முடிவுகளையும் கிராம மக்கள் மேல் சுமத்துகிறார்கள். ’கொலை கொலையா முந்திரிக்கா’ என்று கிராமக்குழந்தைகள் பாடும் பாடல், அவர்கள் கூட்டம் கூட்டமாக செய்த கொலைகளின் நினைவு என்று எழுதிய அமெரிக்க மானுடவியல் ஆய்வாளரைப் பற்றி எஸ்,ராமகிருஷ்ணன் ஒருமுறை எழுதியிருந்தார். என்னுடைய குமரி மாவட்ட கிராமங்கள் பற்றி ஆய்வாளர்கள் எழுதிய எல்லாமே அப்பட்டமான பொய்களும் குளறுபடியான புரிதல்களும்தான் என்பதை கவனித்திருக்கிறேன்.

ஆகவே ஒவ்வொரு நாளும் நாளிதழ்கள் வழியாக நம் முன் வந்து நிற்கும் இந்தியா ஒரு பொய்யான பிம்பம் என்பதே உண்மை. அரசு உருவாக்கும் பொய். அதற்கு மறுபக்கமாக ஊடகம் உருவாக்கும் பொய். இந்தப் பொய்யை மீறி இந்தியாவைப் பார்க்க வெறுமே கண்ணையும், கருத்தையும் திறந்து வைத்துக்கொண்டு முழு ஈடுபாட்டுடன் சிலநாட்கள் இந்தியப் பெருநிலத்தில் அலைந்தாலே போதுமானது. நம்முடைய சொந்த அடையாளங்கள் கரைந்து நாம் வெறும் வேடிக்கை பார்க்கும் கண்ணாக மாறினால் சின்னச் சின்ன விஷயங்கள் வழியாகவே நாம் இந்தியாவின் யதார்த்தத்தைத் துல்லியமாக உணர முடியும்.

தின்பண்டங்கள்…

இது உலகின் எந்த நாட்டைப்பற்றியும் சொல்லக்கூடியதுதான். அந்த நாட்டில் நிரந்தரமாக வாழும் ஒருவரால் உணர முடியாத ஒன்றை அந்த நாட்டுக்கு வந்திறங்கும் சுற்றுலாப்பயணி உணர்ந்து சொல்வது எப்படி என யோசித்தால் இது புரியும் அதை எப்படியோ கொஞ்சமேனும் உணராத ஒருவரிடம்அது எப்படி நிகழ்கிறது என பேசிப் புரிய வைக்க முடியாது.

இந்தப் பயணத்தில் நான் இதுவரை பெரிதாகப் பயணம் செய்யாத சட்டிஸ்கரின் உள்நிலப்பகுதிக்குள் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியா பற்றி எனக்கிருக்கும் பொதுப்புரிதலை மேலும் உறுதி செய்வதாகவே இதுவும் இருந்தது. இந்தியாவின் சமூக இயக்கம் என்பது அதன் பலநூறு உட்கூறுகள் ஒன்றுடன் ஒன்று சிக்கலாக கலந்து போராடியும் இணைந்தும் உருவாகும் ஒரு ஒட்டுமொத்தமான முன்னகர்வாகும். அதை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையிலேயே அதை புரிந்து கொள்ளமுடியும். அதன் ஏதேனும் ஒரு சிறுபகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு ஆராய முற்பட்டால் மிகப்பிழையான கருத்தையே சென்று சேரவேண்டியிருக்கும்.

சட்டிஸ்கரிலும் நான் கண்ட யதார்த்தம் பொதுவாக மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு வந்துள்ள வளர்ச்சியே. விவசாயத்துறையில் இருந்து தொழில், வணிகத் துறையை நோக்கி வந்து அவர்கள் அதைக் கைப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதுவரை அத்துறையை ஆண்டு கொண்டிருந்த வணிகச்சாதிகளும் பிராமணர்களும் அவர்களின் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு முன்னால் மெல்ல மெல்லப் பின்னகர்கிறாரக்ள். அவர்கள் கல்வியைக் குறிவைக்கிறார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் கல்வியையும் வென்றெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சட்டிஸ்கரின் சிறுநகரங்களில் உள்ள கணிசமான கடைகளின் பெயர்ப்பலகைகள் அவை பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குரியவை என்பதையே காட்டுகின்றன. சாலைகளில் செல்லும் கான்வெண்ட் குழந்தைகளின் முகங்களை பார்த்தாலே அவற்றில் பெரும்பகுதி பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவை என்பதைக் காணமுடிந்தது. தீபக்கும் அதையே, அவராகவே சொன்னார்.

பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியல் பொருளியல் ஆதிக்கத்துடன் போராடியே தலித்துக்களும் பழங்குடிகளும் வளர முடிகிறது. இது வெறும் மோதல் அல்ல. அப்படிச் சித்தரிப்பதே பிழை. அது மோதலும் ஒத்துப்போதலும், ஒருவரை ஒருவர் வென்றெடுத்தலும், பயன்படுத்திக்கொள்ளலும் கலந்த ஒரு பெரிய ஆட்டம். தலித்துக்களுக்கில்லாத ஒரு பெரிய வசதி பழங்குடிகளுக்கு உள்ளது. பழங்குடிகள் சிலபகுதிகளில் கூட்டமாக சேர்ந்து வாழ்கிறார்கள். தலித்துக்கள் சமூகக்கூட்டங்களின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்கள். பழங்குடிகள் இன்னமும் பெரிய சமூகக்கூட்டங்களாக வாழ்கிறார்கள். ஆகவே அவர்கள் அரசியல் கட்சியாகத் திரண்டு அதிகாரம் நோக்கிச்செல்ல எளிய பாதை ஒன்று இருக்கிறது.

சட்டிஸ்கரில் இப்போதுதான் பழங்குடிச் சமூகங்கள் ஒருங்கிணைய ஆரம்பித்துள்ளன. அரசியல்கட்சி உருவாகி இருக்கிறது. ஜார்கண்டில் அது பதினைந்தாண்டுகளுக்கு முன்னரே நிகழ்ந்த ஒரு மாற்றம். ஜார்கண்டில் பழங்குடிகளின் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா முக்கியமான அதிகார சக்தி. அதன் ஆதரவில்லாமல் இங்கே அரசமைக்க முடியாது. அந்நிலை ஐந்தாண்டுகளில் சட்டிஸ்கரிலும் வரக்கூடும் – தண்டகாரண்யப் பகுதி பழங்குடிகளும் அரசியல் ரீதியாக திரட்டப்பட்டால்.

நாங்கள் ஜார்கண்டில் நுழைந்த நாளில் கிடைத்த செய்தி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி பாரதிய ஜனதா கூட்டணியை உடைத்து ஆட்சியைக் கவிழ்த்து காங்கிரஸுடன் இணைந்து அரசமைக்கிறது என்பது. இந்தத் தாவல் அரசியலை மட்டும் வைத்து பழங்குடிகளின் அரசியலதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாதென்பதே என் எண்ணம். கண்டிப்பாக இதில் ஊழல் உள்ளது. இப்பகுதியில் நிலக்கரிவளம் மீதான கட்டுப்பாட்டுக்கான சமர்தான் இது. ஆனாலும் இதன்மூலம் பழங்குடிகள் அதிகாரம் பெறுகிறார்கள். மூலதனம் அவர்களுக்குச் செல்கிறது. அவர்களின் தொழில்துறைப் பங்களிப்பு பெருகிவருகிறது. சரிதவறு என்பது வேறு விவாதம். இப்படித்தான் இங்கே அதிகார கைமாற்றம் நிகழ்கிறது. யார்கண்டது, முற்காலங்களிலும் இப்படித்தான் நிகழ்ந்ததோ என்னவோ?

ஜார்கண்ட் வழியாக வரும்போது பழங்குடிக்கிராமங்களில் உருவாகி வரும் மாற்றங்களைப்பற்றிய ஒரு மனப்பிம்பம் ஏற்பட்டது. இன்னும்கூடப் புதிய கட்டிடங்கள் இல்லை. உள்கிராமங்களில் மண்வீடுகளே உள்ளன. கட்டுமானத்துறை எழுச்சி பெறவில்லை. ஆனால் கிராமங்களில்கூட இருசக்கர வாகனங்கள் அதிகமாக உலவுகின்றன. கடைகளில் நுகர்பொருட்கள் குவிந்திருக்கின்றன. செல்பேசிக்கடைகள் எங்கே பார்த்தாலும். இளைஞர்களில் ஜீன்ஸ் டி ஷர்ட் அணிந்தவர்களையே கிராமங்களில்கூட பார்க்கமுடிகிறது. பொதுவாக பழங்குடி இளைஞர்களுக்கு செல்பேசி போன்ற மின்னணுச் சாமான்களின் மீதிருக்கும் பெரும் ஈடுபாடு நம்மைப் புன்னகைக்கச் செய்வது. அவர்களுடைய எளிய மனநிலையும் நட்பார்ந்த பேச்சும் ஓர் உலகிலும் அந்த செல்பேசி இன்னொரு உலகிலும் இருப்பதுபோலப் படுகிறது.

ஒன்றைக் கவனிக்க முடிந்தது. சட்டிஸ்கரிலும் ஜார்கண்டிலும் சினிமாக்கொட்டகைகள் மிகமிகக் குறைவு. நகரங்களில் மட்டும் சில சினிமா அரங்குகள் உள்ளன. இந்தி சினிமாதான். ஆனால் இந்தி நடிகர்கள் எவரும் பெரிதும் வழிபடப்படுவதாகத்  தெரியவில்லை. மக்கள் அதிகமாகக் கேட்கும் பாடல்கள் இந்திப்பாடல்கள் அல்ல. சட்டிஸ்கரி போன்ற உள்ளூர் மொழிகளில், உள்ளூரிலேயே பாடி வெளியிடப்பட்ட இசைக்கோப்புகள். அவை பெரும்பாலும் ஆங்கில இசைக்கான தாளத்துடன் நவீன ஒலித்திரிபுகளுடன் பாடப்பட்ட பழங்குடி- நாட்டார்பாடல்கள்.

இப்பகுதியில் வாயில் பாக்கையோ புகையிலையையோ அதக்காத ஒருவரைப்பார்ப்பது என்பது மிகமிக அபூர்வம். ஆனால் காரை நிறுத்தி வழி கேட்டால் உடனே துப்பிவிட்டு வந்து விலாவரியாக சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். பத்து பதினைந்துபேர் சூழ்ந்து நின்று வழிகாட்டுவது சாதாரணம். காரை எடுத்தபின்னரும் பின்னாலேயே ஓடிவந்து வழி சொல்கிறார்கள்.

சென்ற முறை பயணத்தில் கிருஷ்ணன் சொன்னார். ஈரோட்டில் அவர் அடிக்கடி நண்பர்களைச் சந்திக்கும் பாரதிபுத்தகாலயம் வரும் தோழர்கள் சொல்லக்கூடிய ஒரு நிரந்தரக் கூற்று உண்டு. இந்தியாவில் எண்பதுசதவீதம் பேர் ஒருநாள் ஒருவேளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். இந்தியாவில் ஒருவேளை கூட சாப்பிடாதவர்கள் கால்வாசிப்பேர். கிருஷ்ணன் ஆதங்கத்துடன் கேட்டார். ‘சார் இந்தியாவில வறுமை இருக்கு… வீடுகளிலே தெரியுது. ஆனா சாப்பாடு இல்லேன்னு தோணலியே… தேடித்தேடிப்பாத்தும் பட்டினி கண்ணுக்குத் தெரியலியே… செல்போன்தானே தெரியுது..’

நான் சொன்னேன். எண்பதுகளில் உண்மையிலேயே பட்டினி இருந்தது, நானே கண்டிருக்கிறேன். அது தமிழகத்திலும் இருந்தது. இந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் வந்த மாற்றம் என்னவென்றால் உடலுழைப்புக்கான சந்தை மிகமிக விரிவடைந்ததிருப்பதுதான். எங்கும் உடலுழைப்புக்கான ஆட்களுக்கான தேவை இருப்பதைக் காணலாம். கூலி பலமடங்கு ஏறியிருக்கிறது. மறுபக்கம் தானியத்தின் விலை மிகவும் குறைவாக ஆகியிருக்கிறது. வட இந்தியாவில் கோதுமை மிக மலிவான ஒரு பொருள் இன்று. ஆகவே பட்டினி இல்லை. இன்று பீகாரில்கூட எந்த ஒரு கிராமவாசியிடம் பேசினாலும் நம்மை அவர் சாப்பிட அழைப்பார். இன்றைய வறுமை என்பது வேறு. அடிப்படைத் தங்குமிடம், மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்கான தேவைதான் இன்றுள்ளது. அது இல்லாததன் வறுமைதான் இன்று உள்ளது’.

‘இத சொன்னா ஈரோட்டிலே ஒரு பய சம்மதிக்கமாட்டானே’ என்று கிருஷ்ணன் ஏங்கினார். ‘ஒருவாட்டி இந்தியாவை சுத்திவரச் சொல்லுங்க’ என்றேன். ‘அவங்கள்ளாம் அம்மையப்பனைச் சுத்தியே ஞானப்பழத்தை ஜெயிக்கிறவங்க சார்’ என்றார்

[மேலும்]

படங்கள்

முந்தைய கட்டுரைதமிழில் இஸ்லாமிய இலக்கியம்
அடுத்த கட்டுரைவிசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் பற்றி சுவாமி சித்பாவனந்தர்