குகைகளின் வழியே – 13

ராய்கர் விடுதியில் இரவு தங்கியிருந்தோம். நான் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தபோது நண்பர்கள் இரவுணவுக்குச் சென்றார்கள். அங்கே பிருந்தாவன் சத்ரி என்பவரின் உணவகத்தில் சாப்பிட்டார்கள். பிருந்தாவன் சத்ரி அவர்களைப்பற்றி விசாரித்திருக்கிறார். அவர்கள் குகைப்பயணம் வந்தவர்கள் என்று தெரிந்ததும் உற்சாகமடைந்து வீட்டில் இருந்து குழந்தைகளை எல்லாம் வரவழைத்து அறிமுகம் செய்திருக்கிறார். இனிப்பு கொடுத்து உபசரித்திருக்கிறார். மறுநாள் செல்லவேண்டிய இடங்களை விரிவாக அடையாளப்படுத்திக்கொடுத்து வேண்டுமென்றால் வழிகாட்டியாகத் தன் மகனையும் அனுப்பி வைப்பதாகச் சொன்னாராம்.

பிருந்தாவன் சத்ரியோடு, அவரது உணவகம் முன்பு…

காலையில் நானும் நண்பர்களும் அவரது விடுதிக்குச் சென்று சாப்பிட்டோம். உற்சாகமாக வந்து பேசிக்கொண்டிருந்தார். நண்பர்களில் இருவருக்கு மட்டுமே இந்தி தெரியும். அவரிடம் கன்னியாகுமரிக்கு வந்தால் தொடர்புகொள்ளச்சொல்லி செல்பேசி எண் கொடுத்தேன். இந்தியப்பயணங்களில் எங்கும் இதேபோன்ற உணர்ச்ச்சிமிக்க வரவேற்புகளையும் நட்புகளையும் மட்டுமே அறிந்திருக்கிறோம். இந்தியா என்ற உணர்வை ஆழமாக தரிசிக்கும் கணங்கள் அவை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் அது ஓர் அதிசய நிகழ்வாகவும் படுகிறது.

முதலில் கப்ரா பகார் என்ற இடத்துக்குச் சென்றோம். சட்டிஸ்கரில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட குகை ஓவியங்கள் இருக்கும் பகுதி அது பழைய அனுபவங்களில் இருந்து ஒன்றைக் கற்றுக்கொண்டோம். வழிகாட்டியாக ஒருவரைக் கூட்டிக்கொள்ளாமல் மலையேறக்கூடாது. ஊருக்குள் சென்று விசாரித்தபோது பலருக்கும் குகையைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை. கடைசியில் ஒரு பெரியவர் வருவதாகச் சொன்னார். அவரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டோம்.

மலையில் இருந்து நீர் வழிந்து ஓடிய இடைவெளிதான் பாதை. பாறைகள் உருண்டு கிடந்தன. அதனூடாக ஆயிரம் அடி ஏறிச்செல்லவேண்டும். வழிகாட்டி இல்லாமல் அடர்ந்த காட்டில் அந்த இடத்தைக் கண்டுபிடிக்கவே முடிந்திருக்காது. மேலே செல்லும் வழியில் நின்று நின்று மூச்சிரைத்துச் சென்றோம். மேலே சென்றது ஒரு ஏமாற்றம். அது குகை அல்ல. செங்குத்தாக ஆயிரம் அடிக்குமேல் உயரத்தில் மேலே ஏறிய சுண்ணாம்புக்கல் பாறையின் அடியில் இருந்த பள்ளம்தான். மழைநீர் அங்கே வராது. ஒரு சின்ன சாமி பிரதிஷ்டை இருந்தது.

கப்ரா பகார் குகை ஓவியம்

கொஞ்சம் ஏமாற்றத்துக்குப் பின்னர்தான் குகை ஓவியங்களைக் கண்டுபிடித்தோம். பாறைப்பரப்பில் செம்மண் நிறத்தில் வரையப்பட்ட நுணுக்கமான ஓவியங்கள். கருக்கியூரில் சமீபத்தில் பார்க்க நேர்ந்த குகை ஓவியங்களைப்போலவே இவையும் இருந்தன. பெரும்பாலும் மிருகங்கள். ஆடுகள், மாடுகள், மான்கள் முதலை… மனிதர்கள் இல்லை என்ற ஆச்சரியத்தை கவனித்தேன்.

நான் கண்ட எல்லா குகை ஓவியங்களிலும் சில பொது அம்சங்கள் உள்ளன. பெரும்பாலும் மிருகங்கள். அவை எப்போதும் சலனநிலையில்தான் இருக்கும். மான்கள் ஓடிக்கொண்டிருக்க, மாடுகள் மேய்ந்துகொண்டிருக்கும். மிருகங்களின் உடலின் தோற்றமும் சலனமும் மிகுந்த யதார்த்ததுடன் இருக்கையில் மனித உருவங்கள் தோராயமாகவே இருக்கும். வெளிப்புறக்கோடுகளாக உருவங்கள் வரையப்பட்டிருப்பதில்லை. மொத்தையாக உள்ளே வண்ணம்பூசி நிறைக்கப்பட்டவையாகவே இருக்கும். என்னுடைய பொத்தாம்பொதுவான பார்வையில் நான் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பார்க்க நேர்ந்த குகை ஓவியங்கள் நடுவே பெரிய வேறுபாடு எதுவும் தென்படவுமில்லை.

கப்ரா பகார் குகை ஓவியம்

ஓவியங்களைப் பாதுகாக்க இரும்புவேலிகள் போட்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றைப் பெயர்த்துவிட்டார்கள் கிராமவாசிகள். அதன்பின் அங்கே சுற்றுலா வந்த பள்ளிமாணவர்களும் கல்லூரி மாணவர்களும் ஓவியங்கள் மீது விதவிதமாகப் பெயர்களைக் கிறுக்கி வைத்திருக்கிறார்கள். பெயிண்டை ஊரிலிருந்தே கொண்டுவந்து கிறுக்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஓவியங்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்குமென்பதே சந்தேகம்தான்.

பெரியவருக்குப் பணம்கொடுத்து நன்றி சொன்னபின் கிளம்பி சிகன்பூர் சென்றோம். அங்கே மூன்று குகைகள் உள்ளன என்று நிலவியல் ஆய்வுக்குறிப்புகள் சொல்லின. ஒன்றில் குகை ஓவியங்கள் உள்ளன என்றார்கள். சிகன்பூர் சென்று ஊரில் கேட்டபோது குகைகளைப்பற்றி அங்கே ஆழமான அச்சம் இருப்பது தெரிந்தது. குகைகளில் தேனீக்களும் விஷவண்டுகளும் இருப்பதாகச் சொன்னார்கள். கடைசியில் ஊரிலிருந்து ஒருவர் வந்து வழிகாட்டுவதாகச் சொன்னார். குளிக்கப்போவதாகவும் காத்திருந்தால் வருவதாகவும் சொன்னார். சிகன்பூரில் ஒரு சாணிமெழுகிய திண்ணையில் அமர்ந்து காத்திருந்தோம்.

எதிரில் ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டி. அதில் ஒருவர் குளித்துக்கொண்டே இருந்தார். அவர் நிதானமாகக் கைகால் நகங்களைத் தோண்டி சுத்தம் செய்யும்போதெல்லாம் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது. நெடுநேரம் குளித்தார். அந்த ஊருக்கு வந்து ஒருவரின் குளியலைப்பார்க்கும் ‘பிராப்தம்’ இருக்கிறது என்று சிரித்துக்கொண்டோம்.

இரு வழிகாட்டிகள் வந்தனர். ராஜ் சௌகான் அங்கே ஏதோ அரசுவேலை பார்க்கிறார். இன்னொருவர் சின்னப்பையன் இருவருமே மெலிந்த குள்ளமான உடல்வாகு கொண்டவர்கள். கொஞ்ச தூரம் காரில் மேலேறினோம். அதன்பின் கார் மேலே செல்லமுடியாதபடி வழி பாறைகளால் ஆனதாக மாறியது. அவர்களைப்பின் தொடர்ந்து மேலேறிச்சென்றோம். மதிய வெயிலில் வியர்வை கொட்ட மூச்சு அனலாக வீச ஒரு மலையேற்றம்.

சிகன்பூர் குகை முகப்பு

மூன்றுகுகைகள். முதல்குகையின் வாசல் சற்று சிறியது. ஆனால் உள்ளே ஒரு பெரிய கூடமளவுக்கு இடமிருந்தது. இரு வழிகளாக குகை பிரிந்து ஆழத்துக்குள் சென்றபடியே இருந்தது. நூறடிக்கு அப்பால் தவழ்ந்துதான் செல்லமுடியும். தரையில் ஒரு அடி உயரத்துக்கு வவ்வால்களின் எச்சம். மேலே வவ்வால்கள் அடர்ந்திருந்தன. பாறைகள் முழுக்க வவ்வால் எச்சத்தின் பிசுக்கு. மூச்சுத்திணறச்செய்யும் நெடி. இருட்டுக்குள் டார்ச் விளக்கை வீசித்தான் பார்க்க முடிந்தது. மறந்தும்கூட விளக்கொளியை மேலே தூக்கிவிடமுடியாது. அந்த இருட்டுக்குள் குகைக்குள் வவ்வால்கள் பிராண்டினால் தப்பிக்க முடியாது. வவ்வால்களில் ரேபீஸ் கிருமிகள் உண்டு.

குகைகள், தொலைவிலிருந்து…

அங்கே ஓவியங்களேதும் இல்லை. இரண்டாவது குகைக்குள் ஓவியங்கள் இருந்தன. ஆனால் அருகே செல்லவே முடியாது. வழிகாட்டிகள் அருகே செல்லவேண்டாம் என்று திடமாக தடுத்துவிட்டார்கள். அப்பகுதி முழுக்க தேனீக்கூடுகள். இடுங்கலான உயரமான ஒரு வெடிப்புதான் அது. அதற்குள் மலைவண்டுகள் இருப்பதாக வழிகாட்டி சொன்னார்.

மூன்றாவது குகை பெரியது. ஒரு நல்ல கோயில்மண்டபம் அளவுக்குப்பெரியது. மேலே பாறைக்கூரை முழுக்க வவ்வால்கள் செறிந்து தொங்கின. தரையில் அவற்றின் நாட்பட்ட எச்சம். அந்த குகையும் இடுங்கலாகி உள்ளே சென்றுகொண்டே இருந்தது. உள்ளே செல்வதா வேண்டாமா என்ற குழப்பம். நாங்கள் புகழ்பெற்ற குகைகளைப் பார்க்கத்தான் திட்டமிட்டிருந்தோம். குகைகளை ஆராய்வது எங்கள் திட்டமல்ல. அதற்கான கருவிகளோ வசதிகளோ பயிற்சியோ எங்களுக்கில்லை. மேலும் குகை வாயிலில் கிடந்த பெரிய ராஜநாகத்தின் சட்டை பலமான எச்சரிக்கையாகவும் இருந்தது.

இறங்கும்போது…

மலையிறங்கி கீழே வந்தோம். மதியவெயிலில் அந்த மலையேற்றம் அன்றைய பயணத்தின் உச்சமாக அமைந்து விட்டது. வழிகாட்டிக்குப் பணம் கொடுத்தபோது மறுத்துவிட்டார். ‘இது உதவி, வேலை அல்ல’ என்று சொல்லிவிட்டார். ‘அநியாயத்துக்கு நல்லவனுங்களா இருக்கானுகளே’ என்று கிரிமினல் கிருஷ்ணன் அலுத்துக்கொண்டார்.

எங்கள் அடுத்த இலக்கு அம்பிகாபூர். அது இருநூறு கிலோமீட்டர் தொலைவில். அதுவரை நீண்ட பயணம்தான்.

[மேலும்]

படங்கள்

முந்தைய கட்டுரைவற்கீஸ் குரியன்
அடுத்த கட்டுரைதேவதேவனைப்பற்றி…