குகைகளின் வழியே – 10

இந்தியாவில் பழங்குடிகள் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்று சட்டிஸ்கர். கிட்டத்தட்ட 12 சதவீதம் வரை பழங்குடியினர் இங்கிருக்கிறார்கள். இதில் பஸ்தர் மாவட்டத்தில் பெரும்பான்மையினர் பழங்குடியினரே. கிட்டத்தட்ட எழுபது சதவீதம். சொல்லப்போனால் நகரங்கள் தவிர பிற இடங்களில் எல்லாமே பழங்குடியினரே இருக்கிறார்கள்.

அரசின் கணக்குப்படி இங்கே பஸ்தர் மாவட்டத்தில் மேகர், காண்டா, சமர், பைர்வா, காசி, சிதார், டோமர், சாடர் என கிட்டத்தட்ட நூறு பழங்குடி இனங்கள் இருக்கிறார்கள். பழங்குடியினரை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் வரும் சித்திரம் இதுதான். தென்னகப்பழங்குடிகள் ஆப்பிரிக்கச்சாயல் கொண்டவர்கள். வடகிழக்குப்பழங்குடிகள் மஞ்சள் இனச்சாயல் கொண்டவர்கள். இந்த மத்திய நிலப்பழங்குடிகள் இரு இனங்களும் நடுநிலத்தில் கலந்து உருவானவை.

பழங்குடியினப் பெண்கள்

பழங்குடியினர் நகரங்களில் கூடக் கண்ணில்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். கணிசமானவர்கள் நகரங்களில் பலவகையான எளிய பணிகளைச் செய்கிறார்கள். ஆனால் அவர்களைப் பார்த்ததுமே தெரிந்துவிடுகிறது. சட்டையும் பாண்டும் அணிந்திருந்தால்கூட அவர்களின் நடையும் பாவனைகளும் வேறுவகையாக இருக்கின்றன. பாரம்பரியமான வெள்ளி, இரும்பு நகைகளை அணிந்து தங்களுக்கே உரிய முறையில் உடையணிந்த பழங்குடிகள் சாமான்கள் வாங்கி சுமந்துகொண்டு மலைக்கிராமங்களுக்குத் திரும்புவது அடிக்கடி கண்ணுக்குப்படும் காட்சி.

ஆனால் பஸ்தர் மிகப்பெரும்பாலும் காலியாகவே கிடக்கிறது. இருபது முப்பது கிலோமீட்டர்தூரம் வரைக்கும் கூட எவருமே கண்ணுக்குப்படாமல் பயணம் செய்ய முடியும். காடுகள் விரிந்து பரந்திருக்க நடுவே சிறிய ஊர்கள். கற்பாளங்களை வைத்துக் கட்டப்பட்ட வீடுகள். மரச்சிலாம்புகளை முடைந்து செய்த தட்டிகளால் கட்டப்பட்ட குடிசைகள். அந்த வீடுகள் எதிலும் பகலில் எவரும் இருப்பதில்லை. குழந்தைகள், முதியவர்கள் கூடக் கண்ணுக்குப்படவில்லை. எங்கும் கூட்டத்தையே கண்டு பழகிய தமிழ்க் கண்களுக்கு அந்த வெறுமை மிகவும் கனமாக கண்ணுக்குள் வந்து மனதில் அமையும்.

பஸ்தர் முழுக்க மிக வளமான நிலம்தான். நீரில்லாது வறண்ட ராமநாதபுரம் நிலத்தில் மட்டுமே நம்மூரில் மக்கள் நெரிசல் குறைவாக இருக்கும். அங்கும்கூட எப்படியோ நாம் ஒருபோகம் விளைவிக்கிறோம். இங்கே நதிகளின் அருகில் வளமான வண்டல் மண் காலியாகக் கிடக்கிறது.

அதற்கான காரணத்தை ஊகிக்க அந்தப் பழங்குடி மக்களைப்பார்த்தாலே போதும். விவசாயியின் மனநிலையே வேறு. நான் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்தவன் என்பதனால்தான் இந்த நிலம் வேளாண்மை செய்யப்படாமல் கிடப்பது நமக்கு எனக்குப் பதைப்பை உருவாக்குகிறது. விவசாயிக்கு நிலம் என்பது பொன் போன்றது. எவ்வளவு கிடைத்தாலும் ஆசை அடங்காது எவ்வளவு விவசாயம் செய்தாலும் மனம் நிறையாது. கடைசித்துளி வரை உழைத்தாகவேண்டும். கடைசி மண் பரப்புவரை பயிரிட்டாகவேண்டும்.

பிறருக்கு அந்தப் பதைப்பு இருப்பதில்லை. குறிப்பாக இருவகை மக்களுக்கு. மேய்ச்சல் பாரம்பரியம் கொண்டவர்கள் நிலத்தை விளைநிலமாக நினைப்பதில்லை, அவர்கள் மேய்ச்சல்நிலமாகவே நினைக்கிறார்கள். விவசாயியைப்போல அதை அரிய சொத்தாக நினைப்பதில்லை, அதை உரிமைகொள்ள முயல்வதில்லை.

விரிந்து பரந்த வளமான நிலத்தில் கொஞ்சம் கன்றுகாலிகளை மேய்த்து அதைக்கொண்டு நிறைவடைந்து அவர்களால் வாழமுடியும். அவர்களின் இயல்பிலேயே அந்த ஓய்வான மனநிலை உண்டு. மாடுகளைப் பத்திவிட்டு நாள்முழுக்க அமர்ந்திருக்கும் மேய்ச்சல்குலத்து மனிதரைப்பார்க்கையில் அந்த நிம்மதியை விவசாயிக்குக் கடவுள் அருளவில்லை என்றே நினைத்துகொள்வேன்.

ஆனால் பழங்குடிகள் இன்னும் மாறுபட்டவர்கள். அவர்களுக்கு நிலம் ஒரு பொருட்டே அல்ல. அவர்களுக்குத் தேவையானதை மட்டும் பயிரிட்டு விட்டு எஞ்சிய நேரம் முழுக்க அவர்கள் தங்கள் குலக்குழுப் பண்பாட்டு வாழ்க்கையில் மூழ்கி இருப்பார்கள். மேய்ச்சல்நில மக்களுக்காவது கன்றுகாலிகள் பெருகவேண்டும் என்னும் ஆசை இருக்கும். இவர்களுக்கு அதுவும் இருக்காது. பெருக, விரிய, ஓங்க வேண்டும் என்ற அடிப்படை மானுட இச்சை அவர்களிடமிருக்காது. குமரிமாவட்டக் காணிகளை நான் கூர்ந்து அவதானித்திருக்கிறேன். பாறையின் சுனை போல அவர்கள் தேங்கிக் குளிர்ந்திருப்பார்கள்.

உண்மையில் நாமனைவருமே பழங்குடிகள்தான், நம்முடைய அந்த உள்வேகம் நம்மை இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. அந்த வேகம் இல்லாமலிருப்பதனால்தான் பழங்குடிகள் அப்படியே காலத்தில் தேங்கிப் பத்தாயிரமாண்டு பின்னால் நின்றிருக்கிறார்கள். அதில் அவர்களுக்கு நிறைவும் முழுமையும் இருக்கும் என்றால் அந்தவாழ்க்கை சிறப்பானதே.

பழங்குடிகள் பற்றிய இந்தக் கருத்தை முன்வைத்த மானுடவியலாளர் வெரியர் எல்வின். வெரியர் எல்வின் கிறித்தவப்போதகராக வாழ்க்கையை ஆரம்பித்தார். கிறித்தவ போதனைக்காக இந்தியா வந்தபோது காந்தியைச் சந்தித்தார். காந்தியால் ஆழமாக பாதிக்கப்பட்டு வாழ்க்கையை அவர் காட்டிய வழியில் அர்ப்பணித்தவர்களில் ஒருவர் எல்வின். பஸ்தர் பழங்குடிகள் நடுவே ஆய்வுக்கும் சேவைக்குமாக வந்த அவர், இந்தியா சுதந்திரம் பெற்றபின் நம்முடைய பழங்குடி கமிஷன் தலைவராக இருந்தார். இந்தியப் பழங்குடிக்கொள்கையை அவர்தான் உருவாக்கினார். அது எல்வின் பாலிசி என்று அழைக்கப்படுகிறது.

Verrier Elwin

மானுடவியல் ஒரு சமூகத்தை எப்படி வெற்றிபெற்றதாகக் கருதுகிறது, எதை அளவுகோலாகக் கொள்கிறது என காந்தி எல்வினிடம் கேட்டார். போகம், அதிகாரம், பணம், சமூக அமைப்பு எனப் பல அளவீடுகள் உள்ளன. ஏன் மகிழ்ச்சியை அளவீடாகக் கொள்ளலாகாது என்றார். காந்தியின் அந்த வரியில் இருந்து எல்வின் கொள்கை பிறந்தது.பழங்குடிகள் தங்கள் வாழ்க்கையில் முழு நிறைவுடன் இருந்தால் அவர்களின் வாழ்க்கையை வலுக்கட்டாயமாக ’நாகரீகப்படுத்த’ முயலக்கூடாது, அது வன்முறை என்பதுதான் எல்வின் கொள்கை. இந்திய அரசின் பழங்குடிக்கொள்கை என்பது பழங்குடிகள் விரும்பினால் அவர்களுக்குக் கல்வி வேலைவாய்ப்பு முதலியவற்றை அளிப்பது. ஆனால் அவர்களை வற்புறுத்தாமல் இருப்பது என்பதே.

பஸ்தர் பழங்குடிகளின் வாழ்க்கையை மேலோட்டமாக கவனிக்கையில், இன்றைய அரசியல்சூழலை அவதானிக்கையில், வெரியர் எல்வினின் கொள்கையை மறுபரிசீலனைசெய்யவேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. அதுவே இன்றைய அரசுகளின் எண்ணமும் என ஊகிக்கவும் முடிகிறது. எல்வின் சொன்னது சரி, பழங்குடிகளின் வாழ்க்கையைக் குலைப்பது புற வன்முறைதான். ஆஸ்திரேலியாவில் அங்குள்ள பழங்குடிக்குழந்தைகளுக்குக் கல்விபுகட்டி ’நாகரீகப்படுத்த’ கிறித்தவ மிஷனரிகள் செய்த முயற்சியின் வரம்பில்லாத குரூரமும் எதிர்விளைவுகளும் எல்வினுக்கு எச்சரிக்கையாகவும் இருந்திருக்கலாம். ஆனால் பழங்குடிகள் அந்தப் பழங்குடி வாழ்க்கையில் நிறைவுற்று வாழும் நிலை இன்று இல்லை. அவர்களை அபப்டியே விட்டுவிட நம்முடைய சூழல் இன்று அனுமதிப்பதில்லை

முக்கியமான விஷயம் பஸ்தர் இந்தியாவின் மிகப்பிரம்மாண்டமான கனிச்சுரங்கங்கள் கொண்டது என்பதே. இங்குள்ள அடுக்குப்பாறைகள் ஒட்டுமொத்தமாகவே செல்வம். இரும்பு, மங்கனீஸ் முதல் சுண்ணாம்புக்கல் வரை அவ்வளவும் இன்றைய தொழில்நாகரீகத்தின் அடிப்படைத்தேவைகள். இன்றைய தொழில்மய உலகம், நுகர்வின் உலகம் நமக்குத்தேவை என்றால் இவற்றை எடுத்தே ஆகவேண்டும். இந்தியாவின் பொருளியல் வளர்ச்சியின் மிக அடிப்படையான செயல்பாடு இது.

இந்தப்பெரும் செல்வத்தின்மீது பஸ்தர் பழங்குடிகள் அமர்ந்திருக்கிறார்கள். மிகமிகக்குறைவான மக்கள்தொகையினர் அவர்கள். அந்த தேசியசெல்வத்துக்கு அவர்கள் முழுமையாக உரிமை கொண்டாடவேண்டும் என்று சொல்வதில் எந்தப்பொருளும் இல்லை. அத்துடன் அங்குள்ள மாபெரும் விளைநிலப்பரப்பை இன்றைய இந்தியா அப்படியே விட்டுவிடவேண்டும் என்பதிலும் பொருத்தப்பாடு இல்லை. இந்தியாவின் தொழில்துறையும் விவசாயமும் அப்பகுதியை நோக்கிப்படர்வதைத் தவிர்க்கமுடியாது. தவிர்ப்பதற்கு ஒரே வழிதான் உள்ளது, ஒட்டுமொத்த இந்தியாவும் முழுமையாகவே காந்திய வழியில் கிராமப் பொருளியலை நோக்கி நகர்வது. நுகர்வு-தொழில்-வணிகப் பண்பாட்டை முற்றாக உதறுவது. அது இப்போது உடனடிச் சாத்தியம் அல்ல.

பழங்குடியினப் பெண்கள்

பஸ்தருக்கு வருவதற்கு முன் ஆங்கில ஊடகங்கள், அவற்றின் அரசியலை அப்படியே மொழியாக்கம் செய்யும் தமிழ் அரசியல் எழுத்தாளர்கள் எழுத்துக்களை வாசித்து என் மனதில் இருந்த பிம்பம் என்பது பஸ்தர் பழங்குடிகளின் நெருக்கமான வசிப்பிடங்களைக் கலைத்து அவர்களைத் துரத்தி அந்நிலத்தைக் கைப்பற்ற வேதாந்தாவும் டாட்டாவும் முயல்கிறார்கள் என்பதே. ஆனால் இந்த நிலம் வழியாகச் செல்லும் பயணம் நேர் மாறான சித்திரத்தை அளிக்கிறது. இப்பகுதி வெரியர் எல்வினின் கொள்கைப்படி அரசால் அப்படியே விடப்பட்டிருக்கிறது. விரிந்து பரந்த விளைநிலமும் கனிச்செல்வமும் வீணாகக் கிடக்க பழங்குடி வாழ்க்கை அப்படியே தேங்கி செயலற்றுக்கிடக்கிறது.

ஆனால் இன்றைய பழங்குடிகள் நாகரீகத்தின் கனிகளை விரும்புகிறார்கள். சாலைகளும் போக்குவரத்தும் குடிநீரும் மருத்துவமும் கல்வியும் அவர்களுக்குத் தேவையாகிறது. அவற்றை அவர்களுக்கு அளிக்க இங்கே விவசாயத்தையும் தொழில்களையும் கொண்டு வந்தே ஆகவேண்டும். அதற்குப் பழங்குடிகள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய தேவை இருக்கலாம். அவர்கள் தங்களைப் புதிய சூழல்களுக்குத் தகவமைக்கவேண்டிய கட்டாயம் இருக்கலாம். நாம் வாழும் ஒவ்வொரு நிலமும் அப்படித்தான் உருமாறியிருக்கிறது. நாமெல்லாம் அப்படித்தான் உருமாறியிருக்கிறோம்

ஆனால் இதைப் பழங்குடிகள் மீதான அரசு வன்முறை என்று மாவோயிஸ்டுகள் சித்தரிக்கிறார்கள். அவர்களுக்கு அதைக் கற்பிக்கிறார்கள். அவர்களிடமிருக்கும் மாறுதல்பற்றிய அச்சத்தை வளர்த்து அவர்களைத் தங்களுக்கான ஒரு அடிமை ராணுவமாக உருவாக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் இந்தப்பகுதிக்குக் குடியேறியமைக்கு ஒரே காரணம் ஆந்திரத்தில் நிகழ்ந்த கடுமையான அரசு நடவடிக்கைகளின் விளைவாக அங்குள்ள தளங்கள் அழிந்ததும் பஸ்தர்காடுகளின் விரிவு அவர்களுக்கு வசதியானதாக இருப்பதும் மட்டுமே. அங்கே இருக்கிறார்கள் என்பதே அவர்களுக்கு இந்தப்பழங்குடிகள் மீதான அக்கறை.

மாவோயிஸ்டுகளைப்பொறுத்தவரை அவர்கள் செய்துகொண்டிருப்பது சீனா என்ற அதிநவீன முதலாளித்துவ ஏகாதிபத்தியப் பேரரசின் வணிக நோக்கங்களுக்காக இந்தியாவின் பொருளியலை உறையச்செய்யும் நோக்கம் கொண்ட ஒரு போர், அவ்வளவுதான். அவர்கள் இந்த பஸ்தர் பழங்குடிகளுக்கு அளிக்கும் வாக்குறுதி என்ன? இந்தியாவின் மையஅரசைக் கைப்பற்றிப் புரட்சி அரசை உருவாக்கும்போது இந்த மக்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை. எப்படிப்பட்ட வாழ்க்கை?

இந்த மக்களின் இதே பழங்குடி வாழ்க்கை இப்படியே நீடிக்க அந்தப் ‘புரட்சி’ அரசு அனுமதிக்குமா? இந்தக் கனிவளங்களையும் விளைநிலங்களையும் இப்படியே விட்டுவைக்குமா? அதைத்தானா சீனாவில் செய்துகொண்டிருக்கிறார்கள்? சென்ற அரைநூற்றாண்டுக்காலத்தில் சீனாவின் எல்லாப் பழங்குடிகளும் வன்முறைமூலம் தொழிலாளர்படையாக மாற்றப்பட்டுவிட்டார்கள். முழுமையாகவே பழங்குடிப்பண்பாடு அழிந்துவிட்டது. அங்கே எந்த நிலமும் அரசுக்குச் சொந்தம். எல்லாக் கனிவளங்களும் கடைசித் துளி வரை ஒட்டச்சுரண்டப்பட்டுவிட்டன. அதன்பின் இன்று சீனா ஆப்ரிக்காவைக் கனிவளங்களுக்காக சுரண்டிக்கொண்டிருக்கிறது. அங்குள்ள பழங்குடிகளை அந்த ஊர் சர்வாதிகாரிகளைக் கொண்டு அடித்துத் துரத்திக்கொண்டிருக்கிறது.

பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்ட மக்களின் போர் என மாவோயிஸ கிளர்ச்சியைச் சொல்லலாம். உண்மையில் அது இப்பகுதியை அப்படியே வளர்ச்சிகுன்றி சூம்பி நிற்கச்செய்துவிட்டது. இங்குள்ள மிகமிகக் குறைவான மக்கள்தொகையைப்பார்த்தால் இங்கே சுற்றுலா மட்டுமே எல்லா விதமான வளர்ச்சியையும் உருவாக்கிவிடும் என்று சொல்ல முடியும். இங்குள்ள கனிவளங்கள் தொழில்துறையால் கையாளப்படுமென்றால் இங்கே நிகழக்கூடிய வளர்ச்சிக்கு அளவே இல்லை.

ஒருவேளை அந்த வளர்ச்சியின் கனிகள் இந்தப் பழங்குடி மக்களுக்குக் கிடைக்காது என வாதிடலாம். அந்த மாற்றத்துக்கு இந்த மக்களைப் பழக்குவதும் பயிற்றுவிப்பதுமே அதற்கான வழியாகும். உரிமைகள் இன்றி இம்மக்கள் துரத்தப்படாமலிருக்க அவர்களை ஒருங்கிணைப்பதும் சாத்தியமான யதார்த்த முடிவுகளை நோக்கிக் கொண்டு செல்வதுமே வழி. மேலும் எப்படி அவர்கள் கைவிடப்பட்டாலும்கூட இப்பகுதியில் இயல்பாக நிகழும் வளர்ச்சியின் சிறு திவலைகள் அவர்களுக்குக் கிடைத்தாலும் கூட அவர்களின் வாழ்க்கை பலமடங்கு மேலானதாக ஆகும்

அதற்கு உதாரணம் நாங்கள் சென்ற சிலநாட்களில் கடந்துவந்த கம்மம் மாவட்டம். நான் அங்கே எண்பதுகளில் வந்திருக்கிறேன். இந்த பஸ்தரைப்போலத்தான் கம்மம் பகுதியும் இருந்தது. நக்சலைட்டுகளின் பிடியில் சிக்கி வளர்ச்சி மந்தித்து வெறுமைசூழ்ந்து கிடந்தது. நக்சலைட்டுகள் அங்கே இருப்பதற்கான காரணமே அந்த வறுமைதான் என்று அன்றும் அறிவுஜீவிகள் சொன்னார்கள். நமக்கெல்லாம் மேல்நோகாமல் புரட்சி பேசப் பிரியமிருக்கிறது. அதற்காக எங்காவது எளிய மக்கள் போராடிச் செத்தால் சந்தோஷம்தான்.

இன்றைய கம்மம் மாவட்டத்தின் வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது. உள்கிராமங்களில் கூட என்னென்னவோ தொழில்கள். இறால் வளர்ப்பு முதல் கிரானைட் கல் பாலீஷ் வரை. பட்டினி என ஏதும் கண்ணில் படமுடியாது. வீடுகள் எல்லாமே மாறிவிட்டன. குடிசைகளே அனேகமாகக் கண்ணில் படுவதில்லை. கிராமக்கோயில்கள் எல்லாம் புதியதாக கான்கிரீட்டில் கட்டப்பட்டு மிட்டாய்வண்ண நிறங்களில் மின்னுகின்றன. கிராமச்சாலைகளில் இருசக்கர வாகனக்கள் சிறிய எடைப்போக்குவரத்து வண்டிகள் விரைகின்றன.

பஸ்தரின் வறுமைக்குக் காரணம் இன்று இங்குள்ள மாவோயிஸ்டுகள்தான். எந்த வளர்ச்சியையும அவர்கள் அனுமதிப்பதில்லை. சாலைகள் போட, பள்ளிகள் கட்ட, மின்சாரம் வழங்க விடுவதில்லை. இந்த மாவட்டம் முழுக்க நாங்கள் கண்டது தகர்க்கப்பட்ட சாலைகள். உடைக்கப்பட்ட பொதுக்கட்டிடங்கள், பள்ளிகள். சிதைக்கப்பட்ட வழிவிளக்குகள். சுற்றுலா இல்லை தொழில் இல்லை. அந்த வறுமையின் பழியை அரசு மீது போட்டு அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டுகிறார்கள் அவர்கள்.

பஸ்தர் முழுக்க நாங்கள் கண்டது கிராமப்புற வறுமை. மெலிந்து வற்றிய பழங்குடி மக்கள் குழிந்த கண்களுடன் பளீரிடும் நட்புநிறைந்த சிரிப்புடன் காரை வெறித்துப்பார்க்கிறார்கள். அங்கே கிராமப்புறங்களில் கார்கள் அதிகம் செல்வதில்லை. குகைகளைத்தேடிச்செல்லும் பயணம் காரணமாகத்தான் நாங்கள் இந்த குக்கிராமச்சாலைகளுக்குள் செல்ல நேர்ந்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கண்கள் செல்லும்ம்போது தெரியும் இருளும் வெறுமையும் நெஞ்சை கனக்கச்செய்பவை.

ஆனால் சிறிய நகரங்கள் எல்லாமே ஓரளவு வளர்ச்சியடைந்துள்ளன. ஏனென்றால் கிராமங்களுக்குச் செல்லாத வளர்ச்சி அடையாளங்களான சாலைகளும் தொடர்பும் எல்லாம் இங்கே உள்ளன. கால்நடையாக இந்த கிராமங்களுக்கு வந்துதான் பழங்குடிகள் அன்றாட வாழ்கையை நிகழ்த்தவேண்டியிருக்கிறது.

பழங்குடி வாழ்க்கை என்பது உண்மையில் அவர்களுடைய சூழலில் இருந்து கிடைக்கும் பொருட்களைக்கொண்டு ஒரு முழுமையான எளிய வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதாகும். அதன்பின் அவர்களுக்கு எஞ்சும் நேரம் முழுக்க கலைகளுக்கும் கேளிக்கைகளுக்கும் உரியது. பஸ்தரில் அப்படிப்பட்ட பழங்குடி வாழ்க்கை எங்கும் இருப்பதாகத் தோன்றவில்லை. மாறாக இன்றைய தொழில்நாகரீகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களாக அவர்கள் இதன் கருணையை யாசித்து இதன் எச்சில்பருக்கைகளைப் பொறுக்கி இதன் குப்பைகளில் வாழ்கிறார்கள்.

இன்று அவர்களுக்குத்தேவை அவர்களின் தயக்கங்களையும் அச்சங்களையும் வளர்க்கும் கொள்கைகள் அல்ல. அவர்களை அப்படியே வைத்து வேடிக்கை பார்க்கும் பண்பாட்டு நோக்கும் அல்ல. அவர்கள் இந்தத் தொழில்மயப்பண்பாட்டுக்குள் நுழைய விழைகிறார்கள். அதற்கான வாசல் அவர்களுக்குத் திறக்கப்படவேண்டும். அதற்கான பயிற்சி அளிக்கப்படவேண்டும். அதில் உரிமைகள் பெற அவர்கள் போராடுவதற்குப் பயிற்றுவிக்கப்படவேண்டும்.

[மேலும்]

முந்தைய கட்டுரைதொலைக்காட்சியில் தோன்றுவது பற்றி
அடுத்த கட்டுரைகுகைகளின் வழியே – 11