கைலாஷ் குகையைப் பார்த்தபின் தீர்த்கர் என்ற அருவிக்கு மாலை நான்கு மணிக்குச் சென்று சேர்ந்தோம். காலையில் குகைகளுக்குச் செல்லும்போது அந்த அருவியை மலைவிளிம்பில் நின்று பார்த்தோம். மிக உயரமான அருவி அது என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அதைப் பார்க்கத்தான் வேண்டுமா என்று விவாதித்தோம். நம் திட்டத்தில் உள்ளது குகைகள் அல்லவா என்பது எங்கள் எண்ணம்.
ஆனால் எங்கள் திட்டத்தில் இருந்த ஒரு குகைக்குப் பயணிகளை அனுமதிப்பதில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆகவே தீர்த்தகர் அருவிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். மேலும் குகைகளுக்குள் இருந்த அனுபவம் ஒரு விடுதலை ஏக்கத்தை உருவாக்கிவிட்டிருந்தது.
அங்கு சென்றபின்னர்தான் அது எவ்வளவுபெரிய ஓர் அனுபவம் என்று புரிந்தது. தீர்த்கர் அருவியும் சித்ரகூட் அருவியும்தான் இந்தியாவின் மகத்தான அருவிகள். ஐயமே இல்லை. இத்தனை பிரம்மாண்டமான ஓர் இயற்கை நிகழ்வை ஏன் இத்தனை நாள் அறியாமலிருந்தோம், இவ்வளவு அருகில் வந்தும்கூட ஏன் அது பற்றி எதுவும் தெரியவரவில்லை என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே!
தீர்த்கர் அருவி உண்மையில் ஓர் அருவிக்கூட்டம். சிலேட்டுப்பாறைகளில் இருந்து சந்திராவதி ஆறு, இருநூறடி ஆழத்துக்குக் கொட்டுகிறது. இரண்டு அருவிகளாக முதலில் கொட்டிய பின் கிட்டத்தட்ட நூறு அருவிகளாக மேலும் மேலும் கொட்டிக்கொண்டே செல்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அருவிகள்தான். அருவிகள் அடிமரங்களாக நிற்கும் நீர்க்காடு.
அருவிகளின் அருகிலேயே கீழே இறங்கிச்செல்லப் படிகள் உள்ளன. இருநூறடி ஆழம் இறங்கிச்சென்றால் முதல் பேரருவியின் அடியில் சென்று சேரலாம். அங்கிருந்து பார்த்தால் ஏழெட்டு அருவிகள் நம்மைச்சுற்றிக்கொட்டுவது தெரியும். மேலும் இருநூறடி ஆழம் இறங்கிச் சென்றால் இருபதுக்கும் மேற்பட்ட அருவிகள் கொட்டிக்கொண்டிருக்கின்றன. மேலும் நூறடி ஆழம் இறங்கிச் சென்றால், அவை பல மடங்காகப்பெருகிப் பல பாறைகளில் பீறிட்டு வெண்ணுரை கக்கிக் கொட்டிக்கொண்டிருப்பதைக் காணமுடியும்.
இரண்டாம்கட்டப் பேரருவி மேலே நீட்டிக்கொண்டிருக்கும் சிலேட்டுப்பாறையில் இருந்து ஒரே தாரையாகக் கொட்டுகிறது. பாறையை ஒட்டி உள்ளே சென்று அருவிக்கு அடியில் துளிகூட நனையாமல் நிற்க முடியும். அருவி கூரையிட்ட ஒரு மாபெரும் மாளிகையில் நிற்பதைப்போல. காற்றில் சாரல் திசைமாறி நம்மை நனைத்துச் சிலிர்க்கச்செய்யும்.
குகைகளுக்குள் இருந்தபோது உணர்ந்த தனிமையும் அழுத்தமும் முற்றாக விலகின. மண்ணுக்குள் வாழ்ந்த புழு சிறகு முளைத்து பறவையாக ஆனதுபோல. வானம்! அருவி என்பது மண்ணுக்குப்பொழியும் வானமல்லாமல் வேறென்ன?
எத்தனை கோணத்தில் எப்படியெல்லாமோ நின்று நோக்கியும் அருவியைக் கண்ட நிறைவு உருவாகவில்லை. பாட்டி அருவியும் மகள்களும் பேத்திகளும் கொள்ளுப்பேத்திகளும் என்று ஒரு எண்ணம் எழுந்தது. அருவியைப்பார்த்துக்கொண்டிருக்கையில் ஒருகணம் அது சீறிக்கொந்தளித்துக் கொட்டுவது போலவும் மறுகணம் அது மல்லிகைக்குவியல்களாகப் பொழிவதுபோலவும் தோன்றும் விந்தை!
[அர்விந்த் கருனாகரன், நண்பர்கள்]
’
அருவியில் குளிக்கவும் ஓய்வாக அமர்ந்துகொள்ளவும் ஆயிரக்கணக்கான இடங்கள் உள்ளன. இந்த அருவியின் பள்ளத்தாக்கு பிரம்மாண்டமானது. கிட்டத்தட்ட நானூறடி ஆழமும் இரண்டு கிலோமீட்டர் அகலமும் கொண்டது. நான்கு அடுக்குகளாக இறங்கிச்செல்வது. ஒருநாள் முழுக்க இருக்கவேண்டிய இடம்.
அந்தி வரை தீர்த்கர் அருவியிலேயே இருந்ந்தோம். நீர் மிகவும் குளிராக இருந்தமையால் குளிக்கவில்லை. இருட்ட ஆரம்பித்தபோது மேலேறி வந்தோம். குகையின் இருட்டு சென்று தேங்கிய அக ஆழமெங்கும் அருவியின் ஒளி சென்று பரவியதுபோல உணர்ந்தோம்.
[மேலும்]