குகைகளின் வழியே – 8

நான் சின்னப்பையனாக இருந்தபோது பார்த்த படம் ஜகதலப்பிரதாபன். மறந்துபோன அந்தப்படம் திரும்பத்திரும்ப நினைவுக்கு வந்தபடியே இருந்தது, நேற்று நாங்கள் வந்து தங்கிய ஊரின் பெயர் ஜக்தல்பூர். சிறியவிடுதி. ஆனால் மூன்று அறைகள் கிடைத்தன, வசதியானவை.

என்ன பிரச்சினை என்றால் இரவெல்லாம் பக்கத்து வீட்டு மாடியில் ஒரு சேட் ராமகதை பஜனை ஏற்பாடு செய்திருந்தார். உச்சகட்ட ஓசை. இரு குழுக்கள் மாறி மாறி, விடிய விடிய கட்டைக்குரலில் ஜால்ரா, ஆர்மோனியம், தபலா சகிதம் ஒலிபெருக்கியில் பாடினார்கள். தலையைத் துண்டால் இறுகக் கட்டி மேலே குல்லாய் போட்டுக்கொண்டு போர்த்திப்படுத்தபோதும் ஒலி உடலைக்குடைந்து உள்ளே வந்தது. படுத்ததுமே உடல் களைப்பால் கொஞ்சநேரம் நன்றாக தூங்கினேன். அதன் பிறகு விடிய விடிய இசையெனும் இன்ப வெள்ளக்குளியல்தான்.

காலையில் கிளம்பி முப்பத்தைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொடும்சர் குகைகளைப் பார்க்கச்சென்றோம். இந்தியாவின் மிகப்பெரிய பிலங்களில் ஒன்று இது. சட்டிஸ்கரின் இப்பகுதி முழுக்க மலைகளிலும் மண்ணுக்கடியிலும் ஆயிரக்கணக்கான இயற்கைக்குகைகள் உள்ளன. ஆழ்ந்த வனப்பகுதியில் உள்ளது இக்குகை. அரசு அனுமதி பெற்று கட்டணம் செலுத்தி உள்ளே செல்லவேண்டும்.

இப்பகுதியின் நில அமைப்பு மிக தனித்தன்மை கொண்டது. சிலேட்டுப்பாறைகளாலான மலைகள். அடுக்கடுக்காக புத்தகங்களை வைத்தது போலிருக்கும். அல்லது தரையோடுகளை அடுக்கியதுபோல. மலைவிளிம்புகள் கனதுரமாக தறித்தவை போல செங்குத்தானவை. மலைகள் சட்டென்று அடுக்கு குலைந்து அப்படியே சரிந்துவிடும். அவை கண்ணுக்கெட்டிய தொலைவுவரை உடைந்த ஓடுகள் போலப்பரவிக்கிடக்கும். இப்பகுதியின் வயல்கள் முழுக்க அந்தக்கற்களைப் பொறுக்கி எடுத்து விட்டு விளைநிலமாக ஆக்கப்பட்டவை.

இந்தப்பாறைகளை ஒரு சாதாரண கடப்பாரையைக்கொண்டு அரை இஞ்ச் கனத்தில் தகடுகளாக எளிதில் பெயர்க்க முடியும். அவற்றைக்கொண்டுதான் இங்கே வீடுகள் கட்டுகிறார்கள். கூரைகள் அந்தத் தகடுகளால்தான். தலைக்குமேல் பாறைத்தகடுகளுடன் எப்படித்தான் தூங்குகிறார்கள் என்ற வியப்பு ஏற்படும்.

சிலேட்டுப்பாறை கூரை

இந்தப்பாறைகளுக்கு நடுவே சுண்ணாம்பு படிவங்கள் சிக்கிக்கொள்கின்றன. அவை மழைநீரால் கரைக்கப்படுகையில் ஆழ்ந்த குகைகள், பிலங்கள் பிறக்கின்றன. இப்போதிருக்கும் பிலங்கள் எல்லாமே சமணர்களால் கண்டடையப்பட்டவை. அதாவது ஏதாவது ஒரு வழி அந்த பிலம் நோக்கி இயற்கையாகவே திறந்திருந்தால் மட்டுமே அவை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கேளாஒலி மூலம் விரிவான நிலத்தடி ஆய்வுகள் நிகழும் என்றால் ஏராளமான பெரும் குகைகள் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்படலாம்.

கொடும்சர் பிலம் 35 மீட்டர் ஆழம் வரை மண்ணுக்குள் செல்கின்றது. 1371 மீட்டர் ஆழம் வரை மனிதர்கள் செல்ல வசதி உள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை கிமீ தூரம் நீளமாக. ஆனால் உள்ளே ஐந்து கிலோமீட்டர் வரை சுற்றிவர முடியும்.

இந்தப்பிலம் தான் இந்தியாவின் மிகப்பெரிய பிலம் என்றும் உலகளவில் இரண்டாவது பெரிய பிலம் என்றும் சட்டிஸ்கர் அரசுக் குறிப்பு சொல்கிறது. எது உண்மை என்று தெரியவில்லை. ஒரு வழிகாட்டியை எங்களுடன் அனுப்பினார்கள். அவருக்கான ஊதியம் நாம் அளிக்கவேண்டும். வருடத்தில் அக்டோபர் முதல் மே வரைக்குமான மாதங்களில் மட்டுமே இங்கே பிலத்திற்குள் செல்ல அனுமதி. மற்ற மாதங்களில் பிலம் மூடப்பட்டு விடும். அப்போது மழைக்காலம். பிலத்துக்குள் நீர் கொப்பளித்தோடும்.

எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாத பிலம் இது. பிலம் அருகே செல்வது வரை அங்கே அது இருப்பதே நம் கண்ணுக்குப்படாது. பிலத்தின் வாசலை அடைந்ததும் ஓர் அச்சம் உருவாகும். அது ஒரு விலங்கின் வாய் போலத் திறந்திருந்தது. உள்ளே ஆழ்ந்த இருள். துருப்பிடித்த கம்பியாலான சுருள்பாதை இருபதடி ஆழம் உள்ளே இறங்கியது. மிகவும் சிரமப்பட்டுத்தான் உள்ளே இறங்க முடியும். அதன்பின் கல்லில் வெட்டப்பட்ட ஈரமான படிகள் வழியாக குகைக்குள் செல்லவேண்டும்.

பல கிலோமீட்டர் தூரம் மண்ணுக்குள் ஓடும் இந்தப் பிலத்திற்குள் காற்று வரக்கூடிய ஒரே வழி என்பது இந்த நாலடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட வாய் மட்டுமே. பொந்து போல இறங்கிச்செல்லும் இவ்வழியே உள்ளே சென்றால் முழுமையான இருட்டு அடர்ந்து தேங்கிய குகை விரிந்து விரிந்து வரும். உள்ளே விளக்குகளோ காற்று வரும் வசதிகளோ ஏதுமில்லை.

பாறைகளுக்கு நடுவே எஞ்சிய சுண்ணம்புப்பாறை- கால்சியம் கார்பனேட்- நீரில் கரைந்து வழிந்து அப்படியே பாறையாக ஆகி விதவிதமான வடிவங்களை உருவாக்கியிருக்கிறது. எருதுக்களாக, யானைகளாக, தெய்வ உருவங்களாக கண்ணும் கருத்தும் கொள்ளும் கண்ணாமூச்சி விளையாட்டு மூலம் அவை உருவம் கொண்டு வந்தபடியே இருக்கின்றன.

சுண்ணாம்பு சிற்பங்கள்

பார்க்கப்பார்க்கப் பார்த்தவை உருவழிந்து மறைகின்றன. புதிய உருவங்கள் கண்முன் பிறந்து வருகின்றன. ஒரு வடிவப்பிரபஞ்சம் பிறந்து சில கணங்கள் நீடித்து அழிவதுபோல. தொங்கும் சரவிளக்குகள். நெளியும் திரைச்சீலைகள். காளான்குடைகள். கவிழ்ந்த சிப்பிகள். சுண்ணாம்புச்செடிகள். இறுகிய மேகப்படலங்கள். மாபெரும் சோழிகள். பிசைந்து மிச்சம் வைத்த சோறு. திறந்து வைக்கப்பட்ட மூளைச்சுருள். பிளந்த மீன் வாயின் பற்கள். மண்டைஓடுகள்…

ஒருபோதும் இவ்வடிவங்களைச் சொல்லி முடித்துவிட முடியாது. புறவுலகம் முடிவில்லாத வடிவங்களாலானது என நினைக்கிறோம். அகவுலகமும் அதேபோல முடிவில்லாத வடிவங்களால் ஆனதுதான் என்று உணரும் தருணம் அது. ஒவ்வொரு வடிவமும் வடிவமின்மையின் முடிவிலியில் அலையடித்து மிதந்து கிடக்கிறது. வடிவமின்மை போல நம்மை அச்சுறுத்துவது ஏதேனும் உண்டா? வடிவமின்மைவெளியில் வடிவம் தேடித் தவிக்கிறது பிரக்ஞை. அன்னிய ஊரில் உறவைத்தேடித்தவிக்கும் கைவிடப்பட்ட குழந்தை போல

ஆர்தர் சி கிளார்க்கின் நினைவடையாளம் என்ற கதையில் சந்திரனுக்குச் சென்று இறங்குபவர்களின் மனப்பிறழ்வை சொல்லியிருப்பார். மனிதனால் உருவாக்கப்பட்ட, மனித பிரக்ஞை அடையாளம் காணக்கூடிய சமவடிவங்கள் எவற்றையும் காணமுடியவில்லை என்னும்போது மனித அகம் கொள்ளும் நிலையழிவு அது. அந்த நிலையை உணர முடிந்தது.

கிளைகளாகப் பிரிந்து பிரிந்து சென்றுகொண்டே இருந்தது பிலம். ஈரமான மண்பாறைகள் பிரம்மாண்டமாக பிய்ந்து விழுந்து கிடந்தன. சில இடங்களில் மேலே குகையின் கூரை அறுபதடி உயரத்தில் உட்குடைவாக இருந்தது, மாபெரும் மசூதி ஒன்றின் உட்கூரை போல. சில இடங்களில் தலை இடிக்காமல் குனிந்து செல்லவேண்டியிருந்தது. நீர் ஊறி ஓடும் ஆழ்ந்த குடல்கள். சுருங்கி விரிகின்றனவா என்ற பிரமை எழுப்பும் இரைப்பைகள். செரித்துக்கொள்ளக் கைநீட்டும் குடல்விரல்கள். நெளியும் சேற்றுச்சுவர்கள்…

வழிகாட்டியின் கைவிளக்கு ஒளியில் பிலத்தின் ஆழம் விரிந்து விரிந்து தன்னைக் காட்டி இருளுக்குள் மூழ்கியது. ஒளியில் தெரியும் குகையாழங்கள் முடிவிலாத ரகசியங்களுடன் மௌனத்தில் ஆழ்ந்திருந்தன. இருட்டின் அரசு. ஒருபோதும் ஒரு துளி சூரியவெளிச்சம் பட்டிராத பாறைவளைவுகள். சூரியனை அறியாத பாதாள உயிர்களின் ரீங்காரம். அங்கே பாதாள நாகங்கள் போல தொங்கிய சுண்ணாம்பு விழுதுகள்… நீர் ஓடிய தடம் அரம்போல வரிவரியாக தெரிந்த கூரைப்பாறைச்சரிவு நாயின் மேல்வாய் போல தோன்றியது.

சுண்ணாம்பு விழுதுகள்

பிலத்தின் ஓர் அறையை மகத்தானதோர் சிற்பக்கூடம் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு சிற்பியும் அத்தனை வடிவச்சாத்தியங்களை நிகழ்த்திவிட முடியாது. கொத்துகள் குலைகள் செறிவுகள் குவைகள் குவியல்கள் வளைவுகள் ஆழங்கள்.

ஆனால் அங்கே அத்தனை வியப்புகளுடன் பரவசத்துடன் வெளியேறிவிடவேண்டும் என்ற எண்ணமும் இருந்துகொண்டே இருந்தது. குகைகளுக்குள் ஆக்ஸிஜன் மிகவும் குறைவு. கார்பனைட் கரியமிலவாயுவை வெளிவிடக்கூடியதும்கூட. ஆனால் அதைவிட முக்கியமானது மண்ணுக்குள் இருக்கிறோம் என்னும் உணர்வு. தலைக்குமேல் மொத்த உலகமும் நம்மை அழுத்துவதுபோல. ஏற்கனவே இறந்துவிட்டதுபோல. மனதுக்கு மூச்சுத்திணறுவதை அங்குதான் உணர முடிந்தது

பிலத்துக்குள் சேரும் நீர் பல குகைவழிகள் வழியாக பல கிலோமீட்டர் தூரம் ஓடி இந்திராவதி ஆற்றில் கலக்கிறது. இப்போது ஐந்து கிமீ வரைத்தான் பிலம் ஆராயப்பட்டுள்ளது. ஒன்றரை கிமீ தூரம் வரைதான் பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். குகைக்குள் ஓர் இடத்தில் இயற்கையான பாறை ஒன்று சிவலிங்கமாக வழிபடப்படுகிறது. ஆழத்தில் உறையும் இருள்லிங்கம். எண்ணம் மட்டுமேயான சிவம்.

இரண்டாவது பிலம் கைலாஷ் குகை என்று அழைக்கப்படுகிறது. அதற்குச் செல்ல வழிகேட்டுச் சென்றோம். வழிகாட்டிப்பலகைகள் இல்லை. சாலை ஓர் இடத்தில் இரண்டாகப்பிரிந்தது. அங்கே நின்ற ஒருவரிடம் கேட்டபோது கைலாஷ் குகைக்கு அவ்வழியாகச் செல்லலாம் என்றார். ஆனால் அது சரியான பாதை அல்ல. அப்போதுதான் கான்கிரீட் பாதை போட்டுக்கொண்டிருந்தார்கள். ஒர் இடத்தில் பாலமே இல்லை. ஆனால் அவ்வப்போது காரில் இருந்து இறங்கி அந்த சாலை வழியாகக் காரை வேகமாக ஓட்டி ஏற்றிக்கொண்டு சென்றோம்.

ஒருவழியாக கைலாஷ்குகைகளை அடைந்தோம். அங்கே ஒரே ஒரு வாட்ச்மேன், ஒரு கைடு. அங்கே பயணிகளே வருவதில்லை என்றார். ஒரு தங்கும்விடுதி இருந்ததை மாவோயிஸ்டுகள் உடைத்துவிட்டார்கள். வழிகாட்டியை ஏற்றிக்கொண்டு சென்றோம். அவர் பெயர் நாக் என்று முடிந்தது. அப்பகுதியை ஆண்ட நாகவம்சத்தைச் சேர்ந்தவர்.

இருநூறடி தூரம் படிகளில் ஏறிச்சென்றால் குகை வாசல் வருகிறது.மூன்றடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட சிறிய நுழைவாயில். அதன் வழியாக உள்ளே செல்ல கொஞ்சம் சிரமப்படவேண்டும். இரும்பாலான சிறிய படிகள் உள்ளன. ஆனால் உள்ளே இறங்கியதுமே பிரம்மாண்டமாக குகைவழி இறங்கிச் செல்வதை காணலாம். சிமிண்டால் படிகள் கட்டியிருக்கிறார்கள். விளக்குகள் கூட அமைக்கப்பட்டிருக்கின்றன. மாவோயிஸ்டுகள் விளக்குகளை உடைத்துவிட்டார்கள். அவர்கள் அங்கே சுற்றுலா வளர்வதை விரும்பவில்லையாம்.

1993ல்தான் கைலாஷ் பிலம் கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளே செல்லச்செல்ல பிரம்மாண்டமான நான்கு அறைகளாக குகை விரிகிறது. 250 மீட்டர் தூரம் வரை செல்லமுடியும். நாற்பது மீட்டர் அடி ஆழம் வரை இறங்குகிறது. இங்கும் அதே சுண்ணாம்புக்கல் செதுக்கல்கள். கைவிளக்கின் ஒளியில் கனவுரு போல தெளிந்து தெளிந்து இருட்டில் மூழ்கும் கடவுளின் சிற்பங்கள். இங்கும் ஒரு சுண்ணாம்புப்பாறைக் குவையை சிவலிங்கம் என்று சொல்கிறார்கள்.

நண்பர்களோடு குகைக்குள்

பிலத்திற்குள் கடைசி அறையில் அமர்ந்துகொண்டோம். ஐம்பதடி உயரமுள்ள கூரையும் நூறடி விட்டச் சுற்றளவும் உள்ள அறை. விளக்கை அணைத்துவிடுவோமே என்றார் கிருஷ்ணன். அத்தகைய இருட்டை மண்ணுக்குமேலே எங்குமே உணர முடியாது வானில் எப்போதும் ஏதேனும் ஒளி இருக்கும். நீரில் உள்ளொளி இருக்கும். கூரிருள். கண்ணே அழிந்துவிட்டது போன்ற இருள். எப்போதுமே நமக்கு பார்வை இருந்ததில்லை என்று உணரச்செய்யும் இருள்.

பிசுக்கு போன்று உடலில் அது ஒட்டுவதாக பிரமை எழுந்தது. மூச்சு வழியாக உடலுக்குள் நுழைந்து உடலின் கனத்தை அதிகரிக்கச்செய்வது போலிருந்தது. கண்ணுக்குள் எஞ்சிய கடைசிக்காட்சியின் அகப்பிம்பம் மெல்ல அழிந்ததும் குருதிக்குமிழிகளின் அசைவுகள்கொஞ்சம் கொஞ்சமாக மறைந்ததும் இருட்டு மட்டும் எஞ்சியது. நம் இருப்பை நாம் ஒரு பிரக்ஞை மட்டுமாகவே உணர முடிந்தது. பிரபஞ்ச இருள். யோகத்தின் இருள்.

இருட்டை ஆழத்தில் உணரும் தியான நிலை ஒன்றுண்டு. அது குரு இல்லாமல் கடந்துசெல்லமுடியாத வழி. அங்கே கொந்தளிக்கும் வடிவின்மையின் பிரம்மாண்டம் மிகப்பயங்கரமான அனுபவம். அடிப்படை இருத்தல் மட்டுமே எஞ்சும்நிலை. மானுடனென்று நாம் உருவாக்கிக்கொண்ட அனைத்தும் உருகியழிந்து அகம் மட்டும் எஞ்சும் நிலை. ’இத்தனை இருட்டா குரு?’ என்று நித்யாவிடம் கேட்டிருக்கிறேன். அவர் புன்னகை செய்தார்.

மண்ணில் அத்தனை பசுமைக்கும் உயிர்ப்பெருவெளிக்கும் அடியில் அந்த இருள் இருந்துகொண்டிருப்பதை நாம் உணர்வதில்லை. அதைத்தான் கைலாஷ் குகை விட்டு வெளியே வந்ததும் நினைத்துக்கொண்டேன்.

[மேலும்]


படங்கள்

முந்தைய கட்டுரைதமிழர்களின் மொழிப்பற்று
அடுத்த கட்டுரைகுகைகளின் வழியே – 9