லோகி அவரது வாழ்க்கையில் செய்த ஆகப்பெரிய பிழை கஸ்தூரிமானை அவரே தயாரித்தது. இந்தியத்திரைவானில் எத்தனையோ பெரும் கலைஞர்களை கவிழ்த்தது தயாரிப்பு ஆசை. அந்த பொறி மிக வசீகரமானது. ஒரு கலைஞனுக்கு அவன் கலைமேல் அபாரமான நம்பிக்கை இருக்கும். தன் கலை வணிகவெற்றியாக ஆகி பணம் கொட்டுவதையும் அவன் கண்டுகொண்டிருப்பான். ஏன் தானும் சம்பாதிக்கக் கூடாது என அவன் மனம் எண்ணும்
மேலும் வெற்றியின்போது கலைஞர்களுடன் எப்போதும் துதிபாடிகளும் ஒட்டுண்ணிகளும் சேர்ந்துகொள்வார்கள். புகழையும் பாராட்டையும் விரும்பும் கலைஞனின் மனத்தை அவர்கள் தங்கள் இனிய சொற்களால் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவார்கள் மெல்லமெல்ல அவனை தங்கள் வழிக்குக் கொண்டுசெல்வார்கள்.
ஆனால் படத்தயாரிப்பு என்பது எளிய விஷயம் அல்ல. அது நிர்வாகம் — வணிகம் என்ற இரு அம்சங்களின் கலவை. லோகிததாஸின் கலைத்திறன் எப்படி ஒரு அபூர்வமான பிறவித்திறனோ அதைப்போன்றதே ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளரின் திறனும். உண்மையில் தயாரிப்பாளர் கலைஞருக்கு நேர் எதிர் சக்தி. அவர் யதார்த்தவாதி. கலைஞனின் கனவுத்தாவல்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் அவர்.இரு சமமான ஆற்றல்கள் எதிர்த்து முயங்கும்போதே சீரான வளர்ச்சி சாத்தியமாகிறது.
லோகிததாஸ் தயாரிப்பாளராக ஆனது வெற்றியின் உச்சியில் நின்ற ஒருவர் செய்யும் வழக்கமான பிழை.. அந்தப்பிழை மேலும் பிழைகளுக்குக் கொண்டு சென்றது. மலையாளக் கஸ்தூரிமானின் வெற்றிக்கு முக்கியமான காரணம் அதில் சிரியன் கிறிஸ்தவக் குடும்பம் ஒன்றின் உண்மையான கதை இருந்தது என்பது. நொடித்துப்போவதென்பது அக்குடும்பங்களின் விதிகளில் ஒன்று. அந்த வீடு, அந்த முகங்கள் எல்லாமே கனகச்சிதமாக அமைந்திருந்தன. அபாரமான ஒரு யதார்த்தத்தை அந்தச் சூழல் உருவாக்கியது. அந்தப்படத்தில் கதாநாயகனின் அப்பாவாகவும் பாட்டியாகவும் நடித்த அசலான சிரியன் கிறித்தவ முகங்கள் அதை உயிருள்ள படமாக ஆக்கின.
லோகியே படத்தயாரிப்பாளர் ஆனபோது அந்த யதார்த்தம் சிதைவுற ஆரம்பித்தது. கதையை நான் கோவை கவுண்டர் பின்னணிக்குக் கொண்டுவந்தேன். தமிழ்ச்சூழலுக்கு கதையை முடிந்தவரை மாற்றினேன். ஆனால் லோகி சரத்பாபுவை பழனியப்பக் கவுண்டராக ஒப்பந்தம்செய்தார். ஏனென்றால் சரத்பாபுவை அவருக்கு முன்னரே தெரியும். மிகக்குறைவான ஊதியத்துக்கு நடிக்க சரத் ஒப்புக்கொண்டார்.
சரத்பாபுவின் தோற்றமும் சிவந்த தலைமயிரும் கதாபாத்திரத்துக்கு பொருந்தவில்லை. ஆகவே கதையை மாற்றி பழனியப்பன் நொடித்துப்போன சினிமா தயாரிப்பாளர் என்று ஆக்கினார். சரத்பாபு கோவைத்தமிழ் பேச முடியது. அங்கேயே யதார்த்தம் கைவிடப்பட்டது. பல கதாபாத்திரங்களுக்கு தனக்கு நெருக்கமான மலையாளநடிகர்களையே லோகி நடிக்கவைத்தார். செலவுக் கணக்கே காரணம். இயக்குநரே தயாரிப்பாளராவதன் பலவீனம் இது.
குறைவான செலவில் ஒரு மலையாளியின் பங்களா கோவையில் படப்பிடிப்புக்குக் கிடைத்தது. ஆனால் அது மலையாளத்தில் சிரியன் கிறித்தவ இருந்ததுபோல ஒரு பழங்கால பங்களா அல்ல. புதிய பங்களா. ஆனால் அதுபோதும் என முடிவெடுத்தார் லோகி. ஆனால் மொத்தப்படத்தில் 90 சதவிதம் வீட்டுக்குள் நடக்கும் அக்கதை முழுக்கமுழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பாக கோவையிலும் அமராவதி அணைக்கட்டுப்பகுதியிலும் ஏன் எடுக்கப்பட்டது, அந்த முடிவை யார் எடுத்தார்கள் என்பது இன்று எனக்கு பெரும்வியப்பாக இருக்கிறது. சென்னையில் அப்பகுதிகளை எடுத்திருந்தால் செலவில் மூன்றில் ஒருபகுதி மிச்சமாகியிருக்கும்.
மீரா ஜாஸ்மின் தெலுங்கில் சிக்கிக்கொண்டமையால் படம் மிகவும் தாமதமாகியது. செலவுக்கு வட்டி ஏறியது. கிட்டத்தட்ட இரண்டுகோடி ரூபாய்செலவில் படம் முடிந்தது. அதுவரை படத்தை வாங்க கியூவில் நிற்பார்கள் என்று சொன்னவர்கள் மறைந்தார்கள். படத்தை யாருமே வாங்கவில்லை. லோகி மேலும் ஐம்பது லட்சம் செலவு செய்து அவரே படத்தை வெளியிட்டார்.
அந்த நாட்கள் லோகியின் வாழ்க்கையின் மிகமிகத் துயரமான நாட்கள். நாற்புறமும் கடன் ஏறியது .அவர் விதவிதமான ஆட்களிடம் கெஞ்ச வேண்டியிருந்தது. சமாளிப்புகளைச் சொல்லவேண்டியிருந்தது. பசப்ப வேண்டியிருந்தது. அதெல்லாம் அவருக்குத் தெரியாது. அபாரமான உண்மை கொண்ட மனிதர் லோகி. அவருக்கு எது பிடிக்கிறது பிடிக்கவில்லை என்று எப்போதும் அப்பட்டமாக்ச் சொல்பவர். நிமிர்ந்தே வாழ்ந்தவர். மலையாள சூப்பர்ஸ்டார்களிடம் கடைசிவரை பணியாதவர். ஆனால் தமிழில் அவர் எல்லா தலைக்குனிவையும் அறிந்தார். அது அவரது தன்னம்பிக்கையை ஆழமாகப் புண்படுத்தியது. உண்மையில் நான்கு வருடம் கழித்து நடந்த அவரது மரணம் அங்குதான் ஆரம்பித்தது. ஒருவர் போனில் கூப்பிடும்போது தான் இல்லை என்று சொல்லச்சொல்லும் லோகி லோகியே அல்ல. அவர் ‘இறந்துபோன’ லோகிதான்.
கஸ்தூரிமான் பெண்களுக்கான படம். நட்சத்திர மதிப்பு இல்லை. அரங்கில் வரும் ஆட்கள் படத்தை விரும்பி, பிறரிடம் போய்ப் பேசி, மெல்லமெல்லத்தான் கூட்டம் வரவேண்டும். லோகியின் துரதிருஷ்டம் துரத்தியது. படம்வெளியானது 2005 நவம்பர் 18. வெள்ளிக்கிழமை. சனிக்கிழமை முதல் தமிழகம் எங்கும் புயலும் மழையும். வரிசையாக பதிமூன்று புயல்கள். நாற்பது வருடத்தில் மிக அதிக மழை. எல்லா சாலைகளும் உடைந்தன. மூன்று இடங்களில் படம் ஓடிய திரையரங்கே இல்லாமலாகியது.
மேலும் ஒரு படத்தை ஓட்டி பணத்தை திரும்ப எடுப்பதாக இருந்தால் தொடர்ந்து படத்தொழிலில் இருக்க வேண்டும். பணத்தை திரும்பி வாங்கும் நிர்வாக அமைப்பு இருக்கவேண்டும். பஞ்சை பறக்கவிட்டு திருப்பி சேர்ப்பது போன்றது படத்தயாரிப்பில் விட்ட பணத்தை திரையரங்குகளில் இருந்து எடுப்பதென்பது. மொத்தத்தில் அந்தப்படத்தில் லோகிக்கு திரும்பி வந்த பணம் என்பது ஜெயா டிவி கொடுத்த பணமும், அரசின் விருதுப்பணமும் மட்டுமே.
லோகி தன் ஆலுவா வீட்டை விற்றது அவரது தன்னம்பிக்கையை பெரிதும் பாதித்தது. அவர் திட்டமிட்டு பார்த்துக் கட்டிய சுய அடையாளம் அது. தன் வாழ்நாள் முழுக்க வீடற்றவனாக அலைந்த கலைஞன் உருவாக்கிய இல்லம். ஒரு பக்கம் ஒரு நாயர் தறவாடு போல பூமுகம் அங்கணம் எல்லாம் இருக்கும். மறுபக்கம் பிரிட்டிஷ் பங்களா போல பால்கனி. அந்த வீட்டில் லோகி புராதன நாயர்த் தறவாட்டு வீடுகளின் மரச்சாமான்களை சேகரித்து வீட்டுப்பொருட்களை அமைத்திருந்தார். இளமையில் அப்படிப்பட்ட தறவாட்டு வீடுகளின் வாசலில் சோற்றுக்காக ஏங்கி அவர் நின்றிருப்பார் போலும்
மன அழுத்தம் காரணமாக அவருக்கு கடுமையான தூக்கமின்மை உருவாகியது. விளைவாகக் குடி அதிகமாகியது. மெல்ல மெல்ல அவரது மனசுக்குள் எப்போதும் இருந்த உல்லாசம் மறைந்தது. அதை அவரது நடையில் பாவனைகளில் காண முடிந்தது. வழக்கமாக தனியாக இருக்கும் லோகி தனக்குள் மெல்ல பாடியபடி தாளம் போட்டுக்கொள்வார். பாட்டின் உணர்ச்சிபாவனை முகத்தில் ரசங்களாக விரியும். பலசமயம் காதலின் பரவசம். சிலசமயம் காதலின் ஏக்கம். காதல் இல்லாத லோகி இல்லை.
ஆனால் மனஅழுத்த நாட்களில் லோகி தனிமையில் எதையோ தனக்குள் சொல்லிக்கொள்பவர் போல தலையை அசைப்பார். உதடுகள் சொற்களில்லாமல் மெல்ல அசைந்துகொண்டிருக்கும். சட்டென்று விடுபட்டு வலிந்து உற்சாகத்தை வரவழைத்துக்கொள்வார். புன்னகையுடன் நம்மைப்பார்த்து ”பின்னே எந்தொக்கெ?” என்பார். செய்ற்கையாக ஏதாவது வேடிக்கைகளைச் சொல்ல முயல்வார். உரக்கச் சிரிப்பார்.
நடக்கும்போது தலையை தூக்கி வேட்டி நுனியை ஒருகையால் பற்றி நிமிர்ந்து நடப்பவர் அவர். தலைகுனிந்து தனக்குள் ஆழ்ந்து நடக்கும் லோகியை பார்க்க நேர்ந்தது. பெருமூச்சு விடும் லோகி ஒரு பெரும் துயரக்காட்சி. தொலைபேசியில் எவராவது கடன் விஷயமாகப்பேசும்போது லோகிக்குச் சொற்கள் அடைத்து விடும். ‘ஆ’ ”ஓ’ ஆகட்டே” என்பதற்கு மேல் வார்த்தை எழாது. அவரில் இருக்கும் பதற்றம் மிக்க உடல் மொழி நெஞ்சை அறுக்கும். ஒருவழியாக ·போனை அணைக்கும்போது லோகி துயரம் கனத்தவராக இருப்பார்.
எப்போதும் உற்சாகமாகக் கேட்கத்தயாராக இருப்பவர் லோகி. நான் உலக இலக்கியங்களை அபப்டியே அவருக்கு கதையாகச் சொல்லியிருக்கிறேன். அன்னாவின் மரணத்தைக் கேட்டு மாலைமாலையாகக் கன்ணீர்விட்டு விசும்பி அழுது படுக்கையில் படுத்துக்கொண்டவர். ஆனால் பின்னர் அவர் நம்முடைய பேச்சுகளில் இருந்து பிரிந்து வழியிலேயே எங்கோ உதிர்ந்து போவதைக் காண நேர்ந்தது. லோகியின் கண்கள் பெண்களுக்கானவை. அழகிய மலர்ந்த கண்கள். நாம் பேசும்போது எப்போதும் அவை நம் உணர்ச்சிகளுடன் கூடவே வரும் ஆனால் சட்டென்று அவை மங்கலாகி தனக்குள் மூழ்கிப்போவதைக் காணமுடிந்தது. பின்பு சட்டென்று வந்து நம்மை அடைந்து ”பின்னே” என்பார்.
பூதக்கண்ணாடி: லோகிக்கு தேசியவிருது
பொருளாதாரச் சிக்கல்கள் வழியாக லோகி வாழ்ந்த கடைசிக்கால வாழ்க்கை ஒரு பெரிய நரகம். சிங்கத்தை அடித்து வளையம் வழியாகக் குதிக்கச் செய்வதுபோன்றது அது. அவருக்கு எப்போதுமே பணத்தின் கணக்கு தெரியாது. அந்த நெருக்கடியில் அவர் தன் மகன்களை கூடவே வைத்துக்கொண்டார். நான் எரணாகுளம்போனபோது லோகியிடம் சொன்னேன் ”லோகி, பையன்களை இதில் ஈடுபடுத்தவேண்டுமா? அவர்களின் மனம் தேவையில்லாமல் சோர்ந்துபோகாதா?” ஆனால் லோகி ”அவர்கள் இலலமல் என்னால் இருக்கமுடியாது. அவர்கள்தான் என் பலம். சின்னவன் கார் ஓட்டினால் நான் நிம்மதியாக அதில் இருப்பேன்” என்றார்.
பையன்கள்மேல் அபாரமான பிரியம் இருந்தது லோகிக்கு. அவர்களின் தோளில் கைபோட்டு பேசிக்கொண்டே நடப்பது அவருக்குப் பிடிக்கும். அவரது மனச்சோர்வின்போது பையன்கள் அவருக்குப் பெரும்பலமாக கூடவே இருந்தார்கள். அவர்களின் அந்த திடம் அவர்களை மேலும் காப்பாற்றும் என நினைக்கிறேன்.
நெருக்கடி நீடித்த மூன்று வருடங்கள் லோகியின் சிருஷ்டிசக்தி அவரைக் கைவிட்டது என்றே நான் எண்ணுகிறேன். பதினாறு நாளில் திரைக்கதை எழுதி ‘அமரம்’ என்ற காவியத்தை உருவாக்கிய மேதை அவர். மாதக்கணக்கில் அமர்ந்தும் திரைக்கதை எழுத முடியாமல் தவித்து திரைக்கதை இல்லாமலேயே ‘சக்கரமுத்து’ என்ற படத்தை எடுத்தார். தோல்வி. அதில் பல இடங்களில் ஒரு பெரிய கதாசிரியன் தெரிவான். ஆனால் படத்துக்கு கோர்வை இருக்கவில்லை. பின்னர் அடுத்தபடம். ‘நைவேத்யம்’ உண்மையில் கஸ்தூரிமானின் இன்னொரு வடிவம். அது தப்பித்தது அவ்வளவே. அதன் புதுமுக கதாநாயகனும் நாயகியும் அங்கீகரிக்கப்பட்டார்கள்.
என் நண்பர் என்ற முறையில் நான் அவரிடம் என் கருத்துக்களை எப்போதும் மிக வெளிப்படையாகச் சொல்லிவந்தேன். நான் எடுத்துக்கொண்ட சுதந்திரத்தை அவரிடம் எவருமே எடுத்துக்கொண்டதில்லை என்று நண்பர்கள் சொல்வார்கள். அவரை நான் எப்போதுமே விமரிசிக்கத் தயங்கியதில்லை. அவரது முதல்பெரும் பிழை என்பது அவர் தன்னை இயக்குநராக எண்ணிக்கொண்டதுதான் என்று தோன்றுகிறது.
லோகி சினிமாக்காரரே அல்ல. அவர் எழுத்தாளர். அவர் சினிமா பார்ப்பதே குறைவு.சினிமாவின் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள அவர் முயன்றதே இல்லை. அவர் தொடர்ந்து ஈடுபட்ட சினிமாக்கள் வழியாக அவருக்கு சினிமாவின் பொது இலக்கணம் ஒன்று பிடிகிடைத்தது. அவரது காட்சிக்கோணங்களில் கற்பனையோ செய்திறனோ இருப்பதில்லை. அவரது திரைக்கதைகளை பரதனோ, சிபி மலையிலோ இயக்கினால் அவை கிளாசிக்குகள் ஆயின. அவரே இயக்கியபோது அவை பெரிதாக எடுபடவில்லை.
கதை-திரைக்கதை என்பது சினிமா அல்ல . சினிமாவின் ஒரு சிறு தொடக்கம்தான் அது. அங்கிருந்து சினிமா செல்லவேண்டிய தூரம் மிக அதிகம். பரதன் இயக்கிய லோகியின் ‘வெங்கலம்’ என்ற படத்தைப் பார்த்தால் இது தெரியும்.அந்தப்படத்தில் காட்சிகள் ஒவ்வொன்றும் கிளாசிக் ஓவியங்கள் போல கண்ணில் நிற்கும். கதாநாயகியின் கண்ணில் வழியும் ஒரு துளிக்கண்ணீர் லோகி எழுதியதைவிட பலமடங்காக அக்காட்சியைக் கொண்டு செல்லும். தீ போல அந்த துளி எரியும்!
ஆம், எழுதுவதைப்போலவே இன்னொரு தனித்துவம் கொண்ட கலை இயக்கம் என்பது. இதை நான் லோகியிடம் மீண்டும் மீண்டும் விவாதித்திருக்கிறேன். ஆனால் லோகி ஒப்புக்கொள்ளவே மாட்டார். சினிமா என்பது அதன் கதைதான் என சலிக்காமல் வாதிடுவார். லோகிததாஸ் என்ற முதல்தர சினிமா எழுத்தாளன் லோகிததாஸ் என்ற இரண்டாம்தர இயக்குநராக ஆனதற்குக் காரணம் இந்த நம்பிக்கையும் பிடிவாதமும்தான்
ஆனால் லோகி நடிகர்களின் நடிப்பைக் வெளிகொண்டுவருவதில் அவருக்கு அபாரமான திறமை இருந்தது. தொடர்ச்சியாக புதுமுகங்களைக் கொண்டுவந்து வெற்றிபெறச்செய்தது இதனால்தான். இது அவர் நாடகத்தில் இருந்து பெற்றுக்கொண்ட திறன் எனலாம். லோகிததாசின் சினிமாக்களை பார்க்கும்போது அவரது சிக்கல்களாக எனக்குப் படுபவை இரண்டு, அவரால் தான் எடுத்த படத்தை கச்சிதமாக வெட்ட முடிவதில்லை. காட்சிகள் எப்போதுமே இழுத்துக்கொண்டு செல்லும். இரண்டு உணர்ச்சிகளை காட்சிவடிவில் பதிவுசெய்ய ஏதோ ஒன்று குறைகிறது. உணர்ச்சிகளும் நடிப்பும் நன்றாக இருந்தாலும் நம் மனம் காட்சிகளில் ஏனோ முழுமையாகப் பதிவதில்லை.
பின்னர் பாலாவிடம் இதைப்பற்றி விவாதித்திருக்கிறேன். கஸ்தூரிமான் படத்தில் காதலன் விட்டில் அவமானப்பட்டு திரும்பிவரும் மீரா ஜாஸ்மினிடம் ‘கறிவேப்பைலை ஆயிட்டியாடீ” என்று அக்கா கேட்கும் இடம் உண்டு. அந்த வரி தியேட்டரில் ரசிக்கப்பட்டதா என்றார் பாலா. இல்லை என்றென். அங்கே ஒரு குளோஸ்அப்பும் ஸ்டேயும் கொடுத்திருந்தால் அது நெகிழச்செய்திருக்கும் என்றார்.
வெற்றிபெற்றவர்களுக்குரிய இன்னொரு குணமும் லோகியிடம் இருந்தது. அவர் எதையுமே கேட்டுச்செய்ய மாட்டார். அவரிடம் எதையுமே நாம் சொல்லமுடியாது. அவருக்கு தன் சொற்கள், கருத்துக்களில் அபாரமான நம்பிக்கை. கஸ்தூரிமானில் தமிழில் நான் எழுதிய வசனங்கள் மிகச்சிலவே. பெரும்பாலும் மூலத்தில் இருந்து அபப்டியே மொழியாக்கம் செய்யபப்ட்டவை. டப்பிங்கில் அவற்றை தான் விரும்பியபடியே அமைக்க லோகி கடுமையாக முயன்றார். விளைவாக தமிழர்களால் டப்பிங் செய்யப்பட்டும்கூட மலையாளச்சாயல் வசனங்களுக்கு வந்தது. அப்போதே ஷாஜி உட்பட பலரும் அதைச் சொன்னார்கள். ஆனால் லோகி ஏற்கவில்லை
இத்தனை சிக்கல்கள் இருந்தாலும் கஸ்தூரிமான் ஒரு புறக்கணிக்கத்தக்க படம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். நுட்பமான பல சந்தர்ப்பங்கள் அந்த படத்தில் உள்ளன. உணர்ச்சிகளின் அபூர்வமான வெளிப்பாடுகள் சாத்தியமான பல இடங்கள். அவை அந்தப்படத்தை யாரோ சிலர் எப்போதும் நினைக்கச்செய்யும் .
லோகியை நான் தொடர்ந்து சந்தித்து வந்தேன். எல்லாமாதமும் அழைப்பேன். ஓணம் விஷ¤ நாட்களிலும், புத்தாண்டிலும், அவரது பிறந்த நாளிலும் அழைப்பேன். 2007ல் ‘காங்கேய’னை படமாக எடுக்கலாம் என்று ஒரு தயாரிப்பாளர் வந்திருப்பதாகச் சொன்னார். பசுபதியிடம் கதை சொல்ல உதவும்படி என்னை அழைத்தார். நான் எர்ணாகுளம் சென்று அங்கே ஓட்டலில் தங்கியிருந்த பசுபதிக்கு அக்கதையைச் சொன்னேன். பசுபதி ஆர்வம் காட்டவில்லை. .அந்த தயாரிப்பாளர் நைவேத்யம் எடுத்தார்
சென்ற வருடம் டிசம்பரில் லோகி என்னை மீண்டும் கூப்பிட்டார். இரண்டு திட்டங்கள். ஒன்று பிரிதிவிராஜை கதாநாயகனாக ஆக்கி தமிழில் ஒரு படம். அதன் கதையைச் சொன்னார். முக்கியமான கதை. வழக்கம்போல லோகியின் உணர்ச்சிகரமான சந்தர்ப்பங்களும் கவித்துவமான உச்சமும் கொண்டது. லோகி அவரது ‘·பாமு’க்கு திரும்பி விட்டார் என்று தோன்றியது. ‘நீ இதற்கு ஒரு திரைக்கதை வடிவம் எழுது, மணிரத்தினத்தின் படம் முடிந்ததும் பிரிதிவி வருவார்,நான் அவருக்குக் கதையைச் சொல்லிவிட்டேன்’ என்றார் லோகி. நான் ஒரு வடிவத்தை அங்கேயே எழுதினேன். லோகிக்கு மிகவும் திருப்தி என்றார்
நடுவே சிபி மலையிலுக்காக மோகன்லால் நடிப்பில் பீஷ்மர் என்ற கதையை உருவாக்கியிருந்தார் லோகி. அதுவும் வித்தியாசமான கதை. வலுவான மையக்கதாபாத்திரம். கிட்டத்தட்ட பதினைந்துநாள் நான் லோகியுடன் தங்கி அந்தக்கதையை விவாதித்து முழுமைசெய்தேன். தினமும் மாலை நாடகவிழாவுக்கும் சென்று வந்தோம். ஜூலையில் பீஷ்மர் ஆரம்பிக்கும். நவம்பரில் பிரிதிவிராஜ் படம் என்றார்
லோகி இரண்டு வருடங்கள் அவரை அலைக்கழித்த சோர்வில் இருந்து முற்றாக மீண்டுவிட்டார் என்று பட்டது. அது எனக்கும் உற்சாகத்தை அளித்தது. ஆனால் லோகி உள்ளூர இறந்துகொண்டிருந்தார். அவருக்கு இதயத் தமனிகளில் மூன்று அடைப்புகள் இருந்திருக்கின்றன. எட்டுமாதம் முன்னரே டாக்டர்கள் அவரை எச்சரித்திருந்தார்கள். ஆனால் அதை மிகுந்த ரகசியமாக வைத்திருந்தார் அவர். ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யவேண்டும் என்று டாக்டர்கள் சொன்னபோது அதை தொடர்ந்து ஒத்திப்போட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்.
இது எதுவுமே எனக்குத்தெரியாது. அவருடன் நான் இருந்த நாட்களில் எல்லாம் மருந்துகளாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார். ஆயுர்வேத ஹோமியோ மருந்துக்களை கண்டபடிக்குச் சாப்பிடுவது அவரது பழக்கம். இந்த மருந்து எதுக்கு என்றால் ‘நல்ல சிந்தனைகள் வரும்’ என்பார். தூக்கத்துக்கு ஒன்று. ஜீரணத்துக்கு ஒன்று. நன்றாக ‘பஞ்சஸார அடிபதற்கு’ ஒன்று. பெண்களுக்கு நாம் சொல்வது புரிவதற்காக ஒரு லேகிய… அதைக் கிண்டல்செய்து அப்படியே விட்டுவிட்டேன்
மன அழுத்தம் செயல்களை ஒத்திப்போடச்செய்யும். செய்வதையே மீண்டும் செய்தபடி ஒரு இடத்தில் சடைந்து அமரச்செய்யும். சாப்பிடச்செய்யும். குஇக்கச்செய்ய்ம். நான் டிசம்பரில் பார்த்தபோது லோகிக்கு தொந்தி பெருத்திருந்தது. அதைப்பற்றிச் சொன்னேன். ”மலையாளிகளுக்கு தொந்தி வைத்துக்கொள்ள லைசன்ஸ் உண்டு” என்றார். ”ஏன்?’ என்றேன்.”மலையாள முறைதான் காரணம்”
”என்ன முறை?” என்றதற்கு லோகி ஒரு கதை சொன்னார். வேலாயுதனிடம் வெள்ளைக்காரத்துரை சொன்னார் ”How do you do?” வேலாயுதன் பதில் சொன்னான் ”I dont do. Ammukutty only do” பயங்கரமான வெடிச்சிரிப்பு. கண்ணில் கண்ணீர் வரும் வரை.
மன அழுத்தம் கொண்டவர்கள் மருத்துவத்தை முற்றாகத் தவிர்ப்பவர்களும் உண்டு இரவுபகலாக மருத்துவமே கதி என்று கிடப்பவர்களும் உண்டு. லோகி இரண்டாவது ரகம். ஒன்றுமில்லை என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு மேலே செல்ல முயன்றார். ஆஞ்சியோபிலாஸ்ட் செய்ய வற்புறுத்திய எர்ணாகுளம் அம்ரிதா மருத்துவமனை டாக்டரிடம் லோகி பீஷ்மர் படப்பிடிப்பு தொடங்கியபின் ஆகஸ்டில் வருவதாகச் சொல்லியிருக்கிறார். அது ஒரு தப்பித்தல்.
ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்வாசை உள்ளூர அவரில் இருந்து மறைந்து விட்டிருந்ததா என்ன?
[முழுமை]