இன்று காலை தண்டேவாடா விடுதியில் எழுந்தோம். காலையில் முதல் செய்தியே நேற்று நாங்கள் டீ குடித்த இடத்தருகே ஒரு போலீஸ்-மாவோயிஸ்டு மோதலில் ஒரு மாவோயிஸ்டு கொல்லப்பட்டார் என்பதுதான்.கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இந்த தண்டகாரண்யக் காடுகள் போல உயிரசைவு இல்லாமல் பிரமித்து நிற்கும் மரங்களின் வரிசையை நான் எங்கும் கண்டதில்லை. மனத்தை பிரமிக்கச்செய்யும் மௌனம் நிறைந்து கனத்து நிற்கும் காடு
காலையில் கிளம்பி பர்சூர் என்ற ஊருக்குச் செல்ல ஆரம்பித்தோம். தண்டேவாடாவில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவுதான். ஆனால் வழியில் சாலை மாறிவிட்டது 12 கிமீ தள்ளிச்சென்றபின்னர்தான் உண்மை தெரிந்தது. ஆனால் இப்பகுதியில் 12 கிமீ செல்ல ஒருமணி நேரம் ஆகும். திரும்பி வந்தபோது இன்னொருமணி நேரம் வீணாகியது. சரி வந்தது வந்தோம் காலையுணவை முடிப்போம் என்று இட்லி சாம்பார் சாப்பிட்டோம்.
இருபக்கமும் பெரிய மரங்கள் சூழ்ந்த காடுகள் வழியாக சென்றோம் . இந்திய வரைபடத்தில் இப்பகுதியில் ஊர்களே காட்டப்படவில்லை. அது ஏதோ பிழை என்று கிருஷ்ணன் சொல்லிக்கொண்டிருந்தார். உண்மையிலேயே ஊர்கள் இல்லை. கோடையில் காய்ந்து புழுதிபூசி நின்ற மரங்கள் அடர்ந்த காடு மட்டும்தான்.
ஆனால் காட்டில் எந்த மிருகத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. ஒரே ஒரு பன்றி மட்டும் ஒருமுறை சாலையைக் கடந்து சென்றது. ஒரு சில இடங்களில் சாலையை செப்பனிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஏ.கே.47 ஏந்திய காவலர்கள் காவல் நின்றனர். பல இடங்களில் காவலர்கள் சாலையில் கண்ணிவெடிகளுக்கான சோதனை செய்துகொண்டிருந்தனர். வனமறைவு உடை அணிந்து தோளில் குண்டுப்பட்டைகள் அணிந்த காவலர். கணிசமானவர்கள் வடகிழக்கு மாகாணத்தவர் போலத் தெரிந்தனர்.
அச்சம் ஒரு கண்ணுக்குத்தெரியாத துணைவன் போலக் கூடவே வந்தது. அச்சத்தை வெல்ல சிறந்த வழி என்பது வேடிக்கையாக அந்த அச்சத்தைப்பற்றியே பேசிக்கொள்வதுதான். வேடிக்கையும் சிரிப்புமாகச் சென்றோம்.
பர்சூருக்கு மூன்று மணிநேரத்தில் சென்று சேர்ந்தோம். பர்சூர் சட்டிஸ்கரின் வரலாற்றில் மிக முக்கியமான ஓர் ஊர். கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை பர்சூர் மிகமுக்கியமான ஒரு நகரமாக இருந்திருக்கிறது. பின்னர் கைவிடப்பட்டு மெல்ல அழிந்து மறைந்து சிற்றூராக மாறியது. பர்சூரைச்சுற்றி ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்குள் நூறு கோயில்கள் உள்ளன. இங்கே தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது
பர்சூர் தொல்பொருளியலில் ஆர்வமுடையவர்கள் அன்றி வேறு எவருக்குமே தெரியாத இடமாகவே இருக்கிறது. சமீபகாலமாகத்தான் அரசு இப்பகுதியை உரியமுறையில் பாதுகாத்து,சுற்றுலா மையமாக ஆக்க முயல்கிறது. பர்சூரின் மைய ஆலயத்தின் அருகே ஒரு பந்தல் போடும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. மறுநாள் அங்கே உதித்நாராயணன் பாடும் ஒரு இசைநிகழ்ச்சி நடக்கப்போகிறது என்றார்கள்.
பர்சூர் நாக வம்சத்தைச்சேர்ந்த பழங்குடி மன்னர்களின் அரசாட்சி நிகழ்ந்த தலைநகரமாக இருந்திருக்கிறது. இந்த நகரம் கிபி நான்காம் நூற்றாண்டில் அமைந்திருக்கலாம் என்கிறார்கள். வரலாற்றில் நாகவன்ஷி என்று இந்த வம்சம் குறிப்பிடப்படுகிறது. பின்னர் காகதீய மன்னர்களால் இந்நகரம் கைப்பற்றப்பட்டது. நாகவன்ஷி வம்சம் காகதீயர்களுக்குக் கீழே ஒரு சிற்ரரசாக நீடித்தது.
இப்பகுதியில் எங்கும் சிலைகளும் இடிபாடுகளும்தான் உள்ளன. ஆனால் அனேகமாக எல்லாக் கட்டிடங்களும் இடிந்த நிலையில்தான் உள்ளன. முதல் பேராலயம் சிவன்கோயில். ஆனால் கருவறையில் ஒன்றும் இல்லை. எங்கிருந்தோ பொறுக்கிய ஒரு சிறிய பிள்ளையார் சிலையையும் அம்மன் சிலையையும் வைத்து இங்குள்ள நாகர் பழங்குடியினர் வழிபட்டு வருகிறார்கள். கோயில் ஒரே அறை கொண்டது. கொண்டை வடிவ நாகர பாணி கோபுரம் இருபதடி உயரம் கொண்டது. கச்சிதமாகக் கட்டப்பட்ட கோபுரம். கஜுராகோ ஆலயங்களை நினைவுறுத்தியது அது
அப்பகுதியில் சுற்றிச்சுற்றி வந்து கோயில்களைப் பார்த்தோம். மாமா பாஞ்சா கோயில் என இப்பகுதி பழங்குடிகளால் அழைக்கப்படும் கோயில் அனேகமாக இடிந்துவிட்டது. கோயிலுக்குள் இரண்டு பிள்ளையார் சிலைகள். ஒரு சிலை எட்டடி உயரமானது. இன்னொரு சிலை நான்கடி. மாமா மருமகன் பிள்ளையார் என இவற்றைச் சொல்கிறார்கள்.
விசித்திரமான பிள்ளையார். சதுரவடிவம் மழுங்கியது போல ஒரு ஒட்டுமொத்த வடிவம். நவீனச் சிற்பக்கலையில் விதவிதமாகச் செய்துபார்க்கப்படும் பிள்ளையார்களை நினைவுறுத்தின அவை.
பழைய நாகர்களின் வம்சத்தைச் சேர்ந்த பழங்குடிச்சிறுவர்கள் வந்து ஆர்வமாக வேடிக்கை பார்த்தனர். கரிய மெலிந்த பிள்ளைகள். அழுக்கும் கிழிசலுமான உடை. கையிலிருந்த பிஸ்கெட் பாக்கெட்டுகளைக் கொடுத்தோம். இவர்களின் முன்னோர்களில் எவரோ இந்த கோயிலைக் கட்டியிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.
பொதுவாகவே இப்பகுதியின் சிற்பங்களுக்கு ஒரு தனித்தன்மை இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். அவை தேர்ந்த கைகளால் செதுக்கப்பட்ட பிற்காலச் சிற்பங்கள் போல இல்லை. பழங்குடிகளின் சிலைகள் போல ஒரு மூர்க்கமான , பண்படாத அழகு அவற்றில் தென்பட்டது. மெதுவாக அந்த எண்ணம் உறுதிப்பட்டது. பர்சூர் இந்தியச்சிற்பக்கலையை ஆராய்பவர்களுக்கு ஒரு முக்கியமான இடம். பழங்குடிக்கலை மெல்ல வளர்ந்து இந்தியச் சிற்பக்கலையின் அடித்தளமாக அமைவதை இங்கே காணலாம்
பட்டிஷ ஆலயம் என்றழைக்கப்பட்ட சிவாலயம் கோபுரம் மட்டும் இடிந்த நிலையில் உள்ளது. அதனருகே சந்திராவதி ஆறு ஓடுகிறது. பட்டீசரா என்று நினைத்துக்கொண்டேன். சிவபெருமானின் சிலை கருவறை முகப்பில் செதுக்கப்பட்டிருந்தது. சமபங்க நிலையில் நிற்கும் சிவன் சிலையை இப்போதுதான் பார்க்கிறேன். முதலில் பெருமாள் என்றுதான் நினைத்தேன். ராஜமாணிக்கம்தான் அது சிவன் என்று சொன்னார். கையில் உடுக்கும் சூலமும் இருந்தன. கீழே நந்தி அமர்ந்திருந்தது. கருவறைக்குள் ஒரு பிள்ளையார் சிலை மட்டும் இருந்தது
இக்கோயிலைச்சுற்றி வந்தபோது மீண்டும் கஜூராகோ நினைவுக்கு வந்தது. சுவரின் மடிப்பு மடிப்பான அமைப்பும், சுவர்களை நிறைத்திருந்த சிலைகளும் எல்லாம் கஜூராகோவை நினைவூட்டின. அந்த அளவுக்கு நளினமான சிலைகள் அல்ல. ஆனால் நிறைய பாலியல் சிலைகள் இருந்தன. கஜூராகோ சிலைகளில் உள்ள நாசூக்கும் நடனபாவனைகளும் இல்லாத அப்பட்டமான பாலுறவு நிலைகள்.
இச்சுவரில் நான் கண்ட சிற்பங்களை வேறெங்குமே கண்டதில்லை. முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது மனித உடலுடன் அமர்ந்திருக்கும் நந்தி. பிள்ளையாரின் உடல், முகம் மட்டும் நந்தி முகம். எருமையைக்கொல்லும் தேவி சாமுண்டி போல பேயுருவத்துடன் இருந்தாள். விதவிதமான சிவன் சிலைகள். இப்படிக் கால் விரித்து அமர்ந்த நிலையில் எங்குமே சிவனைப் பார்க்கமுடியாது. சிவன் எப்போதுமே கால்மேல் கால்வைத்து தட்சிணாமூர்த்தியாக, யோக உபவிஷ்டராக இருப்பதே வழக்கம். ஒரு இந்திரன் சிலை இருந்தது. அது தட்சிணாமூர்த்தி என்று நினைத்தேன். வஜ்ராயுதம்தான் இந்திரன் என்று காட்டியது
பர்சூர் விட்டு விலகி வருகையில்தான் அந்த கோயிலின் முக்கியத்துவம் உறைக்க ஆரம்பித்தது. மிகச்சிறிய கோயில், ஆனால் மிகமிக அபூர்வமானது. ஒருவேளை அங்கே உள்ள சிலைகளைப்போன்ற பிற சிலைகள் இந்தியாவில் எங்குமே இருக்க வாய்ப்பில்லை. பழங்குடி வழிபாட்டில் இருந்து சைவமதம் உருவான காலகட்டத்துச்சிலைகள் அவை. பின்னர் சைவ மதம் அவற்றில் பலவற்றைக் கைவிட்டிருக்கிறது
மத்தியப்பிரதேசத்தில் இதைப்போல பல பழங்குடி அரசவம்சங்கள் இருந்திருக்கின்றன. கஜூராகோவின் சந்தேலா அரசர்களும் இப்படிப்பட்டவர்களே. இவர்கள் தனித்தன்மை வாய்ந்த ஒரு சைவ மதத்தைக் கடைப்பிடித்திருக்கிறார்கள். ஆகவே இங்குள்ள சிற்பங்கள் வேறெங்கும் இல்லாதவையாக உள்ளன. இந்த சிறு ஆலயம் ஒரு மறைந்த கஜூராகோவின் எஞ்சிய துளி.
மீண்டும் காட்டுவழியே புழுதியை ஊடுருவியபடி பயணமானோம். இருபக்கமும் காடுகள். காவலர் வளாகங்கள்.சில கடைகள் கொண்ட ஒரு சந்திப்பு, மீண்டும் காடு. மதியம் சித்ரகூட் வந்துசேர்ந்தோம். சந்திராவதி இங்கே ஒரு பெரும் அருவியாகக் கொட்டுகிறது. அருகே ஒரு டாபாவில் சாப்பிட்டுவிட்டு வந்தோம்
இந்த அருவியை இந்தியாவின் நயாகரா என்கிறார்கள். நயாகாராவைப் பார்த்த எனக்கு அது உண்மை என்றே பட்டது. இது கோடைகாலம் இங்கே. நீரின் அளவு கால்வாசியாக இருந்தது. ஆனாலும் பிரமிப்பூட்டும் பேரருவி இது நயாகரா போலவே லாடவடிவமான பாறையில் இருந்து நூறடி ஆழத்திற்கு ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வெள்ளித்திரை போல சரிகிறது. காற்றில் சல்லாத்துணி போல ஆடுகிறது. வெண்ணிற நெருப்பு போல புகை விடுகிறது, மழைக்காலத்தில் அச்சு அசலாக நயாகரா மாதிரியே இந்த அருவி இருக்கக்கூடும்
அருவிக்குமேல் ஆற்றில் இறங்கி உடைகளைத் துவைத்து வெயிலில் காயப்போட்டுவிட்டுக் குளித்தோம். அந்த வெயிலிலும் நீரில் அதிக நேரம் இருக்கமுடியவில்லை. அப்படி ஒரு குளிர். தண்டகாரண்யத்தின் ஆழ்ந்த குளிரில் ஊறி வரும் நதி அது. நதியின் எட்டு வழிகளில் இரண்டில்தான் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.
பிறர் குளித்துக்கொண்டிருந்தபோது நானும் ரவியும் ஆற்றங்கரை ஓரமாக இருந்த ஒரு கோயிலை நோக்கிச் சென்றோம். அது கோயில் அல்ல. வீடு. கற்களை அடுக்கி சுவர் கட்டி, கற்பாளங்களைக் கொண்டு கூரையிடப்பட்டு அவர்களே கட்டிக்கொண்ட நேர்த்தியான இல்லம். இப்பகுதியில் சிவந்த கல் அரை இஞ்ச் கனமுள்ள கற்பாளங்களாக எளிதில் பெயர்ந்து வரக்கூடியது. இங்குள்ள கணிசமான வீடுகள் அந்தக் கற்பாளங்களால்தான் கூரையிடப்பட்டுள்லன
மாலையில் நயாகராவின் கரைபோலவே நூறடி உயரத்தில் இருந்த மாபெரும் பாறைவிளிம்பில் கட்டப்பட்ட படிகள் வழியாக இறங்கிச்சென்றோம். ஆழத்தில் நதியில் படகுகள் இருந்தன. அவற்றில் ஏறி ஆர்ப்பரிக்கும் அருவியின் அருகில் செல்ல முடியும். அருவியின் நீர்ச்சாரம் மேலே படும் இடம் வரை. நயாகாரா என்றே தோன்றிக்கொண்டிருந்தது. நயாகராவில் அதை ஒரு பெரும் உலகக்கொண்டாட்டமாக ஆக்கியிருக்கிறார்கள். இங்கே அதிகம்போனால் நூறுபேர் வந்தால் அதிகம்.
அருவி வானிலிருந்து பொங்கி வழிந்துகொண்டிருந்தது. அண்ணாந்து நோக்கி பிரமித்து அமர்ந்திருந்தேன். நயாகரா உருவாக்கிய அதே பிரமிப்பு. நயாகராவைப் பார்த்தபோது அதை நான் பார்ப்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது . இதோ என் நாட்டில் ஒரு நயாகரா.இந்த நாட்டை எப்போது நான் பார்த்து முடிக்கப்போகிறேன். இதைப்பார்த்தபின் உலகில் எனக்கு என்ன ஆச்சரியம் மிச்சமிருக்கிறது?
தலைக்குமேல் ஓங்கிய கரும் பாறை அடுக்குகள். அவற்றினூடாக நீண்ட வேர்கள். ஒரு அற்புதமான பால்மரத்தின் வெள்ளைவேரென அருவி. கரியதலையில் தொங்கி ஆடும் வெண்சடை. கரிய அன்னையின் வெண்பட்டு முந்தானை. வானத்தின் மேகப்படலம் இடிந்து சரியும் பொழிவு. சூரிய ஒளி திரவமாகி பெய்யும் சரடு. வானவில் சூடிய பிரம்மாண்டமான கண்ணாடி மரம் ! விண்ணின் ஓங்காரத்தை மண்ணில் ஒலிக்கும் வெள்ளிநாக்கு.
[மேலும்]