குகைகளின் வழியே – 5

காலையில் ஏலூருக்கு அருகே உள்ள கொல்லேறு ஏரியைப் பார்க்கச்சென்றோம். ஆந்திர மாநிலத்தின் மிகப்பெரிய ஏரி இதுவே. இந்தியாவில் இரண்டாவது பெரிய ஏரி இது என்கிறார்கள். 245 சதுர கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த ஏரி இயற்கையாக உருவானது. தொல்காலத்து பூகம்பம் ஒன்றின் விளைவு இது என்கிறார்கள். கிருஷ்ணா கோதாவரி நதிகளுக்கு நடுவே உள்ள ஒரு பெரும் பள்ளம் இது. கிட்டத்தட்ட குமரிமாவட்டம் அளவுள்ள ஏரி. இந்த இருபெரும் நதிகளின் வெள்ளப்பெருக்குநீர் இங்கே தேங்குகிறது. இதைத்தவிர பலநூறு சிறிய ஓடைகளும் சிற்றாறுகளும் இதில் கலக்கின்றன.

இந்த ஏரிக்குள் லங்கா என்று தெலுங்கில் சொல்லப்படும் ஆற்றிடைக்குறைகள் நிறைய உள்ளன. கடந்த நூறாண்டுக்காலமாக இயற்கையின் இந்த பெரும் சொத்து அரசாலும் மக்களாலும் சூறையாடப்படுகிறது. லங்காக்களுக்குச் செல்வதற்காக ஏரியைத் தூர்த்துப் போடப்பட்ட சாலைகள் முக்கியமான அழிவுச்சக்திகள். சாலைகளை ஒட்டி ஏரிநீரை வெளியேற்றி வடிகட்டி வண்டல் நிலமாக ஆக்கி வயல்வெளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏரியின் பத்துசதவீதம் இப்படி வயல்களாக மாறிவிட்டிருக்கிறது. ஏரியின் நாற்பது சதவீதப் பரப்பு தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு குட்டைகளாக ஆக்கப்பட்டு இறால்வளர்ப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. எஞ்சிய நீர்ப்பகுதியில்கூட பெரும்பகுதி பாசியும் நீர்த்தாவரங்களும் மண்டி சதுப்பாகவே உள்ளது. நூறாண்டுகளுக்கும் மேலாக இந்த ஏரி தூர் வாரப்படவில்லை.

ஆனாலும் மகத்தான நீர்வெளி இது. மறு எல்லை கண்ணுக்குத்தெரியாது. நீர் பெருகி அலையடித்துக்கிடப்பதைப்பார்க்க பிரமிப்பாகவும் பரவசமாகவும் இருந்தது. இந்தியாவின் மிகப்பெரிய பறவைச்சரணாலயங்களில் ஒன்று இது. லட்சக்கணக்கான நீர்ப்பறவைகள் இங்கே வாழ்கின்றன. நீரில் வெண் தாமரைகளும் கொக்குகளும் கண்ணெட்டும் தொலைவு வரை பூத்துப்பரவியிருந்தன. இப்ப்பகுதி மக்களுக்கு எருமைவளர்ப்பு முக்கியமான தொழில். ஏரியெங்கும் பல்லாயிரக்கணக்கான எருமைகள். எங்களைப் பெரிய கருவிழிகளால் ஐயத்துடன் பார்த்தபடி எருமைக்கன்று ஒன்று தயங்கியது. அப்பகுதிக்கு அதிகம் சுற்றுலாப்பயணிகள் வருவதில்லை போலும்.

சாலைவழியாக இருபக்கமும் விரிந்து கிடந்த நீர்ப்பரப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டு நடந்தோம். இளவெயில் நீரின் மீது பளபளத்தது. மேகமே இல்லாத அதிதுல்லிய வானம். பறவைகளின் ஒலி மட்டும் நிறைந்திருந்த காற்று. நீரின் பாசிமணம். அந்தக் காலை நடை வாழ்க்கையில் மிக அபூர்வமாக நிகழக்கூடிய தருணங்களில் ஒன்று.

கோலூருலங்கா என்ற ஊருக்குச் சென்றோம். ஏழுவண்ணங்களும் எடுப்பாகப்பூசப்பட்ட ஒரு கோயில். ஊரே இறால்பண்ணைகளை நம்பி வாழ்ந்தது. இட்லி விற்கும் பெண்மணியிடம் இட்லியும் போண்டா உருளைகளும் வங்கிக்கொண்டோம். மைதாமாவை உருட்டி எண்ணையிலிட்டு எடுக்கும் ஒருவகை உருண்டைகள் ஆந்திரத்தின் முக்கியமான சிற்றுண்டி. தொட்டுக்கொள்ள கடலைச்சட்டினி உண்டு. அதற்கு அவ்வளவு காரம் இருக்கும் என எவரும் எதிர்பார்க்கமாட்டார்கள்.

குகைகளைப்பார்ப்பதற்கான எங்கள் திட்டத்தில் நாங்கள் செல்லவேண்டிய அடுத்த இடம் குண்டுப்பள்ளி. ஆனால் ஆந்த ஊரைப்பற்றி எவரிடம் கேட்டாலும் தெரியவில்லை. ஆகவே அதற்கு அருகே இருந்த ஊர்களை விசாரித்து விசாரித்துச் சென்றோம். அறுபது கிலோமீட்டர் தொலைவில் பல திசைதிரும்பல்களுக்குப்பின் குண்டுப்பள்ளி குகைகளைப்பற்றித் தெளிவான வழிகாட்டலை அடைந்தோம். பொதுவாக எங்கள் பிற பயணங்களில் எதிலும் இந்த அளவுக்குத் தேடியலைந்ததில்லை. குகைகள் காட்டுப்பகுதிகளில் இருந்தன. அங்கே பிரபலமான ஒரு புண்ணியத்தலம் இல்லை என்றால் எவருக்கும் தெரிந்திருக்காது. இப்படி விசாரித்து விசாரித்துச்செல்வதே இந்தப்பயணத்தின் சிறப்புக்கூறு என்று தோன்றியது

குண்டுப்பள்ளி குகைகள் இயற்கையாகவே உருவானவை. ஆனால் பின்னர் ஆவை பௌத்தர்களால் கிமு இரண்டாம் நூற்றாண்டிலேயே கையகப்பபடுத்தப்பட்டு பெரும் பல்கலைக்கழகமாக வளர்த்தெடுக்கப்பட்டன. ஆந்திரத்தின் முக்கியமான பௌத்தப் பல்கலை இது. அஜந்தா நாளந்தா பல்கலைக்கழகங்களுக்கு நிகரானது. ஆந்திர அஜந்தா என இது அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட அஜந்தா போன்ற அமைப்பு கொண்டது. லாடவடிவமான ஒரு மலையில் இவை செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தப்பாறைகள் எல்லாம் மணற்பாறைகள். ஆகவே பெரும்பாலான குகைகள் உடைந்து சரிந்துவிட்டன.

குண்டுப்பள்ளி குகைகளில் முக்கியமான இடம் அதன் மையமாக உள்ள மகாசைத்ய குகைதான். இடியாமல் செம்மையாக உள்ள சிறிய குகை. அதன் கூரைகள் உத்தரங்களும் சட்டங்களும் செதுக்கப்பட்டு அரைக்கோள உட்குடைவாக அமைக்கப்பட்டுள்ளன. அதன் நடுவே அரைக்கோள வடிவமான தூபி உள்ளது. சிற்பங்கள் ஏதும் இல்லை.தேரவாத பௌத்தத்தின் குகை அது.

பௌத்தம் அழிந்த பின் அடர்ந்த காட்டுக்குள் எவரும் அறியாமல் கிடந்த குண்டுப்பள்ளி குகைகள் 1850 ல் பிரிட்டிஷ் நில அளவைத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பின் அங்கே உள்ளூர்க்காரர்கள் வர ஆரம்பித்தார்கள். அந்த தூபியை ஹர்மலிங்கேஸ்வரர் என்று பெயரிட்டு சிவலிங்கமாக ஆக்கிவிட்டனர். வாசலில் ஒரு நந்தியும் நிறுவப்பட்டுவிட்டது. பின்னர் இந்தியத் தொல்பொருள்துறை சைத்யத்தைக் கைப்பற்றி பௌத்த தலமாகவே பாதுகாத்து வருகிறது

இடிந்த குகைகளில் பல விகாரங்கள் உள்ளன. அஜந்தா குகைகளைப்போலவே ஆசிரியர்கள் தங்கும் அறைகள் கொண்ட குகைகள். சன்னல்களும் நீர் வழியும் வழிகளும் கொண்ட குகையறைகள். வகுப்புகள் நடக்கும் விரிந்த கூடங்கள். ஒரு மலைமீது பல தூபிகள் உள்ளன. பௌத்த ஞானம் நிறுவப்பட்டதன் அடையாளமாக நாட்டப்படுபவை தூபிகள். சாஞ்சி சாரநாத் தூபிகள் புத்தர் வந்து நின்று தர்மப் பிரபோதனம் செய்த இடத்தில் அமைந்தவை. புத்தர் தெற்கே அமராவதி வரை வந்திருக்கிறார் என்பது ஐதீகம். அமராவதியில் வெண்பளிங்காலான ஒரு தூபி இருந்தது. அது இடிந்து விட்டது. இடிந்த சிதிலத்தின் சிற்பங்கள் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.

இந்தப் பல்கலையில் பல்வேறு பௌத்த ஞானிகள் வந்திருக்கலாம். அவர்களின் ஞானப்பிரபோதனத்தின் குறியீடாக அமைக்கப்பட்ட ஏராளமான தூபிகள் இங்கே இருக்கின்றன. சில தூபிகள் பெரியவை. சில மிகச்சிறியவை. ஒரே ஒரு தூபிமட்டுமே முழுமையான அரைவட்டவடிவில் உள்ளது. இன்னொரு குன்றின் உச்சியில் வெண்பளிங்குக்கல்லால் ஆன சற்றே சிறிய தூபி முழுமையாகவே உள்ளது. அதன் சுற்றுச்சுவர் சுட்டசெங்கல்லால் ஆனது. அசோகர் காலத்தில் அந்த தூபி கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

கொளுத்தும் வெயிலில் மூன்றுகுன்றுகளின் உச்சி வழியாக செல்லும் இணைப்புப்பாதையில் நடந்து மொத்த குகைகளையும் பார்த்தோம். பிறிதொரு சந்தர்ப்பத்தில் அப்படி வெயிலில் நடக்கச்சொன்னால் நடந்திருக்க மாட்டோம். பயணத்தின் போது மனம் அதன் உச்சகட்ட அவதானிப்பு நிலையில், உச்சகட்ட விடுதலைநிலையில் இருக்கிறது.

குண்டுப்பள்ளியில் இருந்து கிளம்பும்போது மாலை மூன்றரை ஆகிவிட்டது. குண்டுப்பள்ளியைச்சுற்றி அடர்ந்த காடு. மழைக்காடு அல்ல.உயரம் குறைவான மரங்கள் கொண்ட சோலைக்காடு. அங்கே சில வீடுகள் இருந்தன, ஆனால் கடைகளேதும் இல்லை. அடுத்த சிறுநகர் சென்றாலொழிய உணவு கிடைக்காது என்றார்கள்.

மாலை ஐந்து மணிக்கு அருகே உள்ள ஊரின் கடைவீதிக்கு வந்துசேர்ந்தோம். நல்லவேளையாக அந்நேரத்திலும் சாப்பாடு கிடைத்தது. ஆந்திரத்தில் நுழைந்தபின் இன்றுவரை மோசமான உணவை உண்ண நேரிட்டதில்லை. என் பயணத்தில் எப்போதும் ஆந்திரமாநிலத்தில் மோசமான உணவை உண்ட அனுபவமே இல்லை. ஆந்திரத்தில் உள்ள சாம்பார், பருப்புக்கறி மட்டுமல்ல மோர் கூட அபாரமான மணமும் சுவையும் கொண்டது.

ஒருமுறை நண்பரிடம் அதைப்பற்றி கேட்டேன். அவர் மளிகைமொத்தவணிகம் செய்யும் குடும்பத்தைச்சேர்ந்தவர். அவர் சொன்ன காரணம் அதிர்ச்சி அளித்தது. தமிழகத்தில் கலப்படமில்லாத மளிகைப்பொருட்கள் கிடைக்கவே கிடைக்காது. ஜெயலலிதா வீட்டுக்குச் சமையலுக்குத்தேவை என்றால்கூடக் கிடைக்காது. உணவுப்பொருளில் கலப்படம் என்பது தமிழகத்தில் மிகச்சாதாரணமான ஒரு நிகழ்வு. ஒரு பெரும் தொழில் அது.

மாலை மயங்கும் நேரத்தில் ஆந்திரத்தின் வடக்கு எல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எங்கள் இலக்கு பத்ராசலம் சென்று தங்குவது. இரவு ஏழு மணிக்குள் சென்று விடலாமென்று நினைத்தோம். ஆனால் எட்டுமணிக்கே வந்துசேர முடிந்தது. திருமலைதிருப்பதி தேவஸ்தானத்தின் தங்கும் விடுதியில் மலிவான, ஆனால் வசதியான அறைகள் வாடகைக்குக் கிடைத்தன.இரவில் அறைக்கு நடந்தபோது குளிரை உணர்ந்தேன்.விந்திய மலை நெருங்குகிறது என உணர்த்தும் குளிர். அருகே ஓடும் கோதாவரியின் குளிர்.

[மேலும்]

முந்தைய கட்டுரைவிழா-மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிழா மேலும் கடிதங்கள்